Tuesday, December 28, 2010

துன்பம் தீர வழி

உலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுநடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்பமுண்டேல்துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால் , அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள். எளிய வழியைக் கூறி அடைக்கலம் காட்டியவர்கள். கடுமையான தவ வாழ்க்கையை எல்லோரும் பின்பற்றி இறைவனை அடைவது கடினம் ஆதலால் இறைவனது நாமங்களைச் சொல்வதாலும் அவன் உறையும்தலங்களின்பெயர்களைக் கூறி சிந்திப்பதாலும் துன்பங்கள் நீங்கப் பெறலாம் என்று உபதேசித்தவர்கள்.

திருவெண்காடு என்ற சிவ ஸ்தலம் , முக்தி அளிக்க வல்ல தலங்களுள் ஒன்று. இதன் பெயரைக் கூறிய மாத்திரத்தில் தீராத வினைகள் எல்லாம் தீரும் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள். வினைகளால் ஏற்படுவது துன்பமும் நோயும். அவை நீங்க வேண்டுமானால் , " சந்திரசேகரா,கங்காதரா" என்று சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தப் பெருமான். ஆனால் இவற்றை உள்ளம் உள்கி நெகிழ்ந்து ,கண்ணீர் மல்க சொல்வோமானால் சிவனருள் பெறலாம் என்பதை,
" பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன்..."
என்கிறார். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு இறைவன் எளியவனாகி அருள் வழங்குகிறான். உலகம் உய்ய நஞ்சை உண்டவனே என்றும் உமைபங்கா என்றும் கண் முத்து அரும்பக் கழல் அடிகளைத் தொழு அடியார்கள் , துன்பங்களாலும் கவலைகளாலும் கரைந்து உழலும்போது, அஞ்சேல் என்று அருள் செய்வான். இவ்வாறு , ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; பல நாட்கள் சிவ நாமாக்களைச் சொல்லி வரவேண்டும். கிளிகள் சொன்னதையே திருப்பிச் சொல்வதுபோல சிவ நாமங்களைத் திருப்பித்திருப்பி ஆயுட்காலம் முழுவதும் சொல்ல வேண்டும். திருவெண்காட்டில் வேத பாட சாலைகளில் இருந்த கிளிகள் , தாங்கள் தினமும் கேட்கும் வேதங்களையே திருப்பிச் சொல்கின்றன என்பார் சம்பந்தர்.
அரன்நாமம் கேளாய் என்று உபதேசித்த ஆசார்யமூர்த்திகள், அதைச் சொல்வதன் மூலம் துன்பம் நீங்கிப் பெருவாழ்வு பெறலாம் என்று இந்த ஊர்ப் பதிகத்தில் அருளி இருப்பதைக் காட்டும் பாடல் வருமாறு:

நாதன் நமை ஆள்வான் என்று நவின்றேத்தி
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்துஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

என்பது அந்த அற்புதமான பாடல் வரிகள். இங்கு ஏதம் என்பது துன்பம் என்று பொருள் படும். இறைவனது நாமங்களைச் சொல்பவர்க்கு ஏதம் ஏதும் இல்லை என்பது இதனால் அறியப்படுகிறது. "உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று சுந்தரர் அருளியதுபோல், நாக்கு தழும்பு ஏறும்படி நாதன் நாமத்தைச் சொல்லிவருவோமாக.

Sunday, October 24, 2010

பூந்துருத்திப் புண்ணியன்

ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் ஒரு சமயம் தருமபுர ஆதீனத்திற்குச் சென்றிருந்தபோது , அங்கிருந்த வேத பாடசாலை மற்றும் ஆகம பாடசாலைகளைப் பார்த்துவிட்டு , தேவார பாடசாலைக்கு விஜயம் செய்த போது, பாடசாலை ஆசிரியராக இருந்த ஸ்ரீ வேலாயுத ஓதுவாமூர்த்திகள் ஏதோ காரியமாக மடத்தின் வேறு பகுதிக்குச் சென்றிருந்தார்கள். பாடசாலை குழந்தைகளிடம் மிக்க மகிழ்ச்சியுடன் உரையாடிய ஸ்ரீ பெரியவர்கள், ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் இருந்து ஒரு திருத்தாண்டகம் பாடிக்காட்டுமாறு ஒரு மாணவனிடம் கேட்டார்கள். உடனே அவன், திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி மீது அப்பர் பெருமான் பாடிய திருத் தாண்டகப் பதிகத்திலிருந்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். அவன் பாடிய அப் பாடலின் முதல் இரு வரிகள் பின்வருமாறு:
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை
கடுநரகம் சாராமே காப்பான் தன்னை

