நம் போன்றவர்கள் பல்லாண்டுகள் நாத்தழும்பேற அழைத்தால் திருவருள் துணையின் காரணமாக சிவபெருமானது பெருமைகள் சிறிதளவாவது புலப்படக் கூடும். அவரவர்களது மெய்யன்பும், தவமும் இதற்கு மூல காரணங்கள் ஆகின்றன. ஆனால் மகான்களுக்கு ஏற்படும் அனுபவங்களே அலாதியானது. அவர்களுக்குப் பெருமான் துணைவனாகவும்,தொண்டனாகவும் தோழனாகவும் இருக்கிறான். காணாத காட்சிகளைக் காட்டுகின்றான். கலங்காதவண்ணம் நேரில் வந்து கோலம் காட்டி அருளுகிறான். வழக்கத்திற்கு மாறான காட்சிகளாகவும் அவை அமைந்து விடுகின்றன. ஆனால் அவையும் அவனுக்கு அழகாகத்தான் பொருந்துகிறது.
சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் மான் துள்ளிய நிலையில் இருக்கும். " மான் இடம் கொண்ட காழியார்" என்றுசம்பந்தப்பெருமானும் , " மான் இடக்கை கொண்டானை" என்று கஞ்சனூர்த் தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறிப்பிடுகின்றனர்.. இந்த வழக்கத்திற்கு மாறாகத் தஞ்சை மாவட்டத்தில் வலங்கை மான் என்ற ஊரில் பெருமானது வலது கரத்தில் மான் இருக்கிறது. அதனால்தான் அந்த ஊருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்தது.
சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூருக்கு சம்பந்தருடன் வந்த அப்பர் பெருமான் தான் நேரில் கண்ட காட்சியைத் திருத் தாண்டகத்தால் பரவுகின்றார். அதில் " மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்" என்று வருகிறது. சோமாஸ்கந்த மூர்த்தி என்றாலே ஈசுவரன், அம்பிகை ஆகியோர் , தங்களுக்கு மத்தியில் ஸ்கந்தப் பெருமானுடன் இருக்கும் கோலமே ஆகும். ஆனால் இப்பாடலில் விநாயகனும் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு உரை ஆசிரியர்கள், விநாயகனும் என்பதால் எச்ச உம்மை ஆயிற்று என்றும் வழக்கம்போல முருகனோடு ஆனை முகனும் தோன்றுவதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். இது மேலும் ஆராய வேண்டியதொன்று.
ஒருவேளை அக் கோயிலில் உள்ள மூர்த்தியில் ஸ்கந்தருக்குப் பதிலாக விநாயகர் இருக்கிறாறா அல்லது இது தொடர்பான புராண வரலாறு அங்கு உள்ளதா என்பது புலப்படவில்லை.
திருவாய்மூரில் கண்ட இன்னொரு அதிசயக் காட்சியையும் அப்பர் பெருமானது பாடல் குறிப்பிடுகிறது. வழக்கமாக நடராஜர், தக்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களில் பெருமானது மேல் இடது கரத்தில் மட்டுமே அக்கினி இருக்கும். தக்ஷிணாமூர்த்தியின் வலது மேல் கரத்தில் பாம்பும் ஜப மாலையும் காணப்படுவன. சோமாஸ்கந்தரின் வலக்கரத்தில் மழு இருக்கும்.. " வலங்கைத் தலத்துள் மழு ஒன்று உடையார் போலும்" என்பது இன்னம்பர்த் தேவாரம் ஆனால் திருவாய்மூர் தரிசனம் வித்தியாசமானது. " வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன் " என்று இப்பாடலில் வருவதால் பெருமானது வலது கரத்தில் அனல் ஏந்திய செய்தி நமது சிந்தைக்கு விருந்தாகிறது. பொருந்தாத செய்கையும் பொருந்துகிறது.