ஆழித்தேர் |
" கடகரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவா ..." என்பன திருவாசக வரிகள்.
ஆனால் அடியார்களை உய்விப்பதற்காகப் பல வாகனங்களில் உற்சவ காலங்களில் ஈசன் பவனி வருவதுண்டு. அவற்றில் குதிரை, யானை, ரிஷபம் ஆகியன அடங்குவன. தேரில் எழுந்தருளித் திருவீதியில் பவனி வருவதைப் பல தலங்களின் உற்சவ காலங்களில் தரிசிக்கிறோம்.
திருவாரூரில் நடைபெறும் ஆழித் தேர் விழா, தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் உயரமான தேரான இதில் தியாகேசன் உலா வருவதைக் கண்டு அடியார்கள் பரவசத்துடன், " ஆரூரா, தியாகேசா " என்று கோஷமிடுவதை இன்றும் காணலாம். " திருவாரூத் தேரழகு " என்ற பழமொழி இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 1748 - ல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை சரஸ்வதி மகால் ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது.
1926 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தீப் பற்றியதால் தேர் முழுதும் எரிந்துவிட்டது. அதன் பிறகு 1928- ம் ஆண்டில் புதுத்தேர் செய்விக்கப்பட்டு 1948 வரை ஓடியது. 1970 ம் ஆண்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பெற்று மீண்டும் ஓடியது. தேர் பழுதானதால் புதிய தேர் செய்யப்பெற்று 16.6.2016 அன்று தியாகேசப்பெருமான் சுந்தரருக்காக நிலத்தில் திருப்பாதங்கள் தோய நடந்து சென்ற திருவீதிகளில் ஆழித்தேர் பவனி வந்தது.
இதனை இழுக்க நான்கு வடங்கள்- ஒவ்வொன்றின் நீளம் சுமார் 425 அடி ஆகும். அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் முப்பது அடி. விமானம் வரை சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி. விமான உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி; ஆக அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரமானது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.
தியாகராஜப்பெருமானது தேரினை அழகிய உயர்ந்த குதிரைகள் இழுக்கின்றன. ஊழி முதல்வனாய் நின்ற பரம்பொருளை தேரில் எழுந்தருளும் காட்சியை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தநிலையில், " ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே " என்று பரவசப்படுகிறார் திருநாவுக்கரசர். அத்திருப்பாடலைக் கீழே காண்போம்:
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மாப் பூண்டதோர்
ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
அப்பர் கண்ட அற்புதக் காட்சியை 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் நாமும் காணும் பேறு பெற்றோம் எனும்போது " காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே " என்ற வாக்கு நினைவுக்கு வர வேண்டும். தியாகேசனது திருவருள் இருந்தால் தான் அக்காட்சி கிடைக்கும் என்ற உணர்வு அப்போது மேலோங்கும்.
Enjoyed through mental connection your wonderful experience, dear Sekhar. Thanks for sharing it.
ReplyDeleteநல்ல கட்டுரை. ஆழித்தேர் என்றால் என்ன பொருள்?
ReplyDeleteஉலகமாகிய தேர் எனப் பொருள் படும்.
Deleteஊழித்தீ என்றால் என்ன?
ReplyDelete