Monday, November 13, 2017

அடியேன் உன் அடைக்கலம் மாணிக்க வாசகர்

Image result for manickavasagar images
மாணிக்க வாசகர் - இணைய தளப் படம் 

பிரிவு ஆற்றாமை என்பது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இடம் பெறுவதைக் காண்கிறோம். பெரும்பாலும் இச சொல்லை அகத் துறையை ஒட்டி வழங்குவதாவே நினைக்கிறோம். அதாவது தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமையை வெளிப் படுத்துவதாக மட்டும் தோன்றும். ஆனால் பக்தி இலக்கியங்களில் இதே வார்த்தையை இறைவனோடு இணைத்துப் பார்ப்பதையும் காண முடிகிறது.

அன்றாடம் கோயிலுக்குச் செல்பவர்கள், வெளியே வரும்போது பிரிவு ஆற்றாமையை உணர்கிறார்களா என்றால், மிகச் சிலரே அவ்வகையைச் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியும். நமக்கு உயிர்க்கு உயிராக இருப்பவர்களையே நாம் தினமும் அதிக நேரம் எண்ணாத போது, இறைவனை சொற்ப நேரமே சிந்திக்கிறோம் என்பது உண்மை அல்லவா?.

அருளாளர்களோ இறைவனை ஒருகணமும் பிரிவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருவாரூர்ப் பெருமானைப பிரிவதை  ஆற்றாத சுந்தரர், “ எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே” என்றும், “ ஆரூரானை மறக்கலும் ஆமே ? “ என்றும் பாடுகிறார்.

உண்மை அடியார்கள் இறைவனைப் பிரிவது என்பதையே அறிய மாட்டார்களாம். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர். ஏன் தெரியுமா? அவர்கள் அருளாகிய ஒப்பற்ற செல்வத்தைப் பெற்றவர்கள். அச்செல்வமோ அழியாத செல்வம். பெருமானது திருவடிகளை அன்றாடம் இடையறாது நினைத்தும் பூஜித்தும் பெறப்படுவது. சிந்திப்பவர்களுக்கு பழவினை தீர்த்து முத்தி கொடுப்பது அப்பாத மலர்கள் என்று அப்பர் பெருமான் திருவையாற்றுப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே, “ திருவே,என் செல்வமே” என்று அவர் போற்றுவதைப் பார்க்கிறோம். அதைத்தான் மணிவாசகரும்,
“பிரிவு அறியா அன்பர் நின் அருட்பெய் கழல் தாளிணைக்கீழ்
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார் “  என்பார்.

இவ்வாறு கேள்விப்பட்டிருந்தும், பெருமானே, உன்னை வழிபடும் நெறியை நான் அறியவில்லை. உன்னையும் அறியமுடியவில்லை. அதற்கான மெய்ஞ்ஞான அறிவும் எனக்கு வாய்க்கப்பெறவில்லை. எல்லா உலகங்களையும் உடைய மூலாதார மூர்த்தியே, எனக்கு நின்னை அன்றி வேறு கதி இல்லை. நின் திருவடிகளே சரணென்று தஞ்சம் அடைந்தேன். இவ்வறிவற்றவனையும் கருணையினால் கலந்து ஆண்டு கொண்டு காத்தருளுவீராக.  உனது அடைக்கலம் என்று வந்தடைந்த இந்த எளியவனுக்கும் அருள் புரிந்து அடைக்கலம் தருவீராக என்று அகம் குழைந்து பாடுகின்றார் மாணிக்க வாசகப் பெருமான்.

“ உன்னை வந்திப்பதோர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.”

திருவாசகத்தில் உள்ள அடைக்கலப்பத்தில் இடம்பெறும் இப்பாடலை இப்போது முழுவதும் காண்போம்:

 “பிரிவு அறியா அன்பர் நின் அருட்பெய் கழல் தாளிணைக்கீழ்
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்  உன்னை வந்திப்பதோர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.”


இப்பிரிவு ஆற்றாமை உண்மை அடியவர்க்கே ஏற்படுவது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்நிலைக்கு உயருவது இப்பிறவியின் நோக்கம் என்பதையும் நாம் உணர முடிகிறது.