யாரிடமும் கற்காமலேயே எல்லாக் கலைகளையும் மெய் ஞானத்தையும் உபதேசித்தவன். தனது அடியார்களை நரகம் புகாமல் காப்பவன் என்பதே அந்த வரிகளின் பொருள். அம்மாணவனுக்கு பயம் காரணமாக மேற்கொண்டு ஞாபகம் வரவில்லை. ஆனால் பெரியவர்களோ, அந்த இரண்டு வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடுமாறு கேட்டுக் கொண்டதால், அச்சிறுவனும் அதையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தான். மெய்மறந்து பெரியவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்ததை அங்கு வந்து சேர்ந்த பாடசாலை ஆசிரியர் பார்த்துப் பரவசப்பட்டவராக, மீதி வரிகளையும் பாடிக்காட்டினார். இந்நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ தருமபுரம் சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தகைய தாண்டகப் பாடல்களில் இருந்து ஒன்றை இங்கு சிந்திப்போமாக:

இப்பாடல் திருவையாற்றிற்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவநேச்வர சுவாமி மீது பாடப்பெற்றது. சத்திய ச்வரூபனான மூர்த்தியை பொய்யிலி என்று அழைக்கிறது இப்பதிகம். புண்ணிய மூர்த்தியாகவும் வர்ணிக்கிறது .


கடுமையான வேகத்துடன் வந்த கங்கையைத் தனது ஜடையில் தாங்கி கங்காதரன் ஆனவன் என்பதை,

"நில்லாத நீர் சடைமேல் நிர்ப்பித்தானை"
என்றார்.

அவன் அருளாலே மட்டும் அவன் நினைவு நமக்கு வரும். இதனை,
" நினையா என் நெஞ்சை நினைவித்தானை "
என்றார்.

கற்க முடியாதன எல்லாவற்றையும் கற்பிப்பவன் அக்கடவுள் என்பதை,
" கல்லாதான எல்லாம் கற்பித்தானை "
என்றார்.

கண்டு அறியாதன எல்லாவற்றையும் அப்பெருமானே காட்டுபவன் என்பதை,
" காணாதன எல்லாம் காட்டினானை"
என்றார்.

பரம கருணையினால் என்னைத் தொடர்ந்து வந்து, அடியவனாகக் கொண்டு , சொல்லாத பொருள்கள் எல்லாவற்றையும் சொன்னான் என்பதை,
" சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத் தொடர்ந்து
இங்கு அடியேனை ஆளாக்கொண்டு "
என்றார்.

அப்புநிதனே, எனது பொல்லாத சூலைநோயையும், பிறவி நோயையும் தீர்த்தவன் என்பதை,
" பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே"
என்றார்.

முழுப் பாடலையும் இப்பொழுது காண்போமாக:

" நில்லாத நீர் சடைமேல் நிர்பித்தானை
நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதான எல்லாம் கற்பித்தானை
காணாதன எல்லாம் காட்டினானை
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக்கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே."

என்பது பதிகத்தின் முதல் பாடல்.
இதுபோன்ற பக்திச் சுவை மிக்க பாடல்களை ஏராளமாக நமக்கு அருளியுள்ளார்கள் அருளாளர்கள். அவற்றை பாராயணம் செய்யும் பாக்கியத்தை எல்லோருக்கும் சிவனருள் கூட்டுவிக்க வேண்டும்.

Monday, August 16, 2010

சிவலோகம் ஆளலாம்


நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் அடிக்கடி வரும். சொர்க்கம் , நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா அல்லது வெறும் கற்பனையா ; யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார், என்பதே அது.ஒருவருக்கு நடந்ததை அவரே சொல்லிவிட்டுப் போயிருந்தால் அதை அகச்சான்று என்றும் , பிற்காலத்தில் வந்தவர் அதைப் பற்றி சொல்லியிருந்தால் புறச்சான்று என்றும் சொல்வார்கள். மூவர் தேவாரத்தில் அகச்சான்றுகளாகத்தெரியவரும் செய்திகள் ஏராளம்.

