Wednesday, November 18, 2020

திருவிளையாடற் புராண வருணனைகள்

 

           திருவிளையாடற் புராண வருணனைகள்

                                         சிவபாதசேகரன்


அங்கயற்கண்ணி மணாளனாகிய சோமசுந்தரக் கடவுள் அடியவர் பொருட்டாக ஆற்றிய திருவிளையாடல்களைப் பரஞ்சோதி முனிவர் வடமொழியினின்றும் அழகு தமிழில் அமைத்து வழங்கியுள்ளார். புராணம் என்பது பழமையைக் குறிப்பது. கயிலையில் சிவபெருமான் உமாதேவிக்கு அருளியதை  உடன் இருந்து கேட்ட முருகவேள், பெருமானது திருவிளையாடல்களை  அகத்திய முனிவர்க்கு உரைத்தருளியதாக இந்நூல் கூறும். இதனைக் கற்போருக்குப்  பக்திச் சுவையும்  இலக்கியச் சுவையும் வழங்கிப் பரவசப்படுத்தி, ஆலவாய் அண்ணலது அலகில் கருணைக்கு ஆற்றுப்படுத்துவது இப்புராணம்.

“ பாண்டி நாடே பழம்பதி யாகவும் “ என்பார் மாணிக்க வாசகர். அப்பாண்டி நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பலவற்றுள் வைகை நதியும் தாமிர பரணி ( பொருநை  ) நதியும் குறிப்பிடத்தக்கவை. இப்புராணம் , பொருநை நதியின் வளத்தையும், பெருமையையும் ஒருங்கே அழகுற வருணிக்கிறது.

பொருநையை ஒரு ஆறாக மட்டும் நோக்காமல் ஒரு பெண்ணாகவே உருவகிக்கும் ஆசிரியரது திறம் வியந்து பாராட்டுதற்குரியது.பொதிய மலையாகிய மலை மடந்தை, பொருநையாகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது போல் இருக்கிறதாம் அம்மலையிலிருந்து உற்பத்தியாகும் தாமிர பரணி ஆறு. அந்த ஆறாகிய குழந்தை தவழ்ந்து வரும்போது,  உழவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்ட வண்ணம் வளர்ந்து வருகையில் அவர்கள் பயிரிட்ட மாந்தளிர்கள் போன்ற நிறம் உடையவளாகவும், கூந்தற்பனை மடலைப் போன்ற கூந்தலை உடையவளாகவும் மங்கை உருவாகி அருகிலுள்ள சோலைகளிலிருந்து விழும் மலர்களை அணிந்து, அடித்து வரப்படும் சந்தனம், அகில்,கஸ்தூரி ஆகியவற்றைப் பூசி, நிறைவாகத்  மணாளனாகிய கடலை அடைகிறது என்பது வருணனை.

ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் சந்தனம் போன்ற திரவியங்களைக் கரைகளில்   ஒதுக்கி  , சிவபிரானுக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களைப் போன்று அந்நதி விளங்குகிறதாம். இரு மருங்கிலும் வயல்களை வளப்பம் செய்து உணவிடுவது, சிவ பெருமானுக்குத் தாருகாவன முனி பத்தினிகள் அன்னமிட்டது போலத் தோன்றுகிறதாம்.

சில இடங்களில் ஆறு கலங்கி ஓடும் . சில இடங்களில் தெளிவாக ஓடும். அது எப்படி இருக்கிறது என்பதை ஆசிரியர் விளக்குவதைக் காண்போம். சிவபெருமானே எங்கும் நீக்கமற நின்ற முழுமுதற்கடவுள் என்றும், முக்தி அடைவதற்கு விபூதி முதலிய சாதனங்களே துணையாவான என்றும், வேதம் முதலிய கலைகளைக் கற்று அவ்வழி நிற்பதே நன்னெறி என்பதை  அறிந்தும் தெளிவு பெறாமல் சிந்தை கலங்கியவர்களைப் போலத்           தாமிரபணி சில இடங்களில் கலங்கி ஓடுகிறாள். பின்னர், சைவ நெறி பற்றிய அறிவு விளக்கம் பெற்ற பெரியோர்களது சிந்தையைப் போலத் தெளிந்து ஓடுகிறாள் பொருநை .      

மற்றுமோர் வருனனையையைப் பார்ப்போம். வானளாவி நிற்கும் பொதியமலை சிவபெருமானை நினைவூட்டுகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பெருமான் யானையை உரித்துப் போர்த்தான் அல்லவா ?        பொதிகையைச் சூழ்ந்துள்ள கரிய மேகங்கள் அந்த யானையின் தோலைப் போல இருக்கிறன . மேகத்தின் மழைத்துளிகள், அந்த யானை  உதிர்த்த இரத்தத்தையும் வானத்தில் வளைந்து காணப்படும் இந்திரவில், குருதி படிந்த யானைத் தந்தத்தையும் ஒத்து விளங்குகிறது.

பாண்டிய நாட்டின் சிறப்பைக் கூறும்போது ஒரு அழகிய வருணனை இருக்கக் காண்கிறோம். உலகம் திருமாலின் வடிவம் என  விளங்குகிறது. அவரது உந்தியில் விளங்கும் தாமரை போன்றது பாண்டிய நாடு. அம்மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்றவர் பொதியையில் வாழும் அகத்திய முனிவர். பிரமனிடம் வெளிப்பட்ட வேதத்தைப் போன்றது, அகத்தியர் போற்றி வளர்த்த தமிழ். அப்பொதிகையில் விளைந்த தென்றல் காற்றை நுகரவும்,  பைந்தமிழ்ப் பாடல்களை செவி மடுக்கவும் சிவபெருமான் விரும்பினான் போலும் ! முன்பு பாணினிக்கு சம்ஸ்க்ருத வ்யாகரணத்தை அருளிச் செய்த சிவபரம்பொருள், பொதிகையில் அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்தினான்.

இறைவன் ஒருவன் இல்லை என்னும்  நாத்திகர்களின் நாவை அறுக்கும் வாள் போன்ற வேதத்தை முழுதுமாக ஓதி, தெளிந்த மனத்தராய் , முத்தீ வளர்க்கும் மறையவர்களது இல்லங்களில் பலாசக்  கோலை ஏந்தும் மறைச் சிறுவர்கள் மறை பயில்வதை உடனிருந்து கேட்கும் கிளிகள் அம்மறைகளைத் தாங்களும் கூறுமாம். அக்கிளிகள் வேற்றிடங்களுக்குச் சென்று இரை  தேடும் போதும் அம்மறைகளை ஓதுவதால் அங்கிருக்கும் நாகணவாய்ப் பறவைகளும் அவற்றைக் கற்று, அவற்றை வானுலகிலுள்ள கிளிகளுக்கும் கற்பிக்குமாம். இப்படிச் செல்கிறது வருணனை.

அணி என்பதற்குச் சூட்டிக்கொள்வது, அலங்காரம் செய்வது என்று பொருள்கள் கூறப்படுகின்றன. பொதுவாகச் சொன்னால் அணிந்து கொள்ளும் அனைத்துமே அணி என்றாலும் ஆபரணங்களுக்கும், மாலை,உத்தரியம் ஆகியவற்றுக்கும் இது அதிகமாகவே பொருந்தும்.  அதே சமயத்தில் இறைவனுக்கும் தமிழ் மொழிக்கும் சார்த்தப்படும் பாமாலைகளையும் அணியாகவே கொள்கிறோம். தே + ஆரம் என்பது தேவாரம் ஆகி, சிவபிரானுக்குச் சார்த்தப்படும் பாமாலையாகிய அணிகலன் ஆயிற்று.  தொண்ணூற்று ஆறு வகைப் பிரபந்தங்களைப்  புலவர் பெருமக்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாக  அணிவித்தனர். தமிழ் இலக்கணம் பயில்வோர் மகிழும் வகையில் ,  கற்பனைக் களஞ்சியங்களாகத் திகழ்ந்த ஆன்றோர்கள் , உவமையணி, தற்குறிப்பேற்ற அணி ஆகிய நயம் மிக்க பகுதிகளைத்  தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாகத் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறும் தற்குறிப்பேற்ற அணியை இங்கு எண்ணலாம்.

