Monday, March 29, 2010

குருவாய் வருவாய்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்ற அற்புதமான பாடல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதுதான் என்றாலும் அதன் பொருளை அறிந்து கொண்டால் இன்னும் அதிக இன்பத்தையும் பயனையும் கொடுக்கும் அல்லவா?

முருகன் என்றாலே அழகன் என்று பொருள் சொல்வார்கள். அது ஆயிரம் மன்மதர்கள் சேர்ந்தாலும் சமம் ஆகமாட்டாத பரம்பொருளின் உருவ வர்ணனை. இன்ன உருவம் என்று சொல்ல முடியாத இறைவன் தேவர்களைக் காப்பதற்காக முகங்கள் ஓர் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தான் என்கிறார் கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார். அதோடு இன்னும் ஒரு காரணமாகவும் அந்த உருவில் தோன்றினான் என்கிறார் அவர். "உலகம் உய்ய" என்பதே அது. கலியுக வரதனாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இன்றும் தனது பக்தர்களைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனை அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில் பல விதங்களில் வரும்படி அழைக்கிறார்.

உருவம் கொண்டு வரும்படி அழைத்த பிறகு அருவ வடிவிலும் வருவாய் என்கிறார். சிவகுமாரன் ஆனதாலும் சிவனது மறு வடிவமாக விளங்குவதாலும் உருவத்தோடும் அருவமாகவும் ஆகி முழுமுதல் கடவுளாக வர வேண்டும் என்று பாடுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.

மேலும் மருவாகவும் மலராகவும் வர வேண்டும் என்கிறார். "வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே" என்று பரமேச்வரனைத் தேவாரம் பாடுகிறது.அவனது சிருஷ்டிகள் எல்லாம் அவன் வடிவே என்பதால் இவ்வடிவங்களில் வரவேண்டும் என்றார்.

மணியாகவும் மணியின் ஒளியாகவும் இறைவன் விளங்குகிறான்.இப்படித்தான் அபிராமி அந்தாதியும் அம்பாளைப் போற்றுகிறது. இந்த மணியோ நிர்மலமான மணி-அதாவது மாசிலாமணி. இறைவனை மாணிக்க மலை என்றும் போற்றுவது உண்டு.இவனும் மயில் ஏறிய மாணிக்கம் தானே! திருச்சிக்கு அருகில் உள்ள ஊட்டத்தூரில் சுவாமிக்கு சுத்த ரத்திநேச்வரர் என்ற பெயர் உண்டு.

இனி அவனே கருவாகவும் அதைக் காக்கும் தாயாகவும் அக்கருவைத் திருத்தி நல்ல வழி காட்டும் தெய்வமாகவும் வரவேண்டும். "சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் " என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதை ஏதோ பரிமாறுவதற்கு சொல்லப்படும் வார்த்தை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதன் பொருள் என்ன தெரியுமா? சஷ்டியில் விரதம் இருந்தால்தானே அகப்பையில் (கர்ப்பத்தில் ) குழந்தை உண்டாகும் என்பது அதன் அர்த்தம். இப்படிப் பிரார்த்தனைக்குப் பிறகு புத்திர பாக்கியம் ஏற்படுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.சீர்காழியில் தந்தையின் தவப் பயனாகத் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்தார் என்று பெரிய புராணம் சொல்கிறது.

ஸ்கந்தனே நமக்கு நல்ல கதி காட்டுபவன். அவனை விட்டால் நிர்கதிதான். இப்படித் தன்னை சரணம் அடைந்தவர்களை அவன் ஒரு நாளும் கை விடுவதில்லை. நமது விதியையும் அவன் மாற்றுவான். அவன் கால் பட்டவுடன் பிரமன் எழுதிய தலைவிதி அழிந்தது என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார் அருணகிரியார்.

தாரகத்தின் பொருளைத் தந்தை செவியில் ஓதிய சுவாமிநாதனைக் குருவாய் வருவாய் என்று வேண்டுகிறார் அருணகிரிப் பெருமான். உலகில் பிரம்மண்யம் குறையும் போதெல்லாம் குரு வடிவாகத் தோன்றிய குமரனை நாமும் இப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.குரு குஹனே சம்பந்தராக அவதரித்தான் என்று திருப்புகழில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.

ஜகமாகிய மாயையில் இருந்து விடுவித்து நல்ல வழி காட்ட மீண்டும் குருவடிவில் வரவேண்டும் என்று மாறிலா வள்ளி பாகனாகிய வள்ளலை இப்பாடல் மூலம் பிரார்த்தனை செய்வோமாக.