Tuesday, December 27, 2016

பட்டங்களை நாடுவது ஏன் ?

உலகத்தில் புகழுக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு அடிமை ஆகாதவர்கள் மிகச் சிலரே. இதில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேடி அலைபவர்களே! மீதி இருப்பவர்களை இவ்விரண்டையும் காட்டித் தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு ஆதாயம் அடைபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் மாட்டிக்கொள்ளாத அந்த " மிகச் சிலர் " , இறைவனது அருட் செல்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததும் நிலையானதும் வேறு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த மனப்பான்மை உடையவர்கள். 

பட்டங்கள் கொடுத்துக் கெளரவிப்பவர்கள் அதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக நினைத்து விடுகிறார்கள். இதன் மூலம் பட்டம் பெறுபவருக்கு அகந்தை அதிகரிக்க அது வழி செய்து விடுவதை ஏனோ மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே பல பட்டங்கள் பெற்றுப்  புகழ் ஏணியின் உச்சியில் இருப்பவர்களுக்கு வேறு ஓர் பட்டம் வழங்கினால் தனது கௌரவத்திற்கு அப்பட்டம் ஏற்றது அல்ல என்றும் அதை விட உயர்ந்த பட்டமே வழங்கியிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதோடு அப்பட்டத்தை ஏற்க மறுத்து விடுவதையும் காண்கிறோம். 

சமய உலகையும் இந்த மோகம் விட்டு வைக்க வில்லை. சமயத் தொண்டு ஆற்றுபவர்களுக்குப் பட்டம் தரும்போது, " தமிழ்க் கடல், செந்தமிழ் அரசு, சைவ நன்மா மணி, திருமுறைக் காவலர், கலாநிதி, தமிழாகரர், செந்நாப்புலவர், திருப்பணிச் சக்கரவர்த்தி "  என்றெல்லாம் பட்டம் சூட்டி விடுகிறார்கள். திருமுறையைப் பாடி விட்டால் காவலர் ஆகி விட முடியுமா? அந்த ஆழ் கடலில் ஒரு சில முத்துக்களை எடுத்தார்களோ இல்லையோ, அதற்கே இப்படிப் பட்டம் வழங்குவது அதிகமாகத் தெரிய வில்லையா?  நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் எத்தனையோ திருக்கோயில்களைத் திருப்பணி செய்திருந்தும் அக்காலத்தில் எந்தப்பட்டமும் அவர்களுக்கு  வழங்கப்படவில்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இவ்வளவு என்? திருமுறைகளைக் கண்டெடுத்தும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியும்  அளப்பரிய தொண்டாற்றிய மாமன்னனும் தன்னை, " சிவபாத சேகரன்" என்றே அடக்கத்துடன் அழைத்துக் கொண்டான்.  

இப்படியெல்லாம் பெறப்படும் பட்டங்களால் புகழ் கிடைத்து விடுவதும் , பிரபலமாகி விடுவதும் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். வாழ்க்கை முடியும் பொது, நம் பெற்றோர் இட்ட பெயரே மறைந்து விடும் போது, நடுவில் வரும் பட்டங்களா கூட வரப்போகின்றன? ஐயடிகள் காடவர்கோன் என்ற அரசர் இந்த உண்மையை நமக்குத் தெரிவிக்கிறார். இந்த உடல் அநித்தியமானது. பெயரும் புகழும் கூட வரப்போவதில்லை. ஆகவே, இப்போதே ஈசன் நாமத்தை நாவில் கொண்டு, அவன் உறையும் தலங்களுக்குச் சென்றால் உய்யலாம் என்று நமக்கு உபதேசிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவர் பல தலங்கள் மீது பாடியருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற தலத்தின் மீது அவர் பாடிய வெண்பாவை நாம் இப்போது சிந்திக்கத் திருவருள் கூட்டியுள்ளது. கூட்டை விட்டு உயிர் பிரிந்த பிறகு நிகழ்வதை அப்படியே காட்டுகிறார் நாயனார். உயிர் இன்னும் உடலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்களாம் காலமானவரின் உறவினர்கள். அவ்வுடலைத் தொட்டுப்  பார்த்து உடல் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உடல் குளிர்ந்து போனதை அறிந்தவுடன் அதனைத்  தடவியும் தேய்த்தும் சூடேற்ற முயலுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாததை அறிந்ததோடு , மார்பில் துடிப்பு நின்று போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை பெயரோடு திகழ்ந்த அவ்வுடலுக்குப் பிணம் என்று பெயரிடுகிறார்கள்.  பின்னர் அவ்வுடலைக் கட்டி எடுங்கள், இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அந்த நிலை நம் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் வரப்போவது தான். பிறருக்கு அந்நிலை வருவதைப் பார்த்தும் நமக்கும் ஒருநாள் இப்படி வரும் என்று எண்ணாமல் பெயருக்காக அலைகிறோமே என்ற எண்ணமும் வருவதில்லை. ஆனால் மெய் வடிவேயான ஞானிகள் அப்படி அல்ல. " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் " என்றார் மாணிக்க வாசகர். உலகியலைக் காட்டி நமக்கு உணர்த்தும் ஐயடிகள் காடவர்கோன் , நில்லா உடலைச் சுட்டிக்காட்டி , இப்போதே நெடுங்களத்தான் பாதத்தை நினைப்பாயாக என்று அறிவுறுத்துகிறார். 

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப்பிணம் என்று பேரிட்டுக் - கட்டி 

எடுங்கள் அத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே 

நெடுங்களத்தான் பாதம் நினை 

என்பது அவ்வுயரிய பாடல். நாமும் நெடுங்களத்தான் பாதம் நினைப்போம். அத்தலத்தைச் சென்று வழி படுவோம். அப்போது நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் பணத்தாசையும் புகழாசையும் அறவே நீங்கி விடுவதை உணர்வோம். 

Tuesday, December 20, 2016

எம்பிரான் செய்யும் நாடகம்

நம்மில் பலருக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. நமது பூஜையையோ அல்லது கோரிக்கைகளையோ இறைவன் ஏற்றுக்கொண்டு  செவி சாய்க்கிறானா என்பதே அது. " செய்யாத பூஜையோ பரிகாரமோ , ஏறாத கோவில்களோ இல்லை,இருந்தும்  என் பிரார்த்தனை இறைவனின் செவிகளில் விழவில்லையே "  என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்கிறோம். சற்று அமைதியாக யோசித்தால் ஒரு உண்மை தெரியக் கூடும். நாம் உண்மையிலேயே பூஜையில் லயித்து விடுகிறோமா என்று கேட்டுப் பார்த்துக் கொண்டால் , உள் மனது இல்லை என்றே சொல்கிறது. அதேபோல் கோயில் கோயிலாகச் சென்றாலும் ஆனந்த  நீர் அருவி பெருக இறைவனைத் தரிசிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கோயில் வாசலில் விட்டு வந்த செருப்புக்களும் அடுத்த பஸ் போய் விடக்கூடாதே என்ற கவலையும் முன்னே வந்து நிற்கின்றன. 

திரை போடப்பட்டிருந்தால் எப்பொழுது இந்தத் திரை விலகி சுவாமி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. ( கவனிக்கவும்: தரிசித்துவிட்டு என்பதற்குப் பதில், பார்த்துவிட்டு என்று எழுத வேண்டியிருக்கிறது) இந்த அவசர  வழிபாடும் பிரார் த்தனையும் நமக்கு வசதியாகச் சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் சிறப்புக் கட்டணம் செலுத்தி விட்டு எல்லோரையும் முந்திக் கொண்டு உள்ளே செல்லவும் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட நமக்கோ வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டும் என்ற பேராசை! கால தாமதமானால் கடவுளுக்குக் கண் இல்லை , காது இல்லை என்று அங்கலாய்க்க மட்டும் தெரிகிறது. நாம் கூப்பிட்ட குரலுக்கு சுவாமி ஓடி வர வேண்டும் என்றால் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? அப்படித் தகுதி உள்ளவர்களோடு பழகினால் நமக்கும் அத்தகுதி பெறுவது சற்று எளிதாகி விடும் அல்லவா? அதற்குத் தான் நாம் தயாராக இல்லையே!!!

மாணிக்க வாசகர் அருளுவதை இப்போது கருத்து உணர்ந்து  பார்ப்போம். " உன்னுடைய அடியார்களோடு இணங்குவதற்கு அடியேனுக்குத் தகுதி இல்லை. அப்படி இருந்தும் இத் தகுதி இல்லாதவனைத்  திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டருளினாய். ( " சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்.." - திருவாசகம் )  நீயோ நிர்மல மணி . மாசிலா மணி. நானோ பொல்லாக் குரம்பையில் ஐந்து புலன்களால் அலைக்கப்படுபவன் . உன் அருள் பெறும் நாள் என்று என்று ஏங்குகிறேன். நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன். அவ்வடியார்களுக்கு வீடு பேறு  கிடைக்கும் என்பதால் எனக்கும் அப்பேறு கிடைக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டு , மிகப் பெரிதும் விரைகின்றேன். நானோ உனது கழலடிகளை நினைந்து உருகி அப் பாத மலர்களுக்கு நல்ல மலர் புனையாதவன் . நாக்குத் தழும்பு ஏற அகம் குழைந்து, அன்பு உருகிச்  சொல் மலர்களாலும் தோத்திரங்களாலும் துதிக்கவில்லை. நின் திருக்கோயிலைத் தூகேன்,மெழுகேன், கூத்து ஆடேன். அலறிடேன்.உலறிடேன். ஆவி சோரேன். வியந்து அலற மாட்டேன். வல்வினைப்பட்டு ஆழ்கின்றேன். யாவரினும் கடையவனாக இருந்தும் உனக்கு அன்பன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

உன் நாமங்களைக் கேட்ட அளவில் பதைத்து உருகும் அடியார்கள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட அடியார்கள் இருக்கும்போது என்னுடைய தகுதி இன்மையைப் பொருட் படுத்தாமல் நீ ஆட்கொண்ட கருணையைக் கண்ட பிறகாவது என் நெஞ்சம் உருகி இருக்க வேண்டும். உடம்பெல்லாம் கண்களாகி ஆனத்தக் கண்ணீர் சொரிந்திருக்க வேண்டும். ஆனால் நானோ தீ வினையேன். எனது நெஞ்சம் கல்லாகி நிற்கிறது. கண் இணைகள் மரம் போல விளங்குகின்றன. மாக் கருணை வெள்ளமாக  நீ அருளியதை நோக்கும் போது அடியேனுக்கு நகைப்பு வருகிறது. ஏன் தெரியுமா? அல்லும்  பகலும்  தேவர்களும் முனிவர்களும் பிறரும் உனது அருள் பெறக் கடும் தவம் செய்தும் அவர்களை விடுத்துப்  புன்மையான இந்த எளியவனை மிகவும் உயர்த்தியுள்ளாய் அல்லவா? அதை நினைக்கும் போது நகைப்புத்தான் வருகிறது. இதுவும் உனது நாடகம் (திருவிளையாடல்)என்றே எண்ணத் தோன்றுகிறது.
    
"புகவே தகேன் உனக்கு அன்பருள் 

யான் என் பொல்லா மணியே 

தகவே எனை உனக்கு ஆட்கொண்ட 

தன்மை எப்புன்மையரை 

மிகவே உயர்த்தி விண்ணோரைப் 

பணித்தி அண்ணா அமுதே 

நகவே தகும் எம்பிரான் என்னை 

நீ செய்த நாடகமே. "

நாத் தழும்பு ஏற நாமங்களால் துதித்திலேன் என்று மணிவாசகர் கூறினும் இந்த ஒரு பாடலில் பெருமானை, " பொல்லா மணியே என்றும் அண்ணா என்றும் அமுதே என்றும் எம்பிரான் என்றும் பலவாறு பரவியிருப்பதைக் காணலாம். எனவே அவர் கூறிய புன்மைத் தன்மை அவருக்கு ஒருபோதும் பொருந்தாது. நம் போன்றவர்களுக்கே சாலப் பொருந்தும். 

இறையருள் பெறுவதற்கு உரியவர்களாக நம்மை நாம்  தயார் படுத்திக் கொண்டால்  இன்றைக்கும் பெருமான் பல்வேறு நிலைகளில் நமக்கு அருள் புரிகிறான் என்பது பெரியோர்கள் அனுபவத்தால் கண்ட உண்மை. அதற்கு அடுத்த நிலையாவது, அடியார்களோடு இணங்குவது. அதுவும் இறையருளால் மட்டுமே நடை பெறுவது.அந்த அனுபவம் நமக்கும் கிடைக்குமாறு பெருமான் கருணை புரிய வேண்டும். 

Wednesday, September 21, 2016

தாயும் நீயே தந்தை நீயே

வலிவலம் திருக்கோயில் 
சிவபெருமான் தாய் தந்தை இல்லாதவன். இளங்கோவடிகளும் இப்பெருமானைப் " பிறவா யாக்கைப் பெரியோன் "  என்று தனது  சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். " தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன் " என்கிறது திருவாசகம். " தந்தை தாய் இல்லாதாய் நீயே " என்பது அப்பர் தேவாரம். இப்படிப்பட்ட முழு முதற்கடவுள், உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் விளங்குகிறான். காளிதாசன் கூறும் அக்கருத்தை சைவ சித்தாந்த நூலான திருக்களிற்றுப்படியாரும் , " அம்மையப்பரே உலகிற்கு அம்மையப்பர் "  என்கிறது. 

 திருச்சிராப்பள்ளியில் ரத்னாவதி என்ற பெண்ணுக்காக  அவளது தாயாக  எழுந்தருளி பிரசவம் பார்த்ததும், கர்ப்பவதியாக வந்த பெண்ணுக்கு வட குரங்காடுதுறையில் தென்னங் குலையைச் சாய்த்துத்  தாகம் தீர்த்ததும் போன்ற தல வரலாற்றுச் செய்திகள் மூலமாகத் தாயுமாகி அருளியதை அறிகிறோம். சிற்றுயிர்களுக்கு இரங்கித் தாயாக எழுந்தருளியது அதைக் காட்டிலும் உயர்ந்த கருணை. மதுரையைச் சார்ந்த காட்டில் தாய் தந்தையரை இழந்து கதறும் பன்றிக்குட்டிகளுக்கு இரங்கி அவற்றின் தாய்ப் பன்றி வடிவில் எழுந்தருளிப் பாலூட்டி அவற்றின் துன்பம் தீர்த்த கருணையைத் திருவிளையாடற் புராணத்தில் காணலாம். 

" தாயிற் சிறந்த தயாவான தத்துவனே " என்கிறார் மாணிக்க வாசகர்.  பால் தர வேண்டிய நேரம்   உணர்ந்து குழந்தைக்குப் பாலூட்டும் தாயைக் காட்டிலும் தயை புரிவது இறைவன் ஒருவனே. நாம் எடுக்கும் அத்தனை பிறவிகளுக்கும் தாய் தந்தையராக  உடன் வருபவன் அவன் ஒருவனே.  நாம் எடுத்துள்ள இப்பிறவியில் யார் மூலமாகப் பிறக்கிறோமோ அவர்களைத் தான் நாம் பெற்றோர்  என்கிறோம். அதாவது ரத்த சம்பந்தம் இருந்தால் அந்த உறவு அமைகிறது. பந்தமும் பாசமும் கூடவே தொடர்கின்றன. உண்மையில்  எத்தனையோ பேருக்கு இந்த பந்தம் இருந்தும் பாசத்துக்காக ஏங்குவதைப் பார்க்கிறோம். எதிர் காலத்தில் இந்த பந்தங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரம் போலப்  பட்டதும் படாததுமாக ஆகி விடும் போலத் தோன்றுகிறது. அந்த வெற்றிடத்தை யாரால் தீர்க்க முடியும்?  இறையருள் இருந்தால் இறைவன் ஒருவனால் மட்டும் முடியும். 

