Tuesday, December 18, 2012

உன்னை நினைக்க அருளாய்
நம்மில்பலர் தெய்வ சிந்தனையே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். அதனால் என்ன பலன் என்று வாதம் செய்வோரும் உண்டு. சிலர் வாழ்நாள் முழுவதுமே அப்படி இருந்து விடுகிறார்கள். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு" என்று திருமூலர் சொல்லியிருப்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். புண்ணியம் செய்தவர்களுக்கே புண்ணிய மூர்த்தியாகிய சிவ பெருமானுக்குப் பூக்களாலும், தூயநீராலும்ஆராதிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஒரு பொருளும், சிவ புண்ணியத்தை வேண்டினால், பூக்களாலும் நீராலும் அவனை ஆராதித்தால் அவன் அருள் கிடைக்கும் என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். சைவ சித்தாந்த வழியில் நின்று பார்க்கும்போது முதலில் சொன்ன பொருளே உயர்ந்ததாகத் தோன்றுகிறது. அதாவது, அவன் அருள் இருந்தால் மட்டுமே, பூவாலும் நீராலும் அவனை வழிபாட்டு அவனருளைப் பெற முடியும் என்று கொள்ளலாம். இதைத்தான், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று திருவாசகமும் கூறுகிறது.  முந்தைய பிறவிகளில் செய்த நல்  வினைப் பயன்களால் இந்த நிலை ஏற்படுகிறது. பன்னாட்கள் அவனது நாமத்தை, நாக்குத் தழும்பு ஏற உச்சரிப்போர்க்கு சிவன் முன்னின்று அருளுவான் என்கிறார் அப்பர் பெருமான்.

இதில் நமது முயற்சியோ சாமர்த்தியமோ  ஏது? "காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே" என்ற அப்பர் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. சில சமயங்களில் நமக்கு இறைவனின் ஞாபகம் வந்தபோதிலும் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடுவதையும் காண்கிறோம். அப்படியானால் , ஒரு கண நேரம் அந்த சிந்தனையைத் தந்துவிட்டுப் பிறகு அதை அப்போதே மறக்கும்படி செய்வதும் அந்த பரம்பொருளின் செய்கையே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார் அப்பரடிகள். ஒருபோதும் உன்னை நினைக்காமல் செய்கிறாய். ஒருக்கால் அவ்வாறு நினையப் புகுந்தால்  அந்தக் கணமே மறக்கும்படியும் செய்து விடுகிறாய். அது மட்டுமல்ல. வேறு ஒன்றில் நாட்டம் வரும்படியும் செய்து விடுகிறாய். இவ்வாறு உன்னை எப்போதாவது கூட நினைக்க மாட்டாதவன் ஆகி, உன்னை எப்போதும் மறப்பவனாக ஆகிவிட்டேன். இருந்தாலும் உன் கருணையை என்னவென்று நான் சொல்வது?    அற்பன் என் உள்ளத்துள் அளவில்லாத உன்னைத் தந்துவிட்டாயே! உனக்கு இனியவனாக ஆக்கி விட்டாயே! கல்லைப் பிசைந்து கனி ஆக்கி விட்டாயே! நின் கருணை வெள்ளத்தைக் காட்டினாயே! பண்டு செய்த பழ வினையின் பயனும் இது தானோ? நான் பெற்ற பேறு யார் பெற வல்லார்? இறைவா, உன் கருணைக்குப் பாத்திரனாக ஒருபோதும் இருக்கத் தகுதி அற்ற இவ்வெளியேனை ஆட் கொண்டது எக்காரணம் பற்றி? என்னை ஒப்பாரும் உள்ளார்களோ சொல்லுவாயாக.

இந்தப் பாடல் இறைவனின் ஐந்தொழில்களுள் , காத்தல், அருளல், மறைத்தல் என்ற மூன்று தொழில்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, அப்பர் பெருமானை அன்பால் ஆர்த்து அருள் நோக்கால் ஆண்டு கொண்டு சமண் நீக்கிக் காத்தான்  இறைவன். தேவர்களுக்கும் அரியவனான அப்பெருமான் எளியவனாக முன் நின்று அருள் செய்தான். எப்படிப்பட்ட அருள் தெரியுமா? " இரவும் பகலும் பிரியாது வணங்கும்" பேரருள். பிழைத்தவை அத்தனையையும் பொறுத்து ஆண்டு கொண்டான். அதே நேரத்தில், இரங்காதவன் போல் தன்னை மறைத்துக் கொள்ளவும் செய்தான். இந்த கருணையைக் கண்ட திருநாவுக்கரசர், "இத்தனையும் எம்பரமோ?" என்று கசிந்து உருகுகின்றார். இந்த அருமையான பாடலை நாம் காண்போமா?

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய்  நீ  நினையப்புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார்  உளரோ சொல்லு வாழி இறையவனே.