Thursday, January 24, 2013

அடியார் கூட்டம் காண ஆசை


ஆசைகள் பலவிதம். நமக்குத் தோன்றுவதோ உலகியல் ஆசைகள் மட்டுமே! ஆனால் அருளாளர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். உடலைப் பாரமாகக் கருதுபவர்கள். நரம்புகள் கயிறாகவும்,மூளையும் எலும்பும் கொண்டு மறையும்படியாகத் தோலால் போர்த்த குப்பாயமாகவும் , "சீ வார்த்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் " என்றும் உடம்பின் அற்பத்தன்மையை விளக்குகிறார் மாணிக்க வாசகப் பெருமான். இரத்தமும்,நரம்பும் எலும்புகளும் கொண்ட மானுட உடம்பு வெளியில் தோலால் மூடப்பட்டுக் காட்சி அளிப்பதை, புளியம்பழம் போல இருப்பதாகக் கூறுகிறார். அளிந்த அப்பழம், புறத்தில் அழகிய தோலால் மூடப்பட்டு இருப்பதுபோலத்தான் மனித உடலும் காணப்படுகிறது.

எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்துவிட்ட பிறகாவது இறைவனது அருளைப் பெற்று,மீண்டும்  பிறவாத நிலையைப் பெற வேண்டும் என்று ஆசைப் படவேண்டும்  என்கிறார் குருநாதர். "கயிலைக்குச் செல்லும் நெறி இது என்று எம்பெருமானாகிய நீரே துணையாக   நின்று வழி காட்ட வேண்டும். அந்நிலையில்  சிறிதாவது என்பால் இரக்கத்துடன்  என் முகத்தை நோக்கி, "அப்பா! அஞ்ச வேண்டாம் "என்று தேவரீர் அருள வேண்டும் என்று என் மனம் ஆசைப் படுகிறது.அப்போது உனது திருமுகத்தில் தோன்றும் முறுவலைக் காண என் மனம் ஏங்குகிறது. முறுவலோடு அபயம் அளித்த பிறகு, தங்களது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று அருளுவதைக் கேட்க ஆசைப் படுகிறேன்

அது மட்டுமல்ல. நான் கைம்மாறு செய்ய முடியாதபடி ,இவ்வாறு  எனது ஆவியையும் உடலையும் ஆனந்தமாய்க் கனியும்படியாகச்  செய்து,கசிந்து உருகச் செய்தாய். நமசிவாய என்று உன் அடி பேணாப்  பேயன் ஆகினும் பெருநெறி காட்டிய உனக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
ஆயினும் அடியேனுக்கு ஓர் ஆசை உள்ளது. உன் அடியார் நடுவில் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பமே அது.  மண்ணுலகத்துள்ள பெரியோர்களும், தேவலோகத்து இந்திரன், பிரமன்,திருமால் ஆகியோரும் ஓலமிட்டு அலறும்  மலர்ச் சேவடியை அடைய அடியேன் தகுதி அற்றவன். ஆனால் தொண்டர்களோடு இணைந்துவிட்டால் அதுவும் சாத்தியமாகிவிடும் அல்லவா?

இந்த உலகில் துன்பப் புயல் வெள்ளத்தில் அல்லல்  படுபவர்களில், உனது திருவடியாகிய துடுப்பைப் பிடித்துக் கொண்டு வானுலகம் பெறுபவர்கள் உனது அடியார்கள். யானோ இடர்க் கடலில் அழிகின்றனன்.

உன்னை வந்திக்கும் உபாயம் அறியாத எனக்கு உனது ஆயிரம் திருநாமங்களால் உன்னைப் போற்ற வேண்டும் என்று ஆசை. அதுவும் எவ்விதம் போற்ற வேண்டும் என்ற ஆசை தெரியுமா? உன்னை வாயார "ஐயா " என்றும் "ஐயாற்று அரசே " என்றும் "எம்பெருமான்,எம்பெருமான்" என்றும் போற்ற வேண்டும். கைகளால் தொழுதபடி உனது திருவடிகளை இறுகத் தழுவிக்கொண்டு அடியேனது தலைமீது வைத்தவண்ணம் கதற வேண்டும். இவ்வாறு உனது திருவடியைச் சிக்கெனப் பிடித்து, அனலில் சேர்ந்த மெழுகு போல உருகவேண்டும்."

 நமது கல்லாத மனத்தையும் கசிவிக்கும் வண்ணம் நமக்காக வேண்டுகிறார் மணிவாசகப்பெருமான். எப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனை பார்த்தீர்களா! இப்போது திருவாசகத் தேன் நமது புன்  புலால் யாக்கைக்குள் புகுந்து என்பெல்லாம் உருக்குவதைக் காண்போம்:

"கையால் தொழுது உன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு

 எய்யாது என்றன் தலைமேல் வைத்து எம்பெருமான் எம்பெருமான் என்

 றையா  என்றன் வாயால் அரற்றி அழல்சேர்  மெழுகு ஒப்ப

 ஐயாற்று அரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே."

இந்தத் தூய விண்ணப்பத்தை இறைவன் நிறைவேற்றாமல் இருப்பானா? திருவருள் கூடும் உபாயம் தெரியாமல் அரு நரகத்தில் விழ இருந்த தன்னை , முன்னை வினைகள் எல்லாம் போக அகற்றித் தனது அடியார்களிடத்தே கூட்டி அருளினான் என்று பெருமானின் கருணையை அதிசயித்தவாறு பாடுகின்றார் மாணிக்க வாசகர் :

"எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும்  என் ஏழைமை அதனாலே                                                  

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை  நயவாதே  

மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை                                                          

அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."