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது பதினெட்டாவது வயதில் ஆப்த சிநேகிதரான சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவஞ்சைக்களத்தில் தங்கியிருந்தார். அங்கு கோயில் கொண்டுள்ள அஞ்சைக்களத்து அப்பரிடம் பதிகம் மூலம் உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துத் தனக்குச் சிவலோகம் தந்தருளுமாறு வேண்டவே, சுவாமியும் தேவலோகத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பி அதில் சுந்தரரை ஏறி வரும்படி அருளினார். இறைவனது அருளை வணங்கியவாறு சுந்தரர் அதில் அமர்ந்தவுடன் அந்த யானை ஆகாய வீதியில் கிளம்பியது. அந்த நிலையிலும் உலகத்தவர்களுக்கு உபதேசம் செய்கிறார் குருநாதர். தனக்குக் கிடைத்த பேரருள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பெரும் கருணை, தேவாரப் பதிகமாக வெளிப்படுகிறது. "தான் எனை முன் படைத்தான்" என்ற அப்பதிகத்தில் தனக்கு வெள்ளையானை தந்தருளிய கருணையைப் போற்றுவதோடு தன்னை இந்திரன்,திருமால்,பிரமன் முதலியோரும் எதிர்கொண்டு அழைப்பதைக் குறிப்பிடுகிறார். வேத மந்திரங்களும் ஆகமங்களும் அடியார்களும் முழங்கும் ஓசை எங்கும் கேட்கிறது. இவ்வாறு யானை ஏறி வரும் மகான் யார் என்று இறைவனை முனிவர்கள் கேட்க அதற்கு, எனது பரம பக்தன் நம்பியாரூரன்" என்று ஸ்ரீ பரமேச்வரன் பதில் சொன்னதாகப் பதிகத்தில் வருகிறது.

பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது. இதற்கு அவர் சொல்லும் பிரமாணம் என்ன தெரியுமா? தானே இது சத்தியம் என்பதைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார். இதோ அவ்வினிய வரிகள்:

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணு லகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே.

நொடித்தான் மலை என்பது கயிலாய மலையைக் குறிக்கும். சிவ பெருமானுக்கு வாழையடி வாழையாக மீளா அடிமைசெய்யும் வம்சத்தில் பிறந்த அடியார்கள் சிவலோகம் பெறுதல் உண்மை என்பதை சுந்தரரின் இந்த அகச்சான்று உறுதி செய்கிறது. இதில் சந்தேகம் வேண்டாம். "சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்ற அவரது தேவார அடிகள் இக்கருத்துக்கு உறுதுணை ஆவதை மனத்தில் கொண்டு ஆடி சுவாதி நன்னாளில் குருநாதரின் பாத கமலங்களை வணங்கிச் சிவத்தொண்டு ஆற்றுவோமாக.

Tuesday, May 18, 2010

சபாநாதனிடம் ஒரு கேள்வி


காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சந்தேகம். பகவானின் உருவம் செக்கச்செவேல் என்று இருப்பதாக வேதமும் புராணங்களும் சொல்கின்றன அல்லவா? ஸ்வர்ண மயமானவன் என்று ஸ்ரீ ருத்ரமும் செம்மேனி எம்மான் என்று தேவாரமும் ,தாமரைக்காடு போன்ற மேனியன் என்று திருவாசகமும் சொல்வதை சில உதாரணங்களாகக் காட்டலாம். இப்படி இருக்கும்போது, காரைக்கால் அம்மையார் பகவானிடமே தனது சந்தேகத்தை கேட்கிறார்.


"சித் சபையில் அனவரதமும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பவனே, உனது இடது கையில் அக்கினியை ஏந்திக்கொண்டு பேய்கள் ஆடும் காட்டில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாய். அந்த அக்னிக்கு உன் சிவந்த கை பட்டதனால் சிவந்த நிறம் வந்ததா; அல்லது அக்னியை ஏந்தியதால் உன் கை சிவந்ததா? எனக்கு இதனைச் சொல்லவேண்டும்" என்கிறார்.


