Tuesday, September 29, 2015

பிறவி நோய் நீங்கும் வழி

கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே  
விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட     உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு? " பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.
நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்                                   
ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்           

 அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்               
 பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.

பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.