Saturday, December 29, 2018

ஈசன் அடியார்க்கு அரியது இல்லை

பரமேசுவரனுக்கு வாகனமாக அமைவது தூய வெள்ளை நிறக் காளை. இதற்கு ஏறு  என்றும் மற்றொரு பெயர் உண்டு. இறைவன் ஏறுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதும் பொருத்தமே. " தூ வெள்ளை ஏற்றான் தன்னை " என்பது அப்பர் தேவாரம். அதனை  விடை என்ற வேறு ஒரு சொல்லும் குறிக்கும். "  விடையின் மேல் வருவானை " என்பது சுந்தரர் வாக்கு.  இவ்வாறு ரிஷபாரூடனாக வரும் பரம்பொருளை ," விடையவன் " என்றும் வழங்குவார்கள். தூய வெள்ளை நிற விடையை வாகனமாகக் கொண்ட இறையவனை நம் மனத்தில் இருத்த வேண்டும் என்றால் அதற்கேற்றபடி நமது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். ஏனெனில், அம்மனமே பெருமானது கோயிலாக ஆகி விடுவதால் தான்.  அப்படிப்பட்ட தொண்டர்களது தூய மனத்தையே இறைவன் விரும்பி ஏற்கிறான். வஞ்சம் நிறைந்த  நெஞ்சத்தைப் புறக்கணிக்கிறான். எனவேதான், திருநாவுக்கரசர், " விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் " என்று நெகிழ்ந்து பாடுகிறார்.

உள்ளத்தைப் பெருங்கோயிலாக அர்ப்பணித்துவிட்ட அடியார்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. துன்பங்கள் அவர்களைப பாதிப்பதில்லை. பார்க்கப்போனால், உண்மை அடியார்கள், இன்பத்தையும்,துன்பத்தையும் ஒன்றாகவே நோக்கும் பக்குவம் பெற்று விடுகின்றனர். துன்பங்களுக்கெல்லாம் காரணமான பாவ வினைகளிலிருந்து விடுதலை பெற்று விடுகின்றனர். " இன்றோர் இடையூறு  எனக்கு உண்டோ " என்பார் மாணிக்க வாசகர். ஆகவே, உள்ளத் துயரங்களும், உடற் பிணி காரணமாக வரும் துக்கங்களும் அவர்களைப் பாதிப்பதில்லை. இதைத்தான் ஞான சம்பந்தரும்,   " அச்சம் இலர், பாவம் இலர்,  கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு  நோயும் இலர் " என்று பாடுகின்றார். இதே கருத்தை, அப்பர் பெருமானும், " இனி நமக்கு இங்கு அடையா அவலம்; அரு வினைகள் சாரா "  என அருளிச் செய்கிறார். 

இனி  , அடியார்கள்  எவ்வித அச்சத்தாலும் துன்புறுவதில்லை என்பதை சம்பந்தப் பெருமான்        " அச்சம் இலர் " என்றார். அச்சமாவது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும், எம பயம் என்பது தாங்க முடியாதது மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாததும் கூட. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இறுதிக் கட்டத்தில் அதனை சந்திக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் சிவனடியார்களைக் காலன் அணுக மாட்டான் . அவனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எனவே ,                               " நமனை அஞ்சோம் " என்றார் நாவுக்கரசர் . 

தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை ஒத்தவர்கள் வாழும் அடியார்கள் நிறைந்திருக்கும் திருப்பாதிரிப்புலியூரில்  தோன்றாத் துணையாக அந்த அடியார்களை எப்பொழுதும் காக்கும்     பேரருள் இருக்கும் போது அந்த ஈசனையே கதி எனக் கொண்ட அடியார்க்கு அடியானாக இருப்பவர்களுக்கு அரிய செயல் எதுவும் இல்லை. எல்லாமே எளிதாக கை கூடும் என்பதாம். இவ்வாறு அடியார்க்கு அடியானாக விளங்குபவர்க்கு எதுவும் எளிதே கை கூடுவதை, 

" புடையார் கமலத்து அயன் போல்பவர்  பாதிரிப்புலியூர்  
உடையான் அடியார் அடிஅடியோங்கட்கு அரியது உண்டே ? "  என்பார் இப்பாடலில். 

இந்த அற்புதமான பாடல் முழுவதுமாக இப்போது அனுபவிப்போம் :

" விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்  இனி நமக்கு 
                                                                                                                                        இங்கு 

அடையா அவலம்; அரு வினை சாரா; நமனை அஞ்சோம் 

புடையார் கமலத்து அயன் போல்பவர்  பாதிரிப்புலியூர் 

உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே ?  "  


தனது அடியார்களுக்கு எல்லாவற்றையும் முன்னவனே முன் நின்று முடித்து வைப்பான் என்பது கருத்து. 

தோன்றாத்துணையே துணை என்பதை  அப்போது நன்றாகவே உணர முடியும். 

Friday, November 23, 2018

காழிநாதன் கழலிணைகள்

மனம் இரங்காவிட்டாலும்,உருகாவிட்டாலும் அதைக் கல் மனம் என்றும், இரும்பு மனம் என்றும் சொல்வதுண்டு/ ( இரும்பு மனத்தேனை " என்று தன்னை மாணிக்கவாசகப்பெருமான் குறிப்பது காண்க) அத்தகைய மனத்தில் ஈரம் இல்லை என்றால் அன்பு என்னும் பயிர் எவ்வாறு கிளைத்து எழ முடியும் ? அன்புதானே கடவுளிடம் நம்மைச் செலுத்தும் முதல் படி ! அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்குச் செல்வதோ,அதனை வலம் வருவதோ, இறைவனை வழிபட்டு அர்ச்சனைகள் செய்வதோ எப்படி சாத்தியமாகும்? ஒருவேளை அடியார்களுக்குப் பணிவிடை செய்திருந்தாலும் அன்பு பிறக்க வழி உண்டு. அந்தத் திசைக்கே செல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பொய்யும்,சூதும் ,வஞ்சகமும் நிறைந்த உள்ளத்தைத் தூய்மை செய்வது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

நம்பியாண்டார் நம்பிகள் சொல்வதை இப்போது காண்போம்.  அன்பும், வழிபாடும், அர்ச்சனையும், வழிபாடும்,அர்ச்சனையும் செய்யாமலும், அடியாரிணக்கமில்லாமலும் பொய்ம்மையே பெருக்கி வாழும் இரும்பு மனத்தவனுக்குக்  கிடைத்த பேரருளை எப்படி வியப்பது என்றே தெரியவில்லை. அதுவும் எந்த விதமான முயற்சியும் செய்யாமல் வீணே காலத்தைக் கழிப்பேனுக்கு இரங்கித் தானே வந்து தயையைக் காட்டியருளிய அற்புதம் தான் என்னே  ?  அத்தகைய அற்புதம் எது தெரியுமா ?  சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தரின் திருவடிகளே பிறவி என்னும் பொல்லாப் பெருங்கடலில் சிக்கிய அடியேனைக் காத்துக் கரைக்கே சேர்க்கவல்ல தோணி ஆயிற்று என்கிறார் அடிகள்.

ஒப்பற்ற குருநாதன் கிடைத்து விட்டால் , பொய்யனும் உய்யலாம் என்பதே இதன் கருத்து. உருகா மனமாகிய கல்லைக் கனிவித்துக் கழலடி காட்டுபவன் அக்குருநாதன் அல்லவா? அப்பெருந்தகை அவதரித்தருளிய ஊரே பிறர்க்கு வாரி வழங்கும் கரும்பு வயல்களும், நெல் வயல்களும் நிறைந்த ஊர். அம்மண்ணுக்கான பண்பு சம்பந்தப்பெருமானின் பண்ணுக்கு இருப்பதில் வியப்பேதும் இல்லை. இப்போது நம்பிகள் அருளிய அப்பாடலைக் காண்போம்:

அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை ; அரன் நெறியே  
                                                                             
 விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம்; 

                                                                                                           பொய்க்கமைந்த                                                                  
இரும்பன உள்ளத்தினேற்கு எங்ஙனே வந்து நேர் பட்டதால்?    

கரும்பன நீள் வயல் சூழ் காழி நாதன் கழலடியே. 

நம்பிகள் அருளிய இப்பாடல் அவரருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் { பதினோராம் திருமுறையில் }உள்ளது. 

Thursday, October 4, 2018

அஞ்சுவது யாதொன்றும் இல்லை

சாணக்கியர் காலம் தொட்டே கல்வி கேள்விகளில் நிபுணர்களும் துறவியர்களும் அரசாங்கத்தைச் சார்ந்து வாழவில்லை. அரசாங்கமே அவர்களை நாடி அவர்களது அறிவுரைகளின்படி அரசாட்சி செய்தது.  வேதாரண்யத்தில் தங்கியிருந்த திருஞான சம்பந்தரை நாடிச் சென்று பாண்டியநாட்டிற்கு வருகை தந்து சைவத்தை மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டி அழைப்பு விடுத்தார் பாண்டிமாதேவி. சமணத்  துறவியர் பேச்சைக் கேட்டுப் பலவகையாலும் ராஜ தண்டனைக்குத்  திருநாவுக்கரசரை ஆளாக்கிய  பல்லவ மன்னன், தனது பிழைக்கு வருந்தி மீண்டும் சைவனாகிக் குணபர வீசுவரம் என்ற சிவாலயத்தை எழுப்பினான். பாண்டி நாட்டு யாத்திரை செய்த சுந்தரர் பெருமானுடன் மூவேந்தர்களும் கூடவே நின்று திருப்பரங்குன்றத்தைத் தரிசித்தனர். எனவே தவத்தாலும் கல்வி அறிவாலும் மேம்பட்டவர்கள் அரசனிடம் சென்று புகழ்ந்து பேசுவதையோ, பாடுவதையோ,பாராட்டுவதையோ  செய்வதில்லை. செல்வந்தரை நாடிப் " பாரியே  என்று  பாடினும் "  கொடுப்பார் இல்லாததால் இறைவனை மட்டுமே பாடியதோடு  மற்றவர்களையும் அவ்வணமே இருக்குமாறு அருளாளர்கள் உபதேசித்தனர். 

தற்காலத்தில் யாது காரணத்தாலோ நரர்களைப் புகழ்ந்து பேசுவதும் அவர்கள் மீது கவிதை எழுதுவதும் வழக்கமாகி விட்டது.  மொழிக்கும், மக்களுக்கும், சமயத்திற்கும் , தினை  அளவு உதவியைத் தக்க நேரத்தில் செய்தாலும் நன்றி பாராட்டத்தான் வேண்டும். சந்தேகமே இல்லை. அதற்காக சமயத்திற்கோ,மொழிக்கோ சொல்லும்படியாக எதையும் செய்யாதவர்களையும் , இன்னும் சொல்லப்போனால், அவற்றிற்குப் பாதகம் விளைவித்தவர்களையும் புகழ்ந்து கவிதை பாடுவதை என்னென்பது ? அதிலும் இக்கவிதைகள் திருமடங்களின் சஞ்சிகைகளில் வெளிவருவதற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? 

ஒருக்கால் பதவியாலும், பண பலத்தாலும் பிரபலம் ஆனவர்களைப் புகழ்ந்தால் பிற்காலத்தில் ஏதோ வகையில் பயன் படலாம் என்றோ அல்லது அவர்களால் தீங்கு வந்து விடக் கூடாது என்ற பயத்தாலும் இவ்வாறு செயற்கையாகப் புகழக் கூடும்.  சமயம் அரசாங்கத்தை நாடுவதால் இவ்விதமே நிகழும் . இதில் ஐயமில்லை. அரசாங்கம் சமயத்தை நாடுவதானால், சமயத் தலைவர்கள் தவ வலிமையையும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக இருத்தல் அவசியம். ஓடும் செம்பொன்னும் ஒன்றே என நோக்குபவர்களாக இருக்க வேண்டும். விலை மதிப்பற்ற மணிகள் தனக்கு முன்னே கிடந்தாலும் அப்பர் பெருமான் அவற்றை விரும்பாது அகழியில் எறிந்தார் அல்லவா? அதுபோன்ற மாசற்ற துறவிகளைத் தேடி அரசாங்கம் தானாகவே  வரும். துறவிகளும் அவர்களது திருமடமும் அரசுக்குப் பணிய வேண்டிய அவசியம் அப்போது ஏற்படாது.