ஈச்வரனிடம் அபாரப் பிரேமை உடையவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றும்.சுவாமி எதுவும் சாப்பிடாமல் காட்டு விலங்குகளுக்கு நடுவில் இருக்கிறாரே என்று நினைத்தாராம் கண்ணப்ப நாயனார். தான் கொண்டு வந்த நைவேதியத்தை பிள்ளையார் சாப்பிடவில்லையே என்று தன தலையை மோதிக்கொண்டாராம் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி. ஒரு சமயம் தஞ்சாவூருக்குச் சென்றிருந்த காஞ்சி பெரியவர்கள், பங்காரு காமாட்சிக்கு நிறைய நகைகள் சார்த்தப்பட்டு இருந்ததைப் பார்த்து, "அம்பாளுக்குக் கழுத்து வலிக்காதா " என்று கவலைப்பட்டாராம். நடராஜ மூர்த்திக்கு அலங்காரம் செய்யும்போது அக்னி ஏந்திய கரத்தில் புஷ்பத்தைச் சார்த்தும்போது, அந்த புஷ்பம் அக்னி ஜ்வாலையில் கருகி விடுமே என்றுகூட நினைக்கத்தோன்றும். இதெல்லாம் பகவானைக் கல்லாகவோ,பஞ்சலோக விக்கிரகமாகவோ பார்க்காதவர்களுக்கு ஏற்படும் நிலை. அதேபோல அவனது ஒவ்வொரு செயலும் மகான்களது பார்வையின் மூலம் நமக்கு மேலும் விளக்கத்தைக் கொடுக்கும்.


இனி, அம்மையார் அருளிய அற்புதத் திரு அந்தாதி என்ற நூலில் வரும் இந்தப் பாடலைக் காண்போம்:

அழல் ஆட அங்கை சிவந்ததோ

(அழல் = நெருப்பு; அங்கை= உள்ளங்கை)

அங்கை அழகால் அழல் சிவந்தவாரோ - கழல் ஆடப்

பேயாடு கானில் பிறங்க அனல் ஏந்தித்

(பேயாடு கானில்- பேய்கள் ஆடும் காட்டில்;பிறங்க-விளங்கும்படி)

தீ ஆடுவாய் இதனைச் செப்பு.

(செப்பு= சொல்வாயாக.)

என்பது இந்த அழகிய வெண்பா.

பகவானது ஸ்வரூபத்தில் லயிக்கும் இப்படிப்பட்ட பக்தி நமக்கும் ஏற்படவேண்டும் என்று அவனைப் பிரார்த்திப்போமாக.

Tuesday, April 20, 2010

கணக்கு எழுதும் இன்னம்பர் ஈசன்


நாம் செய்யும் பாவ புண்ணியங்களைச் சித்திரகுப்தன் கணக்கு எழுதிக் கொள்கிறான் என்று சொல்வார்கள். தன்னை வணங்காமல் , பொழுது போக்கிக்கொண்டு வீணாகக் காலம் தள்ளுபவர்களையும் பரமேச்வரனே கணக்கு எழுதிக் கொள்வதாக இன்னம்பர் என்ற ஸ்தலத்தில் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது.


கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் புளியன்சேரி என்ற இடத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் பாதை பிரிகிறது. அப்பாதையில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் இன்னம்பரை அடையலாம். அது இப்பொழுது இன்னம்பூர் என்று அழைக்கப்படுகிறது. இன்னன் என்ற சூரியன் பூஜித்ததால் இன்னம்பூர் என்று வழங்கப்பட்டது. கஜப்ருஷ்ட விமானத்துடன் கூடிய சந்நிதியில் சுவாமி உயர்ந்த சிவலிங்க வடிவில் அற்புதமாகக் காட்சி அளிக்கிறார். அக்ஷரபுரீச்வரர் என்றும் எழுத்தறியும் பெருமான் என்றும் இவரை அழைக்கிறார்கள். குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்வதற்கு மக்கள் இங்கு வருகிறார்கள். நித்ய கல்யாணி என்றும் சுகுந்த குந்தளாம்பிகை என்றும் அம்பாள் இரு சன்னதிகளில் காட்சி அளிக்கிறாள். சம்பந்தரும் அப்பரும் இந்த ஸ்தலத்தில் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் அப்பர் ஸ்வாமிகள் பாடிய ஒரு பாடலை இங்கு எடுத்துக்காட்டலாம்.


