தான் மட்டும் உய்ய வேண்டும் என்றும் நற்பலன்களைப் பெற
வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுவது ஒரு வகை. தானும் தனது குடும்பத்தவர்களும்
அருள் பெற வேண்டுவது இன்னொரு வகை. தனது சமூகத்தவர்களும் நன்மை பெற வேண்டுவது
மற்றொரு வகை. உலகத்தோர் அனைவரும் நலம் பெற வேண்டுவது உயர்ந்த நிலை. இந்நிலை
உயர்ந்தோரிடத்தும்,மகான்களிடத்தும் காணப் படுவது. தனக்கு என்ன நேர்ந்தாலும்
பொருட்படுத்தாமல் உலக நலனையே வேண்டுவது தெய்வ நிலை. தனது முதுகெலும்பையும் தேவ
காரியத்திற்காக அர்ப்பணித்த பெருமை முனிவர்களுக்கே உரியது. இதை வள்ளுவரும், “
என்பும் உரியர் பிறர்க்கு “ என்றார். உலகை அழிக்க வந்த நஞ்சின் கொடும் தன்மையை
அறிந்தும், உலகத்து உயிர்களைக் காக்க வேண்டி அதனை உவகையோடு உண்ட நீலகண்டப்பெருமானை
ஞான சம்பந்தர் , “ உண்டான் நஞ்சை உலகம் உய்யவே “ என்று போற்றுகின்றார்.
அருளாளர்கள் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற்று உய்ய
வேண்டும் என்ற கருணை உடையவர்கள். வெள்ளை யானையின் மீதேறிக் கயிலைக்குச் செல்லும்
வழியில், சுந்தரர் ஒரு பதிகம் அருளிச் செய்கின்றார். அதில், தான் பெற்றது போல்
பிறரும் சிவனருளைப் பெற வேண்டும் என்ற பெருங் கருணையுடன், “ மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி
அடியார் பொன் உலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்...” என்று தான் பேறு பெற்றதைக் கண்ட பிறரும்
அதுபோலப் பெருமானுக்கு வழிவழி ஆட்செய்தால் அவ்வாறு அருள் பெறலாம் என்று நமக்கு நல்வழி
காட்டுகின்றார்.
இவ்வாறு மீளா அடிமை பூண்டு இறைவனைத் தொழும் அடியார்கள்
வானுலகத்தை ஆளலாம் எனப் பெரியோர்கள் எடுத்துரைத்த அருள் வார்த்தையைக் கேட்டும்
ஒவ்வொரு நாளும் மலர்களால் சிவபிரானை வழிபடாது வீணே நாளைக் கழிக்கிறார்கள். நம்மை
ஆள்வது பெருமானது அருள் என்பதை உணராது இருக்கிறார்கள். இருந்தாலும்
அப்படிப்பட்டோரை நான் பெருமானிடம் ஆட்படுத்த வேண்டி அழைக்கின்றேன். அவ்வாறு
வழிபடுவது, குடும்பத்திற்கும் இனி வரப்
போகும் அவர்ளது தலைமுறைகளுக்கும் தனித் துணையாக அமைந்து எல்லோரையும் உய்விக்கும்.
எனவே ஆரூரானை மறவாது அவனுக்கு ஆட்செய்ய வாருங்கள் என்று சுந்தரர் அனைவருக்கும் அழைப்பு
விடுப்பதை பின்வரும் அவரது தேவாரப் பாடல் மூலம் அறிகிறோம்:
குடும்பத்தில் ஒருவர் சிவபக்தி செய்தாலும்
அக்குடும்பத்திலுள்ளோர் அனைவருமே கடைத்தேறி விடுவர். ஒருவராவது பண் பொருந்த
பரமனைப் பாடினாலும் அக்குடி முழுதும் உயர்ந்த கதி பெற்று விடும். கார்த்திகை
தீபத்தை யார் ஒருவர் காண்கிறாரோ அவரது இருபத்தொரு தலைமுறைக்கும் முக்தி கிடைக்கும்
அன்று அண்ணாமலையார் வரம் அருளியது போலத் தான் இதுவும். குடும்பத்தில் ஒருவர் சிவபக்தி செய்தால் போதும்
என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. அதன் பெருமையைக் கூற வந்தவிடத்து அருளியதாகவே
கொள்ளவேண்டும்.
இப்போது சுந்தர மூர்த்தி நாயனாரது பாடலைக் காண்போமாக :
“ வாளா நின்று தொழும் அடியார்கள்
வான் ஆளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்
நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன்
கிளைக்கெலாம் துணையாம் எனக் கருதி
ஆளாவான் பலர் முன்பழைக்கின்றேன்
ஆரூரானை மறக்கலும் ஆமே ?