Tuesday, April 20, 2010

கணக்கு எழுதும் இன்னம்பர் ஈசன்


நாம் செய்யும் பாவ புண்ணியங்களைச் சித்திரகுப்தன் கணக்கு எழுதிக் கொள்கிறான் என்று சொல்வார்கள். தன்னை வணங்காமல் , பொழுது போக்கிக்கொண்டு வீணாகக் காலம் தள்ளுபவர்களையும் பரமேச்வரனே கணக்கு எழுதிக் கொள்வதாக இன்னம்பர் என்ற ஸ்தலத்தில் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது.


கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் புளியன்சேரி என்ற இடத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் பாதை பிரிகிறது. அப்பாதையில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் இன்னம்பரை அடையலாம். அது இப்பொழுது இன்னம்பூர் என்று அழைக்கப்படுகிறது. இன்னன் என்ற சூரியன் பூஜித்ததால் இன்னம்பூர் என்று வழங்கப்பட்டது. கஜப்ருஷ்ட விமானத்துடன் கூடிய சந்நிதியில் சுவாமி உயர்ந்த சிவலிங்க வடிவில் அற்புதமாகக் காட்சி அளிக்கிறார். அக்ஷரபுரீச்வரர் என்றும் எழுத்தறியும் பெருமான் என்றும் இவரை அழைக்கிறார்கள். குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்வதற்கு மக்கள் இங்கு வருகிறார்கள். நித்ய கல்யாணி என்றும் சுகுந்த குந்தளாம்பிகை என்றும் அம்பாள் இரு சன்னதிகளில் காட்சி அளிக்கிறாள். சம்பந்தரும் அப்பரும் இந்த ஸ்தலத்தில் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் அப்பர் ஸ்வாமிகள் பாடிய ஒரு பாடலை இங்கு எடுத்துக்காட்டலாம்.


சிவ பூஜைக்கு மிகவும் முக்கியமானது தூய அபிஷேக ஜலமும்,பசும் பாலும் , வில்வ இலைகளும் ஆகும். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு " என்று திருமூலரும் பாடி இருக்கிறார். அதோடு தூய மலர்களால் அர்ச்சனை செய்வதால் விசேஷமான பலன் கிடைக்கும். மனத்தூய்மையும் முக்கியம். எனவேதான்,"கரவின்றி நன் மாமலர்கள் கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள்" என்று மயிலாடுதுறையில் பக்தர்களைச் சிறப்பித்தார் ஞானசம்பந்தர். இறைவனை வணங்கி மலர்களால் அர்ச்சனை - தோத்திரங்கள் செய்து , அன்பு மேலிட்டு கண்ணீர் மல்க அவனது நாமங்களைச் சொல்லி பூஜிப்பவர்களைக் கணக்கில் எழுதி வைத்துக்கொள்கிறான் இன்னம்பர் ஈசன் என்று அப்பர் பெருமான் பாடியதை நாமும் அனுபவிப்போம்.


"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும் "

என்பது அப்பாடலின் முதல் இரு வரிகள்.


முன்பு செய்த தீய வினையினால் தெய்வத்தை நினைக்காமலும் பூஜிக்காமலும் காலத்தைத் தள்ளுபவர்கள் எக்காலத்திலும் உண்டு அல்லவா? அவர்களையும் சுவாமி எழுதிவைத்துக் கொள்வதாக மற்ற இரண்டு அடிகளில் காணலாம்:


"பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."


நாம் செய்வதைப் பார்க்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற அகம்பாவதில் அக்கிரமங்கள் செய்பவர்களுக்கு இப்பாடல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இப்பொழுது முழுப் பாடலையும் கீழே காண்போம்:


"தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."


என்ற இந்த அற்புதமான பாடலை அன்பர்கள் பாராயணம் செய்வதோடு இன்னம்பருக்குச் சென்று நிறைய புஷ்பங்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.