Saturday, May 30, 2015

சிவஞான இன்னமுதம்

பிறப்பும் இறப்பும் இல்லாப் பெரியோன் என்று  இலக்கியங்களும் புராணங்களும் சிவபெருமானைத் துதிக்கின்றன. அதனால் தான் சுவாமியை முழுமுதல் கடவுள் என்கிறோம்.      " முழுதுமாய் வந்து " தன்  மனத்தில் குடிகொண்டவன் பெருமான் என்கிறார் மாணிக்கவாசகர்.  ஆனால் அடியவர்களுக்காக எந்தக் கோலமும் எவ்வுருவமும் ஏற்கின்றான் அவன். அந்தணனாய் வந்து ஆண்டுகொண்ட அப்பெருமானே, வேடனாகவும், தாயுமானவனாகவும், பன்றிகளுக்குப் பால் கொடுக்கும் தாய்ப் பன்றியாகவும் , மாலயனுக்கும் அறிய முடியாத தீப் பிழம்பாகவும்  தோன்றி அருள் செய்ததாகப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இப்படி எளியவனாகவும் அரியவனாகவும் விளங்கும் பரம்பொருளை , " யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் "  எனத்  திருவாசகம் போற்றுகிறது. இதையே அப்பரும், "  காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் " என்பார்.

சிந்தையில் உதித்த ஒரு எண்ணத்தை இங்கு பகிர்வோம். பால் கொடுத்தபின் குழந்தைக்கு அப்பால் புரை ஏறாதவாறு தாய்மார்கள் அக்குழந்தையின் முதுகில் தட்டுவதைப் பார்த்திருக்கிறோம். நாள் பூராகவும் இதுபோல் எத்தனை தட்டுக்களை அக்குழந்தை முதுகில் வாங்குமோ தெரியாது. மதுரையில்  வந்தி என்ற அடியாள் தந்த பிட்டைக் கூலியாக ஏற்று , மண் சுமந்தபிறகு அம்மண்ணைப் பெருக்கெடுத்து ஓடும் வைகைக் கரையில் கொட்டாமல் விளையாடிக் கொண்டிருந்த பெருமானைப் பாண்டியன் சினத்துடன் தன்  கைப் பிரம்பால் ஒரு தட்டுத் தட்டினான்.( அடித்தான் என்று எழுத மனம் வரவில்லை). எல்லா உலகமும் அவன் வடிவே ஆதலால் அப்படித் தட்டியது, எல்லா உலகத்து  உயிர்கள் மேலும் விழுந்தது. இப்படி ஒரு தட்டு தட்டியதற்கே அனைத்து உயிர்களும் அடி வாங்கியபோது, ஒரு தாயாரிடம் தோன்றி  பலமுறை முதுகில் தட்டு வாங்கினால் எல்லா உயிர்களும் பலமுறை அடிபடுமே என்ற பரம கருணையினால்  தானோ என்னவோ அவன் யாரிடத்தும் பிறக்கவில்லை போலத் தோன்றுகிறது. இது முழுவதும் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையைச் சொல்லப்போனால் ஆராய்ச்சி எதுவும் செய்யாமலிருக்கும் போது தினசரி தியானத்தின் பொழுது பெருமான் அறிவுறுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று.

ஞானம் என்பது படிப்பதாலோ, கேட்பதாலோ அனுபவத்தாலோ வருவதைக் காட்டிலும் பெரும்பகுதி இறைவன் அருளால் கைவரப் பெறுவது என்பதை நாம் உணர வேண்டும். ஞானிகளில் ஒரு சிலரே இறைவனை ஓரளவாவது அறிவர் " ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்" என்பார் அப்பர் பெருமான்.  ஞானிகளுக்கே இந்நிலை என்றால் நம்மவர்கள் சிந்திப்பதோ ஆராய்வதோ எப்படி சாத்தியமாகும்?  ஞானத்திற்கெல்லாம் இருப்பிடமாகவும் ஞான மயமாகவும் திகழும் ஈசனோ எவரிடத்தும் அந்த ஞானத்தைக் கல்லாமலேயே பிறருக்கு உபதேசிப்பவன். " கலைஞானம் கல்லாமே கற்பித்தானை " என்பது தேவாரம்.

உலகம் உய்ய வேண்டி ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தனது இணைபிரியா ஜகன்மாதாவான  அம்பிகையின் மூலம் சிவஞானத்தைத் தந்து அருளினான். அதை, " சிவஞானத்து இன்னமுது" என்றார் சேக்கிழார். அப்போது அக்குழந்தைக்கு எல்லாக் கலை ஞானமும் ஓதாமலேயே வந்து அடைந்தது. அதனைப் பெரிய புராணம் விவரிப்பதை இங்கு காண்போம்:

மூன்று வயதுக் குழந்தை செய்த தவம் தான் என்ன? அக்குழந்தையின் தந்தையான சிவபாத இருதையர் செய்த தவம் அல்லவா சம்பந்தரைத் தோற்றுவித்தது? ஆனால் சேக்கிழார் இங்கு அக்குழந்தையைத் " தவ முதல்வர் " என்று வாயாரப் புகழ்கிறார். எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியாத பேறு  அல்லவா இந்தப் பாலகனுக்குக் கிடைத்திருக்கிறது! அக்குழந்தை செய்த தவம் தான் என்ன என்று நமது அறிவுக்கு எட்டவில்லை அல்லவா? அதனால் தான் நாம் சொல்லிக் கொள்கிறோமே, ஆறு அறிவு என்று: அது வேறு; ஞானம் வேறு. ஞானிகளுக்கே விளங்காத ஒப்பற்ற தவம் அது. அதிலும் முதல்வராகத் திகழப் போகும் அச்சிறுவனை இதைக் காட்டிலும் வேறு எப்படி அழைப்பது?

பெற்ற ஞானமோ  சிவஞானம். ஆகவே பெயரும் சிவஞானசம்பந்தர் என்று ஆயிற்று. அந்த ஞானம் வந்தபின்னர் சிவனது திருவடிகளை மட்டுமே தியானிக்கும் ஞானம் மேலோங்கியதால் அதனை " சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்" என்றார் தெய்வச் சேக்கிழார்  . அது கைவந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு எது? பிறவி அறுக்கும் மருந்து ஆகிவிட்ட ஞானம் ஆனபடியால், அதனை, " பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் " என்றார். அந்த ஞானத்திற்கு ஒப்போ அதைவிட உயர்வோ கிடையாது என்பதை " உவமை இல்லாக் கலைஞானம்" என்றார். நம்மில் சிலர் கடவுளை உணர்ந்து விட முடியும் என்று பேசுகிறார்கள் அல்லவா?  ஆனால் உணர்வுக்கும் அரிய பொருளே என்று மணிவாசகர் கூறியதுபோல் உணர்வுக்குள் அடக்க முடியாத இறைவனை, " உணர்வரிய மெய்ஞ்ஞானம் " மட்டுமே அடையாளம் காட்டும். இவை அனைத்தையும் சீர்காழிக் குளக் கரையில் சிவஞானப் பால் உண்ட சம்பந்தப் பெருமான் பெற்றார் என்ற பெரிய புராண  வரிகள் இன்புறத்தக்கன.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற  மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலைஞானம்  உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்  தாம் உணர்ந்தார் அந்நிலையில்

என்பன தெய்வச் சேக்கிழாரின் அற்புத வருணனை.

Wednesday, May 20, 2015

திருமுறைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி ?

இந்தத் தலைமுறையைச்  சேர்ந்த ஒரு பையன் கேட்டான்," எனக்குத் தேவாரம்,திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்களைப் படிக்க ஆவலாக  இருக்கிறது. அதெல்லாம் எனக்குப் புரியுமா , அப்புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நானாகவே படித்துத் தெரிந்து கொள்ள முடியுமா" என்று அவன் கேட்டபோது அவனது ஆர்வத்தை விட அவனது நிர்மலமான சிந்தனையைப்  போற்றத் தோன்றியது.  இதுபோன்ற சந்தர்பங்களில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதே முக்கியம். அதற்கான வழி  முறைகளை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு  செய்யுளைப்  பொருள் அறிந்து  படிக்கும்போது  அதன் சொற் சுவை , பொருட் சுவை புலப்படுவதால் இலக்கியத்தில் ஆர்வம் எற்படும். இவ்விரண்டு சுவைகளோடு பக்திச் சுவையையும் சேர்த்து வழங்குவன பக்தி இலக்கியங்கள். ஆகவே, இம்மூன்றும் ஒரே நேரத்தில் சென்று அடையும்படி தற்காலத்தவர்களுக்குக்  கற்பித்தால் அவர்கள் வரவேற்பார்கள்.

