Saturday, December 26, 2009

தெய்வீக மொழிகள்தெய்வமும் தமிழும்

தமிழ் மொழியை ஏன் தெய்வத்தமிழ் என்று சொல்கிறார்கள் என்பதை முதலில் காண்போம். தெய்வத்தோடு தொடர்புடையது என்பதால் இவ்வாறு போற்றப்படுகிறது.தெய்வத்தின் மீது பக்தி ஏற்படும்படி பாடல்கள் இதில் இருப்பதோடு தெய்வமே தமிழ்ச் சங்கப்புலவராகவும் , தமிழ் கேட்கும் விருப்பத்தோடு விறகு சுமந்தும் பிட்டுக்கு மண் சுமந்தும் ,தானே அடியவனுக்காகப் தமிழ்ப் பாடல் எழுதித்தந்தும் ,அடியவன் பாடிய பாடல்களைத் தன் கைப்பட எழுதியும் ,போன்ற பல பெருமைகளைக் கொண்டதால் தெய்வத் தமிழ் என்று போற்றப் படுவதன் உண்மை தெரிய வருகிறது. சம்ஸ்க்ருதமும் தமிழும் இறைவனின் வடிவங்கள் என்பதை அப்பர் சுவாமிகளும் ,
"வட மொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் "
என்று பாடுகின்றார்.
இன்றைய நிலை:
இவ்வளவு பெருமைகளை உடைய இவ்விரு மொழிகளின் இன்றைய நிலையைப் பார்ப்போம். சமஸ்க்ருதத்தை பூஜைகளுக்கும் கர்மாக்களுக்கும் மட்டுமே சாமானியர் பயன் படுத்துகிறார்கள். நான்கு வேதங்களும் அம்மொழியில் இருக்கும் பெருமையைப் பெற்றிருந்தும் குழந்தைகளை வேத வகுப்புக்கு அனுப்புபவர் மிகச்சிலரே. உரிய வயதில் உபநயனம் செய்வித்து சூக்தாதிகளையாவது கற்றுக்கொடுக்கும் பெற்றோர் மிகக் குறைவு.பள்ளிக் கூடத்திலும் சம்ஸ்க்ருதம் பக்கமே போவதில்லை.வீடுகளிலாவது ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ளப் படுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிற்காலத்தில் அர்த்தம் புரிவதில்லை என்று நொண்டி சாக்கு சொல்ல வசதியாகப் போய்விடுகிறது.
கற்க வேண்டியதைக் கசடறக் கற்பிப்போம்
தமிழின் நிலையும் ஏறத்தாழ இதேதான். எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் ஆரம்பித்து , பேசத்தெரிந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
தெய்வத்தன்மையை ஒதுக்கி விட்டு வெறும் சக்கையைப் பயன் படுத்துவதால் வந்த விபரீதம் இது.ஒவ்வொரு இல்லத்திலும் இதை உணர வேண்டிய கால கட்டத்தில் இப்பொழுது இருக்கிறோம்.நம் குழந்தைகளை நல்வழிப் படுத்தவேண்டிய கடமை நம் கையில் இருக்கிறது. வீட்டிலாவது சம்ஸ்க்ருதமும் தமிழும் கற்றுக் கொடுத்து இறை அருள் மிக்க சுலோகங்களையும் பாடல்களையும் அவற்றின் பொருளை விளக்கிக் குழந்தைகளுக்கு ஈடுபாடு வரச் செய்யவேண்டியது மிகவும் அவசியம்.அவ்வாறு ஈடுபாடு வந்துவிட்டால் அவர்களாகவே அந்த அஸ்திவாரத்தின் மேல் உள்ளத்தில் இறைவனுக்குப் பெருங்கோயில் கட்டிவிடுவார்கள். அதுவே அவர்களை வாழ்க்கையில் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும்.

பெருமை வாய்ந்த தமிழ் தந்த தெயவீகப்பாடல்களை பொருள் உணர்ந்து அவற்றின் மூலமாக இறைவனைக் காண முற்படுவோமாக.
தமிழில் பல தெய்வங்களின் மீதும் ஏராளமான பாடல்கள் இருந்தாலும் மிகச் சுலபமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடல்களை முதலில் காண்போம்.
எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் கணபதியின் அருள் மிகவும் முக்கியம் ஆதலால் முதலாவதாக விநாயகரின் மீது திருமூலரின் திருமந்திரத்தில் துவக்கத்தில் உள்ள எளிய இனிய பாடல் இதோ:
கணபதிக்கு நான்கு கரங்களோடு தும்பிக்கையைச் சேர்த்தால் ஐந்து கரங்கள் இருப்பதால் ஐந்து கரத்தன் எனப்படுகிறார்.பாடலும் ஐந்து கரத்தனை என்று ஆரம்பிக்கிறது.அடுத்தது அவருக்கு யானை முகம் இருப்பதால் யானை முகத்தனை என்று வருகிறது. அவருடைய தந்தம் சந்திரனின் இளம் பிறை போல இருக்கிறது.எனவே "இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" என வருகிறது. இந்து என்றால் சந்திரன்.எயிறு என்பது இங்கு தந்தத்தைக் குறிக்கும்.இவர் பரமேச்வர புத்திரன் ஆனபடியால் நந்தி மகன் தன்னை என்று போற்றப் படுகிறார். நந்தி என்பது ஈச்வரனுக்கு ஒரு நாமம்."நந்தி நாமம் நமச்சிவாயவே" என்று தேவாரத்தில் வரும்.நமக்கெல்லாம் ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம் ஞானமயமாகவும் ஞானக் கொழுந்தாகவும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே? ஆகவே "ஞானக்கொழுந்தினை" எனப்படுகிறார்.இப்படிப்பட்ட மூர்த்தியை சிந்தையில்/புத்தியில் வைத்து அவனது பாதங்களைப் போற்றி வணங்குகின்றேன் என்று இப்பாடல் விநாயகப் பெருமானைத் துதிக்கிறது.இப்பொழுது முழுப் பாடலையும் படித்து உணர்ந்து மற்றவர்களுக்கும் இதன் பெருமைகளைச் சொல்லலாம் அல்லவா?
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தன்னை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே