நமது தீய வினைகளே நமது துன்பத்திற்குக் காரணம் என்பதை அறியாதவர்களாய்த் தெய்வத்தைக் குறை கூறுகிறோம். ஆனால் அருளாளர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பவர்கள். அடியார்களுக்கு இன்பமே வரும் , துன்பம் ஏது என்ற உறுதி உடையவர்கள். அப்படி ஒருக்கால் சோதனையாகத் துன்பம் வந்தாலும், இறைவனது திருவடியை மறவாதவர்கள். "நன்றே செய்வாய்; பிழை செய்வாய்? " எனும் திருவாசக வரிகள் இதை எடுத்துக் காட்டும். இறைவனிடம் நட்புரிமை பூண்ட அடியார்கள் சில வேளைகளில் அவனை ஏசுவது போலத் தோன்றும். உண்மையில் அச் செயல் அவர்களது பக்தியை மேலும் வெளிப்படுத்துகிறது.
திருவாரூர் தியாகேசப்பெருமான், தனது சன்னதிக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அசரீரியாக, "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் " என்றதால் சுந்தரர் அதுமுதல் "தம்பிரான் தோழர்" என்றே அழைக்கப்பட்டார். தோழனிடம் கொண்ட நட்பு, உரிமையோடு கூடியது அல்லவா? எனவே தோழனாகத் தன்னைத் தந்த இறைவனை நிந்தா ஸ்துதியாகப் பல இடங்களில் பாடுவார் சுந்தரர்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒனகாந்தன் தளி என்ற தலத்திற்கு வந்தபோது சுவாமியிடம் பொன் கேட்டார் நம்பிகள். சுவாமி அதைக் கேளாதவர்போல் இருப்பதைக் கண்டு சுந்தரர்,
" உன்னை வாயார வாழ்த்தினாலும் வாய் திறந்து உண்டு- இல்லை என்று சொல்ல மாட்டாயா? சித்தம் என்பால் வைக்க மாட்டாயா? ஆடிப்பாடி அழுது நெக்குருகி வேண்டுவோர்க்கு அருள மாட்டாயா? உன்னிடம் இருப்பதோ மாலையாகிய பாம்பு; வாழ்வதோ ஆர் ஊர்(திருவாரூர்), திருவொற்றியூரும் உன்னுடையது அல்ல. இப்படி இருக்கும்போது உன்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?" என ஏசுவது போலப் பாடவே, சுவாமி அவருக்குப் பொன் அளித்தார் என்பது வரலாறு.பல ஊர்களில் பெற்ற பொன்னைக் கொண்டு, திருவாரூரில் அடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்தார் என்றே பெரியபுராணம் காட்டுகிறது.
இழந்த கண்ணைத் திரும்பப் பெறவேண்டி இறைவனிடம் முறையிட்டும் சுவாமி வாளா இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவராக, " மீளா அடிமை பூண்ட அடியார்கள் கண் இழந்து குழியில் விழுவதைக் கண்டும் வாளா இருப்பதேன்? இருந்தும், நின்றும்,கிடந்தும் உன்னை இகழாது, நாய் போலத் திரிந்து போற்றும் அடியார்களைக் கை விடுவீரானால் நீர் மட்டும் நன்றாக வாழ்ந்து கொண்டு இரும்." என்று சுந்தரர் நெகிழ்ந்து பாடியவுடன் மீண்டும் கண் கிடைக்கப் பெற்று, கண் பெற்ற பலனை அத தியாகேசனை மீண்டும் தரிசிப்பதன் மூலம் பெற்றார்.
உண்மையில் இமைப்பொழுதும் இறைவனை அவர் ஏசவில்லை என்பதை அவரது பாடல்களே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.இம் மானிட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும் போது கண்கள் நீர் பெருக்குவதாகத் திரு நாட்டியத்தான்குடிப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இடர் களையும் மாணிக்க வண்ணன் ஒருவனே கதி என்பதை நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். பொன்னைப் பாடுவதாக உலகோர் சொல்வது எவ்வளவு தவறு என்பது அவர் வாக்காலேயே வெளிப்படுகிறது. எதற்கும் ஆசைப் படாத ஆச்சார்ய மூர்த்திகள்,
பாடுவதைக் கேளுங்கள்:
அஞ்சாதே உமக்கு ஆட்செய்ய வல்லேன்
யாதினுக்கு ஆசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா எம் பரமேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண் தலை ஏந்தீ
நாட்டியத்தான்குடி நம்பீ.
பஞ்சின் மெல்லடியாள் பாகனாகவும், மதி சூடிய மணியாகவும், மாணிக்க வண்ணனாகவும், நஞ்சுண்ட கண்டனாகவும், பிரம சிர கண்டீசனாகவும் பலப்பலப் பெயர்களால் இறைவனது புகழைப் பாடுகிறார் சுந்தரர். அவரே, திருப்பாச்சிலாச்சிராமத்தில், "ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல" எனப் பாடியதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.