கற்பிக்கும் முறை எளிமையாக இருப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு நூலுக்கும் ஓர் எளிமையான அறிமுகம் அவசியம். அதுவே,வாசகரைக்  கை பிடித்து நூல் முழுவதையும் காட்டுவதற்குத் துணையாக இருக்கும்.  எனவே புத்தகத்தில் காணப்படும் வரிசையில் படிப்பது எல்லா நூல்களுக்கும் பொருந்தாததுடன் தமிழறிவு சற்றுக் குறைந்தவர்களுக்குச்  சற்று அலுப்பு ஏற்படுத்த வகை செய்து  விடும்.  அப்புறம் அவர்கள் அந்நூலின் பக்கமே வரத் தயங்குவர். எனவே பள்ளிக்கூடங்களில் இவற்றில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்படுத்தத் தவறிவிட்ட கல்விமுறையைக் குறை சொல்லிக் கொண்டு கையைக் கட்டியபடி உட்கார்ந்து இருப்பதை விட, மிகவும் எளிமையாகக் கற்பித்து ஆர்வம் ஏற்படுத்தும் முறையைக் கையாள வேண்டியிருக்கிறது.

சொல்லித்தரும் பாடலுக்குள் புகுவதன் முன் அதன் பொருளை எளிய முறையில் சொல்லிவிட்டு வரிக்கு வரி பொருள் சொல்வது ஒரு முறை. நிறைவாக முழுப் பாடலையும் சொல்லி விளக்குவது வழக்கம். இவ்வாறு காதால் கேட்கும்போதே, கேட்பவருக்கு அப்பாடல் எளிமையாகப் புரிவதோடு, அவ்வினிய வரிகள் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற எளிய பாடல்களை அந்த நூலில் தேடத் துவங்கி விடுவதும் இயல்பு. கடினமான பாடல்களை முதலிலேயே அறிமுகம் செய்து வைத்தால், இது நமக்கு ஒத்து வராது என்று விலகி விடுகின்றனர்.

சில பாடல்கள் முழுவதும் கடினமாகத் தோன்றலாம். ஓரளவு பொருள்  புரியும் பாடல்களும் உண்டு. நான்கு வரிகள் அமைந்த பாடல்களில் போதிய தமிழறிவு இல்லாதவர்கள் மூன்று வரிகளாவது புரியக் கூடிய  பாடல்களை முதலில் படிக்கத் தொடங்குவது எளிமையான வழி. அந்த வரிகளிலும் புராணச் செய்திகள் புதியதாகத் தோன்றக் கூடும். ஆகவே, வெளிப்படையாகப் பொருள் தரும் வரிகள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கு காண்போம்.   இது திருமூலர் அருளிய திருமந்திரத்தில் காணப்படுவது. அந்நூலில் உள்ள பல  பாடல்கள் சைவ நூல்களை பயின்றவர்களுக்குக்கூட முழுமையாக விளங்காமல் இருந்தாலும் , எளிமையாகப் புரியக்கூடிய பாடல்களும் இருப்பதால் அவற்றை முதலில் நுழை வாயிலாகக் கொண்டு பயிலுவதே சுலபமான வழி.அதன் மூலம் நூலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கடினமான பாடல்களும் ஓரளவு பொருள் விளங்க ஆரம்பிப்பதை அனுபவத்தால் அறியலாம்.

