சில பாடல்களோ அல்லது பாடல்களின் பகுதிகளோ நம் காதில் வந்து விழுந்தாலும் அவை எந்த புஸ்தகத்தில் வருகின்றன என்று நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. உதாரணமாக, "என் கடன் பணி செய்து கிடப்பதே", " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" போன்ற தொடர்கள் அடிக்கடி நம் காதில் விழுந்தாலும் அவை யாருடைய வாக்கு என்று மற்றவர்களைக் கேட்டோ அல்லது படித்தோ தெரிந்து கொள்வதில்லை. ஒரு காலத்தில் பல தேவாரப் பாடல்கள் பாமரர்களிடமும் பிரபலமாக இருந்தன. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது சிந்திக்க இருக்கும் "பொன்னார் மேனியனே" என்ற தேவாரப் பாடல்.
திருவையாற்றுக்கு அருகில் கொள்ளிடக்கரையில் இருப்பது திருமழபாடி என்ற சிவஸ்தலம். ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் தம்மை அறியாமல் இத்தலத்தைப் பாடாமல் சென்ற போது சுவாமி அவரது கனவில் தோன்றி,"திருமழபாடியைப் பாட மறந்தனையோ" என்று அருள, கண் விழித்த சுந்தரர், "உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்" எனும்படி, "பொன்னார் மேனியனே" என்று துவங்கும் திருப் பதிகத்தை அருளினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.
சுவாமிக்கு இந்த ஊரில் வைத்யநாதர் என்றும் அம்பாளுக்கு சுந்தராம்பிகை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. நந்திகேச்வரருக்குத் திருமணம் நடந்த க்ஷேத்ரம். இவ்வைபவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுகிறது.
பொன்னார் மேனியன்: ஸ்ரீ பரமேச்வரன் ஸ்வர்ண மயமானவன். அவனது தங்கக் கைகளை,"நமோ ஹிரண்ய பாஹவே" என்று ஸ்ரீ ருத்ரம் துதிக்கிறது. "பவளம் போல் மேனி" என்று தேவாரமும் "செந்தாமரைக்காடு அனைய மேனி"என்று திருவாசகமும் அவனைப் போற்றுகின்றன. உன் கை சிவப்பு நிறத்தால் அக்னிக்கு சிவந்த நிறம் வந்ததோ என்று காரைக்கால் அம்மையார் கேட்கிறார்.
புலித் தோல் அணிந்தவன்: தாருகா வனத்து ரிஷிகள் ஆபிசார ஹோமம் செய்து ஏவிய புலியை அடக்கி அதன் தோல் தனது இடுப்பில் கச்சையாக விளங்கும்படி அணிந்தவன்."व्याग्र चर्माम्बरा धराया " என்று சிதம்பர அஷ்டோத்திர நாமாவில் வரும்.
மின்னார் செஞ்சடை: கபர்தி என்று வேதம் சுவாமியைக் குறிக்கிறது. கபர்தீச்வரர் என்று திருவலஞ்சுழியில் சுவாமிக்குப் பெயர். மின்னுகின்ற அந்த சிவந்த ஜடை ஞான மயமானவன் என்பதைக் காட்டுகிறது. இளம் சிவப்பு நிறத்தை வடமொழியில் அருணம் என்பார்கள். எனவே செஞ்சடை வேதியனை அருணா ஜடேச்வரர் என்று திருப்பனந்தாளில் அழைப்பார்கள்.
மிளிர் கொன்றை அணிந்தவன் : கொன்றை,ஊமத்தை, வில்வம் ஆகியவற்றை செஞ்சடை மேல் விரும்பி அணிபவன் ஆதலால் இங்கு கொன்றை அணிந்த கோலம் சொல்லப்படுகிறது.
மாமணி: மாசிலா மணி எனத் திகழ்பவன் பரமன். ஒப்பற்ற மணி எனவும் இருப்பதால் மா மணியே எனப்படுகிறான். திருவாவடுதுறை, வடதிருமுல்லைவாயில்ஆகிய ஊர்களில் சுவாமிக்கு இப்பெயரே வழங்கப்படுகிறது.
மழபாடியுள் மாணிக்கம்: மாணிக்க வண்ணமும் சுவாமிக்கு உண்டு. திருவாரூருக்கு அருகிலுள்ள திரு நாட்டியத்தாங்குடியில் மூலவர் ,மாணிக்க வண்ணர் எனப் படுகிறார். வயிரத் தூணாகவும் இறைவனை திருமழபாடியில் சொல்வதுண்டு.
அன்னை என விளங்குதல்: சுவாமி தாயும் ஆனவர் ஆதலால் அனே எனத் தேவாரமும் அழைக்கிறது.
உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேன்: ஸ்ரீ பரமேச்வரனே ஒப்பில்லாத தனித் துணையாகவும் தோன்றாத் துணையாகவும் பக்தர்களைக் காப்பாற்றுகிறான். எனவே அவனை நினைப்பதைத் தவிர பிறரை நினைப்பது பொருத்தமாகாது. இதையே ஞானசம்பந்தக் குழந்தையும்,நனவிலும் கனவிலும் உன்னை வழிபடுவதை மறக்க மாட்டேன் எனப் பாடியது.
இப்பொழுது ஸ்ரீ சுந்தரர் அருளிய முழுப் பாடலையும் காண்போம்:
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அனே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
பந்துவராளி ராகத்தில் இப்பாடலைப் பாடக் கேட்கும் இன்பமே தனி. இன்றே கேட்டுப் பார்ப்போமே.