Friday, July 20, 2012

ஆரூரன் அடிமை


"ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே" என்று பாடல் தோறும் தனது  அடிமைத்திறத்தை அமைத்துப் பாடுகிறார் நம்பியாரூரராகிய சுந்தரர். அடியார்களின் திருப்பெயர்களை அமைத்துப் பாடிய பதிகமான திருத்தொண்டத்தொகையில், ஆரூரனையும் சிறப்பிக்கத் தவறவில்லை. சண்டேசரின் மெய்யடிமையைக்குறிப்பிடுகையில், "மெய்ம்மையே திருமேனி வழிபடாநிற்க" என்று, இறைவனது திருமேனியை ஆவினங்களின் பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டதைக்  காட்டி, பெருமான் ஆனைந்தும் உகப்பவனாகக் காட்டப்பெறுகிறான் . கொன்றை உவந்து சூடுபவனாக விளங்குவதை, "மது மலர் நற்கொன்றையான்"    என்பதால் அறியலாம். புலித் தோலையும் , பாம்பையும் அரையில் கட்டியவனாக விளங்குவதை, " "புலி அதள் மேல் அரவு ஆட" எனக் குறிப்பார். "என்னவனாம் அரன்" என்று உரிமையோடும் பாடுவார் நாவலூரர். "உமைபங்கன்", "கறைக்கண்டன்" , "பரமன்" "சிவன்" என்ற இறைவனது நாமங்களும் இப்பதிகத்தில் எடுத்தாளப் படுகின்றன.

பிறரை வேண்டாது ஆரூர்ப் பெருமானுக்கே மீளா அடிமை பூண்டிருந்தும், தன்னைத் தாழ்த்திச்  சொல்லிக்கொள்ளும்போது, " பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்" என்று பாடுகிறார். ஆனால் கசிந்து உருகினால் , குற்றம் பொறுத்துக் குணமே கொள்ளும் தன்மையனாக இறைவன் விளங்குவதால், "கருதிக் கசிவார் உச்சியன்" என்று நன்னிலத்தில் பாடுவார். அதோடு மட்டுமல்ல. வழி வழியாகத் தனக்குத் தொண்டு செய்வோரைக் கைவிடாக் கடவுளாவதை, நாகைக் காரோணத்தாரிடம் உரிமையோடு,

                    "வாழ்விப்பன் என ஆண்டீர்  வழியடியேன் உமக்கு"
என்று நினைவு படுத்துவதுபோல் பாடுகின்றார். " வெண்ணை நல்லூரில் வைத்து என்னை ஆளும் கொண்ட நாயகனார்" என்று அவரே பாடியிருக்கிறார். இவ்வாறு பெற்ற மீளா அடிமையாகிய பேறு , பெறு வாழ்வு ஆவதை, " ஆட்கொண்ட நாட்சபை முன் வன்மைகள்      பேசிட  வன் தொண்டன் என்பதோர்  வாழ்வு தந்தார்" என உருகிப் பாடுவார்.  அந்த அடிமை எப்படிப் பட்டது தெரியுமா? இறைவனைத் தோழனாகப் பெற்றது மட்டுமல்ல. தாயாகவும் தந்தையாகவும் பெற்றதோடு, பொன்னடிக்கே செலுத்துவது.

இதனை,
            "தாயவளாய்த் தந்தை ஆகிச்  சாதல் பிறத்தல் இன்றிப்
           போயகலா மைந்தன் பொன் னடிக்கு என்னைப் பொருந்த வைத்த..."

எனப் பாடுவதால் அறியலாம். ஆகவே தான், பெருமானை, "என்னை ஆளுடை நம்பி" எனக் குறிப்பார். ஒரு பிறப்பு மட்டும் அல்ல. ஏழு பிறப்பும் உனக்கே ஆட்செய்கின்றேன் என்றார் அப்பர் பெருமான். இதையே சுந்தரரும், "என்னை ஆளுடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே" என்றார்.  இவ்வாறு அடிமைகொண்ட பெருமான் எவ்வாறு பணி கொள்வான் என்பதை, "பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி" என்பதால், சிவனுக்கு அடிமையாவதால் பரமானந்தமாகிய சிவானந்த முக்திப்பேறு கிட்டுவதை இது உணர்த்துகிறது.
தொண்டர்க்குத் தொண்டனாதல் புண்ணியம் என நாவுக்கரசர் அருளியிருப்பது போலவே   நம்பிகளும்,