சிவ பூஜைக்கு மிகவும் முக்கியமானது தூய அபிஷேக ஜலமும்,பசும் பாலும் , வில்வ இலைகளும் ஆகும். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு " என்று திருமூலரும் பாடி இருக்கிறார். அதோடு தூய மலர்களால் அர்ச்சனை செய்வதால் விசேஷமான பலன் கிடைக்கும். மனத்தூய்மையும் முக்கியம். எனவேதான்,"கரவின்றி நன் மாமலர்கள் கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள்" என்று மயிலாடுதுறையில் பக்தர்களைச் சிறப்பித்தார் ஞானசம்பந்தர். இறைவனை வணங்கி மலர்களால் அர்ச்சனை - தோத்திரங்கள் செய்து , அன்பு மேலிட்டு கண்ணீர் மல்க அவனது நாமங்களைச் சொல்லி பூஜிப்பவர்களைக் கணக்கில் எழுதி வைத்துக்கொள்கிறான் இன்னம்பர் ஈசன் என்று அப்பர் பெருமான் பாடியதை நாமும் அனுபவிப்போம்.


"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும் "

என்பது அப்பாடலின் முதல் இரு வரிகள்.


முன்பு செய்த தீய வினையினால் தெய்வத்தை நினைக்காமலும் பூஜிக்காமலும் காலத்தைத் தள்ளுபவர்கள் எக்காலத்திலும் உண்டு அல்லவா? அவர்களையும் சுவாமி எழுதிவைத்துக் கொள்வதாக மற்ற இரண்டு அடிகளில் காணலாம்:


"பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."


நாம் செய்வதைப் பார்க்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற அகம்பாவதில் அக்கிரமங்கள் செய்பவர்களுக்கு இப்பாடல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இப்பொழுது முழுப் பாடலையும் கீழே காண்போம்:


"தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."


என்ற இந்த அற்புதமான பாடலை அன்பர்கள் பாராயணம் செய்வதோடு இன்னம்பருக்குச் சென்று நிறைய புஷ்பங்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

Monday, March 29, 2010

குருவாய் வருவாய்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்ற அற்புதமான பாடல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதுதான் என்றாலும் அதன் பொருளை அறிந்து கொண்டால் இன்னும் அதிக இன்பத்தையும் பயனையும் கொடுக்கும் அல்லவா?

முருகன் என்றாலே அழகன் என்று பொருள் சொல்வார்கள். அது ஆயிரம் மன்மதர்கள் சேர்ந்தாலும் சமம் ஆகமாட்டாத பரம்பொருளின் உருவ வர்ணனை. இன்ன உருவம் என்று சொல்ல முடியாத இறைவன் தேவர்களைக் காப்பதற்காக முகங்கள் ஓர் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தான் என்கிறார் கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார். அதோடு இன்னும் ஒரு காரணமாகவும் அந்த உருவில் தோன்றினான் என்கிறார் அவர். "உலகம் உய்ய" என்பதே அது. கலியுக வரதனாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இன்றும் தனது பக்தர்களைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனை அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில் பல விதங்களில் வரும்படி அழைக்கிறார்.

உருவம் கொண்டு வரும்படி அழைத்த பிறகு அருவ வடிவிலும் வருவாய் என்கிறார். சிவகுமாரன் ஆனதாலும் சிவனது மறு வடிவமாக விளங்குவதாலும் உருவத்தோடும் அருவமாகவும் ஆகி முழுமுதல் கடவுளாக வர வேண்டும் என்று பாடுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.

மேலும் மருவாகவும் மலராகவும் வர வேண்டும் என்கிறார். "வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே" என்று பரமேச்வரனைத் தேவாரம் பாடுகிறது.அவனது சிருஷ்டிகள் எல்லாம் அவன் வடிவே என்பதால் இவ்வடிவங்களில் வரவேண்டும் என்றார்.

மணியாகவும் மணியின் ஒளியாகவும் இறைவன் விளங்குகிறான்.இப்படித்தான் அபிராமி அந்தாதியும் அம்பாளைப் போற்றுகிறது. இந்த மணியோ நிர்மலமான மணி-அதாவது மாசிலாமணி. இறைவனை மாணிக்க மலை என்றும் போற்றுவது உண்டு.இவனும் மயில் ஏறிய மாணிக்கம் தானே! திருச்சிக்கு அருகில் உள்ள ஊட்டத்தூரில் சுவாமிக்கு சுத்த ரத்திநேச்வரர் என்ற பெயர் உண்டு.