சங்க வெண் குழை அணிந்த சங்கரனுக்கு மீளா ஆட்பட்டு அவனது சேவடிகளை அபயமாக அடைந்தவர்கள் வேறு எவருக்கும் குடியாக மாட்டார்கள். துன்பம் என்பதை அறிய மாட்டார்கள். அவர்களுக்கு எந்நாளும் இன்பமே. பிணி என்பதையோ நரக வேதனையையோ  அறிய மாட்டார்கள். பிறரைப் பணிய மாட்டார்கள். ( " மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே " என்றார் சுந்தரரும். ) இக் கருத்தை நமக்கு உபதேசிக்கிறார் திருநாவுக்கரசர். 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் 
நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம் 
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோமல்லோம் 
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை 
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான சங்கரன் 
நற் சங்க வெண் குழையோர் காதிற் 
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் 
கொய் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே " 

Wednesday, September 12, 2018

அன்னையும் அத்தனும் ஆவான்

யார் வரைந்த  ஓவியமோ தெரியவில்லை. தாயின்  கண்களில் எழுகின்ற  கருணை வெள்ளம் ,  தான் ஈன்றெடுத்த மகளின் மீது பாய்வதை அற்புதமாகக்  காட்டியிருந்தார் அந்த ஓவியர். அக்குழந்தையும் வைத்த கண் வாங்காமல் அன்னையை நோக்குவதாக அச் சித்திரம் உருவாகியிருந்தது. தான் ஈன்ற முட்டைகளைத் தாய் மீன் நினைத்த அளவில் அவை காக்கப்பட்டு, மீன்குஞ்சுகளாகி நீந்தத்துவங்கிப் பசியாறியதும் தாமே இரை தேடத் துவங்கும் எனப்  பெரியோர். கூறுவர். தற்காலச் சூழ்நிலையில், அன்னையை மறக்கும் தனயர்கள் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் தனயரை மறக்கும் தாய்மார்கள் இருப்பதும் உண்டு. தாய்ப்பாசத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பற்றி எத்தனை அன்னையர்கள் கவலைப் படப் போகிறார்கள் ?  அதனால் தான் உலகிற்கே அம்மையப்பராக விளங்கும் இறைவனைப் பாடும்போது,  "  தாயும் நீயே, தந்தை நீயே " என்கிறார் , அன்னையிடம் சிவஞான அமுதம் உண்ட ஞானசம்பந்தர். 


சீர்காழித் திருக்குளக் கரைக்குத் தந்தையுடன் வந்த அச் சிறு குழந்தை, சிறிது நேரத்தில் தந்தையார் நீரில் மூழ்கி அகமர்ஷன ஜபம் செய்து கொண்டிருந்தபோது. பசி மேலிட்டு அழத் துவங்கினார். அப்போது இறைவனது அருட்சக்தியாகிய சிவசக்தி அங்கு சென்று அக்குழந்தைக்குப் பால் தந்தவுடன் அப்பாலகனுக்குப் பசி தீர்ந்தது. பின்னர் கரை எறிய தந்தை,  "யார் தந்த பாலை உண்டாய் " என்று சினந்து கேட்க, அம்மையப்பர்களது அருட்கோலத்தை அடையாளங்களுடன் அவருக்குக் காட்டித் " தோடுடைய செவியன் " என்று தேவாரப் பதிகம் பாடினார் என்ற வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும். அவ்வரலாற்றை சேக்கிழார் வாயிலாகக் காண்பதே பேரின்பம் தருவது. மூல நூலைப் படித்தால் இதன் அருமை பெருமைகள் விளங்கும். 

மேற்கண்ட நிகழ்ச்சியை விளக்கும்  அற்புதமான  பாடல்கள் அவை. இறைவனது பேரருளையும் இறைவியின் கருணையையும் ஒருசேர விளக்கும் அப்பாடல்களில் எத்தனை முறை    "அருள் " என்ற சொல் கையாளப் பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்:


அம்பிகைக்குப் பிள்ளையாரைக் கண்டவுடன் திருவுள்ளத்தில் அருட் கருணை எழுகிறது.   வேதங்களையும் ஏழுலகங்களையும் ஈன்றருளி அவ்வனைத்திற்கும் காரணமாய வடிவுடை நாயகி, சிவபெருமான் தம்மை அப்பாலகனுக்குத் திருமுலைப்பாலைப்  பொற்கிண்ணத்தில்  அளித்தருளுமாறு கூறியருளியவுடன், இமயவல்லியாகிய தேவியானவள், அச் சிறுவனிடம் சென்று பாலமுதைக் கறந்தருளினாள் என்கிறார் சேக்கிழார் பெருமான்

ஆரணமும் உலகேழும் ஈன்று அருளி அனைத்திற்கும்                                                                                                         
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான                                                                                                                     
  சீரணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து                                                                                                           
வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 

எப்படிப்பட்ட பாலமுது அது  தெரியுமா?  எண்ணுவதற்கே எட்டாத சிவஞானம் கலந்த பால் என்பதால், அதனை, " எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் " என்று சிறப்பிக்கிறார் தெய்வச் சேக்கிழார். சிவஞானத்தைப் பாலில் குழைத்து அருளினாளாம் சிவானந்த வல்லியாகிய ஞானாம்பிகை. இதனை உண்பாயாக என்று அப் பொற்கிண்ணத்தைக்  குழந்தைக்குத் தரும்போது அம்பிகையை வைத்தகண் வாங்காமல் பார்த்ததாம் அக்குழந்தை. 