         " ஆள் தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
            கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டோழிந்தேன் ..."
எனப்பாடி,

"உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே" என ஆலங்காட்டில் பரவினார் பரவை மணாளர்,  வரமாவதேல்லாம் மீண்டும் பிறவாமை ஒன்றே எனக் கூறி நம்மையும் நன்னெறிப் படுத்துவார். இத்தனை தெரிந்தபிறகும் அயல் நெறிக்குச் செல்லலாமா? ஒரு போதும் மாட்டேன் என்கிறார்.  "இனி உன்னை அல்லால் உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும்." என்று உறுதிபடப்  பாடுகிறார்.   உற்றாரையும்,ஊரையும் பேரையும் வேண்டேன் எனத் துறந்து, பெருமானே சதம் என்று அடிமை பூண்டதால், "உற்றார் சுற்றம் என்னும் அது விட்டு நுன் அடைந்தேன்.." என இக்கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
இவரோ வன்மைகள் பேசி வன் தொண்டன் என்ற பெயர் பெற்றவர். இறைவன் வாளாவிருந்தால் இவர் சும்மா இருப்பாரா? என்னை எதற்காக ஆளாகக் கொண்டீர்? வாயைத் திறக்காமல் இருப்பதற்காகவா? உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டீர்! எம்மை விட்டு ஓடிப் போகீர்! பற்றும தாரீர்! மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்! உன் திருவடிக்குத் தொண்டு செய்யும் தொண்டர்கள் பெறுவதுதான் என்ன? இப்படியாக நிந்தா ஸ்துதியாகச் செல்கிறது சுந்தரர் தமிழ்.

திசைமாறி செல்லவிருந்த தன்னைப்  பொய்நெறிக்கே போகாமல் தடுத்து ஆட்கொண்ட நாதனை

                 "பொய்யே செய்து புறம்புறமே   திரிவேன் தன்னைப் போகாமே
                  மெய்யே வந்து இங்கு என்னை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே.."

எனக் கரைந்துருகிப் பரவுகிறார் ஆலால சுந்தரர்.

நான் நல்லவன் ஆயினும் ஆகுக. தீயவன் ஆயினும் ஆகுக. ஒன்று மட்டும் நிச்சயம். உனக்கே ஆட்பட்டவன் நான் என்பதே நிதர்சனமான உண்மை. சத்தியமும் கூட. அடியன் ஆனதோடு மட்டுமல்ல. அவன் ஒருவனையே என் மனம் இராப் பகலாகச் சிந்திக்கும். ஒருக்கால் மறந்தாலும் என்  நாக்கு அவனது பஞ்சாட்சர மகாமந்திரத்தையே சொல்லிக்கொண்டு இருக்கும்.   மேலும் , நா ன் எங்கே இருந்தாலும் நினைத்தமாத்திரத்தில் அங்கே வந்து தோன்றி என்னோடு உடனாக நிற்பவனை மறக்கத்தான் முடியுமா? வரும் பழி வாராமே தடுத்து ஆட்கொண்ட குருமணி அல்லவா அவன் ? மறுமையிலும் காண முடியாத ஒப்பற்ற துணை அல்லவா அவன் ? எனக்கு முக்தியையும் , ஞானத்தையும், வானவர்களும் அறிய மாட்டாத பலப்பல நெறிகளையும் காட்டியவன் அன்றோ அவன் ? எனவே, " ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே"  என்று மழபாடியுள்  மாணிக்கத்தைப் பாடினார்.

எனவே இறைவனுக்கு அடிமை செய்தல் மெய் அடிமை ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட புண்ணியனைப் பாடினால் அமரர் உலகம்  ஆள்வதற்கும் ஐயம் ஏதும் இல்லை இப்பெருமான் தான் எல்லா உலகங்களுக்கும் நாதன். இவனே தன்னிகரில்லாத வள்ளல் என்றெல்லாம் அமரர்கள் தொழப்படும் ஆரூரானை மறக்க முடியுமா என்கிறார் தம்பிரான் தோழர்.

இப்போது சொல்லுங்கள். சுந்தரர் பொன்னுக்குப் பாடினார் என்பது அவரது திருவாக்கில்   தோய்வில்லாதவர்கள் திரித்த கூற்று தானே? ஆகவே தான், மாதவச் சிவஞான ஸ்வாமிகள், சுந்தரரை "எமது குல தெய்வம்" எனப் பரவினர்.