Monday, June 15, 2015

தீவினையே துன்பம் தரும்

திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் ஆலயம் 
திரு என்ற சொல்லுக்குத் தமிழ் மொழியில் திருமகள் என்ற பொருளைத் தவிரவும் பல பொருள்கள் உண்டு. நமக்குத் தெரிந்த மற்றொரு பொருள் செல்வம் என்பது. அது நிலை அற்றது. அழியும் தன்மை உடையது. ஆகவே கைப்பொருள் என்றுமே மெய்ப்பொருள் ஆகமுடியாது. அப்படியானால் மெய்ப்பொருள் ஆவது எது என்ற ஐயம் எழலாம். " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே." என்று அருளினார் ஞானசம்பந்தர். எனவே, கையில் உள்ள பொருள்கள் எல்லாம் இற்றுப் போய்விட்டாலும் உனது பாதமான மெய்ப்பொருளையே எப்பொழுதும் சிந்திப்பேன் என்றார் அவர் ( " கையது  வீழினும் கழிவுறினும் உன் செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன் " )  எல்லா வகைச் செல்வங்களும் உன் பொன்னடிகளே என்று  சுந்தரரும், " திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் " என்று அருளிச் செய்தார்.  அப்பர் பெருமானது வாக்கிலும், " திருவே என் செல்வமே "  என்று வருவதைக் காணலாம்.

" திருவுடை அந்தணர் வாழ் தில்லை "  என்று சொல்லும்போது, நடராஜப் பெருமானே அந்தத்  திரு என்பதாகப் பொருள் கொள்வதே சிறப்பு. சிவம் நம் பால் இரங்கி வந்துவிட்டால் திருவுடையவர்கள் ஆகிறோம் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டியதாகும். அந்தப் பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்?  தீவினைகள் நீங்கப்பெற்றால் தான் சிவனருள் பெறல் எளிதாகும். இதற்குத் தடையாக இருப்பது நாம் செய்த தீவினைகளே. சஞ்சிதம் என்னும் தொல்வினை தீர  வழிகள் பல இருந்தாலும், தீரும் காலம் வரை இன்னல்களை அனுபவித்தே ஆக வேண்டும். கைவினை செய்து கழலடி ஏத்துவதால் தீவினை நம்மை அடையாது என்று நமக்காகப் பரிந்து அருளுரை வழங்குவார் ஞானசம்பந்தப் பெருமான்.( கைவினை செய்து எம் பிரான் கழல் ஏத்துதும் நாம் அடியோம்; செய்வினை வந்து எம்மைத் தீண்டப்பெறா திருநீல கண்டம் " ) என்று திருநீலகண்டத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.

திரு உடையவர்களுக்குத் துன்பம் வராது என்பதைத் திருவாசகமும், " பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள்பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது? " என்று காட்டுகிறது. இதனை ஒரு நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்துகொண்டால் எளிதாக விளங்கும். பாண்டிய நாட்டில் அரசனும் சமணர்  வசப்பட்டிருந்தபோது, சைவத்தை மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டி பட்டத்து ராணியான மங்கையர்க்கரசியாரும், குலச்சிறை என்னும் மந்திரியாரும் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வரவேற்றனர். அதனைப் பொறாது சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தும் அத்தீ ஞானசம்பந்தரை ஏதும் செய்யவில்லை. அவரை நேரில் காண வேண்டி அரசியாரும் மந்திரியாரும் உள்ளம் பதைக்க வந்தபோது, அவர் கேட்ட கேள்வியாவது  ,       " திருவுடையீர் , உங்கள் பால் தீங்கு உளதோ"  என்பதுதான். அதாவது, ஆலவாய் அண்ணலைச் சார்ந்தவர்களுக்குத் தீயவை வாரா என்பது இதன் உட்பொருள்.  அப்பெருமானைத் தொழுபவர்களுக்குத் திண்ணம் இன்பமே என்று அவரே அருளிச் செய்திருப்பதால் அதனை உணர முடிகிறது.

நல்வினை உடையவர்களுக்கு அத்திருவாகிய சிவ பரம்பொருள் துணைநின்று காப்பான் என்றால் நல்வினை பெற எளிய வழியாவது என்ன என்பதையும் அக் குருநாதரே நமக்கு அருளுவதைக்   காண்போம்.
 
நேற்று இருந்தார் இன்று இல்லை என்னும்படி அநித்தியமானது மனித வாழ்க்கை. எனவே அது எப்போது முடியும் என்று யார் அறிவார்? உடலில் உயிர் உள்ளபோதே, சிவபெருமானை மனத்தால் நித்தலும் நினைக்க வேண்டும். பூக்குடலையைத் தலைமேல் சுமந்துகொண்டு திருக்கோயிலுக்கு நாள் தோறும்  சென்று வழிபட வேண்டும். அப்புண்ணிய மூர்த்தியின் நாமங்களைச் செவிகளால் கேட்கவேண்டும். அத்திருநாமங்களை நமது நாவினால் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். இப்படிச் செய்து வந்தால் தீவினை நீங்கப்பெற்று நல்வினை அடைந்தவர்களாக நற்கதி பெற்று விடலாம் என்பது திருச்சாய்க்காடு என்ற தலத்தில் அவர் அருளிய திருப்பதிகத்தில் உள்ள ஒரு பாடல்:  

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார்
சாநாளும் வாழ்நாளும் ;  சாய்க்காட்டு எம் பெருமாற்கே
பூ நாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.

(பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்திற்கு அண்மையில் உள்ள இந்தத்  தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். காசிக்குச் சமமான தலங்களுள் இதுவும் ஒன்று. )