மலயத்துவஜனது வேள்வியில் எழுந்தருளிய தடாதகைப் பிராட்டியார் , எல்லா மன்னர்களையும் திக் விஜயம் செய்து வெற்றி கொண்டபின் நிறைவாகக் கயிலைக்கு எழுந்தருளினார். தன்னை விட்டு நீங்கிய பார்வதி தேவியார் மீண்டும் வருவதைக் கண்ட கயிலை மலையானது ஆனந்தக் கண்ணீர் விட்டதாம். அந்த ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருகி ,        அன்னையே வா “ என்பது போல் அங்குள்ள அருவிகள் ஒலியை  எழுப்பினவாம். அவ்வெள்ளியங்குன்றில் தோன்றிய ஒளியானது புன்முறுவல் போல் விளங்கிப் பிராட்டியை இன்முகத்தோடுத்  தழுவி எதிர்கொள்வது போல இருந்ததாம். இயல்பாக நடைபெறும் செயல்களும் நிகழ்வுகளும் இத்தகைய வருணனைகளால் புலவரது உள்ளக் குறிப்பால் ஏற்றம்  பெற்றுத் தற்குறிப்பேற்ற அணியாக ஆகி விடுகின்றன. மலையிலிருந்து அருவிகள் வீழ்வதும், ஓசை எழுப்புவதும், கதிரவன் ஒளியில் மலை ஒளிர்வதும் இயல்பாக நடப்பனவாகும். இவை யாவும் அன்னையை வரவேற்பது போன்று உள்ளது என்று பரஞ்சோதி முனிவர் தற்குறிப்பை ஏற்றி அணியாக்கிய பாடலைக் கண்டு இன்புறுவோமாக:

“ வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்

போனாள் வந்தாள் என்று அருவிக் கட்புலனுக்கு அந்நீர்

ஆனா ஒலியால் “ அ(ன்)னை வா “ என்றழைத்துத் தன தேசு

தானாம் நகையால் தழிஇ எதிர் ஏற்பச் சென்றாள்.”

தனது வெண்ணகை (போன்ற) ஒளியால் அன்னையைத் தழுவி அம்மலை வரவேற்றது என்பதைத் தழிஇ என்று அளபெடையாக அமைத்துள்ளதும் கற்போர்க்கு விருந்தாவதாம்.    

Wednesday, October 28, 2020

             சோற்றுத்துறை சென்று அடைவோமே                                                  

                                                      சிவபாதசேகரன்


                                                                                 திருச்சோற்றுத்துறை சிவாலயம் 

“ சோழ நாடு சோறுடைத்து” என்பார்கள். இங்கு சோறு என்பது உண்ணும் உணவை மட்டும் குறிப்பதன்று. மோக்ஷம் என்றும் பொருள் தரும். சண்டிகேசுவரரின் செயல் உலகரீதியில் நோக்கினால் பாதகமானாலும் அதுவே அவருக்கு மோக்ஷமாகிய சிவபதத்தைக் கொடுத்தருளிற்று. எனவே,இதனைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர், “ பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” என்கிறார். தனதடி வழிபடுவோர்க்கு ஞானமும் வீடுபேறும் தருபவன் பரமேசுவரன். இப்பிறவியில் உயிர் வாழத் தேவையான சோற்றையும் அளித்தருளுகிறான். பசித்திருந்த அப்பருக்கும் சுந்தரருக்கும் பொதி சோறு கொண்டு வந்து பசி தீர்த்தான் என்று பெரிய புராணத்தால் அறிகிறோம்.

சோழ நாடு ஒரு புண்ணிய பூமி. சிவராஜதானியும் கூட.  மூவர் தேவாரம் பெற்ற 274 தலங்களுள் 190 தலங்கள் சோழநாட்டில் உள்ளன. அவை ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஒரு சேரத் தரவல்ல மகிமை உடையவை. சோழ அரசனைப் புனல் நாடன் என்றும் பொன்னி நாடன் என்றும் கூறுவது மரபு. தனது  நாட்டு மக்களுக்கு என்றும் குறைவுபடாத வகையில் நெல்லை விளைவித்தும் சிவஞான முக்தியையும் தரும் ஒப்பற்ற கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாக சோழ நாடெங்கிலும் சிவாலயங்களை எழுப்பியும் திருப்பணி செய்தும் சோழ மன்னர்கள் மகத்தான தொண்டாற்றினார்.

பரம ஞானிகளோ உண்டு உடுத்து இருப்பதை விரும்பார். “ உண்டு உடுத்து இருப்பதானேன் போரேறே” என்பது திருவாசகம். மீண்டும் ஒரு பிறவி ஏற்பட்டு நெல் சோற்றை உண்டு உடலைக் காப்பதே கடனாகக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு அவர்களைப் பிறவியிலிருந்து காத்து, நெற் சோறு  உண்ணாமே காக்க வல்ல காவலனைப் பாடும்போது, சாக்கிய நாயனாரது சரிதையையும் உடன் மொழிவார் அப்பர் பெருமான். கல்லை எறிந்து வழிபடும் சாக்கியரை விசும்பு ஆள வைத்த சிறப்பைக் கூறுமிடத்தில்,

“ கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார்

நெல்லினால் சோறு உண்ணாமே நீள்  விசும்பு ஆள வைத்தார் “

 என்பார்.

“அன்னாநாம் பதயே நமோநமோ ‘ என்கிறது ஸ்ரீ ருத்ரம். அன்னத்தைத் தந்தருளுவதால் அதற்குத் தலைவனான சிவபெருமானுக்குப் பலமுறை நமஸ்காரம் என்று வெளிப்படையாகப் பொருள் கூறலாம். அப்பெருமான் அன்னத்திற்குப் பதியாக மட்டுமல்லாது அன்ன வடிவினனாகவே இருக்கிறான் . அவன் தந்த கொடையை அவனுக்கே அறிவித்து அதனையே சிவப்ரசாதமாக நாம் கொள்கிறோம். எவ்வளவோ நைவேத்தியங்கள் இருப்பினும் இதை மஹா நைவைத்தியம் என்கிறோம். அதிலுள்ள ஒவ்வொரு பருக்கையும் ஓர் சிவலிங்கமே. அதனை நினைப்பூட்டும் வகையில் பழங்காலந்தொட்டு சிவாலயங்களில் ஐப்பசி மாதப் பௌர்ணமியில் சிவலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தில்லையில் ஸ்படிக லிங்க மூர்த்திக்குத் தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

திருவையாற்றின் சப்த ஸ்தான தலங்களில் திருச் சோற்றுத்துறையும் ஒன்று. சித்திரை மாதத்தில் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளும்போது வந்தோர் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. பஞ்ச காலத்தில் ஒரு ரிஷியானவர் இங்கு ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இத்தலத்து இறைவனது அருளால் வந்திருந்த அனைவருக்கும் பசியாற்றி வந்தார் என்பது தல வரலாறு. எனவே சுவாமிக்கு ஒதனவநேச்வரர் என்றும் அம்பிகைக்கு அன்னபூரணி என்றும் பெயர்கள் இன்றும்  வழங்கப்படுகின்றன.  ஓதனம் என்றால் உணவைக் குறிக்கும் .


சிவ பக்தனான அருளாளன் என்ற அந்தணன் தன் மனைவியுடன் இங்கு வந்தபோது சுவாமி அவர்களுக்கு எடுக்க எடுக்கக் குறையாமல் அன்னம் வழங்கும் அக்ஷய பாத்திரம் ஒன்றைத் தந்தருளியதாகத் தல வரலாறு மூலம் அறிகிறோம். காவிரிக் கரையில் உள்ள இந்த அற்புதமான தலத்தை மூவரும் தேவாரம் பாடியுள்ளார்கள். சப்த ஸ்தானங்களில் மூவர் பதிகங்களும் கிடைக்கும் தலங்கள் திருவையாறும் திருச்சோற்றுத்துறையும் மட்டுமே. திருவையாறு மற்றும் தஞ்சாவூர் அன்பர்கள் அடிக்கடி இங்கு சென்று வழிபடலாம். டாக்டர் உ.வே.சா. அவர்களின் ஆசிரியப்பிரானான திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய ப்ரபந்தம் ஒன்றில், நாம் தினந்தோறும் உணவு உண்ணுகையில் சோற்றுத்துறையை நினைவு கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறார். எனவே உண்பதன் முன்னர் , அந்த  உணவை ஒதனவநேசுவரரும் அன்னபூரணியும் தந்தருளியதாக எண்ண வேண்டும் என்பது பெறப்படும்.

அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை நீர் வாழ் உயிரினங்களுக்கும் அளிப்பது வழக்கம். எல்லா உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறான் என்ற தத்துவம் இதன் மூலம் அறியப்படுகிறது.

இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை வரும் வெள்ளியன்று(30.10.2020) அன்று செய்வதா அல்லது (31.10.2020)சனிக்கிழமையன்று செய்வதா என்று சிலரிடையே குழப்பம் இருப்பதாக அறிகிறோம். பௌர்ணமியும் அசுவினி நக்ஷத்திரமும் அன்றையதினத்தில் ( அபிஷேகம் செய்கையில்) இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இவ்வாண்டில் வெள்ளியன்று பௌர்ணமி மாலை ஏழு மணி அளவில் வருவதால் அதற்கு முன்பாக , அதாவது சதுர்த்தசி இருக்கும்போதே செய்வதா என்பது கேள்வி. ஆனால் ஏழு மணிக்கு மேல் திதி ,நக்ஷத்திரம் இரண்டும் இருந்தாலும் அபிஷேகத்தை ஏழு மணிக்கு ஆரம்பித்தால் நிறைவடைய சுமார் ஒன்பது மணி ஆகி விடும். அதற்குப் பிறகு அலங்காரத்தைக் கலைத்து விட்டு அபிஷேகம் செய்து அர்த்த ஜாமம் செய்தால் வெகு நேரமாகி விடும்.  

 ஆனால் சனிக் கிழமை மாலை சுமார் ஏழு மணி வரை அசுவினி, பௌர்ணமி ஆகிய இரண்டும் இருப்பதால், அன்னாபிஷேகத்தை மதியம் மூன்று அல்லது நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஆறு மணிக்கு பக்தர்கள் தீபாராதனையைத் தரிசிக்க எதுவாக இருக்கும் என்பது சிலரது அபிப்பிராயம். கங்கை கொண்ட சோழபுரத்திலும் சனியன்றே நடைபெறுவதாக அறிகிறோம். கற்றறிந்த பெரியோர்கள் சிவாகமம் கூறுவதை ஒட்டித் தங்கள் அபிப்பிராயத்தை அனைவருக்கும் அறியத் செய்வது நல்லது.

நிறைவாக ஒரு வார்த்தை. நடராஜர் அபிஷேகம் என்பது சிதம்பரத்தை ஒட்டி நடைபெறுவதுபோல் அன்னாபிஷேகம் என்பது திருச்சோற்றுத் துறையை முன்னோடியாக வைத்து நடைமுறைப் படுத்தலாம். ஒரே பஞ்சாங்கத்தில் இரு தினங்களும் அன்னாபிஷேகம் என்பது போன்ற செய்திகளால் குழப்பம் விளையாமல் இருக்கும். இவ்வாண்டு, திருச்சோற்றுத்துறையில் வரும் சனிக்கிழமை பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்று,மாலையில் தீபாராதனைகள் நடைபெறுவதாக அறிகிறோம்.  “ அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே” என்று அம்மையப்பரின் இத்தலத்தைச் சென்று வழிபட்டு உய்வோம் என்று ஞானசம்பந்தர் நமக்கு உய்யும் நெறி காட்டியுள்ளார்.

தீய வினைகளைச் செய்ததன்  பலனாக நோய்களால் துன்புறுகிறோம். அக் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு மனத்தாலும் உடலாலும் தளர்ச்சியடையும் போதாவது இறைவனது நினைவு வர வேண்டும். வேதமும் கலைகளும் பிற தோத்திரங்களும் இளமையிலிருந்தே கல்லாமலே காலம் கழிந்து விட்டபடியால் இப்போதாவது அவனை அபயமாகச் சரணடைய வேண்டும். கற்பகக் கொழுந்தான அக்கடவுள் சந்திரனுக்கு மட்டுமல்லாது நமக்கும் அடைக்கலம் அளித்து அபயம் தர வல்லவன். உற்றார் எவரையும் இல்லாமல் தானே எல்லாவற்றுக்கும் மூல காரணனாய் ஆகி, அனைத்துக் கலைகளுக்கும் பிறப்பிடம் ஆகி, உலகோரால் வழிபடப்பெறும் சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள ஒளி  மயமான பரசிவத்தைப் பணிந்து அவனுக்குப் பணி செய்து அவனது தாளில் அபயம் அடைவதே நாம் உய்யும் வழி என்று அப்பர் சுவாமிகள் இத்தலத்தில் அருளிய திருத்தாண்டகப்பாடல் ஒன்றை இங்கு தருகின்றோம்:

முற்றாத பால் மதியம் சூடினானே

முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே

உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே

உலகு ஓம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்

கற்றானே எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன்

தீவினை நோய் கண்டுபோகச் செற்றானே

திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே

சிவனே உன்  அபயம் நானே.

என்ற பாடலை உணர்ந்து மனமுருகிப் பாடி உலக நன்மைக்காக வேண்டுவோமாக.

Sunday, October 18, 2020

மனமும் மதியும்

 

                                                        மனமும் மதியும்  

                                                                          சிவபாதசேகரன்

திருவொற்றியூர் ஆலய கோபுரம் 

உணர்ச்சிமயமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது. சுமார் பத்து வயது பெண் குழந்தையாக இருக்கலாம். அந்தப் பெண்ணை  இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மறுநாளன்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர் அப்பெண்ணைப் பார்க்க அறைக்கு வந்தார். அப்பெண்ணோ அவரிடம் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு கேள்வி கேட்டாள். “ நாளை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறந்து பார்க்கும் போது என்ன பார்த்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா” என்றாள். “ எதற்காக அம்மா இப்படிக் கேட்கிறாய்” என்றார் அந்த மருத்துவர். “ என்னுடைய உயிர் சினேகிதி சொன்னது ஞாபகம் வந்தது அதான் கேட்டேன் “ என்றாள்.   அவள்  சொன்னது இதுதான்: “அனுமன் , தனது  மார்பைத் திறந்து அதற்குள் சீதா தேவியும் இராமபிரானும் இருப்பதைக் காட்டுவதாகப்  படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோலத்தான்  நம் ஒவ்வொருவருடைய மனத்திற்குள்ளும் நாம் வழிபடும் கடவுள் இருப்பார் “  என்று சொன்னாளாம். கள்ளம் கபடம் அறியாத இக்குழந்தைக்கு அவளது  சிந்தையை விட்டு நீங்காமல் தோழியின் வார்த்தைகள் பதிந்து விட்டதால் மருத்துவரிடம் இப்படிக் கேட்டாள். “ எனக்குத் தெரிந்த கடவுள் என்னைப் பெற்றெடுத்த தாயும் தந்தையுமே ஆவார்கள். என் இதய தெய்வமாகிய அவர்களை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறக்கும்போது பார்ப்பீர்களா டாக்டர் ? “ என்றாள். சுற்றிலும் நின்று கொண்டிருந்த அனைவரது நெஞ்சையும் இக்கேள்வி பிழிந்தெடுத்து விட்டது. அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் தான் எப்படிப்பட்ட நம்பிக்கை !  “ பார்ப்பேன் அம்மா. நாளைக்கு உனக்கு நினைவு திரும்பியதும் கண்டிப்பாக உன்னிடம் வந்து சொல்வேன் “ என்று தன் கண்களில் எழும்பிய நீரை அடக்கிக் கொண்டு பதில் சொன்னார் அம்மருத்துவர்.     

