Tuesday, December 18, 2012

உன்னை நினைக்க அருளாய்




நம்மில்பலர் தெய்வ சிந்தனையே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். அதனால் என்ன பலன் என்று வாதம் செய்வோரும் உண்டு. சிலர் வாழ்நாள் முழுவதுமே அப்படி இருந்து விடுகிறார்கள். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு" என்று திருமூலர் சொல்லியிருப்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். புண்ணியம் செய்தவர்களுக்கே புண்ணிய மூர்த்தியாகிய சிவ பெருமானுக்குப் பூக்களாலும், தூயநீராலும்ஆராதிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஒரு பொருளும், சிவ புண்ணியத்தை வேண்டினால், பூக்களாலும் நீராலும் அவனை ஆராதித்தால் அவன் அருள் கிடைக்கும் என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். சைவ சித்தாந்த வழியில் நின்று பார்க்கும்போது முதலில் சொன்ன பொருளே உயர்ந்ததாகத் தோன்றுகிறது. அதாவது, அவன் அருள் இருந்தால் மட்டுமே, பூவாலும் நீராலும் அவனை வழிபாட்டு அவனருளைப் பெற முடியும் என்று கொள்ளலாம். இதைத்தான், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று திருவாசகமும் கூறுகிறது.  முந்தைய பிறவிகளில் செய்த நல்  வினைப் பயன்களால் இந்த நிலை ஏற்படுகிறது. பன்னாட்கள் அவனது நாமத்தை, நாக்குத் தழும்பு ஏற உச்சரிப்போர்க்கு சிவன் முன்னின்று அருளுவான் என்கிறார் அப்பர் பெருமான்.

இதில் நமது முயற்சியோ சாமர்த்தியமோ  ஏது? "காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே" என்ற அப்பர் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. சில சமயங்களில் நமக்கு இறைவனின் ஞாபகம் வந்தபோதிலும் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடுவதையும் காண்கிறோம். அப்படியானால் , ஒரு கண நேரம் அந்த சிந்தனையைத் தந்துவிட்டுப் பிறகு அதை அப்போதே மறக்கும்படி செய்வதும் அந்த பரம்பொருளின் செய்கையே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார் அப்பரடிகள். ஒருபோதும் உன்னை நினைக்காமல் செய்கிறாய். ஒருக்கால் அவ்வாறு நினையப் புகுந்தால்  அந்தக் கணமே மறக்கும்படியும் செய்து விடுகிறாய். அது மட்டுமல்ல. வேறு ஒன்றில் நாட்டம் வரும்படியும் செய்து விடுகிறாய். இவ்வாறு உன்னை எப்போதாவது கூட நினைக்க மாட்டாதவன் ஆகி, உன்னை எப்போதும் மறப்பவனாக ஆகிவிட்டேன். இருந்தாலும் உன் கருணையை என்னவென்று நான் சொல்வது?    அற்பன் என் உள்ளத்துள் அளவில்லாத உன்னைத் தந்துவிட்டாயே! உனக்கு இனியவனாக ஆக்கி விட்டாயே! கல்லைப் பிசைந்து கனி ஆக்கி விட்டாயே! நின் கருணை வெள்ளத்தைக் காட்டினாயே! பண்டு செய்த பழ வினையின் பயனும் இது தானோ? நான் பெற்ற பேறு யார் பெற வல்லார்? இறைவா, உன் கருணைக்குப் பாத்திரனாக ஒருபோதும் இருக்கத் தகுதி அற்ற இவ்வெளியேனை ஆட் கொண்டது எக்காரணம் பற்றி? என்னை ஒப்பாரும் உள்ளார்களோ சொல்லுவாயாக.

இந்தப் பாடல் இறைவனின் ஐந்தொழில்களுள் , காத்தல், அருளல், மறைத்தல் என்ற மூன்று தொழில்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, அப்பர் பெருமானை அன்பால் ஆர்த்து அருள் நோக்கால் ஆண்டு கொண்டு சமண் நீக்கிக் காத்தான்  இறைவன். தேவர்களுக்கும் அரியவனான அப்பெருமான் எளியவனாக முன் நின்று அருள் செய்தான். எப்படிப்பட்ட அருள் தெரியுமா? " இரவும் பகலும் பிரியாது வணங்கும்" பேரருள். பிழைத்தவை அத்தனையையும் பொறுத்து ஆண்டு கொண்டான். அதே நேரத்தில், இரங்காதவன் போல் தன்னை மறைத்துக் கொள்ளவும் செய்தான். இந்த கருணையைக் கண்ட திருநாவுக்கரசர், "இத்தனையும் எம்பரமோ?" என்று கசிந்து உருகுகின்றார். இந்த அருமையான பாடலை நாம் காண்போமா?

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய்  நீ  நினையப்புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார்  உளரோ சொல்லு வாழி இறையவனே.



Saturday, November 10, 2012

தெய்வ பக்தி


நாம் ஒரு ஊருக்குப் புறப்படும்போதுதான் எத்தனை வேண்டுதல்கள் ! நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாசல் வரையில் கூட வந்து அனுப்பி வைக்கும் தாயார். "பத்திரமாய்ப் போய்விட்டு வாப்பா" என்று வழி அனுப்பிவைக்கும் தந்தை. " ரயிலுக்குப் போகும் முன்பு தெருக்  கோடியில் உ ள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டுப் போ" என்று உள்ளே இருந்து குரல் கொடுக்கும் தாத்தா. " சகுனம் சரியாக இருக்கா என்று பார்த்து அனுப்பி வை " என்று சொல்லும் பாட்டி. இதெல்லாம் சரிதான். விக்னம் எதுவும் இல்லாமல் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பியவுடன்  யாராவது தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கிரார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மறுபடியும் ஊருக்குப் போகும் போதுதான் ஸ்வாமி ஞாபகம் வருமோ என்னவோ!
 நல்ல பண்புடைய நண்பர் ஒருவர் சொன்னார்: " எனக்கு தெய்வ நம்பிக்கை இருந்தபோதும்  பக்தி மட்டும் வருவது இல்லை. அப்படி பக்தி ஏற்படவேண்டுமானால் ஏதாவது வழி இருக்கிறதா?" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான்! கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை! " பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது" என்றேன். " அதெப்படி?" என்பதுபோலப் பார்த்தார் நண்பர். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படவே, பதில் சொல்வதில் இருந்த தயக்கம் நீங்கத் தொடங்கியது.

" முன்பெல்லாம் இப்போதுபோல வாழ்க்கைமுறை கிடையாது. அவரவர்கள் நியமப்படி வாழ்வது சாத்தியமாக இருந்தது. உதாரணமாக, சந்தியா காலம் ( அஸ்தமன வேளை) வந்தால் அப்போது அனுஷ்டானங்கள் செய்வதைக் கடமையாகக் கொண்டிருந்தபடியால். ஈச்வர ஞாபகம்  வருவது எளிதாக இருந்தது. எல்லா உயிரினங்களும் தமது இருப்பிடத்தை நாடும் சமயமாதலால் , சிவாய,மகேச்வராய.சம்பவே,பினாகினே ,சசிசேகராய  ... என்று பெரியவர்கள்,பரமேச்வரனது  நாமாக்களைச் சொல்லி வந்தார்கள். கோயில்களில் நடக்கும் சாயரட்சை, மகாப்ரதோஷம் ஆகிய  பூஜா காலங்களில் சிவ தரிசனத்திற்குச் சென்று வந்தார்கள். இந்தக் காலத்திலோ , பலர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு வெகு நேரம் ஆகி விடுகிறது. சிலர் அந்த நேரத்தில்தான் ,ஹோட்டல்,சினிமா  ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்கள். இப்படிப் பட்ட காலத்தில் தெய்வ ஞாபகம் வந்தால் தானே பக்தி வருவதற்கு!

