Friday, May 12, 2017

சொக்கர் துணை

உலகத்தில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் துணை தேவைப்படுகிறது.   ஆயுட்காலம் முழுவதும் வெவ்வேறு  துணையைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கிறது. ஆனால் எந்தத் துணையும் நிரந்தரமாக இருப்பதில்லை. குறுகிய காலத்திற்குள் விலகிக் கொள்வதால் செயல்பாடுகள் யாவும் சுய நலத்தை மையப்படுத்தியே அமைந்து விடுகின்றன. இறைவன் மட்டுமே நிரந்தரத் துணையாக நிற்பவன். தோன்றாத் துணையாகக் காப்பவன். அதனால் தான் சிவபெருமானைத் " தனித்துணை" என்று குறிப்பிடுகிறார் மாணிக்க வாசகர். " என் துணைவனே" என்று பெருமானை அருளாளர்கள் அழைக்கிறார்கள்.

இன்பம் வரும்போது  எவரும் துணையை எண்ணிப்பார்ப்பதில்லை. தனது முயற்சியும் அயராத உழைப்புமே இன்பத்திற்குக் காரணம் என்று கூறிக் கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் துன்பம் வந்து தொடந்தால் , கூட இருப்பவர்களும் விலகிக் கொள்வர்.  இறைவன் மட்டுமே அஞ்சேல் என்று அபயமளிப்பான் என்பதால், " கை தர வல்ல கடவுள்" என்பார் மணி வாசகர். 

தேவர்கள் சூர பதுமாதிகளிடம் துன்பப்பட்ட போதும், ஹிரண்யனை  வதம் செய்த நரசிம்மர்  உக்கிரத்தோடு எல்லா உலகங்களையும் கலக்கியபோதும் , பாற்கடலில் எழுந்த நஞ்சு அனைத்து உயிர்களையும் அழிக்க வந்தபோதும்  சிவபிரான் அனைவருக்கும் அபயம் தந்து ,கலங்காமல் காத்த புராண வரலாறுகள் உயிர்த் துணையாக இறைவன் நிற்பதை அறிவிக்கின்றன. 
                        
" கலங்கினேன், கண்ணின் நீரை மாற்றி " என்று இறைவனது பெருங்கருணை , திருவாசகத்தில் பேசப்படுகிறது. பிரளயம் வந்தபோதும் காக்கும் கருணை பற்றியே, பெருமானுக்குப் " பிரளய காலேசுவரர்" என்று பெண்ணாகடத்தில் திருநாமம் வழங்கப்படுகிறது. 

மூன்று ஆண்டில் சிவஞானம் பெற்றுத் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் , பாண்டியனும் சமண் வசமாகிய செய்தியை  பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியார் அனுப்பிய ஓலை மூலம் அறிந்து, அவரது அழைப்பை ஏற்றுப்  பாண்டியநாட்டிற்குச் சென்றார். அவரால் தங்கள் சமயத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சிய சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தார்கள். அதனைக் கண்ட ஞான சம்பந்தர், ஆலவாய்ப் பெருமான் மீது பதிகம் பாடினார். அதில், அடியார்களுக்கு இன்னல் வராமல் காக்க வேண்டியவராக, " அஞ்சல் என்று அருள் செய் "  என்று பாடினார். 

இது போன்ற குற்றங்கள் நேர்ந்தால் நாட்டை ஆளும் அரசனுக்கும் பொறுப்பு உண்டு. மேலும் அவனோ,  சமண் குருமார்களிடம் சார்ந்திருந்தான். அவனும் தண்டிக்கப்படவேண்டியவனே என்பதால், தீயானது பாண்டியனைப் பற்றட்டும் என்றார் காழிப் பிள்ளையார். அதே நேரத்தில் தீயானது பாண்டியனுக்கு ஆபத்து விளைவித்து விட்டால், சைவம் தழைக்க வேண்டித் தன்னை அழைத்த மங்கையர்க்கரசிக்குத தாங்க முடியாத துயரம் ஏற்பட்டு விடுமே. ஆகவே, " பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே " என்று பாடி, தீயானது பாண்டியனை மெல்லப்பற்றட்டும் என்றார். அப்பாடலில், ஆலவாய் ஈசன்  தன்னை அஞ்சல் என்று அருள் செய்ய வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.  

அஞ்சல் என்று அருள வேண்டிய பெருமான் அவ்வாறு அருளாதொழிந்தால் அஞ்சேல் என்பார் வேறு யார் உளர்? " என்னை அஞ்சல் என்று அருளாய், யார் எனக்கு உறவு" என்பார் சுந்தரர். மனம் துன்பப்படும்போதும், அடியார்களுக்குப் பலவிதமாகப் பெருமான் கூட இருந்து இன்றளவும் அருள் செய்கிறான். அதுவே, " யாம் இருக்கப் பயம் ஏன் " என்பதுபோல ஆறுதல் தருகிறது. இதனை அனுபவ வாயிலாக அடியார்கள் உணர்வார்கள். 

மனச் சோர்வுடன், திருமுறைப் புத்தகத்தை எடுத்து, நடுவே ஒரு பக்கத்தைப் புரட்டினால் , திருவேதிகுடிப் பெருமான் மீது திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தில் வரும், " சொக்கர் துணை" என்று துவங்கும் பாடல் வந்தவுடன் மெய் சிலிர்க்கிறது. மதுரையம்பதியில் புண்ணிய மூர்த்தியாகப்  பெருந்தேவியுடன் வீற்றிருக்கும்  சோமசுந்தரக் கடவுளுக்கு அழகிய தமிழில் சொக்கன் என்ற பெயர் .அவன் தன்னிகரில்லாத பேரழகனாக விளங்குவதால் அவ்வாறு வழங்கப்பட்டது.. திக்கற்றவர்களுக்குச் சொக்கன் துணை அல்லவா?