Thursday, March 21, 2013

பிழை பொறுப்பாய்


நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகள் ஏராளம். இதில் தெரிந்து செய்யும் தவறுகளே அதிகம் என்றுகூடச் சொல்லலாம். மனமோ சொல்லமுடியாத அளவுக்கு அழுக்கு ஏறிக் களங்கப்பட்டுப் போயிருக்கிறது. தண்டனை என்று ஒன்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம்  என்று மனம் பாறையாக இறுகிப்போய் இருக்கிறது. அதற்கும் மேலே ஒரு படி போய், நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தலையோங்கி விட்டது.

ஒருவேளை நாம் செய்யும் தவறுகள் சிலவற்றை சமூகம் மன்னிக்கக் கூடும். எல்லாப் பிழைகளும் மன்னிக்கப் படுவதில்லை. மறக்கவும் படுவதில்லை. ஆனால்,எல்லாப் பிழைகளையும் பொறுத்து மன்னிப்பவன் இறைவன் ஒருவனே. நாம் இயங்குவதற்கு மூல காரணமாக உள்ள இறைவனை மறப்பதை விட ஒரு துரோகம் இருக்க முடியுமா? இப்படி நன்றி கெட்டவர்களாக வாழ்ந்தும் , நம்மை இறைவன் தண்டிக்காமல் விட்டிருப்பது, அவனது அளவிடமுடியாத கருணையைக் காட்டுகிறது. உலகமே, நஞ்சால் அழிய இருந்தபோது, சிவபெருமான் அதை உண்டு,தன் கழுத்தில் வைத்த கருணையை மறப்பது மன்னிக்க முடியாத துரோகம் தானே!

சிவபரத்துவ நூல்களைக் கற்காமல் காலம் தள்ளுவது ஒரு பிழை; ஒருக்கால்,அதைக் கற்ற பின்பும்  அவை உணர்த்தும் நெறிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், அவனது பெருங்கருணையை நினைத்துக்  கசிந்து உருகாமலும், சிவபஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் காலம் தள்ளுவதும், அவனை  மலர் தூவித் துதியாத பிழையும், அப்பெருமானைத் தினமும் கைகளால் தொழாத பிழையும் , இப்படி எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வாய் என்று காஞ்சி  ஏகாம்பர நாதரிடம் மெய் உருக வேண்டுகிறார் பட்டினத்தார். தினந்தோறும் ஓதவேண்டிய அப்பாடல் இதோ:

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

இப்பொழுதெல்லாம் மேற்கண்ட பிழைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,தெய்வக் குற்றங்களைப்  பல்வேறு வகைகளில் செய்யத் துணிந்து விட்டார்கள். கோயில் சொத்தை அபகரிப்பது போன்ற பாவச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. கோயில் பூஜைகள் சரிவர நடக்காமல் போனால், பஞ்சமும், திருட்டும், மன்னனுக்குத் தீங்கும் விளையும் என்று எச்சரித்தார் திருமூலர். இப்போது , கோயில் சொத்தை கைப்பற்றுவது, கோயில் வீடுகளுக்கு வாடகை தர மறுப்பது போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன.

 கோவில் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூடுவதை சாதகமாகக் கொண்டு மதுக்கடைகள் ஒரு ஊரில் அதிகமாக்கப்பட்டதாகச் செய்தித்தாளில் படித்தபோது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருந்தது. மக்கள் காசுக்காக எதையும் செய்யப் போகிறார்களா என்று வேதனை மேலிடுகிறது.  இன்னும் எத்தனை பிழைகளைப் பொறுக்கப் போகிறான் அந்த இறைவன் என்று தெரியவில்லை. பொறுத்தது போதும். எங்களைத் திருத்துவதும் உன் கடமை அல்லவா என்று வேண்டத் தோன்றுகிறது.