ஞான சம்பந்தர் பாடினார்," உண்ணினும்,பசிப்பினும்,உறங்கினும் நின் ஒண் மலர் அடியல்லால் உரையாது என் நா..." என்று. அதாவது, சாப்பிடும்போதும், பசித்து இருக்கும்போதும், தூங்கும் போதும் உனது மலரடிகளை என்னுடைய நாக்கு மறக்காது என்பது இதன்  பொருள். எப்போது பார்த்தாலும் பணம் பற்றிய நினைவே இருக்கும் இந்தக் காலத்தில் இறைவனின் நினைவு எவ்வளவு பேருக்கு வரும்? புண்ணியம் செய்தவர்களுக்கே அது கிடைக்கும். இனிமேல் பிறவாமல் இருக்கும் வரம் பெற வேண்டுமானால் அவனை என்றும் மறவாமல் இருக்கும் வரம் வேண்டிப் பெறவேண்டும்.இப்படித்தானே காரைக்கால் அம்மையாரும் வேண்டினார்.

காலையில் எழுந்தவுடன் சிவசிந்தையோடு எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். "கோட்டூர் நற் கொழுந்தே.." என்று சம்பந்தர் சொல்லியபடி எழுந்திருந்து , பல் துலக்கி சுத்தம் செய்துகொண்டு, சிவ நாமாக்களைச் சொல்லியபடியே, விபூதி அணிந்த பிறகே காப்பி ஞாபகம் வர வேண்டும். பலருக்குப் பல் துலக்கும் முன்பே காப்பி ஞாபகம் வருவது துரதிருஷ்டமே! பின்னர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் ,                 சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே! இப்படிச் செய்து வந்தால் நமக்குப் பக்தி ஏற்படுவதற்கு இறைவன் அருளுவான். பிறகுதான் , பாராயணம், க்ஷேத்ர தரிசனம் ஆகியவை எல்லாம் படிப்படியாகக் கைகூடும். பக்தி இல்லாமல் க்ஷேத்ராடனம் செய்வது பிக்னிக் போல் ஆகிவிடும். எவ்வளவு கோயில்களுக்கு யாத்திரை போகிறோம் என்பதைவிட, எவ்வளவு கோயில்களில் பக்தியோடு, மனம் ஒன்றி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். அதைத்தான் அப்பரும், "ஒன்றி இருந்து நினைமின்கள் " என்று பாடினார்.

சிவ நாமம் கேட்பதே நம்மைப் பக்திப் பாதைக்குக் கொண்டு செல்ல எதுவாக அமையும். " புகழ் நாமம் செவி கேட்க" வேண்டும் என்று ஞான சம்பந்தக் குழந்தையும் பாடியிருப்பதால், முதலில் நாமத்தைக் கேட்ட பின்பு அதை நாம் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். நாட்களை வீணாகத் தள்ளாமல் , நஞ்சை உண்டு உலகத்தைக் காத்த உத்தமனுக்கு ஆட்செய்ய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லையே! அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, "அரன் நாமம் கேளாய்" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப்  போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான்! நவக்கிரகங்களால் நமக்குத் தீமை ஏற்படும் நிலை ஏற்பட்டால் ,அப்போது அத்  துன்பத்திலிருந்து சிவக்ருபை நம்மைக் காப்பாற்றும் என்பது , பலனை ஆணையிட்டு வழங்கும் ஆசார்ய மூர்த்தியின் வாக்கு. இதோ அந்தப் பாடல்:

நாளாய போகாமே, நஞ்சு  அணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே  அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளி
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.

நண்பரும் புறப்பட்டு விட்டார். அவர் செவியில் ஹரன் நாமத்தைக் கேட்பித்தாகி விட்டது. அவர்  உன்னிப்பாகக் கேட்டதைப் பார்த்தால் , இவ்வளவு நேரம் சொன்னதும் வீணாகாது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. "எல்லாம் அரன் நாமமே சூழ்க;வையகமும் துயர் தீர்கவே"

Monday, October 15, 2012

பெயரும் உருவமும் ஏது?


காரைக்கால் அம்மையார் ஈச்வரனைப் பார்த்துக் கேட்கின்றார்: " பெருமானே, உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே  ஆட்பட்டு விட்டேன். இன்னும் சொன்னால், இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே  உனக்கு ஆட் செய்கின்றேன் . ஆனால் , மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்?  அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? "நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா?" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை தேவரீர் உணர்த்தவேண்டும்.  அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் வரும் அற்புத மான பாடலை நீங்களும் படியுங்கள்:

அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம்  ஏது.

இப்படியன்,இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று காட்ட முடியாத பரம்பொருளுக்கு எந்த உருவத்தை உரியதாக்குவது? அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா? அவன் எவ்வுருவில் தான் இல்லை?
 
அவனோ பிரம விஷ்ணுக்களாலும் தேட முடியாத  அடிமுடி உடையவன். நமக்காகக் கருணை கூர்ந்து உருவம் எடுத்து வந்து நம்மை ஆட்கொள்கிறான். இவ்வாறு ஒரு பெயரும்,ஒரு உருவமும் இல்லாத பரம்பொருளை ஆயிரம் நாமங்களால் துதிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வடிவங்கள் கொண்டாலும்  இறைவன், "உருவமும் அருவமும் ஆய பிரான்" என விளங்குகிறான். இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

திருமாலும் பன்றியாய்ச்  சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய்  ஆண்டு கொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ .

காரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்: " இருட்டுக்கு என்ன வடிவமோ அதுபோலவும் மேகம் என்ன வடிவில் இருக்கிறதோ அப்படியும் ,அதே சமயம் பொன்னொத்த வடிவமும் , கொண்டதோடு, சூரிய சந்திரர்களாகவும்,அக்னியாகவும்,ஆகாயம் ஆகவும்,நிலம் நீர்,காற்றாகவும் அஷ்ட மூர்த்தியாகவும் ஞான மூர்த்தியாகவும் நிற்கிறான்.

"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;
 மருளின் மணி நீலம் என் கோ.."

 என்று சொல்லும் அம்மையார்,

"அவனே இரு சுடர் தீ ஆகாசம் ஆவான்
 அவனே புவி புனல் காற்று ஆவான் - அவனே
 இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
 மயனாகி நின்றானும் வந்து.

என்று நமக்கு உணர்த்துகிறார்.

  எந்தப்பெயரைச்  சொன்னால் இந்திய நாட்டிலுள்ள அனைவரும் அப்பெயர் முருகனைக் குறிப்பதாகப் புரிந்து கொள்வார்கள் என்ற வினாவை அண்மையில் எழுப்பியிருந்தார் ஒரு அமெரிக்கப் பெண்மணி. "கார்த்திகேயன்" என்று பலரும் அவருக்கு விடை தந்தார்கள். உண்மை தான். வட மா நிலங்களில் இப்பெயராலேயே முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகன்,சரவணன்,சுப்பிரமணியன், முதலிய பெயர்கள் தமிழகத்தில் அதிகம். ஸ்வாமி, சுப்பிரமணியன் என்ற வட சொற்களைத் திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் காணலாம். அதுவும் பெருமானுக்கு அழகாகத்தான் இருக்கிறது.

