Wednesday, May 22, 2013

ஆலந்துறை அதுவே


விண்ணகத் தேவர்களும் , கடும் தவம்  செய்யும் முனிவர்களும் காணவும் அரிய சிவபரம்பொருள்  அடியார்களுக்கு எளியவனாக, அவர்கள் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருள் வழங்கும் தலங்களுக்கு எல்லாம் நமது சமயாசார்ய மூர்த்திகள் சென்று வழிபாட்டு, அடியார்களையும் நன்னெறி காட்டியுள்ளனர். அத்தலங்களை நாமும் நேரில் சென்று வழிபடவேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாகப் பல தேவாரப் பதிகங்கள் அமைந்துள்ளன. " நெய்த்தானம் அடையாதவர்  என்றும் அமர்  உலகம் அடையாரே" என்றும், " ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே" என்றும் வரும் திருமுறை வரிகளை நோக்குக. தல யாத்திரை மேற்கொள்ளாத காலத்தில், அத்  தலத்தின் பெயரைச் சொல்வதும் புண்ணியச்செயல் ஆகும்.அத்தலம் உள்ள திசையை நோக்கித் தொழுதாலும் பாவ வினைகள் அகலும் என்பதை, " தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே" என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அருளாளர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது, தலத்தை அடியார்கள் தொலைவிலிருந்தே காட்டியவுடன், அந்த இடத்திலிருந்தே, கசிந்து உருகி, பதிகங்கள் பாடியுள்ளார்கள். தூரத்தில் சீர்காழி  தெரிந்ததும். மகிழ்ச்சி மேலிட்டு, " வேணுபுரம் அதுவே" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதாகப் பெரிய புராணம் கூறும். அதேபோல், திருப்புள்ளமங்கை என்ற திருத் தலத்தின் சமீபம் வந்தடைந்ததும், ஆலந்துறையப்பர் அருள் வழங்கும் ஆலந்துறை அதுவே  எனப் பாடினார்.

எல்லா உலகங்களையும் ஆளும் அரசன் பரமேச்வரன். விண்ணாளும் தேவர்க்கும் மேலாய தேவன். மகாதேவன். மாணிக்கவாசகரும், "அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே" என்று துதிக்கிறார். அவன் செங்கோல் வேந்தன் மட்டும் அல்ல. நீதியே வடிவான அரசன். பொய்யிலி.சத்திய மூர்த்தி மட்டுமல்ல. புண்ணியமூர்த்தியும் கூட. ஆகவே, பெருமானை,        "மன்னானவன் " என்று குறிப்பிடுவார் சம்பந்தர்.

மேகமாகி, மழை பொழியச்செய்பவனும் அப்பரமன். "ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழை.." என்பது சுந்தரர் தேவாரம். இப்படி மேகம்,மின்னல், மழை  ஆகியவைகளாக ஈச்வரன் இருப்பதை,
" நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச.." என்று    ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.
இதைதான் சம்பந்தரும், " உலகிற்கு ஒரு மழை ஆனவன்" என்கிறார்.

உலகியலில் பல உலோகங்கள் இருந்தாலும் பொன்னே போற்றப்படுகிறது. ஆனால் பொன்னிலும் மாசு இருக்கக் கூடும். இறைவனோ மாசற்ற பொன்னாவான். ஆகவே,  "பிழையில் பொன்னானவன்" என்று சம்பந்தரால் போற்றப்படுகிறான்.

எல்லார்க்கும் முன்னே தாமே தோன்றிய தான்தோன்றியப்பனை , பல்லூழிகளையும் கடந்து தோற்றமும் இறுதியும் இல்லாமல் இருக்கும் பராபரனை,தயாபரனை, தத்துவனை, முதலாய மூர்த்தி என்பதும் உபசாரமே என்றாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.
"நமோ அக்ரியாய ச  பிரதமாய ச ,,, " என்ற வேத வாக்கியத்தை, சம்பந்தப்பெருமான், "முதலானவன்" என்று அழகிய தமிழால் சிறப்பிக்கிறார். அது மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் வாழ்முதலாகவும் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்.