நாமோ வயதாக ஆக , நமது கேள்விக்கான பதில்களை விஞ்ஞான பூர்வமாக எதிர் பார்க்கிறோம். பதில் கிடைக்காமல் போனால் அவற்றை மூட நம்பிக்கை என்று பெயரிட்டு ஒதுக்கி விடுகிறோம். இதயத்திற்குள் கடவுள் இருப்பதாவது என்று சிரித்தபடியே நமது மேதா விலாசத்தைப் பறை சாற்றிக் கொள்கிறோம். காலம் காலமாக விஞ்ஞானத்தால் விளக்க இயலாதவற்றை நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று யாராவது விளக்கம் தர வேண்டியிருக்கிறது.

முதலில் மனம் என்பது இருதயமா அல்லது தகவல்களைச் சேகரிக்கும் மூளையா என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே காலம் தள்ளுகிறோம். மதி என்பதற்கு மூளையைச் சுட்டிக் காட்டுகிறோம். ஒருவன் புத்திசாலி என்றால்  மனத்தாலா அல்லது மதியாலா என்ற கேள்வி எழுகிறது.

“ என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று சிவபுராணம் சொல்லும்போது  நெஞ்சகம் என்பதற்கு இதயம்/மனம்  என்றே பொருள் கொள்கிறோம்.  இதை நாவுக்கரசரும் “ மனத்தகத்தான் “ என்றார். சிந்திப்பது என்று வந்து விட்டால் அது மூளைக்கே உரியது என்கின்றோம். “ சிந்தனை நின்தனக்கு ஆக்கி” என்பது திருவாசகம். இதயமாகட்டும் அல்லது மூளையாகட்டும், அவை யாவும் எலும்பும் நரம்பும் உதிரமும் சதையும் தானே! “ மூளை எப்படி உருவாகிறது என்பதை , “ கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்றாகி” எனக் காட்டுகிறது அப்பர் தேவாரம்.

“ நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்” இறைவனைக் காண வேண்டில், சிந்தை முற்றிலும் சிவமாகவேண்டும். “ என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே “ என்றார் சுந்தரர். மனம் அடிமையாகிவிட்டால்  காயம் கோயில் ஆகி விடுகிறது. மனத்தகத்தே உறையும் பரம்பொருள் உச்சியிலும் அமர்கிறான். இதைத்தான் அப்பரும், “ மனத்தகத்தான், தலைமேலான் “ என்று அருளினார்.

இவ்வாறு மனமும் மதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மதியாவது மூளையையும், சிந்தனையையும் மட்டுமே குறிக்காமல் சந்திரனையும் குறிக்கும். மதி சேகரன் என்று அம்புலியைச் சூடிய சிவபெருமான் குறிக்கப்படுவதால் இதனை அறியலாம். ஜாதகத்தில் சந்திரன் பாதகமாக அமைந்திருந்தால் மனநலம் குன்றியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு பிரசங்கமே செய்துவிடுவார்கள் சோதிட வல்லுனர்கள்.

“ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்றபடியால் அந்த மனமாவது இதயத்தைக் குறிப்பதா அல்லது மதியைக் குறிப்பதா என்று கேட்கலாம். சிவாகமம் இரண்டையும் போற்றுகிறது. கும்பாபிஷேக யாக சாலை பூஜையில் ,தனது மார்பிலும் சிரத்திலும் ஆசாரியர் மலர்  தூவித் தியானிப்தைப் பார்க்கிறோம். இறைவன் வீற்றிருக்கும் மார்பிற்குத் தரப்படும் மரியாதை , அதன் மீது சூட்டப்பெறும் ருத்ராக்ஷ மாலை என்றால் அதுவும் கொள்ளத்தக்கதே. சிரோவடமாலை என்பது தனது சிரத்தைச் சுற்றி அணிந்து கொள்ளும் ருத்ராக்ஷ மாலை. இதுவும் அத்தகையதே.

கடலில் மனமாகிய  தோணியைக் கொண்டு நாம் கடக்க முயலுகிறோம். அதற்கேற்றபடி நமது மதி (சிந்தனை) ஒரு துடுப்பை ( கோலை ) நமக்குத் தருகிறது . அதில் உள்ள சரக்கோ சினம் என்பது. அப்போது இடைப்பட்ட  ஒரு பாறையில்  இந்தத் தோணி மோதி விட்டால் யாரே துணையாக வருவர்? இறைவனைப் பற்றிய சிந்தனையாவது அப்போது வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வும் இறைவன் தந்தே வர வேண்டும். அதனைத் தனக்கு வரமாக அளிக்க வேண்டும் என்று திருவொற்றியூர்ப் பெருமானைப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்.   

“ மனமெனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.”   

மனத்தாலோ மதியாலோ வழிபட்டாலும் இறைவனது கருணை ஒன்றை மட்டுமே நாம்  துணையாகப் பெற வேண்டும் . இச் சித்தாந்தக் கருத்தைக் குறிப்பதாக மேற்கண்ட பாடல் அமைகிறது . அவ்வழிபாடும் அவனருளாலே நிகழ்வதாகும். “ சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி” என்று ஔவையும் விநாயகர் அகவலில் விளக்கியமை காண்க.   

Saturday, September 12, 2020

பல பொருட் சொற்கள்


ஒரே பொருளைத் தருவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் பல பொருட்களைத் தரும் சொற்கள் தமிழில் இருக்கக் காணலாம். நாம் அடிக்கடிப்  பயன்படுத்தும் சொற்கள் பலவற்றுள், வேட்கை,ஆசை, அவா,பாசம்,அன்பு, நேசம், காதல் போன்றவை ஒரே பொருளைக் குறிப்பது போலத்  தோன்றினாலும் இடத்திற்கேற்ப வேறு வேறு பொருள் கொள்ளத்  தக்கவை ஆகும். 

ஏதேனும் ஒன்றைத் தனக்கு உரியதாக அடைய வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் ஏற்படும்போது எழுவது வேட்கை. அதில் சுய நலம் ஓங்கி நிற்கும். சாதாரண ஒரு பொருளை வாங்குவது,கைப்பற்றுவது முதலாக நாடு பிடிப்பது வரையில் வேட்கை ஏற்படுகிறது. வேண்டுவதற்கும் வேட்கைக்கும் வித்தியாசம் உண்டு. தானும் பிறரும் உய்ய வேண்டும் என்று அருளாளர்கள் வேண்டுவது வேட்கை ஆகாது. அவர்கள், " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்,வேண்டேன் விண்ணும் மண்ணும் " என்ற கொள்கை உடையவர்கள். இறைவனே கருணை புரிந்து எதனை அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அவ்விரண்டையும் சமமாகப் பாவிப்பவர்கள். நமக்கு வேண்டுவதை இறைவன் நாம் சொல்லாமலே அறிவான் என்பதால், " வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்  அதுவும் உந்தன் விருப்பன்றே "  என்று இருந்து விடுவார்கள்.  பாமரர்கள் மட்டுமல்லாது தேவர்களும் தனக்கே அனைத்தும் வேண்டும் என்ற வேட்கை உடையவர்கள். " இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்" என்பதே அவ்வேட்கை. 

வேட்கை மேலிடுவதால் ஏற்படுவது ஆசை. இங்கும் அருளாளர்கள் எவ்வாறு ஆசைப்பட்டார்கள் என்று முதலில் நோக்குவோம். திருவாசகத்தில் ஆசைப் பத்து என்ற ஒரு பதிகம் அமைந்துள்ளது.மாணிக்க வாசகர் ஆசைப்பட்டதெல்லாம் இறைவனைக் காண வேண்டும் , அவனது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் , அவனது ஆயிரம் பெயர்களால் போற்றித் துதிக்க வேண்டும் என்பதே.அவரது உள்ளக் கிடக்கையைக் கீழ்வரும் அவரது பாடலால் அறியலாம்: 

" கையால் தொழுது உன் கழற்சேவடிகள் 

கழுமத்  தழுவிக் கொண்டு 

எய்யாது என்றன் தலைமேல் வைத்து 

எம்பெருமான் பெருமான் என்று 

ஐயா என்றன் வாயால் அரற்றி 

அழல் சேர் மெழுகு ஒப்ப 

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் 

கண்டாய் அம்மானே "  

என்பதால் இறைவன் பால் கொண்ட ஆசை அன்பு மீதூர , உள்ளம் அனலில் பட்ட மெழுகு போல் உருக மனம் நைந்து , வாய் அவனது நாமங்களைக் கூறி அரற்றுவதில் முடிகிறது. 

