Thursday, August 9, 2018

வேண்டேன் புகழ்

மாணிக்கவாசகர் 
சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லாத காலம் இது. சர்ச்சையை ஏற்படுத்தினால் தான் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தோடு  சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். சட்டங்கள் மூலம் இவர்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற திமிரோடு, தாங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகி விட்டது. இவ்வளவும் பணம் சம்பாதிக்கவா ? நிச்சயமாக அப்படிச்  சொல்வதற்கில்லை. அவர்களிடம் இல்லாத பணமா ? அப்படியானால் ஏன் இதில் ஈடு படுகிறார்கள் என்றால் , மக்களைக்  கவர்ந்து பிரபலம் ஆவது ஒன்றே நோக்கம் என்று  கூறலாம். 

தனி ஒரு  மனிதனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்த ஒவ்வொரு மதத்திற்கும்,ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மரபுக்கும் தனித்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இவற்றில் ஊடுருவல் ஏற்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நூலுக்கும் ஒரு அடையாளம் உண்டு என்பதை மறந்து அதிலுள்ள ஜீவ ரத்தினம் போன்ற வார்த்தைகளை மனம் போன போக்கில் வேறு இடங்களில் வைத்து பிரபலமாக்குகிறார்கள். உதாரணமாகத்  திருவாசகத்தில் வரும் " தென்னாடுடைய சிவனே போற்றி,  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்பதைத்  தங்களுக்குப் பிடித்த மகானது பெயரோடு சேர்த்துச் சொல்கிறார்கள். இதையே வேற்று மதத்தினரும் சொல்ல முற்படுவார்கள் அல்லவா ? 

இசையும் கூட இப்படித்தான். பழங் காலந்தொட்டு நமது இசைமரபுகள் போற்றிப் பாது காக்கப் பட்ட போதிலும் அவற்றை மனம் வந்த போக்கில் பிற சமயப் பாடல்களில் பயன் படுத்த  ஆரம்பிப்பது  பலருக்கு வேதனை அளிக்கக் காண்கிறோம்.             " என்னை யாரும் பலவந்தப்படுத்த முடியாது. மாதம் ஒரு வேற்றுச்  சமயப் பாடலை நமது பாரம்பர்ய இசையில் பாடுவேன் " என்று சொல்வதால் அன்னாரது அகம்பாவம் எதிரொலிக்கிறது. இதற்குப் பெயர் மத நல்லிணக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். பணம் சம்பாதிப்பதை விடப்  புகழ் சம்பாதிப்பதில் உள்ள நாட்டம் புரிகிறதல்லவா ?  மக்களால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாதுதான். அதிக பட்சமாக அப்படிப்பட்டவர்களது இசை நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க மட்டுமே முடியும். அதனால் அவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. ஏற்கனவே சம்பாதித்த புகழும்,செல்வமும் இருக்கும் போது எதற்காகக் கவலைப் பட வேண்டும்? 

ஒரு சிலர் சமயாச்சார்யர்களைப் பற்றி ஆராய்ச்சி என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். திருப்பெருந்துறைக் கோயிலைப் பற்றி வேறொருவர் சர்ச்சையைக் கிளப்பி விட்டும் புத்தகம் போட்டும் மக்கள் மனத்தைக் காயப் படுத்துகிறார். இத்தனையும் அந்தப் புகழ் படுத்தும் பாடு. ஆகவே தான் எவற்றுக்கெல்லாம்  நாம் அதிக முக்கியத்துவம் தரலாகாது  என்பதை மாணிக்க வாசகர் அழகாகக் குறிப்பிடுகிறார்: 

"  வேண்டேன் புகழ்  வேண்டேன் செல்வம் 
வேண்டேன் மண்ணும் விண்ணும் 
வேண்டேன் பிறப்பிறப்பு :  சிவம்
வேண்டார்தமை நாளும் 
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு 
திருப்பெருந்துறை இறைதாள் 
பூண்டேன் ; புறம் போகேன் ; இனிப் 
புறம் போகல்  ஒட்டேனே. " 

என்பது அவ்வழகிய மணிவாசகத் தேன்.