மாடு என்ற சொல் ஒருகாலத்தில் செல்வம் என்ற பொருளில் வழக்கத்தில் இருந்தது. கல்வியைக் காட்டிலும் செல்வம் வேறு இல்லை என்று சொல்ல வந்த திருவள்ளுவரும் மற்றவையெல்லாம் செல்வம் ஆக மாட்டா என்று கூறும் போது, " மாடல்ல மற்ற ..." என்றார். ஒருவனிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவன் பணக்காரன் என்று கருதப்பட்டது. அதனால், கால்நடைகளே செல்வம் என்று சொல்லும் வழக்கம் வந்தது.
பணத்துக்காகப் பேயாய் அலையும் இந்தக் காலத்தில் எந்த வழியிலாவது அதை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கமே மேலோங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டனர் மக்கள். பொய், சூது,வஞ்சகம் போன்ற எல்லா இழிந்த செயல்களையும் செய்யத் துணிந்து விட்டனர். பிறரை ஏமாற்றியோ, பொய் சொல்லியோ ,உறவுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டோ இவர்களது பயணம் தொடர்கிறது.
திருநாவுக்கரசர் இப்படிப்பட்டவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். செல்வம் ஈட்டுவதற்காக உலகத்தில் உள்ள அத்தனை பொய்களையும் சொல்பவர்களை வெட்கம் கெட்டவர்களே என்று வன்மையாகச் சாடுகிறார். செல்வம் எந்த வழியில் வந்தாலும் கைக்கு வந்தவுடன் மகிழ்ச்சியைத் தருவதை மட்டும் நினைத்து அது தகாத வழி என்று நினைக்காத மாந்தரை நாணம் இல்லாதவர் என்று குறிப்பிடுவது சரிதானே!
மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்
என்கிறார் அப்பர் பெருமான்.
மனித உடலைக் கூடு என்று சொல்வது உண்டு. நரம்பும்,சதையும்,இரத்தமும் கொண்ட இப் பிண்டத்தைத் தோலாகிய போர்வை மூடியதால் கூடு போலத் தோற்றமளிக்கிறது. இப்பிண்டத்திற்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள் ! அது மட்டுமல்ல. பேராசையும் கூடத்தான்! அதைத்தான் மாணிக்கவாசகரும், "பேராசையாம் இந்தப் பிண்டம் அற .." என்று பாடினார். இந்தக் கூட்டை இயக்குவது எது? உயிர் என்று பதில் சொல்கிறோம். உடலை விட்டு உயிர் நீங்கிவிட்டால் பெட்டப் பிணம் என்று பெயர் இடுகிறோம். அவ்வுடலுக்குக் கிடைத்து வந்த " அவர்" மரியாதை அகற்றப்பட்டு, " அது" என்று ஆகி விடுகிறது. உயிரோ இக்கூடு நீங்கி வேறொரு கூட்டுக்குள் பயணம் செய்ய ஆயத்தமாகிறது.
பிறவி எடுத்து விட்டால் மரணம் என்பது நிச்சயம். " மண்ணாவது திண்ணம்" என்கிறார் சுந்தரர். யானை ஏறி உலா வரும் அரசர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல.
" மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்கள்
செத்தபோதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்.." என்றும் எச்சரிக்கிறார். இதனை அப்பரடிகளும், "செத்தால் வந்து உதவுவார் யாரும் இல்லை சிறு விறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்" என்றார். எனவே தேடிய செல்வத்தை யாரும் உடன் கொண்டு போகப்போவதில்லை. சிவ தர்மம் செய்து சிவனருள் பெறுவோம் என்ற நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும். அதற்கும் அவனருள் வேண்டும் அல்லவா? அப்படிச் செய்பவரது தலைமுறைகள் எக்குறையும் இன்றி விளங்கும். இதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கும்.
காக்கைக்கும் நரிகளுக்கும்,மண்ணுக்கும் இரையாகப் போகும் இவ்வுடலை வைத்துக் கொண்டு எத்தனை ஆணவத்தோடு மக்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா? எனவே அப்பர் பெருமான் நமக்கு உபதேசிப்பது என்னவென்றால், இக்கூட்டை விட்டு உயிர் பிரியும் முன்பாக காட்டுப்பள்ளியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானது கழலைத் தஞ்சம் அடைய வேண்டும் என்பதே. திருக்காட்டுப்பள்ளி என்பது திருவையாற்றுக்கு அருகிலுள்ள கண்டியூருக்கு மேற்கே கல்லணை செல்லும் பாதையில் உள்ள ஒரு சிவ ஸ்தலம். சம்பந்தர்,அப்பர் இருவராலும் பாடல் பெற்றது. சுவாமிக்கு இங்கு அக்னீச்வரர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போமா?
மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளி உளான் கழல் சேர்மினே
நம்மால் முடிந்த அளவு சிவதர்மம் செய்வோம். அது ஒரு நாளும் வீண் போகாது. நம்மையும் நம் பரம்பரையையும் என்றென்றும் உடன் இருந்து காக்கும்.