இத்தனை அன்புடைய தொண்டருக்கு இறைவன் இரங்காமல் இருப்பானா ? ஞானசம்பந்தர் அழகாகப் பாடுகின்றார் , " ஆசை தீரக் கொடுப்பார் " என்று. 

ஆனால் நாம் எதற்கெல்லாம் ஆசைப் படுகிறோம் என்பது நமக்கே தெரியும். விளக்கம் தேவை இல்லை. 

ஆசை என்பது அன்பில் நம்மை செலுத்துவதாக இருக்க வேண்டும். அன்பே பக்திக்கு அடிப்படையாக அமைவது. அந்த அன்பும் இறைவன் தந்ததாகவே இருத்தல் சிறப்பு. அவ்வன்பு மாறாததாகவும் இனியதாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம். அன்பின் வடிவமாகக் கண்ணப்ப நாயனார் திகழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறும். காரைக்கால் அம்மையும், " இறவாத இன்ப அன்பு " வேண்டினார் என்பார் சேக்கிழார் பெருமான். அப்படிப்பட்ட மேலான அன்பைத்  தனக்கு அருள வேண்டும் என்று பெருமானைத் துதிக்கிறார் மணிவாசகர்:

" மெய்யன்பை உடையாய் பெற நான் வேண்டுமே" என்பது பிரார்த்தனைப் பத்தில் வரும் அழகிய வரி. அத்தகைய அன்பே சிவானந்தம் பெறுவதற்கு வித்தாகிறது. அதன் விளைவை அவர் மட்டுமே கூற இயலும்:

" உள் உருகிப் பெருகி நெக்கு ஆடிஆடி ஆனந்தம் அதுவேயாக அருள்"  என்பது அவ்வுயரிய பிரார்த்தனை. அப்போதுதான் அன்பும் சிவமும் வேறல்ல என்ற ஞானம் பிறக்கிறது. அந்த ஞானம் கிட்டியவர்களது நிலையைத் திருமூலர்           " அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே  " என்பார். இல்வாழ்வுக்கும் அன்பும் அறனும் இன்றியமையாதது என்று திருக்குறளாலும் அறிகிறோம். அன்பு மேலிட்ட அற  வழியில் அமைந்த வாழ்க்கையே பண்பையும்  உயர்ந்த பயனையும் தர  வல்லது என்பது என்பது வள்ளுவர் வாக்கு. அன்புடைமை என்ற ஒரு அதிகாரத்தையே நமக்கு அருளியுள்ளார் தெய்வப்புலவர்.     அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்  சொல் ஆகிய நான்கையும் தவிர்க்க வேண்டும் என்பதே அவர் காட்டிய நன்னெறி. 

பாசமாவது நம்மை உலகியலில் சிக்க வைப்பது. அது மனிதர்கள் மீதோ, பறவை மற்றும் விலங்கினங்களின் மீதோ இருக்கக் கூடியது. அதிலிருந்து விடுபடமுடியாமல் வாழ்க்கை முழுதும் செலவாகிப் பயனற்றுப் போய், அப்பாசமே  மீண்டும் ஒரு பிறவிக்கு நம்மை ஆயத்தம் செய்கிறது. சைவ சித்தாந்திகள், பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையை வலியுறுத்துவார்கள் . பசுக்களாகிய நம்மைப்  பதியாகிய பரம்பொருளிடம்  நாடவிடாமல் தடுப்பது பாசமே ஆகும். அதனைக் கடக்கும் ஆற்றலையும் பெருமானே தந்தருள வேண்டும். இதனைப், " பாசமான களைவார் " என்று சம்பந்தரும், " பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே  " என்று சிவபுராணத்தில் வரும் சிவபுராண வரியும் உணர்த்துவது காண்க. 

பாசத்தால் உலகியலோடு பந்தம் ஏற்படுகிறது. அதுவே முத்தி நிலை அடைவதற்குத் தடையாக இருப்பது. திருஞானசம்பந்தர், தனது அவதாரத்தை நிறைவு செய்யும் தருவாயில் அருளிச் செய்த நமசிவாயத் திருப்பதிகத்தின் முடிவில்  ,  " ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே " என்பதால் பந்தம் அறுந்தாலன்றி முத்தி நிலை கிட்டாது என்பது வலியுறுத்தப்பட்டது. 

நேசக் கரம் நீட்டுவதும் பயன் பெற்றவர்களது தற்காலிக மகிழ்ச்சிக்கே. பயன் பெற்றபின்னர் நேசத்திற்கு மோசம் வந்து விடுகிறது. நேசித்தவரை மறப்பதால் அந்த நற்செய்கை பயனற்றுப் போய் விடுகிறது. இது உற்றார் உறவினருக்கும் பொருந்தும்.  உதவி பெறும் போது காட்டும் முகமலர்ச்சி , பின்னாளில் முழுவதுமாக இற்றுப் போய் விடுகிறது. 

எஞ்சியுள்ள காதல் என்னும் சொல் பேரின்பப்பொருளுக்கே உரியது. இந்நாளில் ஆசை/அன்பு என்று பொருள் தருவதாகத் தவறாகப் பொருள் கொண்டு அதனைச் சிற்றின்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்வோர் அதன் அருமை தெரியாதவர்கள். 

ஒருவன் எவ்வளவுதான் , எத்தனை ஆண்டுகள் தான் ஆசைப்பட முடியும் ? ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும் அல்லவா? அற்பசுகத்தைக் காமம் என்றும் காதல் என்றும் நினைப்பவர்கள் அதன் மறு எல்லையைப் பற்றி எப்போதாவது சிந்திப்பதுண்டா? அந்த எல்லைக்குப் பெயர்தான் காம கோடி என்பது. அப்போது காமம் அழிந்து இறைவன் பால் காதல் ஏற்படுகிறது. அதன் விளைவாக உள்ளம் கசிகின்றது. நம்மை அறியாமலேயே கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிகின்றன. நாத்  தழு தழுக்க அவன் நாமங்களை ஓத முற்படுகிறது. சிவஞானம் சித்திக்கிறது. நன்னெறியும் வாய்க்கிறது. இவ்வளவும் அடைய வேண்டுமானால் உலகப் பற்றுக்கள் முழுதும் நீங்கிப் பாச வேர் முற்றிலும் அறுமாறு உள் ஒளி பெருக்கப் பெற்று, உலப்பிலாத ஆனந்தம் பெறுமாறு  அவனது ஐந்தெழுத்தை மறவாது ஆயுள் முழுதும் உச்சரித்தால் நம்மை மெய் நெறியில் ஆட்படுத்தி நிறைவாகத் தனது  கழல் தந்தருளுவான் என்பதே அருளாளர்கள் உபதேசம்.

பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதீ 

வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே 

பேராயிரமும் பரவித்திரிந்து எம்பெருமான் என ஏத்த 

ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 

என்ற திருவாசகம் , ஆசை அன்பாக மாறுவதையும் அதுவே ஈசன் பால் நீங்காத காதலாவதையும் நமக்குக்  காட்டி, அந்நிலையை இறையருளே  நமக்குத் தந்தருள வேண்டும் என்பதையும், அதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவேண்டி, பெருமானின் பல்லாயிரம் நாமங்களையும் ஓத வேண்டும் என்பதையும் அருமையாக உணர்த்துகிறது.  
 