தன்னை எதிர் நோக்கிய அக்குழந்தையின் கண்களில் பசியால் எழுந்த கண்ணீரைத் துடைத்தருளினாள் அக்கருணாம்பிகை . அக்குழந்தையின் கையில் பொற் கிண்ணத்தை அளித்தவுடன் பேரருள் பெற்ற பாலகனது அழுகை தீர்ந்தது. இவ்வாறு அங்கணனாகிய சிவபெருமான் அருள் புரிந்தார் என்று பக்திச் சுவை சொட்டுமாறு நமக்கு வழங்கி அருளுவார் சேக்கிழார் பெருமான் 

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி                                                                                                
 உண்ணடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்                                                                                                         
 கண்மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற் கிண்ணம் அளித்து                                                                                       
 அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் செய்தார்

இவ்வாறு தந்தை அருளலும் தாய் விரைந்து சென்று தாமும் அருளுவதைக் காணும் போது   " அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்  " என்ற சைவ சித்தாந்த நூல் வாக்கியம் நினைவுக்கு வருகிறது. சுவாமிக்கு ஜகதீசுவரர், மாத்ரு பூதேச்வரர் என்று நாமங்கள் வழங்கப்படுவதுபோல், அம்பிகைக்கும் சர்வ ஜன ரக்ஷகி, சர்வலோக ஜனனி என்ற நாமங்கள் வழங்கப்படுகின்றன. திரு வலிதாயம் (பாடி) என்ற தலத்தில் தாயம்மை (ஜகதம்பிகை) என்று அம்பிகை வழங்கப்படுகிறாள். தாய் தந்தையர்களை இழந்தோ அவர்களது அன்பை இழந்தோ வாடுபவர்கள் பார்வதி-பரமேச்வரர்களை  வணங்கும்போது அத்துயர் நீங்கப்பெற்று மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவார் என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். 

" அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வண்ணா நீ அலையோ ? "

- திருநாவுக்கரசர் தேவாரம். 

Thursday, August 9, 2018

வேண்டேன் புகழ்

மாணிக்கவாசகர் 
சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லாத காலம் இது. சர்ச்சையை ஏற்படுத்தினால் தான் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தோடு  சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். சட்டங்கள் மூலம் இவர்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற திமிரோடு, தாங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகி விட்டது. இவ்வளவும் பணம் சம்பாதிக்கவா ? நிச்சயமாக அப்படிச்  சொல்வதற்கில்லை. அவர்களிடம் இல்லாத பணமா ? அப்படியானால் ஏன் இதில் ஈடு படுகிறார்கள் என்றால் , மக்களைக்  கவர்ந்து பிரபலம் ஆவது ஒன்றே நோக்கம் என்று  கூறலாம். 

தனி ஒரு  மனிதனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்த ஒவ்வொரு மதத்திற்கும்,ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மரபுக்கும் தனித்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இவற்றில் ஊடுருவல் ஏற்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நூலுக்கும் ஒரு அடையாளம் உண்டு என்பதை மறந்து அதிலுள்ள ஜீவ ரத்தினம் போன்ற வார்த்தைகளை மனம் போன போக்கில் வேறு இடங்களில் வைத்து பிரபலமாக்குகிறார்கள். உதாரணமாகத்  திருவாசகத்தில் வரும் " தென்னாடுடைய சிவனே போற்றி,  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்பதைத்  தங்களுக்குப் பிடித்த மகானது பெயரோடு சேர்த்துச் சொல்கிறார்கள். இதையே வேற்று மதத்தினரும் சொல்ல முற்படுவார்கள் அல்லவா ? 

இசையும் கூட இப்படித்தான். பழங் காலந்தொட்டு நமது இசைமரபுகள் போற்றிப் பாது காக்கப் பட்ட போதிலும் அவற்றை மனம் வந்த போக்கில் பிற சமயப் பாடல்களில் பயன் படுத்த  ஆரம்பிப்பது  பலருக்கு வேதனை அளிக்கக் காண்கிறோம்.             " என்னை யாரும் பலவந்தப்படுத்த முடியாது. மாதம் ஒரு வேற்றுச்  சமயப் பாடலை நமது பாரம்பர்ய இசையில் பாடுவேன் " என்று சொல்வதால் அன்னாரது அகம்பாவம் எதிரொலிக்கிறது. இதற்குப் பெயர் மத நல்லிணக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். பணம் சம்பாதிப்பதை விடப்  புகழ் சம்பாதிப்பதில் உள்ள நாட்டம் புரிகிறதல்லவா ?  மக்களால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாதுதான். அதிக பட்சமாக அப்படிப்பட்டவர்களது இசை நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க மட்டுமே முடியும். அதனால் அவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. ஏற்கனவே சம்பாதித்த புகழும்,செல்வமும் இருக்கும் போது எதற்காகக் கவலைப் பட வேண்டும்? 

ஒரு சிலர் சமயாச்சார்யர்களைப் பற்றி ஆராய்ச்சி என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். திருப்பெருந்துறைக் கோயிலைப் பற்றி வேறொருவர் சர்ச்சையைக் கிளப்பி விட்டும் புத்தகம் போட்டும் மக்கள் மனத்தைக் காயப் படுத்துகிறார். இத்தனையும் அந்தப் புகழ் படுத்தும் பாடு. ஆகவே தான் எவற்றுக்கெல்லாம்  நாம் அதிக முக்கியத்துவம் தரலாகாது  என்பதை மாணிக்க வாசகர் அழகாகக் குறிப்பிடுகிறார்: 

"  வேண்டேன் புகழ்  வேண்டேன் செல்வம் 
வேண்டேன் மண்ணும் விண்ணும் 
வேண்டேன் பிறப்பிறப்பு :  சிவம்
வேண்டார்தமை நாளும் 
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு 
திருப்பெருந்துறை இறைதாள் 
பூண்டேன் ; புறம் போகேன் ; இனிப் 
புறம் போகல்  ஒட்டேனே. " 

என்பது அவ்வழகிய மணிவாசகத் தேன். 

Tuesday, April 17, 2018

தானதருமம்

திருநாவுக்கரசர் 
உலகம் இருக்கும் வரை தானமும் தருமமும் இருக்கும். காக்கைக்குக் கூடக் கரந்து  உண்ணும் தன்மை இருக்கும்போது நமக்கு இருக்க வேண்டாமா ? அளவுக்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவனுக்கும் பிறருக்குக் கொஞ்சமாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அதேபோலத்  தனக்கு எவ்வளவு தான் பணம் வந்தாலும் அடுத்தவனுக்கு வருவதில் முழு அளவில்லாவிட்டாலும் அதில் ஒரு பங்காவது கொடுக்க மாட்டானா என்று   போராடும் மனோபாவம் இருப்பவர்களும் உண்டு. தனக்கு மிஞ்சியதை எல்லாம் தானம் செய்யாத மனநிலை வந்துவிட்டதால், பழமொழியைத்  தனக்கு வசதியாக, " தனக்கு மிஞ்சினால்தான் தான் தான தருமம் " என்று மாற்றிக் கொள்கிறார்கள். அதை ஆயிரம் கோடி சம்பாதித்தவனும் சொல்லலாமா? தானம்  செய்யத் தனக்கு இறைவன் தந்த உயர்ந்த வாய்ப்பாகக் கொண்டு தருமசாலியாக வாழலாமே ! 

ஒருவரிடம் சென்று யாசித்தலை " இரத்தல் " என்கிறோம். வறியவனாக இருந்து யாசிப்பவனைப் பிச்சைக் காரன் என்கிறோம். முன்பெல்லாம் இராப்பிச்சைக்காரனும், கையில் சொம்பு ஒன்றை ஏந்தியபடி சுடும்  உச்சி வெய்யிலில் சாலைகளில் உருண்டு வந்து பிச்சை எடுப்போரையும் பார்த்திருக்கிறோம். சிறுவயதில்  வீட்டு வாசலுக்கு வந்த  ஒரு இராப்பிசைக்காரன்  " அம்மா, பிச்சை போடுங்கம்மா " என்றவுடன், " எங்கம்மாவை நீ எப்படி அம்மா என்று கூப்பிடலாம் என்று நான் அவனிடம் சண்டைக்குப் போனதாக எனது தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது.  இப்போது கோயில் வாசலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பிச்சைக்காரர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். விடியற்காலையில் வரும் குடுகுடுப் பாண்டிகளையும் இப்போது காணோம். நரிக்குறவர்களைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது. ஆகவே பிச்சை எடுப்பது குறைந்தாலும், யாசகம் என்பது கடன் என்ற பெயரில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னாலும் சொன்னார்கள், வங்கிகளில் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடன் என்பதும் ஒருவகையில் கௌரவப் பிச்சை தான். அதற்கு சமாதானமாக எவ்வளவு சொன்னாலும் கடன் கடன் தானே !அதில் ஒரே வித்தியாசம்  வட்டியுடன்  திருப்பித் தர வேண்டும் என்பதே. மனசாட்சி உள்ளவர்கள் திருப்பித் தருகிறார்கள். மற்றவர்களோ சட்டமே ஒன்றும் செய்ய முடியாதபோது நாம் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று ஏமாற்றத் தயாராக இருக்கிறார்கள். 

தானம் என்பது இரக்கத்தின் வெளிப்பாடு. தனது கண்ணில்  குழிவிழுந் தவன் யாசகம் கேட்கும்போதும் மனம்  இர ங்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்பவர்கள் உண்டு.  " கண் குழிந்து இரப்பார்க்கு ஒன்று ஈயேன் "  " சிறுச் சிறிதே இரப்பார்க்கு ஒன்று ஈயேன் " என்பன சுந்தரர் தேவார வரிகள். மண் தானம், பொன் தானம் , கன்னிகா தானம் ,கோ தானம் என்று எத்தனையோ தானங்கள் இருந்தாலும் அன்ன தானம் சிறந்தது என்பார்கள். அதிலும்  மதி சூடும் மகாதேவனின் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை அறுபத்து மூவரில் பலர்  செய்தருளியிருக்கிறார்கள். 

பிக்ஷாடன மூர்த்தியாக வந்த பரமேசுவரனை, " பிச்சைத் தேவா "  என்று அழைக்கிறது திருவாசகம். ஆனால் பெருமான் பிக்ஷைக்காக வந்தது உணவை ஏற்று உண்பதற்கல்ல. தாருகாவனத்தில் பிச்சை எடுத்தது போலத் தோன்றினாலும், அங்கிருந்த நாற்பத்தொன்பதாயிரம் முனிவர்களுக்கும் ஞானப்பிச்சை போட்டருளினான் அல்லவா ?   உண்ணாது உறங்காது இருக்கும் பிரான் இவ்வாறு ஞானோபதேசம் செய்ய எழுந்தருளியபோது, பிக்ஷாடனமூர்த்தியாகத்  தோன்றினான். 

எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் யாசகம் கேட்பவர்களுக்கு முடிந்த வரையில் உதவ வேண்டும். நான் கஷ்டப் பட்டு சம்பாதித்ததை தானம் செய்வதா என்று எண்ணுகிறார்கள். காஞ்சிப் பெரியவர்கள் ஒரு சமயம் சொன்னார்கள் " நான் சம்பாதித்தது என்று எண்ணாதே. அவை அனைத்தும் இறைவனுக்கு சொந்தம். அவனே எஜமானன். நீ முற்பிறவிகளில் செய்த நற்பயன்களின் பயனாக உன்னை ஈசுவரன் அதற்கு டிரஸ்டியாக நியமித்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம் . ஆயுள் முடிந்தவுடன் அதை விட்டுச் செல்லத்தான் வேண்டும்  அதை உன்னிடம் கொடுத்ததன் காரணம் நீ பிறரூக்கு அதைக் கொண்டு தான தருமங்கள் செய்ய வேண்டும் என்பதே. "   

" இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் 
   * கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார் ...." 

( * கரப்பவர்: பிறருக்குக் கொடாமல் தனக்கு மட்டுமே செல்வம் உரியது என்று அதனை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் )

என்று திருவையாற்றுத் திருப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்  திருநாவுக்கரசர்.   

Thursday, April 12, 2018

சித்தமும் சிவமும்

திருஞானசம்பந்தர்_ முகநூல் படம் 
" பல ஆண்டுகளாக இப்படி இணைய தளத்தில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுகிறீர்களே, இதனால் கண்ட பலன் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? எல்லோரும் படிப்பார்கள் என்றும், இது ஏதாவது மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறீர்களா? எனக்கு என்னவோ உங்கள் நேரத்தை வீணாகச் செலவு செய்கிறீர்கள் என்றே தோன்றுகிறது '  என்று பொரிந்து தள்ளினார் ஒரு ஆப்த நண்பர்.  அவரது ஆதங்கம் நன்றாகவே புரிந்தது. அதில்  உண் மையும் இருந்தது. சுமார் நூறு பேருக்கு அனுப்பினால் பாதிப் பேர்  அதைத் திறந்துகூடப் பார்ப்பதில்லை என்று புள்ளி விவரம் மூலம் அறிகிறோம். மீதி வாசகர்கள் மேலோட்டமாகக் கதை படிப்பதுபோல படித்துவிட்டு மூடி விடுவார்கள் போல இருக்கிறது. சிலர் பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு வேறு வேலை இல்லை, அரைத்த மாவையே அரைப்பார் என்று முகம் சுளித்து விட்டு அழித்து விடவும் வாய்ப்பு உண்டு.  ஐந்துக்கும் குறைவானவர்களே முழுமையாகப் படிப்பவர்கள். சில சமயம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவதும் உண்டு. 

நவீன உலகில் படிக்கவே நேரம் இல்லாமல் போய் விட வாய்ப்பு உண்டு என்பதால் கட்டுரைகளை மிகச் சுருக்கமாக அமைத்தும் படிக்கவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கலாம் ? கோவிலுக்குத் தினமும் போவதோ, வீட்டில் பூஜை மற்றும் பாராயணம் செய்வதோ குறைந்து விட்ட நிலையில் நம்மை அனுதினமும் காக்கும் கடவுளுக்காக ஐந்து நிமிடம் கூட ஒதுக்க நேரம் இல்லை என்றால் எப்படி நம்புவது ?  தமிழ் பேச மட்டுமே தெரியும், எழுதிப் படிக்கத் தெரியாது என்று சொல்லும் தற்காலத் தமிழ்க் குடும்பங்கள் ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும், பேசியதைப் பதிவு செய்யது அனுப்பலாம் என்றும் கேட்கத் துவங்கி விட்டன. அப்போதும் இவற்றைக் கேட்க எவ்வளவு பேர் முன்வருவர் என்பது கேள்விக் குறியே.

ஆனால் நண்பர் கூறியது போல் நேரம் வீணாவதாக ஒருபோதும் நாம் நினைப்பதில்லை. எழுத ஆரம்பிக்கும்போது என்ன எழுதுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போது நம் கூட இருந்து சொல்லித்தரும் சிவ கிருபைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? எழுத்து அறிவித்த இறைவன் சொல்லுவதை  அப்படியே எழுதும் பணியாளாக இருப்பதை விட பாக்கியம் வேறு ஏது ? ஈசுவரனது வாக்கானபடியால் அது அவனருள் பெற்றோருக்கே போய்ச் சேரும் என்று எண்ணத் தோன்றுகிறது. எழுதி முடிக்கும் வரை சிந்தையை விட்டு சிவம் நீங்குவதில்லை அல்லவா ? ஆகவே நேரம் செலவாவதில்லை, சம்பாதிக்கப் படுகிறது என்று நண்பருக்கு விடை கூறினோம். நண்பரோ விடாக் கண்டர். " அப்படியானால் சிந்தை என்பது என்ன, மனம் என்பது என்ன? அது உடலில் எங்கே இருக்கிறது? மூளையிலா அல்லது இருதயத்திலா " என்று படபட என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கி விட்டார்.

  சித்தம்,சிந்தை என்ற வார்த்தைகள் சிந்தனைக்கு ஊற்றுக் கால்களாக விளங்குபவை. முக்தி அடைவதற்கு முதல் படியாக சித்த சுத்தியும்,இரண்டாவதாக பக்தியும் முக்கியமானவை . சித்தம் போக்கு,சிவம் போக்கு என்றும், சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் இல்லை என்றும் சிந்தனையை சிவத்தோடு சம்பந்தப்படுத்தியுள்ளார்கள் பெரியோர்கள். சித்தத்தில் தெளிவு ஏற்படாவிட்டால் பக்தி ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆகவே தான், சித்தத்தைக் கட்டும் மலவாதனை இறை அருளால் மட்டுமே நீங்கும் எனத் தெளிவு படுத்தியுள்ளார்கள். " சித்த மலம் அறுவித்துச்  சிவமாக்கி எனை ஆண்ட "  என்கிறார் மாணிக்கவாசகர்.  

சிந்தனை தூய்மையானதாக விளங்குவது மிகவும் கடினமானதுதான். ஒருவேளை சில மணித்துளிகள் நிர்மலமாக ஆனாலும் விரைவிலேயே அது  களங்கப்பட்டு விடுகிறது. எனவே தினந்தோறும் அதனைத் தூய்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு ஒரே உபாயம் இறைவனைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளுவதே. " சிந்தனை நின்தனக்கு ஆக்கி " என்று இதனைத் திருவாசகம் கூறும். 

ஆகவே பக்தி நெறிக்கு நம்மை ஆயத்தப்படுத்த முதலாவதாகச் சிந்தை தூய்மை பெறுதல் மிகவும் அவசியமாகிறது. அடுத்தபடியாக ஒன்றிய சிந்தையுடன் இறைவனை மலர்களால் அர்ச்சித்து வழிபடும்போது பக்தி மேலோங்குகிறது. எனவே அது பக்தி மலர்களாகி அர்ச்சனைக்கு உரியதாகிறது. பக்தியாகிய நாரினால் மலர்களைக் கட்டி திருப்புகலூர் வர்த்தமானிசுவரப் பெருமானுக்கு மாலை சார்த்தி வழிபட்டார் முருக நாயனார். புத்தமதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார் எறிந்த சல்லிக் கற்களை அவரது பக்தித்திறம் ஒன்றையே கருதி,புது மலர்களாக ஏற்றுக் கொண்டான் சிவபெருமான். 

மனத்  தூய்மையால் விளைந்த பக்தியுடன்  இறைவனை வழிபட்டால் முக்தி எளிதாகும் என்பதைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறிகிறோம். அகத்து அடிமை செய்ததால் அன்பின் வடிவாகவே ஆனார் கண்ணப்பர். இங்கு அகம் என்பது மனமாகிய சிந்தை எனக் கொள்ளலாம். இதைத்தான் சிவானந்தலஹரியில் ஆதி சங்கரரும் எடுத்துக் காட்டி, " பக்தி எதைத் தான் செய்யாது ?" என்றார். 

இவ்வளவு கருத்தாழ்வு கொண்ட ஒப்பற்ற கொள்கையைத்  திருஞானசம்பந்தப் பெருமான் நாமும் உய்ய வேண்டும் என்ற பெருங் கருணையினால் இரண்டே வரிகளில் கீழ்க் கண்டவாறு பாடியருளினார் :

" சித்தம் தெளிவீர்காள்  அத்தன் ஆரூரை 
  பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே. " 

தெளிந்த சிந்தையுடன் ஆரூர்ப்பெருமானைப் பக்தி மலர்கள் தூவி வழிபட்டால் முக்தி எளிதில் கிடைத்துவிடும் என்பது இதன் கருத்து. 

