Tuesday, December 28, 2010

துன்பம் தீர வழி

உலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுநடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்பமுண்டேல்துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால் , அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள். எளிய வழியைக் கூறி அடைக்கலம் காட்டியவர்கள். கடுமையான தவ வாழ்க்கையை எல்லோரும் பின்பற்றி இறைவனை அடைவது கடினம் ஆதலால் இறைவனது நாமங்களைச் சொல்வதாலும் அவன் உறையும்தலங்களின்பெயர்களைக் கூறி சிந்திப்பதாலும் துன்பங்கள் நீங்கப் பெறலாம் என்று உபதேசித்தவர்கள்.

திருவெண்காடு என்ற சிவ ஸ்தலம் , முக்தி அளிக்க வல்ல தலங்களுள் ஒன்று. இதன் பெயரைக் கூறிய மாத்திரத்தில் தீராத வினைகள் எல்லாம் தீரும் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள். வினைகளால் ஏற்படுவது துன்பமும் நோயும். அவை நீங்க வேண்டுமானால் , " சந்திரசேகரா,கங்காதரா" என்று சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தப் பெருமான். ஆனால் இவற்றை உள்ளம் உள்கி நெகிழ்ந்து ,கண்ணீர் மல்க சொல்வோமானால் சிவனருள் பெறலாம் என்பதை,
" பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன்..."
என்கிறார். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு இறைவன் எளியவனாகி அருள் வழங்குகிறான். உலகம் உய்ய நஞ்சை உண்டவனே என்றும் உமைபங்கா என்றும் கண் முத்து அரும்பக் கழல் அடிகளைத் தொழு அடியார்கள் , துன்பங்களாலும் கவலைகளாலும் கரைந்து உழலும்போது, அஞ்சேல் என்று அருள் செய்வான். இவ்வாறு , ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; பல நாட்கள் சிவ நாமாக்களைச் சொல்லி வரவேண்டும். கிளிகள் சொன்னதையே திருப்பிச் சொல்வதுபோல சிவ நாமங்களைத் திருப்பித்திருப்பி ஆயுட்காலம் முழுவதும் சொல்ல வேண்டும். திருவெண்காட்டில் வேத பாட சாலைகளில் இருந்த கிளிகள் , தாங்கள் தினமும் கேட்கும் வேதங்களையே திருப்பிச் சொல்கின்றன என்பார் சம்பந்தர்.
அரன்நாமம் கேளாய் என்று உபதேசித்த ஆசார்யமூர்த்திகள், அதைச் சொல்வதன் மூலம் துன்பம் நீங்கிப் பெருவாழ்வு பெறலாம் என்று இந்த ஊர்ப் பதிகத்தில் அருளி இருப்பதைக் காட்டும் பாடல் வருமாறு:

நாதன் நமை ஆள்வான் என்று நவின்றேத்தி
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்துஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

என்பது அந்த அற்புதமான பாடல் வரிகள். இங்கு ஏதம் என்பது துன்பம் என்று பொருள் படும். இறைவனது நாமங்களைச் சொல்பவர்க்கு ஏதம் ஏதும் இல்லை என்பது இதனால் அறியப்படுகிறது. "உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று சுந்தரர் அருளியதுபோல், நாக்கு தழும்பு ஏறும்படி நாதன் நாமத்தைச் சொல்லிவருவோமாக.