Sunday, May 13, 2012

சிவனருளும் குருவருளும்


துறவின் நோக்கம் தான் என்ன? வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா? ஆசை உட்பட எல்லாவற்றையும் துறப்பவன் துறவி ஆகிறான். மனத்தை ஒடுக்கித் தவம் செய்கிறான். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கிறான். வெளி உலகியலில் இருந்து விலகித் தவம் செய்கிறான். அதனால் என்றாவது இறை இன்பத்தை உணருகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என விரும்புகிறான். தகுந்த மாணாக்கார்கள் மூலம் உபதேசிக்கிறான். அவனது தவ வலிமை பிறரை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்டோர்க்கு அல்லவோ இறைவன் முன்னின்று அருளுவான். நம் போன்றோருக்கு எவ்வாறு இறை அருள் கிட்டும் என்று பிறர் நினைக்கின்றனர். இத்தகையோருக்கு ஆறுதல் அளிக்கிறார் ஞானசம்பந்தப்பெருமான்.

பிறவியைப் பிணி என்று சொல்வதால் , அதில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மிகுந்து இருப்பதைக் காணும் போது சலிப்படையச்செய்கிறது. இதனால் வருவது கேடு அல்லவா? இதைத்தான் , "கேடு உனக்குச், சொல்கின்றேன் பலகாலும்" என்றார் மாணிக்கவாசகரும். சரி; அதைத் தாண்டும் உபாயம்தான் என்ன? இறைவன் கேடு இல்லாதவன் அல்லவா? அவனைத் தஞ்சம் என்று சரணாகதி அடைந்தால் கேடில்லாமல் கரைஎறி விடலாம் அல்லவா? எனவே, "கீழ்வேளூர் ஆளும் கோவினைக், கேடிலியை நாடுமவர் கேடிலாரே" என்றார் அப்பர் பெருமான்.

இப்போது ஞானசம்பந்தப்பெருமான் உபதேசிப்பதைக் கேளுங்கள்: இறைவனை மறவாமல் இருத்தலே அந்த மார்க்கம். அப்படி மறவாத துறவிகளுக்குமட்டுமே அது வாய்க்கும் என்று சலிப்படையாதே. அஞ்சாதே. புண்ணிய நீரான கங்கையைச் சடையில் வைத்தவனும்,தர்ம ஸ்வரூபனுமான பரமேச்வரனின் திருவாரூரைத் தொழுதால் பிறவியையும் அதனால் வரும் கேட்டையும் தாண்டி, பேரின்பம் பெற்று விடலாம் என்கிறார் குருநாதர். அத்தேவாரப் பாடலைப் பார்ப்போமா?

பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்ப(ம்)நீங்காது எனத் தூங்கினாயே
மறவல் நீ ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

இதனால் அறியப்படுவது என்னவென்றால், அவரவர் நிலையில் இருந்து இடையறாப் பேரன்புடன் பக்தி செய்தால் இறை அருளைப் பெறலாம் என்பதே. ஒன்றை மட்டும் இங்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே சிவ ஞானம் சித்திக்கும் என்பதை மறக்கக் கூடாது. "பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம்" என்றார் திருமூலர். "வாடித் தவம் செய்வதே தவம் " என்றார் பிறிதோர் திருமந்திரத்தில்.

ஆரூர் போன்ற தலங்களை முறையாகத் தரிசிப்போர்க்கு சற்குருவும் வாய்ப்பார். அப்போதும், "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க" என்று எச்சரிக்கை செய்கிறார் திருமூலர். நல்ல சீடன், சற்குருவின் பாதத்தை நிழல் போல் நீங்காதிருக்க வேண்டும் என்கிறார். அகவிருளை நீக்கும் குருவைக் கொள்ளாது, பெயரளவில் சீடனாகி, "வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து" துறவி என்று கூறிக் கொள்வதால் என்ன பயன்? சிவஞானம் கைவரப் பெறாதவர்க்குப் புற வேடத்தால் ஏதும் பயன் இல்லை. "ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்" என்று இதைத் திருமூலர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, குருவானவர், அரும் தவசி என இருத்தல் அவசியம். அதுவே தூய நெறியும் ஆகும்.அப்படிப்பட்டோர்க்குப் பிறவிப் பெருங்கடல் தாண்டுவது சாத்தியமாகி விடுகிறது.

தவ ஒழுக்கம் மேற்கொண்டோருக்கு இறைவன் நெறியை வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த நெறியிலிருந்து வழுவினால் அவர்கள் மேல் பாய நெருஞ்சில் முள்ளையும் (தண்டனையையும்) உண்டாக்கியிருக்கிறான். இப்படிச் சொல்கிறார் திருமூலர்:

"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்.."    

இவ்வாறு முள் மீது நடப்பது போன்ற பாதை துறவறம். இவ்வாறு, சைவத் தனி நாயகன் நந்தி , உய்வதற்காக வைத்த நெறி குருநெறி;அதுவே தெய்வச் சிவநெறி; இது எல்லோராலும் எளிதே பின்பற்ற இயலாது ஆதலால், எளிய மார்க்கத்தைக் காட்டி நம்மைச் சிவநெறிப்படுத்துகிறார் ஞாலம் உய்ய வந்த காழிப் பிள்ளையார்.