அநேகருக்குச் சிறு வயதிலேயே தாயையோ அல்லது தந்தையையோ அல்லது இருவரையுமோ இழக்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் இந்த இழப்பின் சோகம் தொடர்கிறது. அதனை ஈடு செய்யும் கருணையுடன் சிலருக்கு இறை அருளால் பல ஆண்டுகளுக்குப்  பிறகு அன்னையோ அல்லது தந்தையோ அமையக் கூடும். இறைவனே நேரில் வந்து அவ்வடிவில் அருளினால் நிரந்தரமாக அமையமுடியாது அல்லவா?  மறுபடியும் பிரிவு ஏற்பட்டு ஏக்கம் வந்து விடும். ஆகவே, ஏதாவது ஒரு அருள் பெற்ற அன்பரைக் கொண்டு தாயாகவோ தந்தையாகவோ அமையச் செய்கின்றான் பெருமான். அந்த அருளின் ஆற்றல் எப்படிப்பட்டது தெரியுமா? உண்மையிலேயே அமைந்த பெற்றோரைக் காட்டிலும் உயர்ந்தவரையே பெருமான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறான். அதற்கு இருபாலாரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இது எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும்  பந்தம் என்பதைத் தாண்டியதுமான உயர்ந்த நிலை. அதற்கு அடுத்த படிதான் பெருமானே தாய் தந்தையராக அமைவது. இருவரும் அந்த எல்லையற்ற பெருங்கருணையை நினைத்து நினைத்து உருகுவர். இப்படி இவ்வுலகில் எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்?  பிறவியே பயனடைந்து விட்டதால்  மீண்டும் பிறவாத நிலையை இருவரும் அடைந்து விடுகின்றனர். 

எல்லாவுயிர்க்கும் சுகத்தை வழங்க வல்ல சங்கரனைத் தாயும் நீயே, தந்தை நீயே என்று துதிக்கிறார் ஞானசம்பந்தர். மாயமே ஆகிய உடலை  ஐம்புலன்கள் ஆட்டுவிக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடும் உபாயம் அறியாமல் அஞ்ச வேண்டியிருப்பதால் இறைவனையே தஞ்சம் அடைய வேண்டும். இறைவனை வணங்க வேண்டி உள்ளம் ஆதரித்தாலும் மாயை அதனைத் தடுக்கின்றபடியால் இவ்வாறு அஞ்ச வேண்டியிருக்கிறது. வலிவலம் என்ற தலத்தில் ஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப்பாடல் வருமாறு:

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே  அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் 

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் 

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே. 

Saturday, August 27, 2016

பாதம் புகழும் புண்ணியம்

அங்கையற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய் ஈசன் 
இறைவனைத்  தொழுவதால் ஏற்படுவது எது  என்பதற்கு  ஒரே வார்த்தையில் பதில் சொல்லும்படி கேட்டால் "  நன்மை " என்று சொல்லலாம். எப்போது நன்மை ஏற்படும், இந்தப்பிறவியிலா அல்லது இனி வரும் பிறவிகளிலா என்று கேட்டால் இப்பிறவியிலேயே என்று விடை கூறலாம். மதுரையில் உள்ள ஒரு சிவாலயத்தில்  சுவாமிக்கு  இம்மையே நன்மை தருவார்  என்று பெயர். அவ்வாறு நன்மை ஏற்படவேண்டும் என்றால் நாம் என்ன  செய்ய வேண்டும் என்பது அடுத்த கேள்வி. வேறு ஒன்றும் பெரிதாகச் செய்ய முடியாவிட்டாலும் பெருமானது சிவந்த திருப்பாதங்களைச் சிக்கென்று பிடித்துக் கொண்டால் மனதில் தெளிவு பிறக்கும். குழப்பம் நீங்கும். ஞானம் பிறக்கும் அதன் விளைவாகச் சிவ புண்ணியம் பெருகும். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர். " தேற்றம் இல்லாதவர்  சேவடி சிக்கெனச் சேர்மின்களே"  என்பது திருவாசகம்.

தேற்றம் என்ற சொல்லுக்குத் தெளிவு என்று பொருள். தேற்றம் இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும். மாற்று வழிகளில் செல்ல மனம் தூண்டும். ஆகவே அறிவு மேம்பட ஆண்டவனின் அருள் தேவைப்படுவதை நாம் அறிய முடிகிறது. " அறிவோடு தொழும் அவர் ஆள்வர் நன்மையே"  என்று திருக் கருக்குடித் தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடுகிறார். உயிர்களுக்கு நம்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இறைவன். " தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே" எனப்பாடுகிறார் சுந்தரர். நன்மை செய்வதையே தொழிலாகக் கொண்ட நமையாளும்        பெருமானுக்கு " நன்மையினார் " என்று பெயர் சூட்டுகிறார் நம்பியாரூரர். " நன்மையினார்க்கு  இடம்  ஆவது  நம்  திருநாவலூரே " என்பது அவரது வாக்கு.   

இறைவனது செய்கைகள் எல்லாம் உலகம் உய்வதற்காகவே என்பதை உணர வேண்டும். அவனது இப்பேரருளைக் கண்டு வியந்து துதிக்கிறார் ஞான சம்பந்தர். நான்கு திசைகளுக்கும் முதல்வனாகவும் மூர்த்தியாகவும் நின்று நன்மை அருள்பவனாகிய  சிவபரம்பொருளை ,

" நால் திசைக்கும்  மூர்த்தியாகி  நின்றது  என்ன நன்மையே !!! "  என்று மதுரை ஆலவாய்ப் பெருமானைப் பாடுகிறார் அவர். 

மனதில் தெளிவு ஏற்பட்டால் நன்மை விளையும். அதுவே புண்ணியச் செயல்களைச் செய்யத் தூண்டும். நின்ற பாவ வினைகளை நீங்கச் செய்யும். தீவினைச் செயல்களை மேற்கொள்பவர்கள் அப்புண்ணியத்தில் ஈடுபட மாட்டார்கள். இறைவனை ஏசவும் தயங்க மாட்டார்கள். தமது வழியே சிறந்தது என்றும் கூறத் தொடங்கி விடுவார்கள். இவ்வளவுக்கும் மூல காரணம் மனதில் தேற்றம் இல்லாமல் போவதுதான். அவ்வாறு வினைத் தொழில் வழி நின்ற சமணர்களையும் பௌத்தர்களையும் கண்டிப்பதோடு, மனதில் தெளிவு ஏற்பட வழியையும் சொல்லி அறிவுறுத்திகிறார்  சீகாழிப் பிள்ளையார். 

" தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும் 
போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார் " 
சிவன் சேவடியைப் பற்றுவதோடு, பாணபத்திரனைப் போல் ஆலவாய் அண்ணலைப் புகழ்ந்து பாடினால் சிவ புண்ணியம் கிடைக்கும் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. 
அவ்வாறு சேவடி பற்றிய மார்க்கண்டேயன் என்ற பாலனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் உதைத்து வீழச் செய்து அச்சிறுவனைக் காப்பாற்றியதுபோல் அடியவர்கள் அனைவரையும்  எம பயமின்றிக் காத்துத் தன்  சீரடிக்கீழ் வைத்தருளுவான் என்றும் சம்பந்தப்பெருமான் அருளுகின்றார். 

" கூற்று  உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய் "
என்பது அப்பாடலின் அற்புதமான வரிகள் உணர்த்தும் கருத்து. 

