Saturday, November 10, 2012

தெய்வ பக்தி


நாம் ஒரு ஊருக்குப் புறப்படும்போதுதான் எத்தனை வேண்டுதல்கள் ! நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாசல் வரையில் கூட வந்து அனுப்பி வைக்கும் தாயார். "பத்திரமாய்ப் போய்விட்டு வாப்பா" என்று வழி அனுப்பிவைக்கும் தந்தை. " ரயிலுக்குப் போகும் முன்பு தெருக்  கோடியில் உ ள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டுப் போ" என்று உள்ளே இருந்து குரல் கொடுக்கும் தாத்தா. " சகுனம் சரியாக இருக்கா என்று பார்த்து அனுப்பி வை " என்று சொல்லும் பாட்டி. இதெல்லாம் சரிதான். விக்னம் எதுவும் இல்லாமல் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பியவுடன்  யாராவது தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கிரார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மறுபடியும் ஊருக்குப் போகும் போதுதான் ஸ்வாமி ஞாபகம் வருமோ என்னவோ!
 நல்ல பண்புடைய நண்பர் ஒருவர் சொன்னார்: " எனக்கு தெய்வ நம்பிக்கை இருந்தபோதும்  பக்தி மட்டும் வருவது இல்லை. அப்படி பக்தி ஏற்படவேண்டுமானால் ஏதாவது வழி இருக்கிறதா?" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான்! கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை! " பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது" என்றேன். " அதெப்படி?" என்பதுபோலப் பார்த்தார் நண்பர். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படவே, பதில் சொல்வதில் இருந்த தயக்கம் நீங்கத் தொடங்கியது.

" முன்பெல்லாம் இப்போதுபோல வாழ்க்கைமுறை கிடையாது. அவரவர்கள் நியமப்படி வாழ்வது சாத்தியமாக இருந்தது. உதாரணமாக, சந்தியா காலம் ( அஸ்தமன வேளை) வந்தால் அப்போது அனுஷ்டானங்கள் செய்வதைக் கடமையாகக் கொண்டிருந்தபடியால். ஈச்வர ஞாபகம்  வருவது எளிதாக இருந்தது. எல்லா உயிரினங்களும் தமது இருப்பிடத்தை நாடும் சமயமாதலால் , சிவாய,மகேச்வராய.சம்பவே,பினாகினே ,சசிசேகராய  ... என்று பெரியவர்கள்,பரமேச்வரனது  நாமாக்களைச் சொல்லி வந்தார்கள். கோயில்களில் நடக்கும் சாயரட்சை, மகாப்ரதோஷம் ஆகிய  பூஜா காலங்களில் சிவ தரிசனத்திற்குச் சென்று வந்தார்கள். இந்தக் காலத்திலோ , பலர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு வெகு நேரம் ஆகி விடுகிறது. சிலர் அந்த நேரத்தில்தான் ,ஹோட்டல்,சினிமா  ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்கள். இப்படிப் பட்ட காலத்தில் தெய்வ ஞாபகம் வந்தால் தானே பக்தி வருவதற்கு!

ஞான சம்பந்தர் பாடினார்," உண்ணினும்,பசிப்பினும்,உறங்கினும் நின் ஒண் மலர் அடியல்லால் உரையாது என் நா..." என்று. அதாவது, சாப்பிடும்போதும், பசித்து இருக்கும்போதும், தூங்கும் போதும் உனது மலரடிகளை என்னுடைய நாக்கு மறக்காது என்பது இதன்  பொருள். எப்போது பார்த்தாலும் பணம் பற்றிய நினைவே இருக்கும் இந்தக் காலத்தில் இறைவனின் நினைவு எவ்வளவு பேருக்கு வரும்? புண்ணியம் செய்தவர்களுக்கே அது கிடைக்கும். இனிமேல் பிறவாமல் இருக்கும் வரம் பெற வேண்டுமானால் அவனை என்றும் மறவாமல் இருக்கும் வரம் வேண்டிப் பெறவேண்டும்.இப்படித்தானே காரைக்கால் அம்மையாரும் வேண்டினார்.

காலையில் எழுந்தவுடன் சிவசிந்தையோடு எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். "கோட்டூர் நற் கொழுந்தே.." என்று சம்பந்தர் சொல்லியபடி எழுந்திருந்து , பல் துலக்கி சுத்தம் செய்துகொண்டு, சிவ நாமாக்களைச் சொல்லியபடியே, விபூதி அணிந்த பிறகே காப்பி ஞாபகம் வர வேண்டும். பலருக்குப் பல் துலக்கும் முன்பே காப்பி ஞாபகம் வருவது துரதிருஷ்டமே! பின்னர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் ,                 சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே! இப்படிச் செய்து வந்தால் நமக்குப் பக்தி ஏற்படுவதற்கு இறைவன் அருளுவான். பிறகுதான் , பாராயணம், க்ஷேத்ர தரிசனம் ஆகியவை எல்லாம் படிப்படியாகக் கைகூடும். பக்தி இல்லாமல் க்ஷேத்ராடனம் செய்வது பிக்னிக் போல் ஆகிவிடும். எவ்வளவு கோயில்களுக்கு யாத்திரை போகிறோம் என்பதைவிட, எவ்வளவு கோயில்களில் பக்தியோடு, மனம் ஒன்றி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். அதைத்தான் அப்பரும், "ஒன்றி இருந்து நினைமின்கள் " என்று பாடினார்.

சிவ நாமம் கேட்பதே நம்மைப் பக்திப் பாதைக்குக் கொண்டு செல்ல எதுவாக அமையும். " புகழ் நாமம் செவி கேட்க" வேண்டும் என்று ஞான சம்பந்தக் குழந்தையும் பாடியிருப்பதால், முதலில் நாமத்தைக் கேட்ட பின்பு அதை நாம் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். நாட்களை வீணாகத் தள்ளாமல் , நஞ்சை உண்டு உலகத்தைக் காத்த உத்தமனுக்கு ஆட்செய்ய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லையே! அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, "அரன் நாமம் கேளாய்" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப்  போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான்! நவக்கிரகங்களால் நமக்குத் தீமை ஏற்படும் நிலை ஏற்பட்டால் ,அப்போது அத்  துன்பத்திலிருந்து சிவக்ருபை நம்மைக் காப்பாற்றும் என்பது , பலனை ஆணையிட்டு வழங்கும் ஆசார்ய மூர்த்தியின் வாக்கு. இதோ அந்தப் பாடல்:

நாளாய போகாமே, நஞ்சு  அணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே  அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளி
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.

நண்பரும் புறப்பட்டு விட்டார். அவர் செவியில் ஹரன் நாமத்தைக் கேட்பித்தாகி விட்டது. அவர்  உன்னிப்பாகக் கேட்டதைப் பார்த்தால் , இவ்வளவு நேரம் சொன்னதும் வீணாகாது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. "எல்லாம் அரன் நாமமே சூழ்க;வையகமும் துயர் தீர்கவே"