தேவாரமும் பல ஊர்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகிய பெயர்களால் அழைக்கிறது. நம்பெருமான், நம்பி ,ஆரா அமுது போன்ற தூய பெயர்கள் இறைவனுக்கும், வேயுறுதோளி, இரு மலர்க் கண்ணி, வடிவுடை மங்கை, மையார் தடங்கண்ணி போன்ற பெயர்கள் இறைவிக்கும்  பதிகங்களில் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.

பல ஊர்களில் வட மொழிப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் , ஒத்த கருத்து உடையனவாக இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, வேதாரண்யேச்வரர் என்பதை மறைக் காடர் என்றும், நற்றுனண யப்பர் என்பது சத்சஹாயேச்வரர் என்றும், அங்கயற்கண்ணி என்பது மீனாக்ஷி என்றும், தர்மசம்வர்த்தனி என்பது அறம் வளர்த்த நாயகி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பெயர்கள் சிறிது பொருள் வேறு பட்டாலும் அதுவும் பொருத்தமாகவே இருப்பது உண்மை அடியார்களுக்கு மன மகிழ்வைத் தரக் கூடியது. மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை என்று வட மொழியிலும் , அஞ்சொல்  நாயகி என்று தமிழிலும் இருந்தாலும் இரண்டும் உயர்ந்த பொருளைத் தருவதால் இரண்டையுமே ஏற்க வேண்டும். இல்லையேல் மொழித் துவேஷம் வர ஏதுவாகும். அழகிய சொல்லை உடைய அவளே நம்மை அஞ்சல் என்று அருளுபவள்.  ஆதலால் எந்தப்பெயரிட்டு அவளை அழைத்தாலும் அருள் புரிய விரைந்து வருவாள். வேதாரண்யத்தில் அம்பிகைக்கு வீணா வாத விதூஷணி என்று பெயர். சரஸ்வதி வீணையில் சிவகீர்த்திகளை வாசிக்கும்போது, அதனால் மகிழ்ந்த அம்பிகையின் வாக்கிலிருந்து கலைமகளின் கானம்  நன்றாக இருந்தது என்ற வார்த்தைகள் வந்தது தான் தாமதம்! வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா? அதே வேதாரண்யத் தேவாரத்தில், யாழைப் பழித்த மொழியாள் என்று வருவதைச் சுட்டிக் காட்டிய ஒரு அன்பர், அதுவே ஆதிப் பெயர் என்றும் , யாழுக்கும் வீணைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் "ஆராய்ச்சி" பண்ணியிருந்தார். அப்படியே வைத்துக் கொண்டாலும், யாழைவிடவும் வீணையை விடவும் அம்பிகையின் குரலோசை உயர்ந்த்தது என்பதில் இந்த அன்பருக்கு எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. நமக்குப் பிடித்த பெயர்களால் தெய்வத்தை எல்லா மொழியாலும் அழைப்போமே. இதில் சர்ச்சை எதற்கு?

காரைக்கால் அம்மையும் மாணிக்கவாசகரும் சொன்னதுபோல் பெயரும் உருவமும் இல்லாத பரவெளிக்குப் பெயர் ஏது?உருவம்தான் ஏது?    

Sunday, August 12, 2012

கருணையின் பெருமை

பரிசு என்ற  சொல்லுக்கு   ஆங்கிலத்தில் உள்ள " Prize" என்ற சொல்லை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதைத் தாண்டியும் பல அர்த்தங்கள் இருக்கக் காண் கிறோம். இச்சொல்லைத் திருமூலரும், "அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே" என்று இறை அருளுக்குப் பரிசு என்ற பொருள் பட அருளியுள்ளார். இதுவே உயர்ந்த பொருளும் கூட. மனிதர்கள் வழங்கும் பரிசை "Prize" என்று சொல்வதைப் போல இறைவனது பரிசை அதே பொருளில் சொல்ல முடியாது ஏனென்றால், அது "அருட் கொடை" அல்லவா? அது மட்டுமல்ல. தனது மூல பண்டாரத்தையே திறந்து அருட் கொடையாக வழங்குகின்றான். அதைப் பெறுவதற்கு நாம் நல்வினைகள் பல செய்திருக்க வேண்டும். அது சாதாரணப் பரிசு அல்ல. " முத்திப் பரிசு" என்கிறார் மணிவாசகர். அவன் தருகின்ற பதமோ "பெரும் பதம்" . அவனது பேரின்ப வெள்ளத்துள் திளைக்க வேண்டுவோர், அவனது கழலடியே பேணுபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சேவடியைச் சிக்கெனப் பிடித்த அடியார்களின் நையாத மனத்தினை நைவித்து,என்புருக்கி, முந்தைப் பழ மல வாதனை அகற்றி, அழிவில்லாததோர் ஆனந்த வெள்ளத்தை அருட் கொடை என வழங்குகின்றான் என்று சொல்லி நம்மையும் ஆற்றுப் படுத்துகிறார் குருநாதர். மேலும் கருணை ததும்பியவராய் , அக் கொடையைப் பெறுவதற்கு முந்திக் கொள்ள வேண்டும் என்று அருளுகிறார். இதுவே நாம் பெறும் நிகரற்ற முத்திப் பரிசு.

சிவத்யானத்தில் திளைத்தவராக ,ஆற்று மணலால் தான் செய்து வழிபட்ட லிங்க மூர்த்திக்கு, ஆநிரைகளின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக் கண்டு பொறாமல், பால் கலசத்தைக் காலால் இடறிய தன் தந்தையின் சிவாபராதத்தைக் கண்டு சினந்தவராக அவரது காலை மழுவினால் துண்டித்த சண்டிகேச்வரரின் பக்தியை சிவபெருமான் மெச்சி எவ்வாறு அருட் கொடை வழங்கினான் தெரியுமா? அக்குழந்தையின் முன்னே தோன்றி , அச்சிறுவனது கன்னத்தை வருடிக் கொடுத்து, இனி உனக்கு அம்மையும் அப்பனும் நாமே ஆவோம். சண்டீச பதம் தந்தோம் என்று சொல்லித் தனது மதி சூடிய சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக் குழந்தைக்குச் சூட்டினான் பெருமான். தாதையைத் தாள் அறுத்ததோ சாதாரண குற்றமல்ல. பாதகமும் கூட. ஆனால் அதுவே அச்சிறுவனது பக்திக்கு முன்பு பரிசை வாங்கி கொடுத்து விட்டது. இதைத்தான் , " பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே " என்பார் சேந்தனார்.

பரிசு என்ற சொல் , கீர்த்தி , தன்மை, கொள்கை என்ற பல பொருள்களில் திருவாசகத்தில் வருவதைக் காணலாம். இறைவனது தன்மை எப்படிப் பட்டது? தனதடி வழிபடும் அடியார் உள்ளத்துள் அன்பு மீதுரக் குடியாக் கோயில் கொண்ட கொள்கை உடையவன் இறைவன்.. அதுவே அவனது சிறப்பு வாய்ந்த தன்மையும் ஆகும். இப்புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும் எழுந்தருளி முழுவதையும் படைத்தவனாகவும், படைத்தவற்றைக் காப்பவனாகவும், மறைத்தல் தொழிலைச் செய்பவனாகவும், ஆறு சமயங்களுக்கும் வீடு பேறாக நின்று, பிரமன் மால் காணாப் பெரியோனாகி, கற்பமும் இறுதியும் காணும் சிவம், அடியார்க்கு எளியவனாவதை, மணிவாசகர், "கருணையின் பெருமை கண்டேன்" என்று வியந்து பாடுகிறார்.
வைகைக்கரையில், வந்தி என்ற அடியாளுக்காகப் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணிய மூர்த்தி , அவளுக்கு அருளியதை, "அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்" எனப் புகழ்வார் வாதவூரர். நாம் செய்யும் பாவங்களை நாசம்செய்வதும் அருட் கொடை தானே! அதனால், "பாவநாசம் ஆக்கிய பரிசும்" என்றார். "ஒரியூரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்" என்பதாலும் பெருமானது கருணையும், அதனை வெளிப்படுத்த வந்த திருவிளையாடலும் பரிசாகக் கொள்ளப் பட்டது. திருவிடைமருதூரில் பாத தீக்ஷை தரும் கருணையை, " இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்" என்கிறார் அடிகள்.

காஞ்சியம்பதியில் அன்னையின் தவத்திற்கிரங்கி, அருளியதை, ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்" என்பார் மாணிக்க வாசகப்பெருமான். அவன் புரியும் விளையாடல்கள் அநேகம். பலப பல வகையில் அமைவன. இப்படிப்பட்டவை என்று யாரால் அளக்க முடியும்? எனவே, ""பாவகம் பலப்பல காட்டிய பரிசும்" என்றார்.
அவனோ அந்தமில்லாதவன் .யாரறிவார் அவன் பெருமைகளை? "ஆரறிவார் இவர் பெற்றியே" என்றது ஞானசம்பந்தக் குழந்தையும். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி, தன்னைத் தேடிவந்து அருளிய கருணையை எண்ணி எண்ணிக் கரைந்து உருகும் மாணிக்க வாசகர், "அந்தமில் பெருமை அருள் உடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசு" என நெக்குருகிப் பாடுவார். நாயேனையும் இவ்வாறு ஆண்டது எப்படி இருக்கிறது என்பதை, " எப்பெரும் தன்மையும் எவ்வவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டு அருளி" என விளக்கம் தருகிறார்.

நாயேனை "நல மலி தில்லைப் பொதுவுக்கு வா" என்ற வான் கருணையை வாயார வாழ்த்துகிறார் குருநாதர். எளிதாகக் கிடைக்கக்கூடியதா அப்பேரருள்? "நாத நாத என்று அழுதும் அரற்றியும் " ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா? அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா? அதனால் தான் , அவரை ஆட்கொண்டடருளியது, பரிசு ஆயிற்று. அதுவும் அந்தமில் ஆனந்தம் விளைக்கும் முக்திப் பரிசு ஆயிற்று. 

Friday, July 20, 2012

ஆரூரன் அடிமை


"ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே" என்று பாடல் தோறும் தனது  அடிமைத்திறத்தை அமைத்துப் பாடுகிறார் நம்பியாரூரராகிய சுந்தரர். அடியார்களின் திருப்பெயர்களை அமைத்துப் பாடிய பதிகமான திருத்தொண்டத்தொகையில், ஆரூரனையும் சிறப்பிக்கத் தவறவில்லை. சண்டேசரின் மெய்யடிமையைக்குறிப்பிடுகையில், "மெய்ம்மையே திருமேனி வழிபடாநிற்க" என்று, இறைவனது திருமேனியை ஆவினங்களின் பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டதைக்  காட்டி, பெருமான் ஆனைந்தும் உகப்பவனாகக் காட்டப்பெறுகிறான் . கொன்றை உவந்து சூடுபவனாக விளங்குவதை, "மது மலர் நற்கொன்றையான்"    என்பதால் அறியலாம். புலித் தோலையும் , பாம்பையும் அரையில் கட்டியவனாக விளங்குவதை, " "புலி அதள் மேல் அரவு ஆட" எனக் குறிப்பார். "என்னவனாம் அரன்" என்று உரிமையோடும் பாடுவார் நாவலூரர். "உமைபங்கன்", "கறைக்கண்டன்" , "பரமன்" "சிவன்" என்ற இறைவனது நாமங்களும் இப்பதிகத்தில் எடுத்தாளப் படுகின்றன.

பிறரை வேண்டாது ஆரூர்ப் பெருமானுக்கே மீளா அடிமை பூண்டிருந்தும், தன்னைத் தாழ்த்திச்  சொல்லிக்கொள்ளும்போது, " பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்" என்று பாடுகிறார். ஆனால் கசிந்து உருகினால் , குற்றம் பொறுத்துக் குணமே கொள்ளும் தன்மையனாக இறைவன் விளங்குவதால், "கருதிக் கசிவார் உச்சியன்" என்று நன்னிலத்தில் பாடுவார். அதோடு மட்டுமல்ல. வழி வழியாகத் தனக்குத் தொண்டு செய்வோரைக் கைவிடாக் கடவுளாவதை, நாகைக் காரோணத்தாரிடம் உரிமையோடு,

                    "வாழ்விப்பன் என ஆண்டீர்  வழியடியேன் உமக்கு"
என்று நினைவு படுத்துவதுபோல் பாடுகின்றார். " வெண்ணை நல்லூரில் வைத்து என்னை ஆளும் கொண்ட நாயகனார்" என்று அவரே பாடியிருக்கிறார். இவ்வாறு பெற்ற மீளா அடிமையாகிய பேறு , பெறு வாழ்வு ஆவதை, " ஆட்கொண்ட நாட்சபை முன் வன்மைகள்      பேசிட  வன் தொண்டன் என்பதோர்  வாழ்வு தந்தார்" என உருகிப் பாடுவார்.  அந்த அடிமை எப்படிப் பட்டது தெரியுமா? இறைவனைத் தோழனாகப் பெற்றது மட்டுமல்ல. தாயாகவும் தந்தையாகவும் பெற்றதோடு, பொன்னடிக்கே செலுத்துவது.

இதனை,
            "தாயவளாய்த் தந்தை ஆகிச்  சாதல் பிறத்தல் இன்றிப்
           போயகலா மைந்தன் பொன் னடிக்கு என்னைப் பொருந்த வைத்த..."

எனப் பாடுவதால் அறியலாம். ஆகவே தான், பெருமானை, "என்னை ஆளுடை நம்பி" எனக் குறிப்பார். ஒரு பிறப்பு மட்டும் அல்ல. ஏழு பிறப்பும் உனக்கே ஆட்செய்கின்றேன் என்றார் அப்பர் பெருமான். இதையே சுந்தரரும், "என்னை ஆளுடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே" என்றார்.  இவ்வாறு அடிமைகொண்ட பெருமான் எவ்வாறு பணி கொள்வான் என்பதை, "பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி" என்பதால், சிவனுக்கு அடிமையாவதால் பரமானந்தமாகிய சிவானந்த முக்திப்பேறு கிட்டுவதை இது உணர்த்துகிறது.
தொண்டர்க்குத் தொண்டனாதல் புண்ணியம் என நாவுக்கரசர் அருளியிருப்பது போலவே   நம்பிகளும்,

         " ஆள் தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
            கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டோழிந்தேன் ..."
எனப்பாடி,

"உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே" என ஆலங்காட்டில் பரவினார் பரவை மணாளர்,  வரமாவதேல்லாம் மீண்டும் பிறவாமை ஒன்றே எனக் கூறி நம்மையும் நன்னெறிப் படுத்துவார். இத்தனை தெரிந்தபிறகும் அயல் நெறிக்குச் செல்லலாமா? ஒரு போதும் மாட்டேன் என்கிறார்.  "இனி உன்னை அல்லால் உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும்." என்று உறுதிபடப்  பாடுகிறார்.   உற்றாரையும்,ஊரையும் பேரையும் வேண்டேன் எனத் துறந்து, பெருமானே சதம் என்று அடிமை பூண்டதால், "உற்றார் சுற்றம் என்னும் அது விட்டு நுன் அடைந்தேன்.." என இக்கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
இவரோ வன்மைகள் பேசி வன் தொண்டன் என்ற பெயர் பெற்றவர். இறைவன் வாளாவிருந்தால் இவர் சும்மா இருப்பாரா? என்னை எதற்காக ஆளாகக் கொண்டீர்? வாயைத் திறக்காமல் இருப்பதற்காகவா? உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டீர்! எம்மை விட்டு ஓடிப் போகீர்! பற்றும தாரீர்! மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்! உன் திருவடிக்குத் தொண்டு செய்யும் தொண்டர்கள் பெறுவதுதான் என்ன? இப்படியாக நிந்தா ஸ்துதியாகச் செல்கிறது சுந்தரர் தமிழ்.

திசைமாறி செல்லவிருந்த தன்னைப்  பொய்நெறிக்கே போகாமல் தடுத்து ஆட்கொண்ட நாதனை

                 "பொய்யே செய்து புறம்புறமே   திரிவேன் தன்னைப் போகாமே
                  மெய்யே வந்து இங்கு என்னை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே.."

எனக் கரைந்துருகிப் பரவுகிறார் ஆலால சுந்தரர்.

நான் நல்லவன் ஆயினும் ஆகுக. தீயவன் ஆயினும் ஆகுக. ஒன்று மட்டும் நிச்சயம். உனக்கே ஆட்பட்டவன் நான் என்பதே நிதர்சனமான உண்மை. சத்தியமும் கூட. அடியன் ஆனதோடு மட்டுமல்ல. அவன் ஒருவனையே என் மனம் இராப் பகலாகச் சிந்திக்கும். ஒருக்கால் மறந்தாலும் என்  நாக்கு அவனது பஞ்சாட்சர மகாமந்திரத்தையே சொல்லிக்கொண்டு இருக்கும்.   மேலும் , நா ன் எங்கே இருந்தாலும் நினைத்தமாத்திரத்தில் அங்கே வந்து தோன்றி என்னோடு உடனாக நிற்பவனை மறக்கத்தான் முடியுமா? வரும் பழி வாராமே தடுத்து ஆட்கொண்ட குருமணி அல்லவா அவன் ? மறுமையிலும் காண முடியாத ஒப்பற்ற துணை அல்லவா அவன் ? எனக்கு முக்தியையும் , ஞானத்தையும், வானவர்களும் அறிய மாட்டாத பலப்பல நெறிகளையும் காட்டியவன் அன்றோ அவன் ? எனவே, " ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே"  என்று மழபாடியுள்  மாணிக்கத்தைப் பாடினார்.

எனவே இறைவனுக்கு அடிமை செய்தல் மெய் அடிமை ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட புண்ணியனைப் பாடினால் அமரர் உலகம்  ஆள்வதற்கும் ஐயம் ஏதும் இல்லை இப்பெருமான் தான் எல்லா உலகங்களுக்கும் நாதன். இவனே தன்னிகரில்லாத வள்ளல் என்றெல்லாம் அமரர்கள் தொழப்படும் ஆரூரானை மறக்க முடியுமா என்கிறார் தம்பிரான் தோழர்.

இப்போது சொல்லுங்கள். சுந்தரர் பொன்னுக்குப் பாடினார் என்பது அவரது திருவாக்கில்   தோய்வில்லாதவர்கள் திரித்த கூற்று தானே? ஆகவே தான், மாதவச் சிவஞான ஸ்வாமிகள், சுந்தரரை "எமது குல தெய்வம்" எனப் பரவினர்.

Thursday, June 14, 2012

பயமும் அபயமும்


பயம் என்ற சொல்லுக்குத் தமிழில் அச்சம் என்று பொருள் சொல்வார்கள். அபயம் என்றால் அச்சம் இல்லாமல் அது நீக்கப் பெறும் நிலை. நம்மை  அஞ்சேல் என்று அருள வல்ல இறைவனைத் திருவாசகம், "அச்சம் தீர்த்த சேவகன் வாழ்க" என்று போற்றுகிறது. அவ்வாறு அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் கரத்தை , அபய கரம் என்றும் அபய ஹஸ்தம் என்றும் போற்றுகிறோம். கடவுளர்களின் திருவுருவங்கள் இந்நிலையிலேயே இருக்கக் காண்கிறோம். மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை எனப்படுகிறாள். அஞ்சல் என்று பக்தர்களுக்கு அருள வல்ல நாயகியாதலால் இப்படி அழைக்கப்படுகிறாள்.

பயத்தில் தான் எத்தனை வகை! பிறப்பு முதல் இறுதி வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக பயப்பட வேண்டியிருக்கிறது. நோய் வாய்ப்படும்போதும், கடைசி காலத்திலும் இந்த பயம் அதிகரிக்கிறது. நாத்திகனும் இறைவனை அப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. இதைத் தான் ஞானசம்பந்தரும், "நோயுளார் வாயுளான்" என்றார். உண்மையில், இதுவும் ஒருவகையில் அருள் என்றே தோன்றுகிறது. " எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்" என்றார் சம்பந்தப் பெருமான். அந்த உறுதிப்பாடு நமக்கு எந்த காலத்திலும் வருவதில்லையே. "வேண்டாத தெய்வம் இல்லை ; கஷ்டம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை; தெய்வம் இன்னும் கண் திறக்கவில்லை" என்று சொல்லி, பழியைத் தெய்வத்தின் மீது தானே போடுகிறோம்! "வ்யாதிநீனாம் பதயே நம" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்வதால், நோய் அருளி அதன் தலைவனாகவும் ஆகி அதன் மூலம் நம்மை ஆட்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். இந்த நினைப்பு வந்துவிட்டால் , நம்மை விட்டு மரண பயம் போய் விடும்.

செய்யும் தொழிலிலும் பயம் தேவைப்படுகிறது. அத்தொழில் இறைவனோடு சம்பந்தப்படும் போது பயத்தோடு பக்தியும் இணையவேண்டும். இதைத்தான் பயபக்தி என்றார்கள் போலும். கையில் செல்வமும் பிற பலங்களும் சேர்ந்துவிட்டால் ஆணவம் ஓங்கி, அச்சம் சிறிதும் இல்லாமல் போய்விடுகிறது. இராவணன் கூட இப்படித்தான். கைலை மலையையை அச்சம் இன்றி , ஆணவத்தோடு தூக்கினான். அதற்கான தண்டனையையும் பெற்றான். இதனால் கயிலைமலை சற்று அசையவே, உமா தேவி பயந்தாளாம். அப்போது, கயிலாயநாதன் தன் தேவியை நோக்கி, " காரிகையே, அஞ்சல்" என்று கூறித் தனது விரலால் அம்மலையைச் சற்றுஅழுத்தவே, அரக்கன் நிலைகுலைந்து , தலைகளும்,கைகளும் இழந்து வீழ்ந்தான். இக்காட்சியை அழகாக வருணிப்பார் ஞானசம்பந்தப்பெருமான். அம்பிகை மதுர பாஷனி அல்லவா? அதிலும் யாழை வென்ற மொழியாளும் ஆவாள்.
எனவே,

"பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் ..."
என்ற வரிகள் காட்டுகின்றன.

