Sunday, August 20, 2017

பஜனை ஒன்றே போதுமா ?

இந்த அவசர கால கட்டத்தில் யாரைக் கேட்டாலும் நேரம் இல்லை என்கிறார்கள். உண்மையாகவே இவர்களுக்கு நேரம் இல்லையா, அல்லது நேரம் இல்லாதது போலவும், மற்றவர் தங்களை அல்லும் பகலும் நேரம் போவது கூட தெரியாமல் உழைக்கிறார் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதைச்செய்,அதைச் செய் என்று மற்றவர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவற்றை ஏற்கும் மனப்பான்மையில் அவர்கள் இல்லையே !  சிலர் மட்டும், குறுக்கு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அதற்கு நேரம் இருக்கிறதா என்று பார்க்கிறேன். என்று சொல்கிறார்கள். 

உண்மையாகப் பார்த்தால் குறுக்கு வழி என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். கலி யுகத்தில் இறைவன் நாமா ஒன்றே போதும். என்று ஒருவர் சொல்லுவார். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, பாரம்பர்யமாக இருந்து வரும் பூஜை,ஆலய வழிபாடு ஆகியவற்றை ஒதுக்கி விடத் தீர்மானித்து விடுகிறார்கள். எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் போகத் தயார், பிரச்னை தீர்வானால் போதும் என்று தயாராகிவிடுகிறார்கள். 

பஜனை மூலம் நாமாவளியைக் கேட்பதும் சொல்வதும் சாத்தியம் தான். மறுக்கவில்லை. ஆனால் நித்தியக் கடமைகளைப் புறக்கணித்து விட்டு  , பஜனை ஒன்றே போதும் என்று இருப்பவர்களுக்கு என்ன சொல்வது ? போதாக் குறைக்கு இவர்கள் சமயச் சின்னங்களான விபூதி,ருத்ராக்ஷம் ஆகியவற்றையும் தரிப்பதில்லை.அவற்றைப் போதிக்க வேண்டிய குரு பீடங்கள் அவற்றுக்கு முன் உதாரணங்களாகத் திகழ வேண்டும் அல்லவா? 

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இறைவன் கொடுத்த உடலின் ஒரு அங்கமே வாய். அதனைக் கொண்டு நல்லவற்றையே பேச வேண்டும், பிறரை ஏசுவதற்காகவோ, பிறர் மேல் புகார் சொல்வதற்காகவோ அதனைப் பயன் படுத்தாமல், இறைவன் நாமத்தைப் பேசவும்,அவன் புகழைப் பாடவும் அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஆன்றோர் அறிவுரை. வாயிலுள்ள நாக்கு அவன் நாமத்தை மனம் மறக்கும் காலத்திலும் சொல்லும்படித்  தினந்தோறும் சொல்லிச் சொல்லிப் பழக வேண்டும் . அதைத்தான் ஞானசம்பந்தர், " நா நாளும் நவின்று ஏத்த"  என்றார். ஏதோ ஒரு நாள் பஜனை நடக்கும் காலத்தில் போய் நாமத்தைச்  சொல்லிவிட்டுக் கைகளைத் தட்டுவதோ,ஆடிப் பாடுவதோ போதாது. தமிழ்த் தாத்தா  டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் பாட்டனார் தமது வீட்டுத் தோட்டத்தில் மலர்களைக் காலையில் கொய்யும் போது சிவநாமங்களைச் சொல்லிக் கொண்டே பறிப்பாராம். அதைக் கேட்டுக் கேட்டு இளமையிலேயே தனக்குச்  சிவபக்தி உண்டாயிற்று என்று குறிப்பிடுகிறார் ஐயர் அவர்கள். 

அடுத்தபடியாக, வாயை இறைவன் பெருமையை வாழ்த்தும்படித்  தூண்டுவது மனம். " சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் " என்கிறார் சேரமான் பெருமாள் நாயனார். திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பார்கள். இப்படி ஒருக் கணமாவது அன்றாடம் நினைக்கத் தனியாக நேரம் வேண்டுமா? நேரம் இல்லை என்பவர்கள் பதில் சொல்லட்டும். 

நித்தலும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று தலையாரக் கும்பிடவேண்டும் என்கிறார் அப்பர் பெருமான். "தலையே நீ வணங்காய் " என்பது அவரது அருள் வாக்கு. அப்படித் தலை வணங்காதவர்கள் கண்ட கண்ட மானுடர்களுக்குத் தலை வணங்க  வேண்டி வரும். அதன் பலன் சிறிது  காலம் நன்மை விளைவது போலத் தோன்றினாலும், இறுதியில் வணங்கப்பட்டவர்களால் உதாசீனம் செய்யும் நிலைதான் வரும். ஆனால் தன்னைத்  தலையார வணங்கியவர்களை இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டான். 

நாமாகத் தான் நல்வழிக்குப் போவதில்லை. ஆனால் நல்   வழியில் நிற்பவர்களை அணுகினால் நமக்கும் நல்லறிவு வந்து உய்யலாம். அதற்கு நல்ல அடியார்களை நாடவேண்டும். நமக்கு நற்கதி கிட்டும் பக்குவம் வந்தவுடன் பெருமானே நல்ல அடியார்களை நமக்குக் காட்டுகின்றான். " இணங்கத் தன்  சீர் அடியார் கூட்டமும் வைத்து " என்கிறார் மாணிக்க வாசகர். 
இவ்வாறு அவனை வாழ்த்துவதற்காக வாயையும், நினைப்பதற்காக நெஞ்சத்தையும், யான் எனது என்பது மாண்டு அவனைத் தாழ்ந்து வணங்கத் தலையையும் தந்த ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து நாள்தோறும் வணங்க வேண்டும். வணங்காதவர்கள் வினையின் வசப்பட்டவர்கள் ஆவார்கள் . பல காலம் யானும் நாட்களை வீணாக்கி விட்டேனே என்று பாடுகின்றார் திருநாவுக்கரசர் .

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் 
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.