Monday, October 15, 2012

பெயரும் உருவமும் ஏது?


காரைக்கால் அம்மையார் ஈச்வரனைப் பார்த்துக் கேட்கின்றார்: " பெருமானே, உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே  ஆட்பட்டு விட்டேன். இன்னும் சொன்னால், இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே  உனக்கு ஆட் செய்கின்றேன் . ஆனால் , மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்?  அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? "நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா?" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை தேவரீர் உணர்த்தவேண்டும்.  அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் வரும் அற்புத மான பாடலை நீங்களும் படியுங்கள்:

அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம்  ஏது.

இப்படியன்,இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று காட்ட முடியாத பரம்பொருளுக்கு எந்த உருவத்தை உரியதாக்குவது? அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா? அவன் எவ்வுருவில் தான் இல்லை?
 
அவனோ பிரம விஷ்ணுக்களாலும் தேட முடியாத  அடிமுடி உடையவன். நமக்காகக் கருணை கூர்ந்து உருவம் எடுத்து வந்து நம்மை ஆட்கொள்கிறான். இவ்வாறு ஒரு பெயரும்,ஒரு உருவமும் இல்லாத பரம்பொருளை ஆயிரம் நாமங்களால் துதிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வடிவங்கள் கொண்டாலும்  இறைவன், "உருவமும் அருவமும் ஆய பிரான்" என விளங்குகிறான். இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

திருமாலும் பன்றியாய்ச்  சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய்  ஆண்டு கொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ .

காரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்: " இருட்டுக்கு என்ன வடிவமோ அதுபோலவும் மேகம் என்ன வடிவில் இருக்கிறதோ அப்படியும் ,அதே சமயம் பொன்னொத்த வடிவமும் , கொண்டதோடு, சூரிய சந்திரர்களாகவும்,அக்னியாகவும்,ஆகாயம் ஆகவும்,நிலம் நீர்,காற்றாகவும் அஷ்ட மூர்த்தியாகவும் ஞான மூர்த்தியாகவும் நிற்கிறான்.

"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;
 மருளின் மணி நீலம் என் கோ.."

 என்று சொல்லும் அம்மையார்,

"அவனே இரு சுடர் தீ ஆகாசம் ஆவான்
 அவனே புவி புனல் காற்று ஆவான் - அவனே
 இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
 மயனாகி நின்றானும் வந்து.

என்று நமக்கு உணர்த்துகிறார்.

  எந்தப்பெயரைச்  சொன்னால் இந்திய நாட்டிலுள்ள அனைவரும் அப்பெயர் முருகனைக் குறிப்பதாகப் புரிந்து கொள்வார்கள் என்ற வினாவை அண்மையில் எழுப்பியிருந்தார் ஒரு அமெரிக்கப் பெண்மணி. "கார்த்திகேயன்" என்று பலரும் அவருக்கு விடை தந்தார்கள். உண்மை தான். வட மா நிலங்களில் இப்பெயராலேயே முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகன்,சரவணன்,சுப்பிரமணியன், முதலிய பெயர்கள் தமிழகத்தில் அதிகம். ஸ்வாமி, சுப்பிரமணியன் என்ற வட சொற்களைத் திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் காணலாம். அதுவும் பெருமானுக்கு அழகாகத்தான் இருக்கிறது.

தேவாரமும் பல ஊர்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகிய பெயர்களால் அழைக்கிறது. நம்பெருமான், நம்பி ,ஆரா அமுது போன்ற தூய பெயர்கள் இறைவனுக்கும், வேயுறுதோளி, இரு மலர்க் கண்ணி, வடிவுடை மங்கை, மையார் தடங்கண்ணி போன்ற பெயர்கள் இறைவிக்கும்  பதிகங்களில் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.

பல ஊர்களில் வட மொழிப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் , ஒத்த கருத்து உடையனவாக இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, வேதாரண்யேச்வரர் என்பதை மறைக் காடர் என்றும், நற்றுனண யப்பர் என்பது சத்சஹாயேச்வரர் என்றும், அங்கயற்கண்ணி என்பது மீனாக்ஷி என்றும், தர்மசம்வர்த்தனி என்பது அறம் வளர்த்த நாயகி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பெயர்கள் சிறிது பொருள் வேறு பட்டாலும் அதுவும் பொருத்தமாகவே இருப்பது உண்மை அடியார்களுக்கு மன மகிழ்வைத் தரக் கூடியது. மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை என்று வட மொழியிலும் , அஞ்சொல்  நாயகி என்று தமிழிலும் இருந்தாலும் இரண்டும் உயர்ந்த பொருளைத் தருவதால் இரண்டையுமே ஏற்க வேண்டும். இல்லையேல் மொழித் துவேஷம் வர ஏதுவாகும். அழகிய சொல்லை உடைய அவளே நம்மை அஞ்சல் என்று அருளுபவள்.  ஆதலால் எந்தப்பெயரிட்டு அவளை அழைத்தாலும் அருள் புரிய விரைந்து வருவாள். வேதாரண்யத்தில் அம்பிகைக்கு வீணா வாத விதூஷணி என்று பெயர். சரஸ்வதி வீணையில் சிவகீர்த்திகளை வாசிக்கும்போது, அதனால் மகிழ்ந்த அம்பிகையின் வாக்கிலிருந்து கலைமகளின் கானம்  நன்றாக இருந்தது என்ற வார்த்தைகள் வந்தது தான் தாமதம்! வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா? அதே வேதாரண்யத் தேவாரத்தில், யாழைப் பழித்த மொழியாள் என்று வருவதைச் சுட்டிக் காட்டிய ஒரு அன்பர், அதுவே ஆதிப் பெயர் என்றும் , யாழுக்கும் வீணைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் "ஆராய்ச்சி" பண்ணியிருந்தார். அப்படியே வைத்துக் கொண்டாலும், யாழைவிடவும் வீணையை விடவும் அம்பிகையின் குரலோசை உயர்ந்த்தது என்பதில் இந்த அன்பருக்கு எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. நமக்குப் பிடித்த பெயர்களால் தெய்வத்தை எல்லா மொழியாலும் அழைப்போமே. இதில் சர்ச்சை எதற்கு?

காரைக்கால் அம்மையும் மாணிக்கவாசகரும் சொன்னதுபோல் பெயரும் உருவமும் இல்லாத பரவெளிக்குப் பெயர் ஏது?உருவம்தான் ஏது?