இப்படிப்பட்ட இறைவன் விரும்பி உறையும் திருவெண்காடு எத்தகையது தெரியுமா?

அருகிலுள்ள கடல் அலைகள் ,முழவோசை போல் முழங்க, மயில்கள் நடமாட, சோலைகளில் வண்டுகளின் ரீங்கார இசை ஒலிப்பச் சிறந்து விளங்குவது அத்தலம்.

திருவையாற்றுப் பதிகத்தில் சம்பந்தர் காட்டும் காட்சியும் இங்கு ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. நாடகசாலைகளில் மகளிர் நடனம் ஆடும் போது முழவு ஒலிக்கிறது. ( இங்குப் பெண்களாகிய மயில்களின் நடனம். அங்கோ, தோகை விரித்து ஆடும் மயில்களின் நடனம். இங்கு முழவின் ஓசை. அங்கோ, கடல் அலைகளே, முழவோசை என முழங்குகின்றன.) "மடவார்கள் நடமாட,முழவு அதிர" என்பது திருவையாற்றுக் காட்சி. அங்கு முழவோசையை மேகம் இடிப்பதாகக் கருதி, மழை வரும் எனக் கருதித் தோகை விரித்து மயில்கள் ஆடுகின்றன. ஐயாற்றிலோ , அவ்வோசையைகேட்ட சில மந்திகள், மழை வந்துவதாகக் கருதி , அவசரமாக மரத்தில் ஏறி, ஆகாயத்தைப் பார்க்கின்றன என்ற அருமையான வருணனையைப் பார்க்கிறோம்.

முழுப் பாடலையும் இப்போது பாருங்கள்:

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.

Sunday, May 13, 2012

சிவனருளும் குருவருளும்


துறவின் நோக்கம் தான் என்ன? வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா? ஆசை உட்பட எல்லாவற்றையும் துறப்பவன் துறவி ஆகிறான். மனத்தை ஒடுக்கித் தவம் செய்கிறான். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கிறான். வெளி உலகியலில் இருந்து விலகித் தவம் செய்கிறான். அதனால் என்றாவது இறை இன்பத்தை உணருகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என விரும்புகிறான். தகுந்த மாணாக்கார்கள் மூலம் உபதேசிக்கிறான். அவனது தவ வலிமை பிறரை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்டோர்க்கு அல்லவோ இறைவன் முன்னின்று அருளுவான். நம் போன்றோருக்கு எவ்வாறு இறை அருள் கிட்டும் என்று பிறர் நினைக்கின்றனர். இத்தகையோருக்கு ஆறுதல் அளிக்கிறார் ஞானசம்பந்தப்பெருமான்.

பிறவியைப் பிணி என்று சொல்வதால் , அதில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மிகுந்து இருப்பதைக் காணும் போது சலிப்படையச்செய்கிறது. இதனால் வருவது கேடு அல்லவா? இதைத்தான் , "கேடு உனக்குச், சொல்கின்றேன் பலகாலும்" என்றார் மாணிக்கவாசகரும். சரி; அதைத் தாண்டும் உபாயம்தான் என்ன? இறைவன் கேடு இல்லாதவன் அல்லவா? அவனைத் தஞ்சம் என்று சரணாகதி அடைந்தால் கேடில்லாமல் கரைஎறி விடலாம் அல்லவா? எனவே, "கீழ்வேளூர் ஆளும் கோவினைக், கேடிலியை நாடுமவர் கேடிலாரே" என்றார் அப்பர் பெருமான்.

இப்போது ஞானசம்பந்தப்பெருமான் உபதேசிப்பதைக் கேளுங்கள்: இறைவனை மறவாமல் இருத்தலே அந்த மார்க்கம். அப்படி மறவாத துறவிகளுக்குமட்டுமே அது வாய்க்கும் என்று சலிப்படையாதே. அஞ்சாதே. புண்ணிய நீரான கங்கையைச் சடையில் வைத்தவனும்,தர்ம ஸ்வரூபனுமான பரமேச்வரனின் திருவாரூரைத் தொழுதால் பிறவியையும் அதனால் வரும் கேட்டையும் தாண்டி, பேரின்பம் பெற்று விடலாம் என்கிறார் குருநாதர். அத்தேவாரப் பாடலைப் பார்ப்போமா?

பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்ப(ம்)நீங்காது எனத் தூங்கினாயே
மறவல் நீ ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

இதனால் அறியப்படுவது என்னவென்றால், அவரவர் நிலையில் இருந்து இடையறாப் பேரன்புடன் பக்தி செய்தால் இறை அருளைப் பெறலாம் என்பதே. ஒன்றை மட்டும் இங்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே சிவ ஞானம் சித்திக்கும் என்பதை மறக்கக் கூடாது. "பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம்" என்றார் திருமூலர். "வாடித் தவம் செய்வதே தவம் " என்றார் பிறிதோர் திருமந்திரத்தில்.

ஆரூர் போன்ற தலங்களை முறையாகத் தரிசிப்போர்க்கு சற்குருவும் வாய்ப்பார். அப்போதும், "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க" என்று எச்சரிக்கை செய்கிறார் திருமூலர். நல்ல சீடன், சற்குருவின் பாதத்தை நிழல் போல் நீங்காதிருக்க வேண்டும் என்கிறார். அகவிருளை நீக்கும் குருவைக் கொள்ளாது, பெயரளவில் சீடனாகி, "வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து" துறவி என்று கூறிக் கொள்வதால் என்ன பயன்? சிவஞானம் கைவரப் பெறாதவர்க்குப் புற வேடத்தால் ஏதும் பயன் இல்லை. "ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்" என்று இதைத் திருமூலர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, குருவானவர், அரும் தவசி என இருத்தல் அவசியம். அதுவே தூய நெறியும் ஆகும்.அப்படிப்பட்டோர்க்குப் பிறவிப் பெருங்கடல் தாண்டுவது சாத்தியமாகி விடுகிறது.

தவ ஒழுக்கம் மேற்கொண்டோருக்கு இறைவன் நெறியை வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த நெறியிலிருந்து வழுவினால் அவர்கள் மேல் பாய நெருஞ்சில் முள்ளையும் (தண்டனையையும்) உண்டாக்கியிருக்கிறான். இப்படிச் சொல்கிறார் திருமூலர்:

"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்.."    

இவ்வாறு முள் மீது நடப்பது போன்ற பாதை துறவறம். இவ்வாறு, சைவத் தனி நாயகன் நந்தி , உய்வதற்காக வைத்த நெறி குருநெறி;அதுவே தெய்வச் சிவநெறி; இது எல்லோராலும் எளிதே பின்பற்ற இயலாது ஆதலால், எளிய மார்க்கத்தைக் காட்டி நம்மைச் சிவநெறிப்படுத்துகிறார் ஞாலம் உய்ய வந்த காழிப் பிள்ளையார்.

Sunday, April 15, 2012

"காளத்தியான் என் கண்ணுளான் "


சிவபெருமான் எங்கே இருக்கிறான், அவனைக் கண்டவர்கள் யார், அவன் உருவம் எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அடுக்கப்படும் கேள்விகளுக்குத் திருமுறைகள் விளக்கம் அளிக்கின்றன. அவன் இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் , புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் அநேகர். சில இடங்களையாவது அவர்களுக்குப் புரியும் வகையில் சுட்டிக்காட்டி, அவரவர் அனுபவத்தால் அவனருளைப் பெறுவதற்கு வழியைக் காட்டுகின்றன  இத் தெய்வப் பனுவல்கள்.

