Friday, July 26, 2019

ஆசையும் பேராசையும்

மாணிக்க வாசக சுவாமிகள் 

ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் உண்டு என்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. நியாயமான ஆசைகளையும்  கோரிக்கைகளையும் இறையருள் முன்னின்று நிறைவேற்றி வைக்கிறது. ஆசைப் பத்து என்ற ஒரு பகுதி திருவாசகத்தில் இருப்பதை அதனைக் கற்றவர்கள் அறிவர். அதில் மாணிக்க வாசகர் தனது ஆசைகளாகக் குறிப்பிடுவனவற்றை நோக்கும்போதுதான் நாம் எத்தனை கீழ் நிலையில் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

தன்னை இங்கே வா என்று பெருமான் அழைக்கவேண்டும் என்பது அவரது ஆசை. பிறவியாகிய இருளைத் துறந்து, பேரொளியாகிய பிரானிடத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது வேட்கை இங்கு வெளிப்படுகிறது. அடுத்ததாக அப்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆசை. இன்னும் எத்தனை நாள் அவனைப் பிரிந்து, இந்த எலும்பும், நரம்பும் கொண்ட உடலை மூடியுள்ள தோலைப் பேணுவது? எனவே இறைவனே இதிலிருந்து விடுபடுத்தித் தன்னிடம் கூவிக்கொள்ள வல்லவன் என்கிறார் குருநாதர்.

ஆறுதலாகத் தன்னிடம் கருணை கூர்ந்து முகத்தை நோக்கித் திருவருள் வைக்கவேண்டும் என ஆசைப்படுகிறார் அடிகள். இரத்தமும் சீயும் உடைய உடலை ஈக்கள் மொய்க்கும் நிலையிலும் காத்து ஆட்கொள்ளும் குருமணி யாகத் திகழ்பவன் ஈசன் ஒருவனே என்பதால் இத்தகைய ஆசையை முன் வைக்கிறார் அடிகள்.

அத்தகைய அருளைப் பெறுவதற்குத் தான் உரியவனாக ஆக வேண்டுமே என்ற எண்ணம் தலைஒங்குவதால் அவனை நினைந்து உள்ளம் உருகும் நிலை தனக்கு ஏற்பட வேண்டும் என்கிறார்.
தன்னைத் தேடி வந்து திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட வள்ளல் உலகத்தவர்களிடம் “ இவன் என் அடியான், எனக்கு அளியவன் “ என்று சொல்ல வேண்டும் என்பது இவரது மற்றுமோர் ஆசை. இவன் இரக்கப்படத் தக்கவன் என்று உனது திருவாயால் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அடுத்தபடியாக இறைவனது திருமுகத்தில் எழும் குறுநகையைக் காண ஆசை. “ கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் “ என்றார் அப்பர் அடிகள். உலகத்தே தோன்றி அடியார்களை ஆட்கொள்ளும் கடவுளின்  முகத்தில் எழும் ஒளியை நோக்கி, அதோடு அம்முறுவலையும் காண வேண்டியது கண் பெற்றதன் பயன் அல்லவா ?

நேரில் எழுந்தருளிய இறைவனைப் போற்ற வேண்டுமே. அவனது ஆயிரம் நாமங்களாலும் போற்றிப் பரவ ஆசைப் படுகிறார் மாணிக்க வாசகர். அப்போது மனம் லயிக்க வேண்டியது இன்றியமையாதது. கையால் அவனைத் தொழுது, அவனது கழற் சேவடிகளைத் தழுவிக்கொண்டு,தலை மீது அவற்றை வைத்துக் கொண்டு, ‘ எம் பெருமான்,ஐயா..” என்றெல்லாம் வாயார அழைத்து , தீ சேர்ந்த மெழுகைப் போல உருக வேண்டும் என்று ஆசைப் படுகிறார் மணி வாசகப்பெருமான்.

இறைவனது பேரருளால் சிவலோகம் கிடைத்து விட்டால் அங்கே இருக்கும் பழைய அடியார்களது கூட்டத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது மற்றுமொரு ஆசை. கதியற்றவனாகக் கதறும் அடியேனை “ அஞ்சேல் “ என்று அருள வேண்டும் என்ற ஆசையுடன் திருவாசகத்தில் ஆசைப்பத்து நிறைவு பெறுகிறது.

ஆனால் நாமோ மேற்கூறிய எந்த ஆசையும் இல்லாமல் பணமும்,புகழுமே இருந்தால் போதும் என்று போலி வாழ்க்கை வாழ்கிறோம். ஒருவனுக்குப் பொருள் வேண்டியதுதான். வேண்டாம் என்று சொல்ல வேண்டிய துறவிகள் சிலரே அவ்வலையில் அகப்படும்போது நாம் எம்மாத்திரம் ! ஆனால் அந்த ஆசை அளவு மீறிப் போகாத வண்ணம் நமக்குத் திருவருள் துணை தேவைப்படுகிறது.

கண்ணால் காண்பதை எல்லாம் நாமே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம், பேராசையில் கொண்டு விட்டு விடுகிறது. பேராசைப் பட்டுத்  தங்களது வாழ்வின் அந்திம காலம் நெருங்கும்போதும் கூடப் பலருக்கு உள்ளத் தெளிவு பிறப்பதில்லை. ஈட்டிய செல்வம் கூட வராது என்று தெரிந்தும், இறுதி நாள் வரை பேராசை நீங்குவதில்லை.

உடலைப் பேராசைக்கு இருப்பிடமான பிண்டம் என்கிறார் மாணிக்கவாசக சுவாமிகள். “ வைத்த நிதி, பெண்டிர்,மக்கள், குலம்,கல்வி என்னும் பித்த உலகு” என்று கூறி, அப்பிண்டம் அறுவதற்குக் காரணமாகத் தனது தலை மீது இணையார் திருவடிகளைப் பெருமான் வைத்தவுடன் பந்தங்கள் யாவும் நீங்கப் பெற்று உய்ந்ததாகக் கூறுகிறார். கடல் நஞ்சை உண்டு உலகங்கள் யாவற்றையும் காப்பாற்றிய கபாலியான பரமேசுவரன் முப்புரங்களை எரித்து அசுரரிடமிருந்து அனைவரையும் காப்பாற்றியவன். அப்படிப்பட்ட பரம்பொருள் அடியேனையும் ஓர் பொருளாகக் கொண்டு,வேதிய வடிவில் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தூய்மை செய்த கருணையை நினைந்து பூக்களைக் கொய்வோமாக என்ற பொருளில் அமைந்த அப்பாடல் இதோ:

பேராசையாம் இந்தப்பிண்டம் அறப் பெருந்துறையான்
சீரார் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்
காரார் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.