 

 

Thursday, August 27, 2020

மறவாது கல் எறிந்த சாக்கியர்

 


உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர் வாழ்வதற்குத் தேவைப்பட்டது உணவே ஆகும். இன்றளவும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்களுக்கு அதுவே அடிப்படைத் தேவை ஆகிறது. பறவைகளும் விலங்குகளும் தங்களது பாதுகாப்புக்காகக் கூடுகளை ஆங்காங்கே அமைத்துக் கொள்வதுபோல் மனிதனும் பின்பற்றினான். ஆனால் மனிதன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. உடுக்க உடையையும் வசிக்கக் கூரை உள்ள வீட்டையும் ஏற்படுத்திக் கொண்டான்.எவ்வாறாயினும் உணவும் உறக்கமும் இன்றியமையாதனவாகப் போய் விட்டன.   

ஒரு காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது மனிதன் உணவைத் தேடும்படி இருந்தது. கிடைத்த காய்களையும் கனிகளையும் புசித்துப்  பசியைப் போக்கிக் கொண்டான். நாளடைவில் தானே பயிரிட்டு அத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அப்படியும் இயற்கையின் ஒத்துழைப்பு விவசாயத்திற்கு இன்றளவும் தேவைப்படுகிறது. இப்போதோ தேவைக்கு அதிகமாகவே புசித்து வருகிறான்.உணவையும் சேமித்து வருகிறான். இருந்த இடத்திலிருந்தே உணவைத் தருவித்துக் கொள்கிறான். இதற்கிடையில் பசித்தோருக்கு அன்ன தானமும் செய்கிறான். 

 மாணிக்க வாசகரோ , " உண்டு உடுத்து இருப்பதானேன் " என்று பாடுகிறார். மானுட வாழ்க்கை என்பது  உண்பதிலும் உடுப்பதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது என்பதால் மகான்கள்,                   " வேண்டேன் மானுட வாழ்க்கை" என்று பாடினர். இவ்வாறு ஆக்கைக்கே இரை தேடுவதில் காலம் கழிவதால் மானுடப் பிறப்பை அவர்கள் விரும்பவில்லை. வட மாநிலத்தில் வசித்து வரும் ஒரு இல்லத்தரசியார் தனது வேண்டுதல் நிறைவேறுதல் பொருட்டுப் பல்லாண்டுகளாகப் பழங்களையும் பாலையும் உண்டு வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியது. 

தேவ லோகத்தில் நிலையே வேறு.அவர்கள் கண் இமைக்கமாட்டார்கள். நிலத்தில் பாதம் தோய நடக்க மாட்டார்கள். சுயம்வரத்தில் வந்த தேவர்களுக்கு இவ்வாறு காணப்பட்டதால் தோற்றம் ஒன்றானாலும், கண் இமைத்தலானும் கால்கள் காசினியில் தோய்தலாலும் உண்மையான நளனை எளிதே கண்டறிந்து மாலையிட்டாள் தமயந்தி என்று நளவெண்பா மூலம் நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட நிலை இறைவனது உண்மை அடியார்களுக்கும் கிடைக்கும். மீண்டும் பிறவாது சிவலோகத்தே என்றும் இருக்கலாம். மீண்டும் பிறந்து அரிசிச் சோற்றை வேளா வேளைக்குத் தேடும் நிலை ஏற்படாது. 

நாம் உண்ணும் உணவு இறைவனது அருட் கொடை என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும். " பயிர் காட்டும் புயலானும்" என்றும் " பாரதனில் பயிர் ஆனான் காண் " என்றும்  திருமுறைத் தொடர்கள் இதையே காட்டுகின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக உண்பதற்கு முன்பாகப் பெருமானுக்கு மலரிட்டு அர்ச்சித்து விட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும் என்ற நியமம் பூண்டு வாழ்ந்தனர் நமது முன்னோர். கிராமங்களில் வாழும் பலர் இன்றைக்கும் உச்சிக் கால மணியின்  ஒலி அருகிலுள்ள ஆலயத்தில் எழுப்பப் படுவதைக் கேட்ட பிறகே தமது இல்லங்களில் உணவு உண்பதை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்யாதோருக்கு விளையும் தீமைகளை அப்பர் பெருமான் , " உண்பதன் முன் மலரிட்டு உண்ணாராகில்  "                             " பிறப்பதற்கே  தொழிலாகி இறக்கின்றாரே" என்பார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சாக்கிய நாயனார் என்பவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் பால் ஈர்க்கப்பட்டுப் பெருமானை மலரிட்டு வழிபட்டு வந்தார். ஒருநாள் மலர்கள் கிடைக்காமல் போகவே, அருகாமையில் இருந்த கற்களைக் கொணர்ந்து அவற்றைக்  கொண்டு வழிபட்டார். இச்செயலை நியமமாகவே கொண்டு உறுதியுடன் கல்லெறிந்து வழிபட்ட பின்னரே உண்பது என்று பேரன்பு கொண்டு ஒழுகினார். இதனைச் சேக்கிழார் பெருமான், " உறுதி வரச்  சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து " என்கிறார். 

காஞ்சிக்கு அருகிலுள்ள திருச் சங்கமங்கையில் வாழ்ந்து இவ்வாறு கல்லெறிந்து அளவற்ற அன்போடு நாயனார் வாழ்ந்து வரும் வேளையில் ,           " பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் " என்ற உறுதியோடு நின்றார் என்கிறது பெரிய புராணம். " சிவ நன்னெறியே பொருள் ஆவது " என்ற உணர்வு கொண்டார் சாக்கியர். இந்த ஞானம் அவருக்கு " சிவன் அருளாலே உணர்ந்து அறிந்த" தாகத் தெய்வத் சேக்கிழார் காட்டுவார். மேலும் " அன்பினால் மறவாமை தலை நிற்பார் " என்று புராணம் கூறுவதால் இந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் விலகியது இல்லை என்பது தெளிவாகிறது. கல் இருந்ததையும் மனம் பதைப்போடு தான் செய்தார் எனக் காட்டுகிறது பெரிய புராணம். " கல் கண்டு அதனைப் பதைப்போடும் எறிந்தார் " என்பதைக் காண்க. அதனை இறைவன் மலர்களாகவே மனமுவந்து ஏற்றான் என்பதை, இளம் புதல்வர்கள் இகழ்ந்த செயல் செய்தாலும் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பதுபோல " நீள் சடையார் தாம் மகிழ்வார் " என்று பக்திச்  சுவையோடு வருணிக்கிறார் சேக்கிழார் பெருமான். இவ்வளவுக்கும் புத்த பிட்சுக்களுக்கான துவர் ஆடையைத் தவிர்க்காமல் இதனைச் செய்து வந்தாராம். மற்றவர்கள் அதனைக் கல் என்றாலும் சிவபிரான் அதனை மலராகக் கொண்டான் என்பதை, " அல்லாதார் கல் என்பார் ; அரனார்க்கு அஃது அலர் ஆமால்  " என்ற உயரிய வரிகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

சிவத்தொண்டுக்குப் பலன் கிட்டும் காலம் ஒரு நாள் வந்தது. நாயனாரது பெருமையை உலகோர் அறியும்படி இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான். அன்றையதினம் நாயனாருக்கு கண் அயர்ச்சி மேலிடச் செய்தான். இந்தக் கட்டத்தில் தான் பெரிய புராணத்தை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும்.  அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் " என்பதைச் சிலர் கல் எறிந்து இறைவனை வழிபடும் முன்பாகவே உணவு உண்டார் என்று தவறாகப் பொருள் கொள்வதைப்  பார்க்கிறோம். உண்ணப் புகுதல் என்பது உண்டு விட்டதைக் குறிக்காது. அதற்கான ஏற்பாடுகளுடன் அதற்கு ஆயத்தமாதல் என்பதே பொருள். அந்த அயர்ச்சியும் அருள் காரணமாக இறைவன் தந்தருளியதேயாம். 

இந்த அயர்ச்சியும் சில நிமிடங்களே நீடித்திருக்கக் கூடும். நியமத்தின்  பயனாக அந்நிலையிலிருந்து மீண்டெழுந்த நாயனார், " எங்கள் பிரான் தன்னை எறியாது அயர்ந்தேன் யான் "  என்கிறாரே தவிர, உண்டேன் என்று சொல்லவில்லை. அத்துடன் நில்லாது, உடன் எழுந்து, " பொங்கிய காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு " சிவலிங்கப் பிரான் முன்படைந்து கல்லினால் எறிந்து வழிபட்டார். 