இனி அவனே கருவாகவும் அதைக் காக்கும் தாயாகவும் அக்கருவைத் திருத்தி நல்ல வழி காட்டும் தெய்வமாகவும் வரவேண்டும். "சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் " என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதை ஏதோ பரிமாறுவதற்கு சொல்லப்படும் வார்த்தை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதன் பொருள் என்ன தெரியுமா? சஷ்டியில் விரதம் இருந்தால்தானே அகப்பையில் (கர்ப்பத்தில் ) குழந்தை உண்டாகும் என்பது அதன் அர்த்தம். இப்படிப் பிரார்த்தனைக்குப் பிறகு புத்திர பாக்கியம் ஏற்படுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.சீர்காழியில் தந்தையின் தவப் பயனாகத் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்தார் என்று பெரிய புராணம் சொல்கிறது.

ஸ்கந்தனே நமக்கு நல்ல கதி காட்டுபவன். அவனை விட்டால் நிர்கதிதான். இப்படித் தன்னை சரணம் அடைந்தவர்களை அவன் ஒரு நாளும் கை விடுவதில்லை. நமது விதியையும் அவன் மாற்றுவான். அவன் கால் பட்டவுடன் பிரமன் எழுதிய தலைவிதி அழிந்தது என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார் அருணகிரியார்.

தாரகத்தின் பொருளைத் தந்தை செவியில் ஓதிய சுவாமிநாதனைக் குருவாய் வருவாய் என்று வேண்டுகிறார் அருணகிரிப் பெருமான். உலகில் பிரம்மண்யம் குறையும் போதெல்லாம் குரு வடிவாகத் தோன்றிய குமரனை நாமும் இப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.குரு குஹனே சம்பந்தராக அவதரித்தான் என்று திருப்புகழில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.

ஜகமாகிய மாயையில் இருந்து விடுவித்து நல்ல வழி காட்ட மீண்டும் குருவடிவில் வரவேண்டும் என்று மாறிலா வள்ளி பாகனாகிய வள்ளலை இப்பாடல் மூலம் பிரார்த்தனை செய்வோமாக.

Saturday, February 20, 2010

உன்னைத் தவிர யாரை நினைப்பேன்?


சில பாடல்களோ அல்லது பாடல்களின் பகுதிகளோ நம் காதில் வந்து விழுந்தாலும் அவை எந்த புஸ்தகத்தில் வருகின்றன என்று நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. உதாரணமாக, "என் கடன் பணி செய்து கிடப்பதே", " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" போன்ற தொடர்கள் அடிக்கடி நம் காதில் விழுந்தாலும் அவை யாருடைய வாக்கு என்று மற்றவர்களைக் கேட்டோ அல்லது படித்தோ தெரிந்து கொள்வதில்லை. ஒரு காலத்தில் பல தேவாரப் பாடல்கள் பாமரர்களிடமும் பிரபலமாக இருந்தன. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது சிந்திக்க இருக்கும் "பொன்னார் மேனியனே" என்ற தேவாரப் பாடல்.


திருவையாற்றுக்கு அருகில் கொள்ளிடக்கரையில் இருப்பது திருமழபாடி என்ற சிவஸ்தலம். ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் தம்மை அறியாமல் இத்தலத்தைப் பாடாமல் சென்ற போது சுவாமி அவரது கனவில் தோன்றி,"திருமழபாடியைப் பாட மறந்தனையோ" என்று அருள, கண் விழித்த சுந்தரர், "உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்" எனும்படி, "பொன்னார் மேனியனே" என்று துவங்கும் திருப் பதிகத்தை அருளினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.


சுவாமிக்கு இந்த ஊரில் வைத்யநாதர் என்றும் அம்பாளுக்கு சுந்தராம்பிகை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. நந்திகேச்வரருக்குத் திருமணம் நடந்த க்ஷேத்ரம். இவ்வைபவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுகிறது.


பொன்னார் மேனியன்: ஸ்ரீ பரமேச்வரன் ஸ்வர்ண மயமானவன். அவனது தங்கக் கைகளை,"நமோ ஹிரண்ய பாஹவே" என்று ஸ்ரீ ருத்ரம் துதிக்கிறது. "பவளம் போல் மேனி" என்று தேவாரமும் "செந்தாமரைக்காடு அனைய மேனி"என்று திருவாசகமும் அவனைப் போற்றுகின்றன. உன் கை சிவப்பு நிறத்தால் அக்னிக்கு சிவந்த நிறம் வந்ததோ என்று காரைக்கால் அம்மையார் கேட்கிறார்.


