Thursday, July 28, 2011

கங்கையும் நங்கையும்

கங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தபோது, புவனாதிபதியான சிவபெருமான் , அவளது சீற்றத்தைத் தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றதால் கங்காதரன் எனப்பட்டார். கங்கை வந்த வேகம் என்ன! அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் தான் என்னே! திருஞான சம்பந்தர் சொல்வதைக் கேளுங்கள்.


" கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்"
என்கிறார். அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லையாம்.


கங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்டு உமாதேவி, சுவாமியிடம் ஊடல்
கொண்டாளாம். அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டி, சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயல்கிறார் பரமன்.


அப்பர் பெருமானோ இன்னும் ஒரு படி மேலே சென்று, இக்காட்சியினை
விவரிக்கிறார். சுவாமியின் விளக்கத்தால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை. இவர்தான் ஆடல்,பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே. கான ந்ருத்த சங்கரர் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா? கானத்தால் உமையை சமாதானப் படுத்த முயலுகிறார். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார். உடனே அந்த கானத்திற்கேற்ப ஆடவும் செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான வருணனை, அப்பர்பெருமானின் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் நமது சிந்தையை மகிழ்விக்கிறது. இதோ அப்பாடல்:


சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப்
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.


இந்த ஆதி தம்பதிகளின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களில் கருவறைச் சுவற்றில் சிற்ப வடிவில் காணப் படுகிறது. இதனை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைப்பர். பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகையே மேற்கண்ட படத்தில்(நன்றி: தினமலர்) காண்கிறீர்கள். பெருமான், கோபம கொண்ட அம்பிகையின்
முகவாயைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார். இச்சிற்பத்தை ஒருபுறம நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபமும், மறுபுறம்நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காணப்படுகிறாள். இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நேரில் சென்று தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெற வேண்டும்.