இன்னும் ஒன்றையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட பின்னர் வழிபாடு  செய்யலாம் என்று இராமல் , முன் வினையால் ஏற்பட்டதே உண்டி என்பதால் அதனை ஏற்காது ஒழிந்து, தான் அயர்ந்து விட்டதால் நியமம் தவறியதோ என்று  வேட்கை மிகுந்தபடி, பெருமானிடம் ஓடி வந்தாராம். இதனையும் சேக்கிழார் வாக்கிலேயே அறிவது உத்தமம்:

" கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய

உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையோடும் 

கண்டருளும் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் 

தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்."   

தன்னை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வரும் சாக்கிய நாயனாருக்கு முன்பு சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்தருளி அவரைச் சிவலோகத்தே இருத்தினான். அவரது அன்பை ஈசனைத் தவிர யாரால் அறிய முடியும் என்று கூறி, சாக்கிய நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் தொண்டர் சீர் பரவ வந்த தெய்வச்  சேக்கிழார்.

" கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார் 

  நெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் "

 என வரும் அப்பர் பெருமானது குறுக்கை வீரட்டப் பதிக வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

.( பிற்குறிப்பு: சரிவர பொருள் கொள்ளாமல் நாயனார் கல்லெறியாமல் உணவு உண்டார் என்று விக்கிப்பீடியாவில் பின்வருமாறு வெளியிட்டிருப்பதை நமது முகநூல் அன்பர் சுட்டிக் காட்டியதன் பயனாக எழுந்ததே இக்கட்டுரை. அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்: தவறு திருத்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறோம்:

" One day he forgot to do his austerities and started consuming food. " ) 

 " மறவாது  கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்" - சுந்தரர் தேவாரம்   


 
Monday, August 24, 2020

ஊரும் பேரும்


 விதையிலிருந்து செடி முளைத்ததா அல்லது செடியிலிருந்து விதை முளைத்ததா என்பதுபோன்ற  சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊரின் பெயரையே தமது பெயராகக் கொண்டவர்கள் இன்றும் பலர் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இப்போதோ அது தலைகீழாக மாறி, நாட்டுத் தலைவர்கள்,கட்சித் தலைவர்கள் முதலியோரது  பெயர்களைக் கொண்டு ஊர்ப் பெயர்களும்,தெருப் பெயர்களும் சூட்டப்படுவதைப்  பார்க்கிறோம். முன்பெல்லாம் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருந்தன. அக்காரணம் தோன்றுவதற்கு முன்பு என்ன பெயரால் அப்பகுதி வழங்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது. 

உதாரணங்களாகச் சிலவற்றைப்பார்ப்போம். உமையம்மை மயிலுருவில் பூஜை செய்த ஊர்களாக மயிலாப்பூர்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களின் பெயர்கள்  வழங்கப்படுகின்றன. அவ்வாறு பூஜித்தது எந்த யுகத்திலோ  ---, யாமறியோம். அதற்கு முன்னர் அவை எப்பெயர்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. 

தமிழில் அமைந்துள்ள தலபுராணங்களில் தலச் சிறப்பு என்ற பகுதி இருப்பது சமய அன்பர்கள் அறிந்ததே. அப்பகுதியில் தலத்தின் பெயர்களும் அவற்றின் பெயர்க்காரணங்களும் , அப்பெயர்களை உச்சரிப்பதால் பெறும் பயன்களும், அங்கு செய்யப்படும் தானச்  சிறப்பும், வசிப்போர் பெறும் பேறும் விரித்துக் கூறப்பெறும். 

மதுரை மாநகருக்குஉரிய பலபெயர்களுள் ஆலவாய் என்பதும் ஒன்று. திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களாவன மதுரைக் காண்டம்,கூடற்  காண்டம்,ஆலவாய்க் காண்டம் என்பதாம். அவற்றுள் , மதுரைக் காண்டத்திலுள்ள தலச் சிறப்பில் வரும் பாடல் ஒன்றில் , திருவாலவாய் என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் அறம் பெறுவர் என்றும்,அப்பெயரை நினைத்த மாத்திரத்தில் செல்வம் பெறுவர் என்றும், கூறப்பட்டுள்ளது:

" திருவாலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர் 

செல்வம் ஓங்கும் 

திருவாலவாய் என்று நினைத்தவரே  பொருள் அடைவர் "

என்பது அவ்வினிய பகுதி. 

திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனது அரசவைக்குச் சென்றபோது, மன்னன் அவரிடம் எந்த ஊரிலிருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டவுடன், தனது ஊரின் பன்னிரண்டு பெயர்களையும் அமைத்துப் பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் காட்டும். எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒரு பதிகத்தின் முதற்பாடலைக் காண்போம்: 

" பிரமனூர்(1) வேணுபுரம்(2)புகலி(3)வெங்குரு(4)ப் பெருநீர்த் தோணி 

புர(5) மன்னு பூந்தராய் (6) பொன்னஞ் சிரபுரம் (7) புறவம்(8) சண்பை(9)

அரன் மன்னு  தண் காழி(10) கொச்சைவயம் (11) உள்ளிட்டங் காதியாய 

பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல(12) நாம் பரவுமூரே"  

இப்பாடலில் பன்னிரண்டு பெயர்களும் வருவது போலவே அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் அப்பெயர்கள் சக்கரம் போன்று சுழன்று வருவது சிந்தையை மகிழ்விப்பதாம். இவை யாவும் காரணப் பெயர்களே. 

இதே போன்று ஊர்களைக் கொண்டே அமைக்கப்பெற்றுள்ள முழுப் பதிகங்களைத் தேவார மூவரும் அருளிச் செய்துள்ளனர். 

தலப்பெயர்களை நாவால் உரைப்போர்க்குக் கிட்டும் பலன்களை நாவுக்கரசர் அருளியவாறு காண்போம்:

 " ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து 

அமர் உலகம் ஆளலாமே "  

" வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் 

வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே." 

நம் இல்லங்களிலும் ஊர்ப்பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். சிதம்பரம் , அண்ணாமலை, பழநி, செந்தில்  திருப்பதி ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தாய் வழிப் பாட்டியார் சொல்லித் தந்ததை நினைவு கூறுகிறேன். இரவு படுக்கப்போகும் முன்பு சில நாமாக்களைச் சொல்லவேண்டும் என்பதே அது. 

அதாவது," சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்" என்பது.

அதனை ஒரு உபதேசமாகக் கருதி இன்றளவும் சொல்லி வருகிறேன். 

இவ்வாறு தலங்களின் பெயர்களைச் சொல்வதில் இன்னும் சில தலங்களையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களாவது உறங்கச் செல்லும் முன்பு தியானிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாயிற்று.  அந்த எண்ணத்தின்  விளைவே  பின் வரும் சேர்க்கை. இருமொழிப் பயிற்சி இல்லாதவனின் அறியாமையைப் பொறுத்து பிழை இருப்பின் திருத்தி அருளுமாறு பெரியோர்களை வேண்டுகிறேன்  

                                                          ஜோதிர்மய ஸ்தோத்ரம் 

                                                                     சிவபாதசேகரன் 

" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்"   

கும்பேசம் தாருகேசம் வீதி விடங்கம் ஜோதிர்மயம் 

விச்வேசம் ராமேசம் அமரேசம் ஜோதிர்மயம் 

ஹாலாஸ்யம் கச்சபேசம் பைரவேசம் ஜோதிர்மயம் 

கடம்பவனேசம் கபாலிம் பஞ்சநதம் ஜோதிர்மயம் 

மல்லிகார்ஜுனம் மதங்கேசம் மாத்ருபூதம் ஜோதிர்மயம் 

நாகேசம் நடனபுரீசம் முக்தீசம் ஜோதிர்மயம் 

பல்லவனீசம் பார்வதீசம் பக்ஷிதீர்த்தம் ஜோதிர்மயம் 

ஜடாயுபுரீசம் ஜம்புகேசம் ஜகதீசம் ஜோதிர்மயம் 

ஸ்வயம்புநாதம் ஸ்வயம்ப்ரகாசம் சுந்தரேசம் ஜோதிர்மயம் 

வதான்யேசம் வைத்யநாதம் வடாரண்யம் ஜோதிர்மயம் 

ஒருமுறை காஞ்சிப் பெரியவர்களிடம் துவாதச லிங்க க்ஷேத்ரங்களை மட்டுமே ஜோதிர்லிங்கம் என்கிறோமே என்று கேட்டதற்கு , " எல்லா லிங்க மூர்த்திகளுமே ஜோதிர்லிங்கங்களாகக் கருதப் பட வேண்டியவைகளே . ஏனென்றால் பிரம விஷ்ணுக்களிடையே அக்னி வடிவில் தோன்றி லிங்கோத்பவம் ஆனதால் அம்மூர்த்தம் ஜோதிர் லிங்கமாக எல்லா ஸ்தலங்களிலும் மூலஸ்தானமாக விளங்குகிறது என்று விளக்கம் தந்தார்கள். 

