Thursday, April 17, 2014

பித்தன் என்றே பாடுவாய்

பித்தன் என்ற வார்த்தைக்குப் பேரருளாளன் என்று பொருள் கூறுவார்கள் . உலகில் நாம் காணும் பித்தர்களைப் போல் அல்லாமல் அருள் காரணமாகவே பித்துப் பிடித்ததுபோல் அடியார்களிடம் தோன்றி இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவனாக, தோன்றாத் துணையாக, சொன்னவாறு அறிபவனாக , அருள் சுரக்கும் துறையாக, கேளாமலே அருள் வழங்கும் தன்னிகரற்ற வள்ளலாக , வெளித் தோற்றத்தில், உலகத்தவர் பேணாத பொருள்களைப் பேணுபவனாகத்  தியாகராஜனாக  விளங்குவதால் "பித்தன்" என்ற பெயர் பரமேச்வரன் ஒருவனுக்கே உரியதும், பெருமை தருவதும், ஆகிய சொல் ஆகும். இப்பெயரைக் கொண்டுதான் சுந்தரர் முதலில் பாடத் தொடங்கினார். அதுவும் பெருமானே, அவ்வாறு பாடுமாறு அடியெடுத்துக் கொடுத்தான். சம்பந்தரும் எருக்கத்தம்புலியூர் பதிகத்தில், " பித்தா பிறைசூடி" என்று பாடியிருக்கிறார். ஆனால் பித்தன் என்ற சொல் முதலாவதாக வைக்கப்பெற்று சுந்தரர் வாயிலாக ஒரு திருமுறையே உதயமாயிற்று.

முன்பு நம்மைப் பித்தன் என்று பேசினாய் இப்போது அதையே துவக்கமாகக்கொண்டு பாடுக என்று அருட்கட்டளை இட்டான் பரமன். பேசுதலைக் காட்டிலும் பாடுதல் சிறப்பு வாய்ந்தது. கீதம் வந்த வாய்மையால் மிகப்பாடும் அடியார்கள் பெறும் பேற்றை அளவிட முடியாது.

பிறை சூடிய கருணை அடுத்ததாக எடுத்து உரைக்கப்படுகிறது. எவரும் அடைக்கலம் தராத நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனை சிரத்தில் ஏற்று சந்திரசேகரனாக  அருளியதால் "பிறை சூடீ" என்றார் சுந்தரர். அனை த்து உயிர்களுக்கும் அவன் ஒருவனே பெருமான் ஆனதால் பெருமானே  என்றும் அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகத் திகழ்வதால் "அருளாளா" என்றும் விளித்தார்.

எந்த வகையில் பார்த்தாலும் உன்னை அடியேன் மறந்ததே இல்லை. "ஏற்றான் மறவாதே நினைக்கின்றேன்" என்றார் நாவலூர் நம்பிகள். உலகியலில் பற்று விட்டவர்க்கே இந்நிலை சித்திக்கும். இறைவனைப் பற்றிய நினைவு அறவே வராதவர்களும், அவ்வப்போது வருபவர்களும், ஆபத்துக் காலத்தில் வருபவர்களும் கொண்ட இவ்வுலகத்தில் இறைவனது நினைவே முற்றிலுமாக இருப்பவர்கள் அருளாளர்கள் மட்டுமே. "மறவாதே நினைக்கின்றேன்" என்று சுந்தரரும் , "இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்று அப்பரும் , "நனவிலும் கனவிலும் நம்பா உன்னை மனவிலும் வழிபடல் மறவேன்" என்று சம்பந்தரும், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்று மணிவாசகரும் அருளியமை காண்க.

இனி வரும் பகுதி மிகவும் நயம் மிக்கது. "மனத்து உன்னை வைத்தாய்" என்று பிரித்துப் பொருள் கொண்டால், அவன் அருள் இருந்தாலன்றோ அவன் அருள் கிடைக்கும் என்ற  சித்தாந்த உண்மை வெளிப்படுகிறது. என் மனக்கோயிலில் நீங்காது உறையுமாறு அருள் வைத்தாய் எனப் பொருள் கொண்டால் பேரின்பம் பயக்கிறது. வெளிப்படையாகப் பொருள் கொண்டால், திருவெண்ணெய் நல்லூர் அருட் துறையை கோயிலாக வைத்தாய் எனக் கொள்ளலாம். இது, "கோலக்காவும்      கோயிலாக்  கொண்டான்" என்பது போல.

"வைத்தாய்ப் பெண்ணை " என்று பிரிக்கும்போது , ஒருபாகமாகப் பெண்ணை (உமாதேவியை) வைத்தாய் எனக் கொண்டு மகிழலாம். அதுவேயல்லாமல், "பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் " எனப் பிரித்துப் பொருள் நோக்கினால், பெண்ணை ஆற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய் நல்லூர் என்று பொருள்படும்.

அருட் துறை என்பது அத்தலத்து ஆலயத்திற்கான சிறப்புப் பெயர். அருள் பிரவாகிக்கும் துறை அல்லவா அது? முற்றிலும் பொருத்தமான பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது. சுவாமிக்கும் கிருபாபுரீச்வரர்  என்றே பெயர் வழங்கப்படுகிறது.

உனக்கு மீளா ஆட்செய்வதே அல்லாமல் உனது அடிமை இல்லை என்றோ உனக்கு ஆட்செய்ய  மாட்டேன் என்றோ இனிக் கூறவும் இயலுமோ என்று நெக்குருகிப் பாடுகின்றார் நம்பியாரூர் .

இத்தனை நயங்களையும் உள்ளடக்கிய பாடலை அதன் பொருட்சுவையை  உணர்வதோடு, தெய்வத் தன்மையையும் இணைத்துக்  கசிந்து பாடும் போது பெறும் இன்பமே அலாதி தான்!  

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய்ப் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே."