Monday, November 7, 2011

அஞ்சேல் என்று அருள் செய்வான்

அமரர்களும் அறியாத அம்பிகைக்குச் சில சந்தர்ப்பங்களில் அச்சம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அகில அண்டங்களுக்கும் அன்னையாய் அபயம் அளிப்பவளுக்கு அஞ்சல் நாயகி என்றும் அபயாம்பிகை என்றும் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தலத்தில் நாமங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஞானாம்பிகைக்கே அச்சம் ஏற்பட்டால் அதனை  அவளது பாகம் பிரியாத நாதனாகிய பரமேச்வரனால் மட்டுமே தீர்க்க முடியும். 

தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய யானையை சிவபெருமான் மீது ஏவியபோது, தன்னை அணு அளவாக மாற்றிக்கொண்டு அந்த யானையுள் பிரவேசிக்கவே, உலகம் இருள் சூழ்ந்தது. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றும் இறைவனது முக்கண்கள் ஆதலால், அவை மறைக்கப்பட்டதால் இவ்விதம் நிகழ்ந்தது. இதனால் அச்சமடைந்த உமாதேவி அவசரமாக அருகிலிருந்த முருகனை எடுத்துத் தன் இடுப்பில் வைத்துக்கொண்டாளாம். யானையைக் கிழித்துத் தோலாகப் போர்த்திக் கொண்டு வெளியே வந்த இறைவனைத் தனது தாய்க்குக் காட்டினானாம் குமரக் கடவுள். மீண்டும் உலகம் ஒளி பெற்றது. இக்காட்சியைத் திருநாவுக்கரசர் தேவாரம், 
                                      ..... " களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்த தன் தோல் மேல் பொருந்த மூடி 
                       உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி.." 

என்று நமக்கு முன்னே காட்டுகிறது. 

கம்பை ஆற்றின் அருகில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி, நியமத்துடன் வழிபட்ட காமாக்ஷி அன்னையைச் சோதிப்பதுபோலக் கம்பையில் வெள்ளம பெருகி வரவே, தான் பூஜிக்கும் மூர்த்திக்கு ஏதேனும் நேர்ந்துவிடப்போகிறதே என்று அப்பெருமானைத் அச்சத்துடன் தழுவியதும் பெருமான் வெளிப்பட்டு அருளினான் என்று காஞ்சிப் புராணம் கூறும். சுந்தரரும் இதனை, ... "வெள்ளம காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை .." என்று பாடுவார். 

தனது தேரோட்டி தடுத்தும் கேளாத தசமுகன், திருக்கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்டபோது, அம்மலை சிறிது அசையவே, பார்வதி தேவி அச்சமடைந்தாளாம். தனது பலத்தையெல்லாம் பயன்படுத்தி மலையை அரக்கன் தூக்க முற்பட்டதை அப்பர் பெருமான்,

                                                " நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை 
                         உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் .."  

எனக் காட்டுவார்.  இலங்கை வேந்தனுக்கோ இருபது தோள்களும்  பத்துச  சிரங்களும்.. அவை யாவும் பொடிப்பொடியாகும் படியாகத் தன் கால் விரலால் சற்று அழுத்தினான் இறைவன். இவ்வாறு, " பருத்த தோளும் முடியும் பொடிபட"   "தலை அஞ்சும் நான்கும் ஒன்றும் ( 5+ 4+1= 10 தலைகள்) இறுத்தான்" என்று பாடுகிறார். அரக்கனுக்கோ மலைபோன்ற கடினமான தோள்கள். ஊன்றிய இறைவனுக்கோ மலர் போன்ற மெல்லிய பாதங்கள். அதிலும் அப்பாதத்தின் விரல் நுனியாலேயே அழுத்தி, அவன் கண்களில் இரத்தம் பெருக வீழ்ந்தான் ( " கண் வழி குருதி சோரத் திருவிரல் வைத்தவர்" ) . உடனே, தனது தவற்றுக்கு வருந்தி இறைவா என்று புலம்பினானாம். கை நரம்பால் சாம வேதம் பாடி இறைவனைப் பிழை பொறுக்க வேண்டினான் அரக்கன். வேத கீதங்கள் பாடிய அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற நாமத்தையும் , போர் வாளையும் நீண்ட ஆயுளையும்,தேரையும் இறைவன் அருளினான் . இவ்வாறு தசமுகன் இராவணன் என்ற நாமம் பெற்றதைத் தாண்டக வேந்தரான நாவுக்கரசர் பெருமான்,
  
                         கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் 
                           கயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி 
                         முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி 
                           முடுகுதலும் திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப
                         பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்  
                           பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் 
                         தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச் 
                           சாராதே சால னாள் போக்கினேனே.  

என்று அற்புதமாகப் பாடுகிறார். 

அப்போது அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்பிகையின் கலக்கதைத் தீர்க்கு முகமாக, அரக்கனை அடர்த்து, அவனுக்கு அருளிய பின்னர், அம்பிகையை நோக்கி, 

                                        " ஆயிழையே , அஞ்சல் , அஞ்சல் " என்று கூறியதாக அப்பர் தேவாரம் நயமாக எடுத்துரைக்கிறது. 
                   
இந்த நயம் மிக்க பாடல், மயிலாடுதுறைக்கு அருகில் பொன்னூர் என்று வழங்கப்படும் அன்னியூர் என்ற தலத்துப் பெருமான் மீது பாடப் பெற்றது. இதோ அப்பாடல்: 

                         வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும் 
                         அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் இறப்
                         பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
                         அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.  

( இதில் " அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் " என்றது இருபது கைகளைக் குறிக்கும்.) 

நமது புலன்கள் அலமந்து அறிவு அழிந்திட்ட போது அஞ்சேல் என்று அருளுமாறு இந்த ஆதி தம்பதியர்களை ,"உள்ளத்து உள்கி உகந்து" வேண்டுவோமாக.