Saturday, September 13, 2014

ஆரூர் தொழுது உய்யலாம்

நமக்கு அவ்வப்போது உயர்ந்த எண்ணங்கள் தோன்றுவதுண்டு. ஞானோதயம் என்றுதான் வைத்துக்கொள்வோமே! " தெய்வம் தந்த வீடு" என்போம். மனைவி, செல்வம் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்போம். ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணங்கள் மாயமாய் மறைந்து விடுகின்றன. நான் சம்பாதித்துக் கட்டின வீடு என்கிறோம். நான் உழைத்து சம்பாதித்தது என்கிறோம். எனது மனைவி,என் மக்கள் என்று எல்லாவற்றிலும் நான்,எனது மட்டுமே மேலோங்கி நிற்கிறது.  திரு ஞானசம்பந்தப்பெருமான் நமக்கு உபதேசிப்பதைக் கேட்போமா?

" நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்  

 அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம்    

  உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை                                                                
  நம்பன் மேவு நன்னகர் நலம்கொள் காழி சேர்மினே."

இப்படி எனது எனது என்று இருந்துவிட்டு,முடிவில் துன்பத்தை அடைவதன் முன், தேவதேவனும் , ஒப்பற்ற உத்தமனும், செஞ்சடை வேதியனும் ஆகிய பரமேச்வரன் விரும்பிஉறையும் சீர்காழிப் பதியைச் சென்று அடைந்து உய்வீர்களாக என்பதே அந்த உபதேசம். இவ்வாறு உய்யும் எண்ணம் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பிறர்க்கு ஏன் கிடைப்பதில்லை என்று நாம்  எண் ணலாம். அதற்கும் சம்பந்தப்பெருமானே விளக்கம் தருவதைக் காண்போம்:

" முன்னை நீர் செய்த பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது

   இன்ன நீர் இடும்பையில் மூழ்கிறீர்..."

சிவனது தாள்களைச் சிந்தியாத பேதைமார்கள் பாவத்தில் மூழ்கித் துயர வலையில் சிக்கித் தவிக்கிறார்கள் . பெருமானை சிந்திக்காததும், தொழாததும்,ஐந்தெழுத்தைச் சொல்லாததும் ஆகிய  பிழைகளின் பலனே  பாவ வினைகளை மேலும் பலப்படுத்தி இன்னல்களைத் தாண்டமுடியாமல் பலவீனப்படுத்துகின்றன. உடற்பிணிக்கும்,உள்ளப்பிணிக்கும் வித்திடுகின்றன.

பிறவி துன்பத்துக்கு ஏதுவாகும் என்பதால் ,"பிறவாமை வேண்டும் " என்று வேண்டினர் பெரியோர்கள். இருப்பினும் மனிதவாழ்க்கையை மெய் என்று எண்ணி ,இன்பத்தை நாடுவதே குறிக்கோள் என்பதாக மனித்தப்  பிறவி அமைந்துவிடக்கூடாது. பிற உயிர்களுக்குக் கிடைக்காத பேறு ,இந்த மனிதகுலத்திற்குக் கிடைத்திருப்பதை எண்ணி எண்ணி அப்பேற்றைத் தந்த இறைவனை மறவாத சிந்தையர்களாக வாழ வேண்டும். துறவிகளுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று நினைத்து விடக் கூடாது. இதனை அடைய எளிய மார்க்கம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மறவாத சிந்தையோடு பெருமானது திருவாரூர் சென்று தொழுவதே ஆகும் என்று நம்மை ஆற்றுப் படுத்துகிறார் சம்பந்தர். அப்பெருமான் கங்கையைச் சடையில் ஏற்றுப் புவியைக் காத்தவன். தருமமே வடிவமாக உடைய புண்ணிய மூர்த்தி. எனவே மனம் மையல் கொண்டு என்ன ஆகிவிடுமோ என்று அஞ்ச வேண்டாம். நீலகண்டப்பெருமானது திருவருள் நம்மையும் காக்கும்.

" பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்

  துறவியார்க்கல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே                                          

 மறவல்  நீ  மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி                                  

அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே."