Wednesday, January 14, 2015

ஆகுதிப் புகை போகி

ஸ்ரீ கௌரி மாயூர நாதர் ஆலயம் 
சில பூங்காக்களில் தகவல் பலகை வைத்திருப்பார்கள். அதன் மூலம்  பயனுள்ள செய்திகளை  மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவற்றுள் மூலிகைகள் பற்றிய விவரமும், எளிய உடற்பயிற்சிகள் பற்றிய பயனுள்ள குறிப்பும் , பழமொழிகளும் அடங்கும். நடை பயிற்சிக்காக வருவோரது கவனத்தை இப்படி ஈர்ப்பது பாராட்ட வேண்டியதுதான். ஆனால் நேற்று ஒரு பூங்காவில் இருந்த தகவல் பலகை அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தருவதாக இருந்தது. போகி அன்று பிராணாயமம் செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. ஆண்டு முழுவதும் பிராணாயாமம் செய்யாதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரப்போவதில்லை. அதில் ஈடுபட்டு , அதனை நித்தியக்  கடமையாக இன்னமும் சிலர் செய்து வருகிறார்கள் அல்லவா? அவர்களுக்கு இது அதிர்ச்சித் தகவலாகவே இருக்கும். காரணம் அப்பலகையில் சொல்லப்படாவிட்டாலும், ஓரளவு அவர்களது கணிப்பை ஊகிக்க முடிகிறது.

பழையன கழித்தல் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பழைய துணிகள், தேவையற்ற சாமான்கள் ஆகியவற்றை விடியற்காலையில் சிலர் எரிக்கிறார்கள் . அதனால் எங்கும் புகை மண்டலம் மூடி மூச்சுத் திணறலும் ஏற்படுவதுண்டு. ரப்பர்,பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதால் வெளியாகும் நச்சுப் புகையை சுவாசிப்பதால் உடலுக்குத் தீங்கு விளையக் கூடும் என்பது ஒரு பக்கம். பிராணாயாமம் செய்பவர்கள் இப்புகையை உள்ளுக்கு இழுத்து சில வினாடிகள் நிலை நிறுத்திப் பின்னர் வெளி விடுவதால் இவ்வாறு தகவல் எழுதி வைத்திருக்கலாம். மூச்சுப் பயிற்சியாக யோக அப்பியாசம் செய்பவர்கள் வேண்டுமானால் இவ்விதம் அதனைத் தவிர்க்க முடியும். அன்றாட கடமையாகக் கொண்டவர்கள் வெறும் மூச்சுப் பயிற்சியாக அதனை மேற்கொள்வதில்லை. அப்பொழுது மந்திர ஜபமும் மனத்தில் கூடவே செய்யப்படுகிறது. ஆகவே, மக்கள் நலம் வேண்டுவோர், முதலில் இவ்வாறு தேவையற்றவற்றை எரிப்பவர்களுக்குப் புரியுமாறு எடுத்துச் சொல்லி இத்தவறான செயலைத் தடுக்க முனைய வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி எழக்கூடும். வேள்விப்புகையைப் பற்றியதே அது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்த பாடலை நாம் சிந்திப்போமாக. இப்பாடல் மயிலாடுதுறை என்ற தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளியது.

முதலில் இத்தலத்துப் பெருமான் மீதான அடையாளம் சொல்லப்படுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலின் கொம்பினை மார்பில் பூண்டவன் .தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய பாம்பையும் ,புலியையும் அடக்கி அவற்றை முறையே அணிகலனாகவும்,உடையாகவும் ஏற்றவன். மூப்படையாதவன். பதினாறு வயது இளைஞனாக ,சதாசிவமூர்த்தம் கொண்டவன்.  பிரளய காலத்தில் பிரமனும்,மாலும்  தன்னோடு ஒடுங்குவதைக் காட்டும்படி,அவர்களது எலும்பை ஆபரணமாகக் கொண்டவன். இப்படித் துதிக்கிறார் சம்பந்தப்பெருமான்.

"ஏன எயிறு ,ஆடரவொடு , என்பு , வரி ஆமை , இவை பூண்டு இளைஞராய்க்
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனலாம் "    
( ஏனம்= பன்றி; அரவு= பாம்பு; வரி ஆமை= வரிகள் உள்ள ஓட்டை உடைய ஆமை.  கான = காட்டில் வாழும்; வரி நீடு உழுவை= வர்கள் உள்ள தோலுடைய புலி.  அதள்= புலித்    தோ லைக்  குறிப்பது ; காணி= இடம் .இங்கு இறைவன் விரும்பி உறையும் இத்தலத்தைக் குறிப்பது )

இத்தலத்து  வேதியர்கள் வேள்விகள் செய்வதால் புகை மேலெழும்புகிறது. அப்புகை இங்கேயே நின்று விடுவதில்லை. ஆகுதி செய்யப்படுவதால் மேலுலகத்தை நோக்கி எழும்புகிறது. அவ்வாறு சென்று தேவ லோகத்தில் உள்ள கற்பகச் சோலையைச் சென்று அடைகிறது.அங்குள்ள சோலைகளின் மீது அழுக்குப் படிவதுபோல அம்மரங்களை மூடுகிறது. இத்தகைய புகழ்மிக்க வேள்வியைச் செய்தவர்கள் " புகழ் வேதியர் "   என்று சம்பந்தரின் திருவாக்கால் சிறப்பிக்கப் படுகின்றனர்.
 
"ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகார்
வானம் உறு சோலை மிசை மாசுபட மூசு மயிலாடுதுறையே. "

வேள்வியில் செய்யப்படும் புகைபோகி விண்ணுலகை அடைவதால் தேவர்கள் மகிழ்வுற்று மழையையும் பிற செல்வங்களையும் நமக்கு வழங்குகிறார்கள். அவ்வாறு செய்துவந்தால் கோரிய பலன் கிடைப்பதோடு எல்லா உயிர்களும் நன்மை பெறுகின்றன. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையோ மேலெழும்பாது நம்மையே சுற்றிவந்து தீங்கு விளைவிக்கிறது. தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் புகையை உயரமான புகைபோக்கியின்  மூலம் வெளியேற்றுகிறார்கள். அப்படியும் அது சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறது. ஆனால் ஆகுதியோ, " புகை போகி " யாக மாறி , தேவ லோகத்தை அடைகிறது. அதனால்தானோ என்னவோ பெரியோர்கள் மகர சங்கராந்திக்கு முதல் நாளைப் " போகி" ப் பண்டிகை என்று பெயரிட்டார்கள் போலத் தோன்றுகிறது. ஆனால் இப்பொழுதோ, அச்சொல்லில் வரும் " போ" என்பதை அழுத்தமாக (Bho) என்று ,  போகம் தருவது என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் அதையே மென்மையாகப் ( Po ) "போ " என்று உச்சரித்தால் ஆகுதிப் புகை போகி விண்ணோரை மகிழச்செய்வதாகப் பொருள் தொனித்து,  இப்பண்டிகைக்கு மேலும் மேன்மை சேர்க்கிறது.