Wednesday, October 14, 2015

" இது நம் இல்லம் "


மன்னாதி மன்னர்கள் கட்டிய மாளிகைகள் எல்லாம் பகைவர்களால் தரை மட்டமாக்கப்பட்டு அழிந்து போயிருக்கின்றன. எஞ்சிய சிலவும் இயற்கைச் சீற்றங்களாலும், கவனிப்பாரின்றி மரம் முளைத்துப் போயும் மறைந்து விடுகின்றன. இப்படி இருக்கும் போது நம் போன்ற சாமானியர்கள் வசிக்கும் வீடுகள் நிலைத்து நிற்குமா என்ன? அதிலும் பாமர  ஏழை கட்டிய மண் சுவரும், மேற்கூரையாக வேயப்படும்  மூங்கில்களும் ஓலைகளும் காற்றுக்கும் மழைக்கும் எப்படித் தாங்கும்? அந்த எழையும் தன்னால் முடிந்தவரை மண் சுவற்றைப் பலமாகக் கட்டியிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? அப்படி இருந்தாலும் அக்குடிசைவாசி அந்த வீட்டை எனது இல்லம் என்று தானே சொல்லிக் கொள்கிறான்! அதே போலத்தான் மனித உடலும்! அந்த ஏழை கட்டிய வீட்டைப்போல எளிதாக அழியக் கூடியது.

உடலில் உள்ள எலும்புகள் அந்தக் குடிசையின்  கால்கள் போன்றவை. மாமிசத்தாலான உடலோ மண் சுவற்றுக்கு சமம். இப்படிப்பட்ட புலால் நாறும் உடம்பைத்   தோலாகிய போர்வையால்  மூடிக்கொண்டு, " இது எனது " என்று கூறிக் கொண்டு அதை அழகு படுத்திப் பார்க்கிறோம். வயது ஆக ஆக அழகும் குறைந்து, தோல் சுருங்கி, உடல் தளர ஆரம்பித்து விடுகிறது. ஏழைக் குடிசைக்காவது  வேறு ஓலை வேயலாம். வேறு மூங்கில்களைக் கொண்டு தாங்கச் செய்யலாம். ஆனால் மனித உடலாகிய வீட்டுக்கு என்ன  செய்ய முடியும்?

மனிதக் குடிலுக்கு ஒன்பது வாசல்கள் வேறு. ஐம்புலன்கள் படுத்தும் பாடோ கொஞ்சநஞ்சமல்ல. அவை நம்மைப் பெரும்பாலும் தீய வழிக்கே இழுத்துச் செல்வன. இதிலிருந்து விடுபடும் மார்க்கமோ தெரியவில்லை. " சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய " என்று திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார். இப்படி ஐம்புலனாகிய சேற்றில் அழுந்தி ஒரேயடியாக மூழ்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

அப்படியானால் இதிலிருந்து விடுபட  வழியே இல்லையா என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது என்று நமக்கு அபயம் அளிக்கிறார் திருஞானசம்பந்தப்பெருமான். திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டு அருளும் தியாகேச வள்ளலைத் தொழுதால் உய்ந்து விடலாம் , அஞ்ச வேண்டாம் என்று நல்வழி காட்டுகிறார் குருநாதராகிய ஞான சம்பந்தக் குழந்தை. அப்பாடலை இங்கு சிந்திப்பதால் நாமும் உய்ந்து விடலாம்.

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்                
புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையால் முகடு கொண்டு  

முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே                                    
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
                                                                                                                 --- சம்பந்தர் தேவாரம்