இறைவனை சொந்தம் கொண்டாடுவதும் அவனது தலத்தை உரிமையோடு குறிப்பிடுவதும் தேவாரம் நம்மை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கும் எண்ணற்ற செய்திகளில் சில." அவன் எம் இறையே" என்றும் "நம் திருநாவலூர்" என்றும் வரும்  தொடர்களைச் சில எடுத்துக் காட்டுகளாக இங்கு எண்ணி மகிழலாம். எனக்குத்  தலைவனாகவும், தலையின் உச்சி மீதும் இருப்பவனை, " சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை  வைகும் போழ்து என் மனத்து உள்ளார்.." என்று திருப்பாசூரில் அருளிய சம்பந்தர், ஒரே வார்த்தையில் " என்னானவன்" என்று அருளினார்.
பண்ணாகிப் பாட்டின் பயனாகி அருளும் பரம்பொருளைப் பாட்டான நல்ல தொடையாய்  என்றும், ஏழிசையாய்,இசைப்பயனாய் என்றும் துதிக்கப்படும் இறைவனைக் சீர்காழிக் கற்பகமாம் சம்பந்த மூர்த்திகள், "இசை ஆனவன்" என்பார்.

ஒளி மயமான இறைவனை எந்த ஒளியோடு ஒப்பிட முடியும்? இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியும் ப்ரத்யக்ஷ பரமேச்வரனாகிய சூரிய ஒளியை, அதுவும், உதய காலத்தில் இளம் சிவப்பு நிறத்தோடு ஒளிரும் ஆதவனை இங்கு நமக்குக் காட்டுகின்றார் திருஞான சம்பந்த சுவாமிகள்.
"இள ஞாயிறின் சோதி அன்னானவன்" என்பது அந்த அழகிய தொடர். இந்த வரி, நமக்கு,
 "நமஸ் தாம்ராய சாருணாய ச.." என்ற ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துகிறது. வேத வாயராகிய சம்பந்தர் வாக்கிலிருந்து இவ்வாறு வேத சாரமாக அமைந்த தேவாரப் பாடல் வெளி வந்தது நாம் செய்த புண்ணியம் அல்லவா?

இப்பொழுது, அந்த அற்புதமான பாடலை  மீண்டும் ஓதி வழிபடுவோம்:

"மன்னானவன்  உலகிற்கு ஒரு

 மழை ஆனவன் பிழை இல்

பொன்னானவன் முதல் ஆனவன்

பொழில் சூழ் பு(ள்)ள மங்கை  
                                            
என்னானவன் இசை ஆனவன்

இள ஞாயிறின் சோதி        
      
அன்னானவன் உறையும் இடம்

ஆலந்துறை அதுவே."

Saturday, May 18, 2013

வினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி


அகத்திய முனிவர்  எக்காலத்தும் இருப்பவர். எல்லையற்ற ஆற்றல் மிக்கவர். எல்லோராலும் வழிபடத் தக்கவர். தலை சிறந்த சிவ பக்தர். சிவ பார்வதியர்களின் திருக்கல்யாணம் இவருக்காகவே பிரத்தியேகமாகக் காட்டப்பெற்றது. "அகத்தியனை உகப்பானை" என்று தேவாரமும் இவரது பெருமையை அறிவிக்கிறது. தமிழ் இலக்கண நூலாகட்டும், மருத்துவ நூலாகட்டும், நாடி சாஸ்திரமாகட்டும்,புராணங்களாகட்டும், தேவாரத் திரட்டாகட்டும், இம் முனிவரோடு தொடர்புடையன ஆகின்றன. வடமொழியிலும் இவர் புகழ் பல நூல்களில் பேசப்படுகிறது. இவர் வழிபட்ட சிவத்தலங்கள் அநேகம். ஆகவே, இறைவனும் அப்பூஜையை உகந்தவராக அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அவ்விடங்களில் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று , வேதாரண்யத்திலிருந்து,கோடிக்கரை செல்லும் வழியிலுள்ள அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.

அகத்தியான்பள்ளி ஈசனை ஞான சம்பந்தர் ஒரு திருப்பதிகத்தால் பாடியுள்ளார். சமண பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சைவத்தை மீண்டும் ஸ்தாபிக்க அவதரித்தபடியால், சம்பந்தப் பெருமானது பாடல்களில் அச்சமயங்களைக்  கண்டிப்பதைக் காணலாம்.அகத்தியான் பள்ளித் திருப் பதிகத்திலும், செந்துவர் ஆடை உடுக்கும் பௌத்தர்களும், வெற்றரையுடன் திரியும் சமணர்களும்பேசும் பேச்சு மெய் அல்ல என்றும் அவை எல்லாம் பொய் மொழி என்பதை,

" செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
    புந்தி இலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி .."

என்கிறார்.

இனி, குருநாதர் நமக்கு உபதேசிப்பதைக் காணுங்கள்:  எல்லார்க்கும் ஈசனாகவும், பிரானாகவும்   திகழும் சிவபெருமான், வேத நாவினன். வேதங்களால் வழி படப் படுபவன். வேத வடிவாகவே இருப்பவன். எனவேதான், அப் பெருமானை, "வேதியா, வேத கீதா.." என்று தேவாரம்  வாயார அழைக்கிறது. அனைத்து உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் இப்பரம்பொருள், தானே அந்தணணாகி அருள்பவன். எனவேதான், வேத வாயினராகிய சம்பந்தர், மறையின் பொருளாய் விளங்கும் பரமனை, " அந்தணன் எங்கள் பிரான்.." என்று போற்றுகிறார்.

அகத்தியான் பள்ளியில் வீற்றிருந்து, உலகுக்கு ஓர் ஒண் பொருளாகி,மெய் சோதியாகத்  திகழும் எம்பெருமானை ச்  சிந்தை செய்யுங்கள். அப்படிச் சிந்தித்தால், உங்களது பாவ வினைகள் எல்லாம் சிதைந்து ஓடி விடும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

" அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியைச்
   சிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே. "

என்பது அப்பாடலின் ஈற்றடி.

இவ்வாறு, அகத்தியான்பள்ளியைச்  சிந்திக்கும்போது, அகத்திய முனிவரையும் தியானிக்க வேண்டும்.பதினெட்டு சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்குத் தனி இடம் உண்டு. அண்மையில், அகத்திய நாடி வாசிக்கும் ஒரு அன்பரின் வலைப்  பதிவைக் கண்ட போது, அம்முனிவரிடம் பக்தி பல மடங்கு அதிகரித்தது.

அகத்தியான் பள்ளி ஈசனது அருள் பெற்றவர் ஆதலால், தன்னைத் தஞ்சம் என அடைந்தவர்களை இன்றும் அகத்திய முனிவர் காப்பாற்றி வருகிறார் என்பதை நாடி மூலம் தெரிவித்திருந்த அந்த அன்பருக்கும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பலரும் அறியச் செய்த அன்பருக்கும் நமது நன்றி உரியது.

அகத்திய நாடி பார்க்கும் அன்பரைத் தேடி வந்த ஒருவர், கால்கள் இரண்டும் சுவாதீனம் அற்றவர். தனவந்தர். நாடியைப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தாயைக் காலால் உதைத்ததற்கான  தண்டனையை இப்பிறவியிலேயே அவர் அனுபவிக்கிறார் என்கிறார் அகத்தியர். ஒரு சிறுவனை சிலையைத் திருடிவர மறுத்ததற்காக அவனது வயிற்றில் உதைத்துத் துன்புறுத்தினார் அந்தச் செல்வந்தர். அச்சிறுவனது பெற்றோர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகத் திரிந்தனர்.தனது செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிய அப்பணக்காரரை அகத்திய நாடி என்ன  சொல்லியது தெரியுமா? "அச்சிறுவன் கடுமையான காய்ச்சலுடன் காளையார் கோவிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனையும்,அவனது பெற்றோரையும் உடனே சென்று காப்பாற்று; இல்லையேல் உனது கைகளும் சுவாதீனம் இழந்து விடும் " என்று எச்சரித்தது.

அகத்தியர்  சொல்லியதுபோல் செய்து இருபது நாட்களுக்கு மேலாகியும், கால்கள் குணமாகாதது கண்டு, அந்த செல்வந்தர், மனம் நொந்துபோய், மீண்டும் நாடியைப் பார்க்க வேண்டியது தான் என்று நாற்காலியை விட்டு எழுந்தார். என்ன ஆச்சர்யம்! யார் துணையும் இன்றி, நடக்கவும் ஆரம்பித்தார். முனிவரின் கருணையை எண்ணி எண்ணிக்  கண்ணீர் விட்டார். இப்போது , தானாகவே வெளியிலும் நடக்கிறார். அகத்தியருக்கு ஆலயம் கட்டும் பணியிலும் அவருக்கு ஆர்வம்  ஏற்பட்டது. இப்படி விவரிக்கிறது அந்த வலைப்பதிவு.

அகத்திய முனிவர் மேரு மலையை அடக்கியவர் மட்டும் அல்ல. மேருவைப்போல் வரும் நமது பாவ வினைகளையும் சிவனருளால் நீக்கி அருளுபவர். இருவரையும் ஒருசேர த் துதிக்க நாமும் அகத்தியான்பள்ளிக்குச் செல்லலாம் அல்லவா?