   


Saturday, August 15, 2020

பசுபதி யதன் மிசை வரு பசுபதி


                                                                                                                                                                    

                                                                 சிவபாதசேகரன் 


 பரமேசுவரனின் எத்தனையோ நாமங்களில் பசுபதி என்பதும் ஒன்றாகும். வேதத்தின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தில் பசுபதயே என்ற மந்த்ரம் வருகிறது. கன  பாராயணம் செய்யும்போது ,"பசுபதயே ச ச பசுபதயே"  என்று வரும்போது மெய்  சிலிர்க்கும். கரூர், ஆவூர் , திருக்கொண்டீசுவரம் ஆகிய இடங்களில் மூலவருக்குப் பசுபதீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். ஆவூர்க் கோயிலைப் பசுபதீச்சரம் என்று குறிப்பிடுகிறார் திரு ஞான சம்பந்தப் பெருமான். " ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே " என்பது அவரது வாக்கு .

உயிர்கள் யாவும் பசுக்கள் எனக் குறிக்கப்படுவன. அவ்வுயிர்கள் யாவற்றையும் படைத்தும்,காத்தும்,அருளியும், தன்னிடமிருந்து மறைத்தும்,நிறைவாக இளைப்பாற்றியும் ஐந்தொழில்களைச் செய்து வருவதால் சிவபெருமான் அவற்றிற்குப் பதியாக ( தலைவனாக)க்  கொள்ளப்படுகிறான் .இதன் காரணமாகவே பெருமானுக்குப் பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத்திலும் அப்பெயரே நிலவுகிறது. பசுபதித் திருவிருத்தம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்துள்ளார் திருநாவுக்கரசு நாயனார்.  

உலகத்துயிர்களுக்குப் பொதுப் பெயராக பசு என்று வழங்கப்பட்டாலும் சிறப்பாக அது அனைத்துத் தேவர்களும் தங்கி அருள் புரியும் பசுவுக்கு மட்டும் உரியதாக உள்ளது. சிவபிரான் விரும்பி ஏற்கும்  பால் ,தயிர் , நெய், கோமயம், கோசலம் ஆகியவற்றைத் தருவதால் அப்பிராணியை மட்டுமே பசு என்று அழைக்கிறோம். " ஆன் ஐந்தும் ஆடினான் காண் " என்கிறது தேவாரம். பசு நெய்யை  ஏற்கும் பிரான் ஆவதால் நெய்யாடியப்பர் என்ற திரு நாமம் திருநெய்த்தானம் என்ற தலத்தில் வழங்கப்படுகிறது. சண்டேசுவரப் பெருமானால் ஆநிரைகள் பாலை அபிஷேகமாக ஏற்ற பெருமானுக்குப் பால் உகந்த நாதர் என்ற திருநாமம் திரு ஆப்பாடி என்ற தலத்தில் உள்ளது. பசு வடிவம் ஏற்று அம்பிகையே பாலால் அபிஷேகம் செய்த பல தலங்கள் வரிசையில் தனது கால் குளம்பு ( கோகுரம்) இடறியதால் பெருமான் வெளிப்பட்டு அருளிய திருக்கோழம்பமும் அவ்வடிவம் நீங்கப்பெற்ற ஆவடுதுறையும் குறிப்பிடத்தக்கவை. அங்கெல்லாம் முறையே கோகுரேசுவரர் என்றும், கோ முக்தீசுவரர் என்றும் என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறு இருக்கும்போது அவன் ரிஷபாரூடனாக  வெள்ளை விடை ( ரிஷபம்) ஏறி வருகிறான் இதையே சம்பந்தரும் தனது முதல் பதிகத்தில் " விடை ஏறி " என்று பாடுகின்றார். காளையும் பசு வர்க்கத்தைச் சேர்ந்தது. பசுக்களை மேய்க்கும் போது பாலகனான விசார சருமர் ( இவரே பின்னர் சண்டீசர் ஆனார்) ஆனிரைகளைக் கண்டவுடன், அவற்றை " விடைதேவர் குலம் " என்றே கருதினார் என்று பெரிய புராணம் கூறும்.  பசுவின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் , 

"தங்கும் அகில யோனிகட்கும் 

மேலாம் பெருமைத் தகைமையன 

பொங்கு புனித தீர்த்தங்கள் 

எல்லாம் என்றும் பொருந்துவன 

துங்க அமரர் திருமுனிவர் 

கணங்கள் சூழ்ந்து பிரியாத 

அங்கம் அனைத்தும் தம்முடைய 

அல்லவோ நல் ஆனினங்கள் " 

என்று விளக்கமாக அருளிச் செய்துள்ளார். 

ஒரே வரியில் ரிஷபத்தையும் பசுவையும் நினைவு படுத்தும் ஒரு அரிய சொல்லாட்சியைத் தேவாரப்  பனுவல்கள் காட்டுவது , மிக்க நயம் விளைவிக்குமாறும் , சிந்தைக்கு விருந்தாகவும்  இருப்பதைக் காணலாம்.

திருமறைக்காட்டில் தங்கிய காலத்தில் ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் பலவற்றுள், " சிலைதனை" எனத்  துவங்கும் பதிகமும் ஒன்றாகும். அதில் ஒரு பாடலில் பெருமானை, " உயர் பசுபதியதன் மிசை வரு பசுபதி" எனக் குறிப்பிடுவது நயம் மிக்க பகுதியாம்.  

உலகியலில் நாம் பதி என்றால் பெண்ணின் மணாளனைக் குறிப்பதாகவே பொருள் கொள்கிறோம். தெய்வங்களையும் உமாபதி, லக்ஷ்மி பதி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே  இங்குப்  பசுவின் பதியாவது காளை ஆவதைக் கருத வேண்டும். தெய்வத்தன்மை வாய்ந்த பசுவின் மணாளன் தெய்வமே பவனி வரும் காளையின் பதியாதல் காண்க. ஆகவேதான் இப்பாடலில் " பசுபதி அதன் மிசை வரு பசுபதி " என்று மிக அற்புதமாகக் காட்டுவார் நற்றமிழ் ஞானசம்பந்தர்   

இப்பொழுது முழுப் பாடலையும் நோக்குவோம்;

கதி மிகு களிறது  பிளிறிட 

உரிசெய்த அதிகுணன் உயர் பசு 

பதி அதன்மிசை வரு பசுபதி     

பலகலையவை முறைமுறை உணர் 

விதியறி தருநெறி யமர்முனி 

கணமொடு மிகுதவ முயல்தரும் 

அதிநிபுணர்கள் வழிபட வளர் 

மறைவனம் அமர்தரு பரமனே. 

யானையை உரித்துப் போர்த்தவனும்,விடையின் மேல் எழுந்தருளும் பசுபதியும் அதிகுணனும் ஆகிய பரமனின் இடமாவது, பல்வேறு கலைகளை முறையாகக்கற்றவர்களும், விதி வழி நின்று சிவநெறிப்படித்  தவம் செய்யும் முனிவர்களும் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு ஆகும் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும். சகல புவனாதிபதியான பசுபதியைப் போற்றும் அருமையான பாடல் இது.