நாம் இப்போது சிந்திக்கும் பாடல் குருவின் மகிமையைக் குறிப்பது. சற்குருவை நேரில் காண்பதே நமக்குத் தெளிவைத் தந்து விடும் என்கிறார் திருமூலர். குருநாதர் நேரில் இல்லாதபோது அவரது நாமங்களே நமக்குத் துணையாக நின்று அத்தெளிவைத் தந்து விடும். குருநாதரது அருளுபதேசம் தெளிவைத் தரும்.  இவ்வளவு என்? குருநாதரைச்  சிந்தித்த மாத்திரத்திலேயே தெளிவு ஏற்பட்டு விடும் என்கிறது  இப்பாடல். குருவின் அருள் இருந்தால் இறைவனை எளிதில் அடையலாம். ஆகவே அஞ்ஞானம் தன்னை அகற்றும் ஞானமயமான    குருவைச்  சரண் அடைந்து தரிசனம் செய்வதும், அவரது திருவார்த்தையைக் கேட்பதும், அவரது திருநாமத்தை உச்சரிப்பதும், திருவுருவத்தைத் தரிசிப்பதும் தெளிவைத் தந்து விடும் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்தி வழி காட்டுகிறது.

இப்பொழுது பாடலைக் காண்போம்:
                               தெளிவு குருவின் திருமேனி காண்டல்
                                தெளிவு குருவின் திருநாமம் செப்பல்  
                                தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
                                 தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
" குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என " என்று ஔவையின் விநாயகர் அகவலும் கூறுவதைக் காணும்போது, பக்குவம் வந்த உயிர்களுக்குக் குருவின் தரிசனமும்,உபதேசமும் கிடைப்பதை அறியலாம். எனவே,குருவருளும் திருவருளும் கிடைக்குமாறு நாம் பக்குவப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்குத் துணையாகும் திருமுறைகளைப் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால் இவ்விரண்டும் சித்திக்கும். 

Saturday, May 2, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 3

தனது சிவிகையின் பின்னால்  வந்துகொண்டிருந்த  ஒதுவாமூர்த்திகளிடம்  விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்தின் மீது பாடப்பெற்ற தேவாரப் பாடல் ஒன்றைக் காஞ்சிப் பெரியவர்கள்  பாடச் சொன்னபோது, பின்வரும் பாடலை  ஓதுவார் பாடியதாக அறிகிறோம். அப்பாடலை  அருளியவர் திருஞானசம்பந்தர்.

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.

எல்லாத்தேவர்களுக்கும் மேலான தேவன் பரமேச்வரன் ஆதலால் அவன் ஒருவனே தேவன் எனப்படுகிறான். " விண் ஆளும் தேவர்க்கும் மேலாய வேதியன் " என்று திருவாசகத்தில்  காண்கிறோம். ஆகவே மகாதேவன் எனப்படுகிறான். சிவாஷ்டோத்திரத்தில்  இரண்டு நாமாக்கள் , தேவாய நம:  மஹாதேவாய நம: என்று அடுத்தடுத்து வருவதைக் காணலாம்.  எல்லாத் தேவர்களுக்கும் எந்தையாகவும் விளங்குவதை, " எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாத் திகழ்வான் " என்று இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் வருகிறது. அதாவது சூரியன் முதலான தேவர்கள் சர்வேசுவரனைத் துதிக்கும்போது , அவர்களது சிந்தையைக் கோயில் எனக் கொண்டு விளங்குகிறான் என்பது கருத்து. எதனால் இப்படி அவனை உயர்ந்த தெய்வமாகத்  தேவர்கள் வழிபாடு செய்கிறார்கள் என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டாமா?

சிவபெருமானை " ஆறு சமயங்களுக்கு ஒரு தலைவன்"  என்பார் சம்பந்தர் இதே தலத்தின் மீது பாடிய வேறோர் பதிகத்தில்.  இதையே அப்பர் பெருமானும், " தாமரையான் நான்முகனும்  தானே ஆகி, மிக்கது ஓர் தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலான் " என்று இத்தலத்தில் பாடியருளிய திருத்தாண்டகத்தில் போற்றுவதைக் காண்க.   தேவாசுரர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டபோது எல்லாத் தேவர்களும் அதனை நெருங்கவே அஞ்சினர். " ஞாலம் உண்டானோடு நான்முகனும் நண்ணரிய "  ஆலாலம் அது என்கிறார் மாணிக்க வாசகர். எங்கு ஓடினாலும் தம்மை அவ்விடம் துரத்தக் கண்டு கயிலாய மலையை அடைந்து சரணடைந்தார்கள் தேவர்கள். அவர்களையும் எல்லா உலகங்களையும்  ஒப்பற்ற கருணையுடன்  அந்நஞ்சை அமுதமாக உண்டு காத்த கடவுள் ஆதலால் மகாதேவனாக , நீலகண்டப் பெருமான் எல்லா உலகங்களும் போற்றும் பெருங்கடவுளாகத் திகழ்கிறான். அனைவர்க்கும் அவன் ஒருவனே  பெரியவனானபடியால் தேவர்கள் அவனை வணங்கும்போது, " தேவா, சிறியோம் பிழையைப் பொறுப்பாய்  " என்கின்றனர்.  