"உள்ளம்  பெருங்கோயில்" என்றார் திருமூலர். மனம் மாசற்றபோது அதில் மாதேவன் கோயில் கொள்கிறான். மெய் அடியார்கள் தம்  மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்வதை, திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் வரலாற்றால் அறிகிறோம். யார் தன்னை வஞ்சம் இன்றி நினைக்கிறார்களோ அவர்களது மனத்தில் சிவன் வீற்றிருக்கிறான். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்" என்றார் அப்பரும்.

அடுத்ததாக, யோக நெறியில் அவனைக் காண்போர்கள், துவாதசாந்தத்தில் காண்பார்கள். தலையின் மேல் அவ்வாறு இருப்பதையும் அந்நெறியில் நிற்போர்கள் உணர முடியும். சீர்காழிப்  பெருமான் தனது உச்சியில் நிற்பார்  என்று ஞானசம்பந்தப் பிள்ளையார்  இதைத்தான் குறிப்பிட்டார். தலங்களுள் துவாதசாந்தத் தலம் என்று மதுரை குறிப்பிடப்படுகிறது.

இனி, அவன் உறைவிடமாக வாய் சொல்லப்படுகிறது. வாயிலிருந்துதானே அவன் புகழ் பேசும் வாக்கு வெளிப்படுகிறது?  அந்த வாக்கு சிவ வாக்காகவே ஆகிவிடுகிறது. "எனது உரை தனது உரை" என்பார் சம்பந்தர்.
இறைவன் எந்த இனத்தோடு ஒட்டி வாழ்பவன் தெரியுமா? தனது தொண்டர்களை இனமாகக் கொண்டு நீங்காது உறைந்து அருள் செய்கிறான். அவன் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்பவன். யார்க்கும் தெரியாத தத்துவனாய் இருந்தபோதும், அடியார்களுக்கு அணியன்  ஆகி நிற்பவன். அதிலும் தன் அடி ஒன்றையே கதியாகக் கொண்டு தனக்கு முன்னர் பாடும் தொண்டர்க்கு எளியவன். அவர்களைத் துன்பக் கடலிலிருந்து கரை ஏற்றும் தோணி ஆகி விளங்குபவன். மிக்க அன்போடு அழும் தொண்டர்க்கு அமுதாகி அருள்பவன். பக்தர்க்கு என்றும் கண்ணிடை மணியாகி நிற்பவன்.
இமையவர்கள் இன்னமும் துதிக்க  நிற்பவன்  அப்பேரருளாளன் . அத்தேவர்களின் சிரத்தின் மீது இருக்கின்றான். அது மட்டுமா? ஏழு அண்டங்களையும் கடந்த கடவுளாக அவன் ஒருவனே விளங்குகின்றான். நிலங்களாகவும் கொன்றைப்பூவிடமும் மலை,காற்று, நெருப்பு ஆகிய வடிவிலும் விளங்கும் அஷ்ட மூர்த்தியும் அவனே. கயிலாய மலைச் சிகரத்தின் உச்சியிலும் , தக்ஷிண கைலாயமாகிய காளத்தியிலும் கோயில் கொண்டுள்ள இறைவன் என் கண்ணை விட்டு அகலாது விளங்குகின்றான் என்கிறார் அப்பர் பெருமான். இதோ அப்பாடல்:

 மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
    வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர்
 இனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
   எழண்டத்தப்பாலான் இப்பால் செம்பொன்
 புனத்தகத்தான் நறும் கொன்றைப் போதினுள்ளான்
   பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
   காளத்தியான் அவன்  என் கண் உள்ளானே.

"என் கண் " என்பதற்கு " என்னிடத்தில்" என்றும்  "என்  கண்ணின் மணியாகி நீங்காது உறையும்" என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளும்போது தெய்வீக மணம் ,இப்பாடலில் மேலோங்குவதைக் காணலாம்.

Thursday, March 29, 2012

கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வம்


  பனை மரத்தைத்  தல  விருக்ஷங்களாகக் கொண்ட ஊர்கள் பல உண்டு. திருப்பனையூர், வன்பார்த்தான்  பனங்காட்டூர் , புறவார் பனங் காட்டூர், திருப்பனந்தாள்  ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். செய்யாறு எனப்படும் திருஒத்தூரிலும்  தெய்வப் பனைமரம் ஸ்தல விருக்ஷமாகப் போற்றப்படுகிறது. இவற்றுள் , புறவார் பனங்காட்டூர்  எனும் தலம் , தற்போது பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இத்தலப் பெருமானை, ஞான சம்பந்தர்  பாடிப் பரவிய ஒரு பதிகம் இரண்டாம் திருமுறையுள் உள்ளது. இப்பதிகத்தால் அறியவரும் செய்திகள் சிலவற்றை இங்கு சிந்திக்கலாம்.

"வையகமும் துயர் தீர்கவே" என்று, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் கருணை  உடைய சம்பந்தர் ,  இத்தல இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார். அதிலும், இறைவனிடம் அன்பு கொண்டவர்களுக்கு  அருள வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். எப்படி அதனை முன்வைக்கிறார்  தெரியுமா?  " நள்ளிருளில் ஆடும் சங்கரனே, நீ நான் மறைகளையும் பாடிக் கொண்டே ஆடுபவன்; மாதொர்  பாகனாகிய பிஞஞகனும் நீயே. கங்கையும் மதியமும் கமழும் சடையில் கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சூடியவன் நீ. உன் அடியார்கள் உன்னை  எப்படியெல்லாம் துதிக்கிறார்கள் தெரியுமா? நால் வேதங்களையும் பாடி ஆடுபவனே என்று பலமுறை நல்ல மலர்களை உன் பாத கமலங்களில் தூவித் துதிக்கிறார்கள். முழு முதற்கடவுள் நீயே என்று கை கூப்பி நாள்தோறும் வணங்குகிறார்கள். இராவணனை அடர்த்துப் பின் அவன் பாடலுக்கு இரங்கியவனே என்கிறார்கள். திருமால்,பிரமன் எனும் இருவரும் அறிய முடியாத அக்னிப் பிழம்பாக நின்றவனே என்று போற்றுகிறார்கள். பிரம கபாலம் ஏந்தும் பிக்ஷாடன மூர்த்தியே என்று துதிக்கிறார்கள்.இத்தகைய அடியார்களுக்கு அருளுவாயாக."

"நீ விரும்பிக் கோயில் கொண்டிருக்கும் புறவார் பனங்காட்டூரின் அழகே அலாதியானது. அங்கே வண்டுகள் ரீங்காரம் செய்வது, நேரிசைப் பண்ணில் யாழில் எழுப்பும் ஒலியைப்   போல் இருக்கிறது. நீர்வளம் மிக்க இவ்வூரில் வைகறையில் எருமைகள் செந்நெற் கதிர்களை மேய்ந்துவிட்டு குளிர்ந்த நீர் நிலைகளில் குளிக்கின்றன. வய ற்கரைகளில் பாளைகளை உடைய கமுகு மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. தாமரைப் பொய்கைகளில் அன்னங்கள் விளையாடுகின்றன "

" காந்தள் மலர்களின் தோற்றம், பெண்களின் கை விரல்களைப் போலவும் , பாம்பின் படத்தைப் போலவும் தோற்றமளிக்கின்றன. உமா தேவியும் காந்தள் போன்ற விரல்களையும், இயற்கையாகவே  நறுமணம் கமழும் கூந்தலையும் உடையவள் தானே! இப்படிப் பல்வேறாகப் பாடிப் பரவும் மெய்யடியார்களுக்கு நீ அருள்வாயாக" என்று துதிக்கிறார் சம்பந்தப்பெருமான். இதில், அம்பிகையைக் குறிப்பிடும் இடத்தில், "மெய்யரிவை " என்று சொல்வதை, உரை எழுதுபவர்கள் , இறைவனின் மெய்யில் பாகம் கொண்டவள் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வூரில் அன்னைக்குப் புறவம்மை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. வடமொழியில் சத்யாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். இத்தேவியின் முன்னர்  பொய் சத்தியம் செய்பவர்கள் பெரும் கேடு அடைகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, சத்தியத்தின்  முழு வடிவமாக அம்பிகை இங்கு கோயில் கொண்டுள்ளாள். இதைத்தான் "மெய் அரிவை " என்று சம்பந்தர் சொன்னாரோ  என்று தோன்றுகிறது. "மெய்" என்பதன் பொருள், சத்தியம் அல்லவா? "அரிவை " என்பது பெண்களின் பல பருவங்களில் ஒன்று. இத்தலத்தில் அரிவை வடிவில் காட்சி அளிக்கிறாள் போலும்! இப்போது பாடலைப் பார்க்கலாம்:

கை அரிவையர் மெல் விரல் அவை  காட்டி அம் மலர்க் காந்தள் அம்குறி
பை அரா விரியும் புறவார் பனங் காட்டூர்
மெய் அரிவை ஓர் பாகமாகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள் தொறும்
பொய் இல்லா அடிமை புரிந்தார்க்கு அருளாயே.

தனது பதிகத்தின் பாடல்களை , தமிழ் மாலை, செந்தமிழ், பாமாலை போன்ற  சொற்களால் குறிப்பிடும் சம்பந்தர், இத்தலப் பதிகத்தில், "செய்யுள்" என்று குறிப்பார். இப்பதிகப் பலன், சிவலோகம் கிட்டும் என்பதே. இதுவே பிறவியை வேர் அறுக்கும் உபாயம் அல்லவா?          "நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே." என்பது அவரது ஞான வாக்கு.
இப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களோடு, தமிழ் இன்பத்தை வழங்கும் இத்தலப் பதிகம், இதனைப் பாராயணம் செய்வோர்க்கு சிவலோகத்தையும் வழங்கும் ஆற்றல் உடையது. சுயம்பு மூர்த்தியாக ,சத்யாம்பிகையுடன் அருள் வழங்கும் பனங்காட்டீசனின் திருக்கோயில் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சித்திரையில் சூரியனின் கதிர்கள் இறை வன்- இறைவியின் திருமேனிகளில் தோய்வதைக் காணப் பல ஊர்களிலிருந்து அடியார்கள் வருகிறார்கள். கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வமாக இறைவனை வழிபடுகிறார்கள்.

Tuesday, February 14, 2012

"இறைவன் நீ"


  உலகத்தில் பிறக்கும் பொழுதே, சில உறவுகள் தாயார் வழியிலும், தகப்பனார் வழியிலும் அமைந்து விடுகின்றன. வயது ஆக ஆக, மேலும் பல உறவுகள் வந்து சேருகின்றன. இப்படிப்பட்டபல  உறவுகளில், அண்ணன்-அண்ணி,மாமன்-மாமி போன்றவை  காலம் காலமாகப் பரிமளித்து வருபவை. இதில் அண்ணன், அருகிலிருந்து அண்ணிப்பவன் . சிவபெருமானும் தனது பக்தனிடம் அணித்து அருள் புரிவதால், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். மேலும் அவரே, "அண்ணா" என்று பரம்பொருளான பரமசிவனை வாயார அழைக்கிறார். அண்ணனது மனைவியிடம் அம்பிகையைப்போல், அண்ணனது கருணையும் பிற நல்ல குணங்களும்  காணப் படுவதில் ஆச்சர்யம் இல்லை.  மன்னிப்பதிலும் அவள் தாயைப் போன்றவள். அதனால் தானோ என்னவோ  அவளைச்  சிலர் "மன்னி" என்று அழைப்பதும் உண்டு. வட இந்தியாவில் அவளைத் தாயாகவே பாவிப்பார்கள்.

                          தாய் வழி மாமனுக்கும் தனி இடம் உண்டு.   உபநயனத்தில், மாமனின் தோளிலே மருமகன் வருவதையும், அதேபோல் மருமகன்,மருமகள் ஆகியோர் அவ்வாறு தூக்கப்பட்டு திருமணத்தில் வருவதையும் நாம் பார்க்கிறோம். இந்த வைபவங்களில் மாமன்- மாமி அக்குழந்தைகளுக்கு  சீர் வரிசைகள் செய்வார்கள்.  மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் , மாமனாக வந்து வழக்கு உரைத்ததும் ஒன்று. திக்கற்ற தங்கையின் குழந்தைகளை உறவினர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்குழந்தைகளின் மாமன் வடிவில் வந்து சோமசுந்தர மூர்த்தியானவர் சாட்சி சொல்வது அந்தத் திருவிளையாடல். அக்குழந்தைகளைத் தழுவிக்கொண்டு,"இப்படி வறியர் ஆகிவிட்டீர்களே" என்று கூறிக் கண்ணீர் விட்டான் இறைவன். மாமன் உறவு அவ்வளவு மகத்தானது.

                           உறவுகளைத் தந்ததோடல்லாமல் ,அந்த உறவுகளாகவே இறைவன் இருந்து அருள் பாலிக்கிறான் என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தாயார் - தகப்பனார் வயிற்றில் பிறக்கச் செய்து, நல்ல உடன் பிறந்தோரையும் தந்து அருளுகிறான். " ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் " என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.  குண- வதியான  மனைவியையும் மக்களையும் அமைத்துத் தருகிறான்  பரமன். அது மட்டுமா? நமக்கு வேண்டிய பொன்,பொருள், மணி, முத்து , தங்கும் ஊர் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுத்து அவற்றை அனுபவிக்கும் வரத்தையும் வழங்குகின்றான். இப்படி இறைவன் தந்த அனைத்தையும் இறைவடிவமாகவே பார்த்துப் பரவசத்துடன் அப்பர் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடலை இங்கு சிந்திப்போமாக:

 அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய  மாமனும் மாமியும் நீ
 ஒப்புடையமாதரும்  ஒண்பொருளும் நீ
    ஒருகுலமும் சுற்றமும் ஒரூரும் நீ
  துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
     துணையாய் என்நெஞ்சம்  துறப்பிப்பாய் நீ
  இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
     இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

"எல்லா உலகமும் ஆனாய் நீயே " என்று பாடிய திருநாவுக்கரசர்  மேற்கண்ட பாடலில் சற்று விளக்கமாகவே நமக்கு உணர்த்துகின்றார். ஆகவே, அவன் தந்த அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் அப்பொருள்கள் எதிலும் பற்றில்லாமல் , திருப்புகலூரில் உழவாரத்தொண்டு செய்துகொண்டிருந்த போது பூமியில் கிடைத்த ஒளிவீசும் மணிகளை , வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளியதோடு , பரமேச்வரன் ஒருவனே தனித்துணை , அவன் அருள் பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் தெளிவாக இப்பாடல் மூலம் உபதேசிக்கிறார்.