முத்தி நெறி அறியாத மூடர்களோடு திரியும் உயிர்கள் பால் சிவபெருமான் இரங்கி,கருத்திருத்தி,ஊனுள்ளே புகுந்து, சித்த மலத்தை அறுவித்துச் சிவமயமாக்கிக்  கருணை பாலிக்கிறான் என்ற சிந்தாந்தக் கருத்தும் இங்கு சிந்திக்கற்பாலது .  

Monday, March 19, 2018

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


தான் மட்டும் உய்ய வேண்டும் என்றும் நற்பலன்களைப் பெற வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுவது ஒரு வகை. தானும் தனது குடும்பத்தவர்களும் அருள் பெற வேண்டுவது இன்னொரு வகை. தனது சமூகத்தவர்களும் நன்மை பெற வேண்டுவது மற்றொரு வகை. உலகத்தோர் அனைவரும் நலம் பெற வேண்டுவது உயர்ந்த நிலை. இந்நிலை உயர்ந்தோரிடத்தும்,மகான்களிடத்தும் காணப் படுவது. தனக்கு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உலக நலனையே வேண்டுவது தெய்வ நிலை. தனது முதுகெலும்பையும் தேவ காரியத்திற்காக அர்ப்பணித்த பெருமை முனிவர்களுக்கே உரியது. இதை வள்ளுவரும், “ என்பும் உரியர் பிறர்க்கு “ என்றார். உலகை அழிக்க வந்த நஞ்சின் கொடும் தன்மையை அறிந்தும், உலகத்து உயிர்களைக் காக்க வேண்டி அதனை உவகையோடு உண்ட நீலகண்டப்பெருமானை ஞான சம்பந்தர் , “ உண்டான் நஞ்சை உலகம் உய்யவே “ என்று போற்றுகின்றார்.

அருளாளர்கள் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற்று உய்ய வேண்டும் என்ற கருணை உடையவர்கள். வெள்ளை யானையின் மீதேறிக் கயிலைக்குச் செல்லும் வழியில், சுந்தரர் ஒரு பதிகம் அருளிச் செய்கின்றார். அதில், தான் பெற்றது போல் பிறரும் சிவனருளைப் பெற வேண்டும் என்ற பெருங் கருணையுடன், “ மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி அடியார் பொன் உலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்...” என்று தான் பேறு பெற்றதைக் கண்ட பிறரும் அதுபோலப் பெருமானுக்கு வழிவழி ஆட்செய்தால் அவ்வாறு அருள் பெறலாம் என்று நமக்கு நல்வழி காட்டுகின்றார்.

இவ்வாறு மீளா அடிமை பூண்டு இறைவனைத் தொழும் அடியார்கள் வானுலகத்தை ஆளலாம் எனப் பெரியோர்கள் எடுத்துரைத்த அருள் வார்த்தையைக் கேட்டும் ஒவ்வொரு நாளும் மலர்களால் சிவபிரானை வழிபடாது வீணே நாளைக் கழிக்கிறார்கள். நம்மை ஆள்வது பெருமானது அருள் என்பதை உணராது இருக்கிறார்கள். இருந்தாலும் அப்படிப்பட்டோரை நான் பெருமானிடம் ஆட்படுத்த வேண்டி அழைக்கின்றேன். அவ்வாறு வழிபடுவது, குடும்பத்திற்கும்  இனி வரப் போகும் அவர்ளது தலைமுறைகளுக்கும் தனித் துணையாக அமைந்து எல்லோரையும் உய்விக்கும். எனவே ஆரூரானை மறவாது அவனுக்கு ஆட்செய்ய  வாருங்கள் என்று சுந்தரர் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதை பின்வரும் அவரது தேவாரப் பாடல் மூலம் அறிகிறோம்:

குடும்பத்தில் ஒருவர் சிவபக்தி செய்தாலும் அக்குடும்பத்திலுள்ளோர் அனைவருமே கடைத்தேறி விடுவர். ஒருவராவது பண் பொருந்த பரமனைப் பாடினாலும் அக்குடி முழுதும் உயர்ந்த கதி பெற்று விடும். கார்த்திகை தீபத்தை யார் ஒருவர் காண்கிறாரோ அவரது இருபத்தொரு தலைமுறைக்கும் முக்தி கிடைக்கும் அன்று அண்ணாமலையார் வரம் அருளியது போலத் தான் இதுவும்.  குடும்பத்தில் ஒருவர் சிவபக்தி செய்தால் போதும் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. அதன் பெருமையைக் கூற வந்தவிடத்து அருளியதாகவே கொள்ளவேண்டும்.
இப்போது சுந்தர மூர்த்தி நாயனாரது பாடலைக் காண்போமாக :

“ வாளா நின்று தொழும் அடியார்கள்
வான் ஆளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்
நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன்
கிளைக்கெலாம் துணையாம் எனக் கருதி
ஆளாவான் பலர் முன்பழைக்கின்றேன்
ஆரூரானை மறக்கலும் ஆமே ?        

Saturday, January 27, 2018

தமிழ் ஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் தீந்தமிழ்ப் பாடல்கள் மட்டுமல்ல. அவை ஞானம் புகட்டும் தெய்வப் பனுவல்கள் . பிறவிப் பெருங்கடலைத் தாண்டத் தோணியும் ஆவன  தான் உண்ட சிவஞானத்தைப் பிறரும் பெற்றுச்  சிவனடியை அடைய வேண்டும் என்ற பெருங்கருணையோடு பாடப்பெற்றவை. தமிழ் மூலம் நம்மைத் தெய்வத்தின் திருவடிக்குச் சேர்ப்பிப்பவை . துன்பம் வந்தாலும் நமக்குத் துணையாவான ஈசனடி ஒன்றே என நமக்கு உணர்த்திப் பக்குவப்படுத்துபவை.

" நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று இவருக்கு  சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் புகழாரம் சூட்டுகிறது.  நான் மறை ஓதும்  " வேத வாயராக" த் திகழ்ந்து, நீலகண்டப்பெருமானே  " இயல் இசை எனும் பொருள் " ஆவதைப் பதிகங்கள் மூலம் நமக்கு உணர்த்தியதோடு, தன்னைத் தமிழ் மொழியோடு இணைத்துத் " தமிழ் ஞானசம்பந்தன் " " தமிழ் விரகன்" " ஞானசம்பந்தன் ஞானத் தமிழ்" என்றெல்லாம் பலவிடங்களில் பாடியருளி இருப்பதைக் காணலாம்.

தென் திசை செய்த மாதவமாக சீர்காழிப் பதியில் அவதாரம் செய்து , பிற சமய இருள் நீக்கி, சைவத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் ஞானசம்பந்தப்பெருமான். இதன் மூலம் சமய மறுமலர்ச்சி மட்டுமே நடைபெறவில்லை. தமிழிலும் ஓர் மறு மலர்ச்சி உதயமாயிற்று. தமிழ் மொழி அதுவரை பெற்றிராத பல செய்யுள் வகைகள் பாலறா  வாயரிடமிருந்து தோன்றின. செய்யுளுக்கு சந்தம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கருத்தாழமும், பிற நயங்களும். அதோடு நிற்காமல், பண்ணமைதியும் பெற்று விளங்கும் அவரது பாடல்கள் இணையற்றவை.

எடுத்துக் காட்டாக சீர்காழி இறைவர் மீது பாடியருளிய ஒரு திருப் பதிகத்தின் முதல் பாடலை  இங்கு நோக்குவோம். தமிழ் மொழியில் முதலில் இருந்து கடைசி வரை வரும் வார்த்தைகள் சிலவற்றைத்  தலை கீழாக (கடை முதல் ஆரம்பம்  வரை) படிக்கலாம். உதாரணமாகத் "தேரு வருதே, " விகடகவி " போன்றவை. ஆனால் ஒரு பாடலையே அவ்வாறு அருள முடியுமா? ஒரு பாடல் மட்டுமல்ல. பதினொரு பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தையே அருளியுள்ளார் சம்பந்தப்பெருமான்.

"  யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. "

இப்பாடலைத் தலை கீழாகப் படித்துப் பார்த்தால் அதன் அருமை வெளிப்படும். இடமின்மை காரணமாக இதன் பொருள் இங்குத் தரப்படவில்லை. இப்பதிகம் கெளசிகப்பண் கொண்டது என்பதை மட்டும்  இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

கால நிலைமையால் தமிழின் பெருமையைப் பறை சாற்றும் இதுபோன்ற தெய்வப் பனுவல்களை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர். சிலரோ தமிழின் பால்  பற்று இருப்பதாகக் காட்டிக் கொண்டு போலி வாழ்க்கை நடத்தி, மக்களை மயக்குகின்றனர். ஞானப் பனுவல்களைக் கற்றோரும் அவற்றை உரிய வகையில் என்ன காரணத்தாலோ மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில்லை. சிவஞானம் அவ்வளவு எளிதில் கிட்டாது என்பதும் காரணமாக இருக்கலாம்.

தமிழ்ப் பனுவல்களைக் கற்றும், சிலர் தங்களது சொந்த அபிமானம் காரணமாகக்  கிணற்றுத் தவளைகளாகவே இருந்து கொண்டு தங்களுக்கு இணை இல்லை என்கின்றனர். அவற்றைத்  திருத்துபவர்களும் இருக்கக் காணோம்.

தமிழ் என்ற சொல்லில் உள்ள ழகரம் அம்மொழிக்கே உரிய சிறப்பைத் தருவது என்பது எல்லோரும் அறிந்தது தான். அந்த ழகரம் ஒரே பாடலில் பதினொரு முறை வருவது என்றால் சாதாரணமானதா?  பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் அதற்கும் அதிகமாக ஒரே செய்யுளில் இருபத்தொரு  முறை வந்தால் அதையும் ஏற்க வேண்டியதுதானே! ஏற்பதால் நம்மை நாம் பணிவுடையவர்கள் ஆக்கிக் கொள்கிறோம். தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை ஓரளவு அறிந்தவர்கள் ஆகிறோம். அதற்கு  நம்மை ஆளாக்கியருளியவரைப்  பணிந்து நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சீர்காழிப் பெருமான் மீது திருஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகம்  ஒன்றின்  பத்தாவது பாடலில் பத்தொன்பது முறையும், பன்னிரெண்டாவது பாடலில் இருபத்தொரு  முறையும் ழகரம் கையாளப்பட்டிருப்பதை இங்கே காணலாம்:

"  பாழி யுறை வேநிகர் பாமணர் சூழுமுட லாளருணரா

    ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை                                                                                                                                            வாழுமிடமாங்

    கீழிசைகொள் மேலுலகில்வாரசு சூரசு வாவரனுக்

    காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே . "

(இதன் திரண்ட கருத்தாவது: பாழிகளில் தங்கும் சமணர்களும் புத்தர்களும் உணராத பெருமான் , யாழின் இசை போல் பேசும் உமாதேவியுடன் உறையும் பதியாவது, கீழுலகும் மேலுலகும் அஞ்சுமாறு செய்த காளியானவள் அக்குற்றம் நீங்க பூஜை செய்த காழிப் பதி யாகும்.  )

"   ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியை நினையா

     முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு                                                                                                                                              கெழுவு சிவனைத்

     தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை                                                                                                                                                 கழுமலநகர்ப்

     பழுதிலிறை எழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள்                                                                                                                                         மொழி தகையவே."

( பொழிப்புரை: அறம் அழிந்துகொண்டே வரும் கலியுகத்தில் அறவழியைப் பின்பற்றுவது கடினமாகிவிடவே, உடல் முழுதும் ரோமங்கள் கொண்ட உரோமச முனிவர் தம் கூட்டத்துடன் வந்து, மலம்  (பாசங்கள்) நீங்குமாறு வழிபட்டது கழுமலப் பதி( சீர்காழி) ஆகும். { வேதம் எழுதப்படாதது. தமிழ் வேதம் எழுதப்படுவது. ஆகவே, எழுதுமொழி என்றார் }   இப்பாடல்கள் பாடப்படுவதால் பலன் விளைவிக்கக்  கூடியவை என்று பதிகப் பலனும் அருளிச் செய்தார் ஞானசம்பந்தர்.