நாம் அனைவரும் நாள் தோறும் பிழை செய்யும் சிறுமை உடையவர்கள். ஆகவே சிறியோம் என்று சொல்வது முற்றிலும் பொருத்தம். ஆனால் அடியவர்களின் பிழையை மன்னிப்பதே பெருமானின் குணம் என்பதை, " குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்ளும் கொள்கை " என்ற  சுந்தரர் வாக்கு இதைத் தெளிவு படுத்துகிறது. சுவாமிக்குக் " குற்றம் பொறுத்த நாதர் ( அபராத க்ஷமாபநேசுவரர் ) என்று கருப்பறியலூர் என்ற ஊரில் பெயர்வழங்கப்படுகிறது. " அம்பலத்து எம் பெரியோனே, சிறியேனை ஆட்கொண்ட பெய்  கழற்கீழ் விரையார்ந்த மலர் தூவேன் " என்று மாணிக்கவாசகப் பெருமான் அருளுவார்.

 ஆகவே, பிழை பொறுத்தலே பெரிய தெய்வத்திற்கு அடையாளம் என்பதை,      " பிழைத்தவை பொறுக்கை  எல்லாம் பெரியவர் கடமை " என்று அவரே மேலும் அருளுவதால் அறியலாம்.  மன்னித்து அருளும் குணம் , பெருமான் உயிர்கள்பால் வைத்த இரக்கத்தைக் காட்டுகிறது.  அடியார்களிடம் இக்கருணையை அதிகமாகக் காட்டுவதால்  " அருள் நிதி தர வரும் ஆனந்த மலை " என்று திருவாசகம் சுவாமியைப் போற்றுகிறது. கருணைக் கடலாக       ( " க்ருபா சமுத்ரமாக ")  அவரைப் போற்றும்போது, " அலைகடலே " என்று அழைக்கிறார் மணிவாசகர்.

திருமுதுகுன்றத்தில் தவம் செய்யும் முனிவர்கள் அரும்தவசிகள். தவ மேன்மையால் மூப்பு அடையாதவர்கள். எனவே, மூவா முனிவர் என்று சொல்லப்பட்டது. அவர்கள் முதுகுன்றப்பெருமானை வணங்கும்போது, அந்தத் தல மகிமையைக் கூறி வழிபடுகிறார்கள். ஊழிக் காலத்திலும் அலைகளை உடைய கடலால் இத்தலத்தை  எதுவும் செய்ய முடியவில்லை என்பது தல புராணம். பிரளயத்திலும் நீரில் மூழ்காமல் மிதந்த ஊர் என்பதை சம்பந்தரும், " செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி  நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முது குன்றமே "  என்பார்.

இவ்வாறு எல்லோர்க்கும் பெரியோனாகவும் தேவர்களுக்குத் தேவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் திகழும் முழு முதற்கடவுளான பரமேசுவரனை  பக்திமலர் தூவி அடியார்கள் வழிபடுவதை சம்பந்தர் வாக்கால் அறிந்து இன்புறலாம்.

சிவனடியார்கள் சுவாமியை மலர்கள் கொண்டு அர்ச்சித்தும் ,அபிஷேகித்தும் "  சிவனே என்றும், வைத்த நிதியே என்றும் , மணியே என்றும் அவனைப் போற்றி ,  உடலை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் வருத்திக் கொண்டும் , சித்தம் நைந்து வழிபடுகிறார்கள் என்றும் இதே பதிகம் குறிப்பிடுகிறது.    
இவ்வளவு அற்புதமான பொருள் நிரம்பிய பொக்கிஷமாகத் திகழ்வது இத் தேவாரப் படல். அதனை அனுபவித்துப் பெருமான் அருளை நாமும் வேண்டுவோமாக.