பிரம்ம-விஷ்ணுக்களால் காணமுடியாத அக்னிமலையாகவிளங்கியவன் சிவ பெருமான் என்பதால் ,
"மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் "
என்று பாடினார். அடுத்ததாக, இறைவனின் முடிமீது இருக்கும் வன்னி, சந்திரன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
"வன்னி மதி சென்னிமிசை வைத்தவன்" என்றதால், பெருமானது கருணை விளக்கப்படுகிறது. இனி, பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியபோது, எல்லா உலகங்களும், தேவர்களும் பிற உயிர்களும் அதனால் அழிய நேரிட்டபோது, அனைவருக்கும் அடைக்கலம் தந்து அதனை உண்டு தனது கண்டத்தில் வைத்த பரம கருணையை,
" மொய்த்து எழுந்த வேலை விடம் உண்ட மணிகண்டன்" என்றார். வேலை என்பது கடல் என்று பொருள் தரும்.
மலவாதனைகளுக்கு அப்பாற்பட்ட விமலனாகவும் விருஷபா ரூடனாகவும் திகழ்வதை, " மெய்யா , விமலா, விடைப் பாகா" என்றார் மாணிக்கவாசகர். சுந்தரரும் இதனை,
"விடை ஊரும் விமலன்" என்று சிறப்பித்தார்.
இந்த ஸ்தலத்தில் அமிர்தவல்லி என்ற பெயர் கொண்டு அம்பிகை விளங்குகிறாள். இவ்வாறு அம்பிகையோடு காட்சி தருவதை,
"உமையவளோடு மேவிய ஊர்வினவில்" என்று சொல்லிவிட்டு அந்த ஊரின் சிறப்புக்களை அழகாக வர்ணிப்பார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.
இங்கு உள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் தாம் கேட்ட துதிகளைத் திரும்பச் சொல்வதால், தாமும் துதிக்கின்றன.
"சோலை மலி குயில் கூவக் கோல மயிலாலச்
சுரும்பொடு வண்டு இசைமுரல பசுங்கிளி சொல் துதிக்க"
என்பது அந்த வருணனை.
இனி வருவது பாடலின் மகுடம் போன்ற ஒப்பற்ற கருத்து. அந்த ஊரில் வசிக்கும் அடியார்கள், காலையிலும், மாலைக் காலத்திலும் மனம் கசிந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்வதால் நாமும் அவ்வாறு இரு வேளையிலும் இறைவனை மறவாது, நெக்குருகிக் கசிந்து வழிபட வேண்டும் என்றும் உணர்த்தப்படுகிறது.
"காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் கானே"
அண்மையில் இந்தப் பாடலைக் கலயநல்லூர் அமிர்தகலசநாத சுவாமியைத் தரிசித்துவிட்டுப் பாடிய பின்னர், அம்பாள் சன்னதிக்குச் செல்லும்போது, பிராகார மதிலை ஒட்டிய மரங்களில் இருந்து சுமார் ஐந்து கிளிகள் சப்தமிட்டன. உடனே, சுந்தரர் அருளிய இப்பாடலில் வரும் "பசுங்கிளி சொல் துதிக்க" என்ற வரிகள் நினைவுக்கு வரக் , கண்கள் பனித்தன.