Sunday, May 5, 2013

திருக்கோயில் இல்லாத ஊர் காடே


ஒரு ஊர் என்றால் அதில் என்னவெல்லாம் எங்கெங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் , ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைச்சுற்றி வீதிகளும் பிறவும் பாங்குடன் அமைக்கப்பட்டதைப் பரஞ்சோதி முனிவர் அழகாக வருணிப்பார். தில்லை போன்ற ஊர்களை நோக்கும்போது ஆலயம் நடுநாயகமாகத் திகழ்வதைக் காணலாம். இது நமது கலாசாரம், திருக்கோவிலைச் சார்ந்தே வளர்ந்து வந்தது  என்பதைக் காட்டுகிறது. திருக்கோவில் இல்லாத ஊர் "திரு இல்லாத ஊராகக்" கருதப்பட்டது.

திருவெண்ணீறு அணியாதவர்கள் இருக்கும் ஊர் "திரு இல்லாத ஊராகக்" எண்ணப்பட்டது. வெண்ணீறு அணிவதால் நோய்கள் நம்மை அணுக மாட்டா. "நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும்" என்றார் அப்பரும். நோய் வந்தாலும் தீர்க்கும் மந்திரமும் மருந்தும் ஆவதும் திருநீறே ஆதலால், " அரு நோய்கள் கெட வெண்ணீறு ..." என்றார் .

பக்தி மேலிட்டு இறைவன்மீது பாடாத ஊர்களும் ஊர் அல்ல .காடு தான். ஊரில் ஒரு கோவில் மட்டுமல்லாமல் பல ஆலயங்களும் இருக்க வேண்டும். "கச்சிப் பல தளியும் " என்று தேவாரம் காஞ்சிபுரத்தில் இருந்த பல ஆலயங்களை ஒருங்கே குறிப்பிடுவதைக் காணலாம்.

மிகுந்த விருப்பத்தோடு சங்கு ஒலிக்க வேண்டும். இன்னிசை வீணையும், யாழும் , தூய மறைகளும்,தோத்திரங்களும் ஒலிக்காத ஊரெல்லாம் காடு அல்லவா? விதானமும் வெண்கொடிகளும் திகழ வேண்டியதும் அவசியம் தானே?

இவ்வளவு இருந்தும், மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனின் பஞ்சாட்சரத்தை ஓதி , வெண்ணீறு அணிந்தவர்களாய் ,ஒருக்காலாவது ஆலயம் சூழ்ந்து,வீடு திரும்பியதும்,உண்பதன் முன் மலர் பறித்து , ஆத்ம பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே உணவு அருந்தும் நியமம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதே தொழிலாக இறக்கின்றார்கள் என்கிறார் அப்பர்  பெருமான்.
இக்கருத்தோவியம் கொண்ட அப்பர் தேவாரப் பாடல் :

திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்  சங்கம் ஊதா  ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

காட்டிலும் எந்த உயிரினங்களுக்கும் உதவாத காடும் உண்டு. ஆதலால் அதனை அடவி என்ற சொல்லால் குறித்தார் திருநாவுக்கரசர்.

எனவே, கோவில் இருந்த ஊர்களிலேயே முன்பு குடியிருந்தார்கள். தற்போது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றி வருகின்றன. அவற்றிலும் சிறிய அளவிலாவது ஒரு ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள்.

ஆனால், அரசாங்கத்தின் தேசீய நெடுஞ்சாலைத் துறை செய்வதைப் பாருங்கள். சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, சாலை அருகே இருக்கும் மிகப் புராதன ஆலயங்களை இடிப்போம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள பனையபுரம் ஆலயத்தை இடிக்கத் திட்டமிட்டார்கள். மக்களது எதிர்ப்பினால், இதுவரை அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை.

தற்சமயம் , கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் (NH45C)மேல்பாடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தை இடிக்கத் திட்டம்வகுத்திருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், அழகிய தேவகோஷ்டங்களைக் கொண்டதும்,ராஜேந்திர சோழனால் திருப்பணி
செய்யப்பட்டதுமான இக்கோயில் காப்பாற்றப்பட வேண்டும். தேசீய நெடுஞ்சாலைத் துறையின் கீழ்க்கண்ட படிவத்தில் தங்களது கருத்தைப் பதிவு செய்து அனுப்பி  எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அன்பர்களது கடமை ஆகும்.
http://www.nhai.asia/register/rgr/traffic.asp

சித்திரைச் சதயமான அப்பர் குருபூசைத் திருநாளை ஆலயத் தூய்மை காக்கும் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பல்லாண்டாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ, ஊரில் இருக்கும் ஒரே  கோவிலை இடிப்பதையாவது கைவிடக் கூடாதா?  நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அதில் ஆலயங்கள் இடிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதிமுறையைக் கொள்ளாமல்,   இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.