மதுரைக்குச் சென்று சமணர்களை வென்று பாண்டியனை மீண்டும் சைவனாக்கி அவை யாவும் ஈசன் திருவிளையாடலே என்பதால் பாண்டியனும்,மங்கையர்க்கரசியாரும்,குலச்சிறை  நாயனாரும் உடன் வர, ஆலவாய் ஈசனது ஆலயத்தை அடைந்து பெருமான் முன்பு திருஞானசம்பந்தப்பெருமான்  போற்றி இசைத்த அருமையான திருப்பதிகத்தில் வரும் பாடலே இது. 

" தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும் 

போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார் 

கூற்று  உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய்

நால் திசைக்கும்  மூர்த்தியாகி  நின்றது  என்ன நன்மையே."

சிவனருள்  துணை நின்றாலொழிய அப்புண்ணியம் கிட்டாது என்ற சைவ சித்தாந்தக் கருத்தும் இங்கே புலப்படுகிறது. இதையே, " அவன் அருளாலே அவன் தாள்  வணங்கி" என்றார்  மணிவாசகப் பெருமான். 

Monday, July 18, 2016

சங்கரா சய போற்றி

திருநாவுக்கரசர் 

மனத்தை ஒருநிலைப்படுத்துவது சாதாரண காரியம் இல்லைதான், அலைபாயும் மனத்தை நிலைப்படுத்த ஒருவேளை சிறிது முயற்சி செய்தாலும் அது நிலைத்து நிற்பதில்லை. " ஒன்றி இருந்து நினைமின்கள் " என்று அப்பர் சுவாமிகள்  உபதேசிக்கிறார். அப்படி நிலைபெறுவதால் அடையும் லாபம் தான் என்ன? அதற்கும் அவரே பதில் சொல்கிறார்:                     " உந்தமக்கு ஊனம் இல்லை" என்று. தியானம் செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியம் ஆகிறது, பெயருக்காகச் செய்யப்படும் தியானம் எவ்வாறு சித்தி தரும்? அப்படித்  தியானிப்பவர்களோடு கூடவே ஈசுவரன் இருக்கிறான் என்பதையும் அவரே, " உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி " என்கிறார். அவ்வாறு மனதை நிலைபெறச் செய்வதற்கான வழி வகைகளையும் நமக்கு அருளிச் செய்கின்றார் அப்பர் பெருமான்.

நம்மால் மனத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையே என்று மிகவும் ஏங்குபவர்களுக்கு இந்த உபதேசம் ஒரு வரப்பிரசாதம். அதைப் பற்றிக் கவலைப்படாது மிருக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு என்ன சொல்ல முடியும்? பக்குவம் என்பது மனதைப் பொறுத்த விஷயம். பிறரையும் பக்குவம்  அடையத்தூண்டுவதாகவும் அது அமைய வாய்ப்பு உண்டு. நம்மை நாமே பக்குவப்படுத்த முடியாமல் இருப்பதால் அதற்கான வழியை குருநாதர் நம் மேல் உள்ள இரக்கத்தால்  காட்டுகிறார். அப்படி உபதேசம் செய்யும்போது அவரது உயர்ந்த நிலை வெளிப்படுகிறது. பிறருக்கு அறிவுரை வழங்குபவர்கள் முதலில் அதைக் கடைப்பிடிக்க வேண்டுவது அவசியம் அல்லவா? ஆகவே தனது நெஞ்சுக்கு உபதேசிப்பதுபோல இப்பாடலை வழங்கி அருளுகின்றார் நாவுக்கரசர்.

" நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா " என்று அறைகூவி அழைத்து அறிவுரை வழங்குகிறது அப்பாடல். பிறகு நாம் செய்ய வேண்டிவைகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக உணர்த்துகிறது. வைகறையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டுவதை முதலில் சொல்கிறார் அப்பர். அதை ஏதோ ஒரு நாள் செய்தால் போதாது. தினமும் செய்ய வேண்டும். அதனால் தான், " நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு" என்கிறார்.

கதிரவன் உதயம் செய்வதன் முன் திருக்கோயிலை அடைந்து எம்பிரானது சன்னதியைத் திருவலகால் தூய்மை செய்து, மெழுக வேண்டும். பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு வந்து இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பெருமானது புகழை வாயாரப் புகழ்ந்து பாட வேண்டும் .
" புலர்வதன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூ மாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடி" என்பன அவ்வரிகள்.

தரிசிக்கும்போது கைகள் தலை மீது ஏறியவாறு  தரிசிக்க வேண்டுவதைத்       " தலையாரக் கும்பிட்டு" என விளக்கும் பாங்கு அருமையானது.ஆனந்தக் கண்ணீர் மல்கத்  தரிசனம் கண்ட அனுபவத்தால் அடியார் கூத்தாடுவர். அதனைக் " கூத்தும் ஆடி " என்பார்.

எம்பெருமானது நாமங்களைச் சொல்வதால் நமது பாவ வினைகள் அகன்று தூய்மை பெறலாம். அவனது நாமங்களைப் பிறர் சொல்லக் கேட்பதிலும் ஆனந்தம் ஏற்படுகிறது.தோணிபுரத்து ஈசன் நாமத்தை ஒரு தரம் கிளியின் வாயால் சொல்லச்  சொல்லிக் கேட்க ஆவலோடு இருப்பதாக  ஞான சம்பந்தர் பாடுவதன்  மூலம் அறிகிறோம். எனவே, பெருமானை சங்கரா என்றும் ஜெய ஜெய போற்றி என்றும் அலை பாயும் கங்கையை சடையில் தாங்கியவன் என்றும், அருண ஜடாதரன் என்றும் ,ஆதி மூர்த்தி என்றும் , ஆரூர் ஆண்ட அரசே என்றும் ( ஆரூரா தியாகேசா என்றும்) அலற வேண்டும் . இப்படிப் பன்னாள் அழைத்தால் , இவன் என்னைப் பன்னாள் அழைத்தலைத் தவிராதவன் என்று இறைவன் வெளிப்படுவான்.
" சங்கரா சய போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும் ஆரூரா என்றென்றே அலறா  நில்லே"    

இப்போது முழுப்பாடலையும் நோக்கலாம்:

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா                                                        

நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்குப் 

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் 

பூமாலை புனைந்து ஏத்திப்  புகழ்ந்துபாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி 

சங்கரா சய  போற்றி போற்றி என்றும் 

அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் 

ஆரூரா என்றென்றே அலறா  நில்லே .

காஞ்சி மகா பெரியவர்களுக்கு அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகப் பாடல்களில் ஆர்வம் அதிகமாக இருந்தது. மேற்கண்ட பாடலில் வரும்                  " சங்கரா சய " என்ற  வரியை பக்தர்கள் அனைவரும் உச்சரித்துக் கடையேறும் வண்ணம்  "  ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர " என்று அமைத்துக் கொடுத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மனம் ஒருமுகப்படும்போது பண் படுகிறது. ஆனால் இப்போது நாம் பண் படுகிறோமோ இல்லையோ பிறர் மனத்தைப் புண்  படுத்துகிறோம். பிறர் துன்பத்தைக் காணப் பொறாத மனம்; பிறருக்கு இரங்கி உதவும் மனம்; பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணும்  மனம்; பிறர் மீது பொறாமை கொள்ளாத மனம் ; நன்றி மறவாத மனம்; இறைவனை ஒருபோதும் மறவாத மனம் முதலிய பல்வேறு குணங்களைப் பெற்றால் தான்  மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியும். நல்ல குணங்கள் குரு அருளாலும் இறை அருளாலும் நம்மை வந்து அடையும். மனத்திற்குத் துணையாகவும் அது கூட இருந்து நம்மைக் காக்கும். வலிவலம் என்ற தலத்தில் சுவாமிக்கு மனத்துணை நாதர் என்று பெயர் வழங்குகிறது. நாமும் மனத்துணையே என்றும் ஆரூரா என்றும் நித்தலும் போற்றி ஆலயதரிசனம் செய்து தொண்டாற்றினால் மனம் நிலைபெறும்; ஒருமுகப்படும் என்பது அருளாளர் வாக்கு.    