புலித் தோல் அணிந்தவன்: தாருகா வனத்து ரிஷிகள் ஆபிசார ஹோமம் செய்து ஏவிய புலியை அடக்கி அதன் தோல் தனது இடுப்பில் கச்சையாக விளங்கும்படி அணிந்தவன்."व्याग्र चर्माम्बरा धराया " என்று சிதம்பர அஷ்டோத்திர நாமாவில் வரும்.


மின்னார் செஞ்சடை: கபர்தி என்று வேதம் சுவாமியைக் குறிக்கிறது. கபர்தீச்வரர் என்று திருவலஞ்சுழியில் சுவாமிக்குப் பெயர். மின்னுகின்ற அந்த சிவந்த ஜடை ஞான மயமானவன் என்பதைக் காட்டுகிறது. இளம் சிவப்பு நிறத்தை வடமொழியில் அருணம் என்பார்கள். எனவே செஞ்சடை வேதியனை அருணா ஜடேச்வரர் என்று திருப்பனந்தாளில் அழைப்பார்கள்.


மிளிர் கொன்றை அணிந்தவன் : கொன்றை,ஊமத்தை, வில்வம் ஆகியவற்றை செஞ்சடை மேல் விரும்பி அணிபவன் ஆதலால் இங்கு கொன்றை அணிந்த கோலம் சொல்லப்படுகிறது.


மாமணி: மாசிலா மணி எனத் திகழ்பவன் பரமன். ஒப்பற்ற மணி எனவும் இருப்பதால் மா மணியே எனப்படுகிறான். திருவாவடுதுறை, வடதிருமுல்லைவாயில்ஆகிய ஊர்களில் சுவாமிக்கு இப்பெயரே வழங்கப்படுகிறது.


மழபாடியுள் மாணிக்கம்: மாணிக்க வண்ணமும் சுவாமிக்கு உண்டு. திருவாரூருக்கு அருகிலுள்ள திரு நாட்டியத்தாங்குடியில் மூலவர் ,மாணிக்க வண்ணர் எனப் படுகிறார். வயிரத் தூணாகவும் இறைவனை திருமழபாடியில் சொல்வதுண்டு.


அன்னை என விளங்குதல்: சுவாமி தாயும் ஆனவர் ஆதலால் அனே எனத் தேவாரமும் அழைக்கிறது.


உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேன்: ஸ்ரீ பரமேச்வரனே ஒப்பில்லாத தனித் துணையாகவும் தோன்றாத் துணையாகவும் பக்தர்களைக் காப்பாற்றுகிறான். எனவே அவனை நினைப்பதைத் தவிர பிறரை நினைப்பது பொருத்தமாகாது. இதையே ஞானசம்பந்தக் குழந்தையும்,நனவிலும் கனவிலும் உன்னை வழிபடுவதை மறக்க மாட்டேன் எனப் பாடியது.


இப்பொழுது ஸ்ரீ சுந்தரர் அருளிய முழுப் பாடலையும் காண்போம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அனே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

பந்துவராளி ராகத்தில் இப்பாடலைப் பாடக் கேட்கும் இன்பமே தனி. இன்றே கேட்டுப் பார்ப்போமே.

Wednesday, January 20, 2010

எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்



நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம் .
வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.சுய நலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசை மாறிப் போகும்போது என்றாவது ஒரு நாள் அதற்கானதண்டனையை
அனுபவித்தே ஆக வேண்டும்.

நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது. அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார்.இப்பாடல் காஞ்சி ஏகாம்பர நாத சுவாமி மீது பாடப் பெற்றது.

கல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை.இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.

கருதாப் பிழை: இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.

கசிந்து உருகி நில்லாப் பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.

நினையாப் பிழை: இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத பிழை:முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள்.ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.

துதியாப்பிழை: தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது.தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப் படுகின்றன.இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?

தொழாப்பிழை: தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை.மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள்.இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள்.

இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம்.இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நினஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

என்பது அந்த அற்புதமான பாடல்.
தினமும் இரவில் படுப்பதற்கு முன் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?