Tuesday, March 10, 2015

முக்கண்ணனே முழு முதற் கடவுள்

உலக வாழ்க்கையில் எப்பொழுதும் இளமையும்,செல்வமும்,இன்பமும் நீங்காது இருக்கவேண்டும் என்பது நடக்க முடியாதது என்றாலும் இவை அனைத்தும் நிரந்தரமானவை என்ற  நினைப்பு மட்டும் அகல மறுக்கிறது. இது மாயை மட்டுமல்ல. விந்தையும் கூட! உடலை வாழ் நாள் முழுவதும் பயனில்லாமல் செய்து, நினைக்கவும் கொடியதான இளமை நீக்கம் பெற்று, மூப்பு தொடருகிறது. அதைவிடக் கொடியது திடீரென்று மரணம் சம்பவிப்பது. இதைக் கருதாமல், எனது என்ற எண்ணத்தில் மிதக்கிறோம். இவ்வாழ்க்கையில் என்ன செய்தோம் என்றோ , என்ன செய்யப்போகிறோம் என்றோ ஒரு கணமாவது சிந்திக்கிறோமா? இதைத்தான் பட்டினத்து அடிகள்,
" செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன  சிலவே
  அவற்றிடை  நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே 
   ஒன்றிலும் படாதன சிலவே " 
என்று மிகத் தெளிவாகக் கோயில் நான் மணி மாலை என்ற பிரபந்தத்தில் குறிப்பிடுகிறார். இது பதினோராந் திருமுறையில் காணப்படும் நூல். இதில் , " அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தன்" என்று நடராஜப் பெருமானை வருணிக்கிறார் அடிகள். இவரால்  "  தெய்வ  வேதியர்  தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுள் "  என்று பெருமான் புகழ் பேசப் படுகிறது.

ஆடல் வல்லானது அற்புதக் கூத்தை பட்டினத்தடிகள் வருணிப்பது இந்நூலின் மிக அழகான பகுதி.அது அதிசயிக்க வல்லதாக உள்ளது என வியப்பார் பட்டினத்துப் பிள்ளையார். " ஏவரும் காண ஆடுதி அது எனக்கு அதிசயம் விளைக்கும் "  என்பது அவ்வருணனை. ஐம்புலன்களால் ஆட்பட்ட அடியேனையும் ஒரு பொருளாக நயந்து தனது நெஞ்சத்தில் நின்ற கருணையை எண்ணி எண்ணி நெகிழும்போது, அந்த ஆடற் கோலத்தை நமக்கும் காட்டுகிறார் அடிகள்:
" தழைந்த நின் சடையும் செய்ய வாயும் 
மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
 எடுத்த பாதமும் தடுத்த செங்கையும் புள்ளி ஆடையும்
 ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப.."  என்ற வருணனை சிதம்பரேசனை நமக்கு முன்னே கொணர்ந்து காட்டுவதுபோல் இருக்கிறது.

மக்கள் வணங்கும் தெய்வங்கள் பலவாகும். கொடிய நஞ்சை உண்டும் சாவா மூவாச் சிங்கமெனத் திகழும் தேவாதி தேவனை, மகாதேவனைத் தொழாமல் மாளும் பிறரைத் தெய்வமாகச் சிலர் வணங்குகிறார்களே என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். மாந்தர்கள் அனைவரும் தங்களது  வைப்பாகக் கருதப்பட வேண்டியவன் சிவபெருமான். மறையோர்கள் தமதுஒரே கதி என நாள் தோறும் வழிபடப்பட வேண்டியவனும் அவனே என்பதை  இங்கு அவர் உணர்த்துகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத அவனை, " ஆக்கம் அளவு இறுதி இல்லாய் " என்கிறது திருவாசகம். பிறவாப் பெருமை வாய்ந்த கடவுளே பெரிய, உயர்ந்த, முழுமுதற்கடவுள். இக்கருத்தை  இளங்கோவடிகளும்              " பிறவா யாக்கைப் பெரியோன் " என்ற தொடரால் அறிவிக்கிறார். ஏனைய தெய்வங்கள்  பிறக்கும் இறக்கும் . " ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே" என்று அப்பர் பெருமான் அருளியதும் காண்க. ஆகவே பெருமான் ஆலாலம் உண்டிராவிட்டால் பிரமன்,மால் உள்ளிட்ட தேவர்கள் வீடுவர் என்று மாணிக்க வாசகரும் அருளியது இங்கு ஒப்பு நோக்கற்குரியது. நடராஜப் பெருமானின் பாத மலர்களை மாலவன்  காணமுடியவில்லை. முடிதேடிச் சென்ற பிரமனாலும் இயலவில்லை. இப்படி ஒப்புயர்வற்ற கடவுளை வணங்காது, கடல் விடமானது ,  யாவரையும் அழிப்பதற்காக எழுந்த அன்றே  மறைந்திருக்கக் கூடிய  தேவர்களைத் தெய்வமென வணங்குகின்றனரே எனப் பட்டினத்தடிகள் கோயில் நான் மணி மாலையில் அருளிச் செய்கிறார்:
வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க  

ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்                 

 தாழ்வார் அறியாச் சடுல நஞ்சு உண்டிலையாகில் அன்றே                                   

 மாள்வார் சிலரை அன்றோ தெய்வமாக வணங்குவதே.    
என்பது அவ்வினிய பாடல்.

No comments:

Post a Comment