Sunday, June 26, 2016

பொருந்தாத செய்கையும் பொருத்தமே

நம் போன்றவர்கள் பல்லாண்டுகள் நாத்தழும்பேற அழைத்தால் திருவருள் துணையின் காரணமாக சிவபெருமானது பெருமைகள் சிறிதளவாவது புலப்படக் கூடும். அவரவர்களது மெய்யன்பும், தவமும் இதற்கு மூல காரணங்கள் ஆகின்றன. ஆனால் மகான்களுக்கு ஏற்படும் அனுபவங்களே அலாதியானது. அவர்களுக்குப் பெருமான் துணைவனாகவும்,தொண்டனாகவும் தோழனாகவும் இருக்கிறான். காணாத காட்சிகளைக் காட்டுகின்றான். கலங்காதவண்ணம் நேரில் வந்து கோலம் காட்டி  அருளுகிறான். வழக்கத்திற்கு மாறான காட்சிகளாகவும் அவை அமைந்து விடுகின்றன. ஆனால் அவையும் அவனுக்கு அழகாகத்தான் பொருந்துகிறது.

சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் மான் துள்ளிய நிலையில் இருக்கும். " மான் இடம் கொண்ட காழியார்"  என்றுசம்பந்தப்பெருமானும் , " மான் இடக்கை கொண்டானை" என்று கஞ்சனூர்த்  தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறிப்பிடுகின்றனர்.. இந்த வழக்கத்திற்கு மாறாகத் தஞ்சை மாவட்டத்தில் வலங்கை மான் என்ற ஊரில் பெருமானது வலது கரத்தில் மான் இருக்கிறது. அதனால்தான் அந்த ஊருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்தது. 

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூருக்கு சம்பந்தருடன் வந்த அப்பர் பெருமான் தான் நேரில் கண்ட காட்சியைத் திருத் தாண்டகத்தால் பரவுகின்றார்.  அதில்                   " மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்" என்று வருகிறது. சோமாஸ்கந்த மூர்த்தி என்றாலே ஈசுவரன், அம்பிகை ஆகியோர் ,  தங்களுக்கு மத்தியில் ஸ்கந்தப் பெருமானுடன் இருக்கும் கோலமே ஆகும். ஆனால் இப்பாடலில் விநாயகனும் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு உரை ஆசிரியர்கள், விநாயகனும் என்பதால் எச்ச உம்மை ஆயிற்று என்றும் வழக்கம்போல முருகனோடு ஆனை முகனும் தோன்றுவதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். இது மேலும் ஆராய வேண்டியதொன்று. 

ஒருவேளை அக் கோயிலில்  உள்ள மூர்த்தியில் ஸ்கந்தருக்குப் பதிலாக விநாயகர் இருக்கிறாறா  அல்லது இது தொடர்பான புராண வரலாறு அங்கு உள்ளதா என்பது புலப்படவில்லை. 

திருவாய்மூரில்  கண்ட இன்னொரு அதிசயக் காட்சியையும் அப்பர் பெருமானது  பாடல் குறிப்பிடுகிறது. வழக்கமாக நடராஜர், தக்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களில் பெருமானது மேல்  இடது கரத்தில் மட்டுமே அக்கினி இருக்கும். தக்ஷிணாமூர்த்தியின் வலது மேல் கரத்தில் பாம்பும் ஜப மாலையும் காணப்படுவன. சோமாஸ்கந்தரின் வலக்கரத்தில் மழு இருக்கும்.. " வலங்கைத் தலத்துள்  மழு ஒன்று உடையார் போலும்" என்பது இன்னம்பர்த் தேவாரம் ஆனால் திருவாய்மூர் தரிசனம் வித்தியாசமானது. " வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன் " என்று  இப்பாடலில் வருவதால் பெருமானது வலது கரத்தில் அனல் ஏந்திய செய்தி நமது  சிந்தைக்கு விருந்தாகிறது. பொருந்தாத செய்கையும் பொருந்துகிறது. 

Tuesday, June 21, 2016

ஆரூர் ஆழித்தேர் வித்தகன்

ஆழித்தேர் 
மண்ணுலகில் பல அரசர்கள் உண்டு. விண்ணுலகிலும் தேவேந்திரன் இருக்கிறான். இந்த எல்லா அரசர்களுக்கும் மேலான அரசனாகப் பரமேசுவரன் இருப்பதை " விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை, மண்ணாளும்  மன்னவர்க்கும்  மாண்பாகி நின்றானை.. " என்கிறது திருவாசகம். அரசர்களுக்கு நாடு, கொடி , தரிக்கும்  மாலை , தேர் என்று அவரவர்களை அடையாளப்படுத்தும் விதமாக  அமைந்திருக்கும். ஆனால் ஈசுவரனோ தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்  எல்லாவற்றையும் அடியார்களுக்கே வழங்கும் தியாக வள்ளல். கடல் அமுதத்தை உண்ண  உரியவன் அவன் ஒருவனே  ஆனாலும்  அதனைத் தேவர்களுக்கு அளித்து  விட்டுத்  தான் கடல் நஞ்சை விரும்பி உண்டு  அண்டங்களைக்  காத்தான். ( "  ஆலம்  உண்டாய் அமுது உண்ணக் கடையவனே."  என்பார் மாணிக்க வாசகர்). அதே போன்று யானையிலும் குதிரையிலும் தேரிலும்  ஏறுவதைக் காட்டிலும்  ரிஷபத்தின் மீது  ஏறுவதை, 

" கடகரியும் பரி மாவும்  தேரும் உகந்து ஏறாதே 
இடபம் உகந்து ஏறியவா ..."  என்பன திருவாசக வரிகள். 

ஆனால்  அடியார்களை உய்விப்பதற்காகப்   பல வாகனங்களில் உற்சவ காலங்களில் ஈசன் பவனி வருவதுண்டு. அவற்றில் குதிரை, யானை, ரிஷபம் ஆகியன அடங்குவன. தேரில் எழுந்தருளித் திருவீதியில் பவனி வருவதைப் பல தலங்களின்  உற்சவ காலங்களில் தரிசிக்கிறோம். 

திருவாரூரில் நடைபெறும் ஆழித் தேர்  விழா, தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் உயரமான தேரான இதில் தியாகேசன் உலா வருவதைக் கண்டு அடியார்கள் பரவசத்துடன், " ஆரூரா,  தியாகேசா  "  என்று  கோஷமிடுவதை இன்றும் காணலாம். " திருவாரூத் தேரழகு " என்ற பழமொழி இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 1748 - ல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை சரஸ்வதி மகால் ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது. 

1926 - ம் ஆண்டு  நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தீப் பற்றியதால் தேர் முழுதும் எரிந்துவிட்டது. அதன் பிறகு 1928- ம்  ஆண்டில் புதுத்தேர் செய்விக்கப்பட்டு 1948 வரை ஓடியது. 1970 ம் ஆண்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பெற்று மீண்டும் ஓடியது. தேர் பழுதானதால் புதிய தேர் செய்யப்பெற்று 16.6.2016 அன்று தியாகேசப்பெருமான் சுந்தரருக்காக நிலத்தில் திருப்பாதங்கள் தோய நடந்து சென்ற திருவீதிகளில் ஆழித்தேர்  பவனி வந்தது. 

இதனை இழுக்க நான்கு வடங்கள்- ஒவ்வொன்றின் நீளம் சுமார்  425 அடி ஆகும். அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் முப்பது அடி. விமானம் வரை சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி. விமான உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி; ஆக அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரமானது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். 

ஆழித்தேர் பற்றிய குறிப்பு தேவாரத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அணிந்த இளம் பிறை ஒரு பிளவு போலக் காட்சி அளிக்கிறது. பிளவு என்பதைப் " போழ்" என்ற வார்த்தையால் அப்பர் பெருமான் குறிக்கையில், " போழொத்த வெண்மதியம் சூடி" என்கிறார். வெண்மையான வளையல்களை அணிந்த உமாதேவி அஞ்சும்படி, ஆவேசமாக வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு அந்த யானையின் தலைமீதுவீர நடனம் ஆடியதைப்   " பொலிந்திலங்கு வேழத்து உரி  போர்த்தான்  வெள்வளையாள் தான் வெருவ"  என்று கூறுவதால் அறியலாம். ஊழிக்காலத்துத் தீயைப் போன்றவன் பரமசிவன் என்பதை, "  ஊழித்தீ அன்னானை" என்ற வரிகள் காட்டுகின்றன. 

தியாகராஜப்பெருமானது தேரினை அழகிய உயர்ந்த குதிரைகள் இழுக்கின்றன. ஊழி முதல்வனாய் நின்ற பரம்பொருளை தேரில் எழுந்தருளும் காட்சியை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தநிலையில், " ஆழித்தேர்  வித்தகனை  நான் கண்டது  ஆரூரே  "  என்று பரவசப்படுகிறார் திருநாவுக்கரசர்.  அத்திருப்பாடலைக் கீழே காண்போம்:

போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு 
வேழத்து உரி  போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ 
ஊழித்தீ அன்னானை  ஓங்கு ஒலி மாப் பூண்டதோர் 
ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே. 

அப்பர் கண்ட அற்புதக் காட்சியை 1500 ஆண்டுகளுக்குப்பின்னர்  நாமும் காணும் பேறு பெற்றோம் எனும்போது " காண்பார் ஆர்  கண் நுதலாய்க் காட்டாக்காலே " என்ற வாக்கு நினைவுக்கு வர வேண்டும். தியாகேசனது திருவருள் இருந்தால் தான்  அக்காட்சி கிடைக்கும் என்ற உணர்வு அப்போது மேலோங்கும். 

Sunday, May 8, 2016

முத்தை வென்ற முறுவலாள்

பாகம் பெண் உருவாய் நின்ற கோலத்தைத் தனது தேவாரத் திருப்பதிகங்களில் ஞானசம்பந்தர் அனேக இடங்களில் போற்றிப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அம்பிகையை அழகிய நாமங்களால் குறிப்பது நாம் அறிந்து மகிழத்தக்கது. " மலைச் செல்வி  பிரியா மேனி"  உடைய எம்பெருமானது பிராட்டியை, "  வேயுறு  தோளி " ,  " பந்து சேர் விரலாள்" , " காவியம்கண் மடவாள்" , " வாள் நுதல் மான் விழி மங்கை" , " பெண்ணின் நல்லாள்" , " வண்டார் குழல்  அரிவை "  " அங்கயற் கண்ணி" போன்ற அருமையான  நாமங்களால் குறிப்பிடுகிறார் அம்பிகையால் சிவ ஞானப்  பால் அருளப்பெற்ற சீகாழிப் பிள்ளையார் .

ஞானப்பால் வழங்கிய அம்பிகையின் மதி முகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டதால் அவளது பவளத் திருவாய் மலர்ந்து தன்னையே அருட்கண்ணால் நோக்கிப்  புன்னகை செய்ததையும் எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பார் அல்லவா? அவ்வாறு புன்னகை செய்தபோது தோன்றிய அம்பிகையின் பற்களை முத்துக்களோடு உவமித்தால் ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது. அவளோ முழுதும் அழகிய பிராட்டி. அபிராமவல்லி என்றும் சர்வாங்க சுந்தரி என்றும் சொல்கிறோம் . அவள் திருவாய் மலர்ந்தாலோ  தேனைக் காட்டிலும் இனிமையான, மதுரமான சொற்கள் வெளிப்படுகின்றன. ( " தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்.." - சம். தேவா.சீகாழி)

ஞானப்பாலூட்டிய ஞானாம்பிகை முறுவலித்தால் அவளது பற்கள் முத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. ( முத்திலங்கு முறுவல் உமை.." -திருக்கருகாவூர்/ சம்.தேவா.) சுவாமியை முத்தாகவும்,மணியாகவும் ,வயிரத் தூணாகவும் , மாணிக்கமாகவும் போற்றுவதுண்டு.                    ( " முத்தினை மாமணி தன்னை வயிரத்தை..." -சுந். தேவா. திருவாரூர்).   சம்பந்தரும், " முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத் தொத்தினை..." என்று திரு வெண்ணியூரில் அருளியுள்ளார்.
ஆனால் இந்த நவமணிகளும் உமையொருபாகனால் தோற்றுவிக்கப்பட்டவை என்னும்போது அவற்றை இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ சமமான  உவமையாகக் கூறுவதைக் காட்டிலும்  அவற்றை விட உயர்ந்ததாகப் போற்ற  எண்ணிய திருஞானசம்பந்தப் பெருமான்,        " முத்தை வென்ற முறுவலாள் " என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

முத்தை அணிந்தவன் என்றோ அணிந்தவள் என்றோ  வருணனைகள் வருவதுண்டு. பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளிய போது சம்பந்தப்பெருமானைப் பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியும் அமைச்சரான குலச்சிறையாரும்  வரவேற்கிறார்கள்.  முத்தாலான மாலையும்,திருநீறும் சந்தனமும் அணிந்த மார்பினள் என்று அரசியாரைப் போற்றுவதை,

" முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன்  மார்பினில்  முயங்கப் பத்தியார்கின்ற  பாண்டிமாதேவி.."  எனப் பாடுவதால் அறியலாம்.

முத்தை வென்ற பற்களை உடைய உமாதேவியைப் பாகமாக் கொண்டவன் என்று பெருமானைத் தேவர்கள் தோத்திரம் செய்கிறார்கள். அவனோ யாவர்க்கும் அரியவன் . எனவே "அரியாய் " என்று போற்றுகிறார்கள். ஆனால்  பக்தர்களுக்கு எளியவனாகிய அப்பரம்பொருள் , பக்தி செய் அடியரைப்  பரம்பரத்து உய்ப்பவன். அவர்களால் பரம் எனப் பேணப் படுபவன். இப்படி இருக்கும்போது பொய்யான நூல்களைக் கொண்டு பெருமானைச் சமணர்களும் புத்தர்களும் தூற்றுவது விசித்திரமாக இருக்கிறது என்கிறார் சம்பந்தர். இதே கருத்தைத் திருவாவடுதுறையிலும், " புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்  பத்தர்கட்கு  அருள் செய்து பயின்றவனே " எனப் பாடுகிறார்.

விழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்திலுள்ள ஒரு பாடலின் கருத்தையே இங்கு சிந்திக்கத் திருவருள் கூட்டியது. இப்போது அப்பாடல் முழுதையும் காண்போம்:

"புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம் மொழி

நூல் பிடித்து அலர்  தூற்ற; நின்னடி
                                                        
பத்தர் பேண நின்ற பரமாய பான்மையது என்

முத்தை வென்ற முறுவலாள் உமை

பங்கன் என்று இமையோர் பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே "

என்பது ஆமாத்தூர் மேவிய முத்தாம்பிகை உடனாய அபிராமேசுவரர் மீது பாடியருளிய  அவ்வினிய பாடல்.   

Sunday, February 14, 2016

மாசு நீக்கும் மகா மகம்

மகாமகத் திருக்குளம் 
புண்ணிய தீர்த்தங்களிலும் ,நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. புண்ணிய மூர்த்தி,புண்ணியத் தலம் , புண்ணிய தீர்த்தம் ஆகிய மூன்றையும்  பிறவி ஈடேறுவதற்காக  தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள்  தீருவதற்காக  இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை ,யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.

..."  தாவி முதல் காவிரி நல்  யமுனை  கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ் குடந்தை .."
என்பது தேவாரம்.

பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப்  படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது  மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனுதினமும் இறைவனை எண்ணாதும்,மலரிட்டு வணங்காமலும் ஈசன் எங்கும் நிறைந்துள்ள அருமையை உணராமலும் இருந்து விட்டு கங்கை,காவிரி போன்ற நதிகளில் நீராடுவதால் ஏற்படப்போகும் பயன் தான் என்ன  என்று கேட்கிறார் திருநாவுக்கரசர்

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித் துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

இதனால்  எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசனை  நாள்தோறும் நினையாமலும்,வழிபடாமலும் நாட்களைக் கழித்து விட்டு, ஏனையோர் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காகப் புனித நீர் ஆடி விட்டு மீண்டும் பழையபடி தெய்வ பக்தி இல்லாமலே காலம் தள்ளுபவர்களுக்கு என்ன சொல்வது?

கும்பேசப்பெருமானைப் பாடும்போது நாவுக்கரசர் அருளிய நற்செய்தி ஒன்றை நாம் இங்கு நினைவு கொள்ளலாம்:

"சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் ..."
என்பதே அந்த நல்லுபதேசம்.

காசிக்குப் போனால் நமக்குப் பிடித்த காய் கறிகளில் ஒன்றை நீக்க ஆரம்பிக்கும்போது, குடந்தைக்கு மகா மக நீராடச் சென்றால் மன  அழுக்கை நீக்கி நற்குணங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் தீர்த்தமாடியது அர்த்தமுள்ளதாகிறது. அப்போதுதான் அந்த உண்மை இறை அருளால் புரிய வரும்.

Saturday, January 16, 2016

நம்மை ஆளும் பசுபதி

பசு என்ற வடமொழிச் சொல் பொதுச் சொல்லாக மனிதர்களையும் பிராணிகளையும் குறிப்பது. எல்லா உயிர்களையும் பசுக்களாகவும் சிவபெருமானைப் பதியாகவும் கூறுவது வழக்கம். ஆகவே," பசூனாம் பதிம்" என்று இறைவன் புகழப்படுகிறான்.  " அம்பிகாபதயே, உமாபதயே , பசுபதயே" என்று அவனைத் துதிக்கிறோம். அப்படி அப்பெயரிட்டு துதிக்கச் சொல்லித் தருவது வேதம். நான்கு வேதங்களுக்கும் நடுவிலுள்ள ஸ்ரீ ருத்ர மகாமந்திரத்தில் பஞ்சாக்ஷரம் வருகிறது. அதே அனுவாகத்தில் " நம: சங்காய ச பசுபதயே ச "  என்று வருகிறது. ஆகவேதான் சுவாமிக்குப் பல ஊர்களில் பசுபதீசுவரர் என்று பெயர் இருக்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக , ஆவூர், கரூர், திருக்கொண்டீசுவரம், பந்தநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிடலாம். கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பசுபதி கோயில் என்ற ஊரே இருக்கிறது.

பசு என்ற சொல் விசேஷமாகப் பசு மாட்டைக் குறிப்பதாக இருக்கிறது. இதற்கு வடமொழியில் கோ என்ற மற்றொரு சொல்லும் உண்டு. கோகுலம்,கோகுலம்,கோவிந்தன் ஆகியவை அதிலிருந்து வந்தவை தான். அதை அப்படியே தாங்கி நிற்கும் ஊர்ப் பெயர்களும் உண்டு. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவந்தபுத்தூரில் உள்ள சிவாலயம், தேவாரத்தில்    ,     " கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூர் " என்றே அழைக்கப்படுகிறது. தூய தமிழில் பசுவை " ஆ" என்ற ஒரே எழுத்து குறித்து விடும். வடமொழியில் கோ என்ற ஒரே  எழுத்து குறிப்பது போலத் தமிழிலும் ஆ என்ற ஒரே எழுத்து பசுவைக் குறிக்கும். ஆன்  என்ற ஈரேழுத்தாலும் குறிப்பர். கரூர் சிவாலயம் ஆனிலை என்றும் விழுப்புரத்தருகில் உள்ள சிவாலயம் ஆமாத்தூர் என்றும் வழங்கப்படுகின்றன. பசுக்கூட்டத்தை  " ஆக்கள் " என்றும் ஆநிரைகள் என்றும் கூறுவர்.. பசுக்களிளிருந்து பெருமானுக்கு அபிஷேகத் திரவியங்களாக ஆன்  ஐந்தும்  கிடைக்கின்றன.

அப்பர் தேவாரத்தில் பசுபதித் திருவிருத்தம் என்ற ஒரு பதிகமே இருக்கிறது. இதில் பாடல் தோறும் மகுடமாக "எம்மை ஆளும் பசுபதியே " என்று அமைத்துப் பாடி இருக்கிறார் அவர். அதில் வரும் ஒவ்வொரு பாடலும் பிறவித் துன்பத்திலிருந்து காக்கும்படிப் பெருமானை வேண்டுவதாக அமைவன. பசுக்களுக்கெல்லாம் பதியான பரமேசுவரனிடம் பசுபதியே என்று அவனைப் பெயரிட்டு அழைப்பதால் புகலிடம் வேறு எவரும் இல்லை என்பது உட்குறிப்பு. பிறரைத் தஞ்சம் என அடையாமல் உன் பாதமே மனம் பாவித்த அடியேனை உய்யக்கொள்வாய் என்பது இப்பதிகத்தின் திரண்ட கருத்து.

கடல் நஞ்சு எல்லா உலகங்களையும் அழிக்குமாறு வெளிப்பட்டபோது தஞ்சமென அடைந்த தேவர்களையும் மற்று எல்லா உயிர்களையும் கலங்காமல் காத்தருளி அதனை உண்டருளி நீலகண்டன் ஆன முழுமுதற்கடவுள் தான் தஞ்சம் என அடையத் தக்கவன் என்பதால், அனைவரும் உன் பாதத்தை இறைஞ்சுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களது பந்த பாசங்களை அகற்றிப்  பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையைத்  தருவாயாக என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.

" ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்  "  என்பன அவ்வரிகள்.

கஜ சம்ஹாரர் 
தவவலிமையால் இறைவனைத் துதியாமல் தாங்களே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற இறுமாப்புடன்  இருந்த தாருகாவத்து முனிவர்களது அறியாமையை அகற்ற வேண்டி பிக்ஷாடனக்  கோலம் பூண்டு எழுந்தருளிய  பரமன் மீது அம்முநிவர்கள் ஆபிசார வேள்வி மூலம் எழுந்த யானையை ஏவினர். தனது கைச்சூலத்தை  அந்த யானையின் மத்தகத்தின் மீது பெருமான் செலுத்தியவுடன் தன்னை ஏவிய முனிவர்கள் மீதே அந்த யானை சீறிப் பாய ஆரம்பித்தது. வேறு புகலிடம் இல்லாததால் முனிவர்கள் பெருமானையே தஞ்சம் என அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த இறைவன் , வானளாவிய மலை போல எழுந்த அந்த யானையை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டான். யானையால் சற்று மறைக்கப்பட்டபோது எல்லா உலகங்களும் இருள் சூழ்ந்தன. காரணம் சூரிய சந்திரர்கள் பெருமானது திருக்கண்களாக விளங்குவதுதான். அப்போது பெருமானைக் காணாமையால் உமாதேவியே அஞ்சினாளாம். அதனைக் கண்டவுடன்  புன்னகைத்தானாம் பரமன்.          " சிரித்து அருள் செய்தார்" என்பது தேவாரம். அதன்  பின்னர் அம்முநிவர்களுக்குக் க்ருத்திவாசனான ஈசுவரன் ஞானோபதேசம் செய்தான். இவ்வாறு அடைக்கலம் என்று அடைந்தோரைக் காக்கும் காரணம் பற்றியே அப்பரும் மேற்கண்டவாறு விண்ணப்பித்தார்.

" அண்டமே அணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே"

" பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து" என்றது  மலை போல் திரண்டு வந்த யானை ஓலமிட்டுப் பிளிற அதனைப்  பிளந்து என்று  பொருள் படும்.
எம்மை என்றதால் நம் எல்லோரையும் பசுபதி ஒருவனே ஆளுபவன் என்பது தெளிவாகிறது.

சிவ நாமங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் நீலகண்டன்,சந்திரசேகரன், கங்காதரன்,பசுபதி போன்றவை தனித்தன்மை வாய்ந்தவை சிவபரத்துவத்தை விளக்குபவை. நிகரற்றவனாகவும் மிக்கார் எவரும் இல்லாதவனாகவும் இறைவன் விளங்குவதைப் பறை சாற்றுபவை. இந்த   நாமங்களால் துதிப்போரை என்றென்றும்  காப்பவை. ஆகவே இறைவனைச் சரணடைந்தபோது அப்பரும் பசுபதியே என்று பெருமானைப் பாடல் தோறும் அழைக்கிறார்.

 " ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்

பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே.

Monday, January 11, 2016

துறவி வைத்தார்

நல்லூரில் அப்பர் திருவடி தீக்ஷை பெறுதல் 
" ஊனாகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வும் ஆகிப் பிற அனைத்தும் நீயாய் நின்றாய் "  என்று சிவபரம் பொருளைப் பாடுகிறார் திருநாவுக்கரசு நாயனார். அவ்வாறு " ஊன் கருவின் உள் நின்ற சோதி " யாகத் திகழ்பவன் இறைவன். இப்படிப் புலால் உடம்பில் புகுந்து நின்று கருவைத் திருத்திப் பின்னர் நல்லனவும் தீயனவும் காட்டுபவனாகவும் பெருமான் விளங்குகிறான். உயிர்களைப் படைத்து அவைகளின் வினைப்பயனுக்கேற்ப அருள் செய்து நிறைவாக முத்தியும் வழங்குகிறான்.

பிறவிகள் ஏழு என்பர். " ஏழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் " என்பது அப்பர் வாக்கு. பிறப்பே ஒரு பிணி போன்றது. உலகியல் பந்தத்தாலும் ஆசைகளாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்வதால் அதைத் தீராப் பிணி  என்று கூட சொல்லலாம். இதனைப் " பவ ரோகம் " என்று வடமொழியில் கூறுவார். அந்த நோய்க்கு மருத்துவன் ஒருவன் தான். அவன் தான் வைத்தியர்களுக்கெல்லாம் பிரதம வைத்திய நாதனாகிய பரமேசுவரன்.  அவனைச் சரண் அடைந்துவிட்டால் நம்மைப் பாழ் நரகக் குழியில் விழ விடமாட்டான். சிவலோகத்தில் இருத்துவான் என்கிறார் அப்பர் பெருமான்.

அவர் நல்லூரில் அருளிய திருத்தாண்டகத்தில் ,
" உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் "  என ஒரு பாடல் துவங்குகிறது. சிவபிரான்  உயிர்களைப் படைப்பதோடு நின்றுவிடாமல் பரம கருணையுடன் அவை கடைத்தேறும் வழிகளையும் அமைத்துத் தந்தார் என்கிறார். வழிகள் அநேகம் இருந்தாலும் மீண்டு வாரா வழி அருள்பவன்  என்றபடி மறுபடியும் உலகில் பிறவாமல் நம்மை இட்டுச் செல்லும் வழியே கதி எனப்படும். நமக்கு ஒரே கதி சிவகதி என்பதால் இவ்விதம் கூறினார்.              " உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் "  என்பது அவரது வாக்கு. கதி என்று கூறாமல் கதிகள் என்று பன்மையில் கூறினாரே என ஐயம் எழலாம். சிவகதி என்ற ஒரே கதியை அடையப் பல மார்க்கங்களை அமைத்துத் தந்தார் என்பதே அதன் உட்பொருள். தேவர்களையும் தெய்வ நான் மறைகளையும் தோற்றுவித்து வேத வேள்விகளால்    தேவர்களையும் தேவ  நாயகனாகிய தன்னையும் ஆராதிப்பதன் மூலம் சிவ கதி அடையச் செய்தார்.  
  "மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார் " என்பதால் தேவர்களுக்கும் அறிய மாட்டாத வேதங்கள் என்பது பொருள்  படும்.
தனது பிறைகள் தக்ஷ சாபத்தினால் தேய்ந்து உடற்பிணியோடு குன்றிய சந்திரனை எல்லாத் தேவர்களும் கைவிட்ட போது கயிலாய நாதனே அவனுக்கு அடைக்கலம் தந்து தனது சடை மேல் ஏற்று சந்திர சேகரன் ஆனான். எல்லா உயிர்களும் தஞ்சம் என அடைய வேண்டுவதும் போற்ற வேண்டியதும்,தியானிக்க வேண்டியதும் சிவபெருமான் ஒருவனே என்பது இதனால் அறியப்படும். "குறை மதியம் வளர வைத்தார் " என்ற அழகான வரிகள் இந்த அருட் செயலைப் புகழ்கின்றன.

காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தால் ஒழிய பிறவியிலிருந்து விடுதலை பெற முடியாது. காலகாலனாகவும், காம நாசனாகவும் பெருமானே திகழ்கிறான். கோபத்தின் அடையாளமாகத் திகழ்ந்த துருவாச முனிவரும் தனது கோபம் நீங்கும்படித் திருக்களர் என்ற      தலத்தில் சிவ பூஜை செய்ததாகப் புராணம் கூறும். எனவே இக்குற்றங்கள் நீங்கும் வழியையும்  அப்பரமனே அமைத்துத் தருகிறான் என்கிறார் திருநாவுக்கரசர். "செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்" என்பன அவ்வரிகள்.
" துறவி வைத்தார் " என்று அவர் கூறுவது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது துறவறம் என்ற நெறியை அமைத்துத் தந்தார் என்று தோன்றினாலும். அவ்வழிக்கான நன்நெறிகளையும் அமைத்துத் தந்தார் என்றே கொள்ளவேண்டும். விபூதி- ருத்திராக்ஷம் போன்ற  புறச் சாதனங்களை அமைத்துத் தந்ததோடல்லாமல் தானே அவற்றை  ஏற்றது தன்னிகரற்ற சிறப்பாகும். " நீறு தாங்கிய திருநுதலான்" என்று இதைத் தேவாரம் குறிப்பிடுகிறது. துறவிக்கு புறச் சாதனமும் முக்கியம். ருத்ராக்ஷம் அணியாத துறவி சைவராகவோ அல்லது அத்வைதியாகவோ இருந்து என்ன  பயன்?  உலகிற்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இவற்றை ஒருபோதும் கை விடலாகாது. புற வேடத்தோடு நின்றுவிடாமல் மேற்கூறியபடி காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தவராகத் துறவி விளங்கவேண்டும். 

தவம் செய்தவர்கள் சென்று அடையக்கூடிய தனது திருவடிகளை அப்பர் பெருமானது முடியில் நல்லூர்ப் பெருமான் வைத்தருளினார்  என்பதால் " நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே "  என்று அத்தாண்டகப் பாடல் நிறைவு பெறுகிறது. முழுப் பாடலையும் மீண்டும் தருகிறோம்:

உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்
உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார்
குறை மதியம் வளர வைத்தார்
செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்
துறவி வைத்தார்
 நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
---- திருநாவுக்கரசர் தேவாரம் ( திருநல்லூர்* )

{* திருநல்லூர் என்ற தலம் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியிலுள்ள சுந்தர பெருமாள் கோயில் என்ற ஊருக்கு அண்மையில் உள்ளது.    அமர்நீதி நாயனார் அருள் பெற்ற தலம். }