Saturday, October 26, 2019

நடுநிலை ஆன்மீகவாதிகள்கடவுள் உண்டு எனும் மனிதர்களை ஆன்மீகவாதிகள் என்றும் இல்லை என்பவர்களை நாத்திகர்கள் என்றும் பொதுப்படையாகச் சொல்கிறோம். ஆனால் இவ்விரண்டுக்கும் இடையில் மதில் மேல் பூனையாக இருப்பவர்களை எந்தப்பெயரிட்டு அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தேவைப்பட்டால் கடவுளை நினைப்பார்கள். மற்ற நேரங்களில் கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் அவர்கள். ஏறத்தாழ நாத்திக வாழ்க்கை மேற்கொண்ட இந்த நடுநிலையாளர்களால் சமயத்திற்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை. ஒரு பிடிப்பும் இல்லாத இவர்களால் சமயத்திற்கு ஏற்படும் அவப்பெயர்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுயநலவாதிகளான நடுநிலைவாதிகள் பெயரளவிற்கே ஆன்மீகவாதிகள். தானும் தன் குடும்பமும் நன்றாக வாழ மட்டுமே பிரார்த்தனை செய்யும் இவர்களால் ஒருபோதும் சமயம் வளர்ச்சியோ, பலமோ, பாதுகாப்போ  அடையப்போவதில்லை. இவர்களில் சிலர் சுயலாபத்திற்காகச்  சமயத்திற்கு எதிராகப் பேசுவதும் உண்டு. சமயத்தையும் சமயக் கடவுளர்களையும் பிறர் இழிவுபடுத்தினாலும் நமக்கேன் என்று இருப்பவர்களே இன்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். 

அப்படியானால் ஆன்மீகவாதிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கலாம். அப்பர் சுவாமிகள் தில்லையில் பாடியது நினைவு கொள்ளத்தக்கது.
“ ஊனில் ஆவி உயிர்க்கும் போதெல்லாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை “ என்றார் அவர். இந்த ஊனுடம்புக்குள் துடிப்பு இருந்தால் தான் அந்த ஜீவன் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறோம். அத்துடிப்பே உயிர் இருப்பதை உறுதி செய்கிறது. அத்துடிப்பு நிற்கும் வரை மறவாது இறைவனை வழிபடுபவரே ஆன்மீகவாதிகள் என்ற உயரிய கருத்தை இதன் மூலம் கற்கிறோம். இதையே ஞானசம்பந்தரும்,
“ ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி “ என்று யோகமார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் ஒருங்கே காட்டுகின்றார்.

என்னால் எதுவும் செய்வதற்கில்லை, கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னால் கொள்கையாவது ஒன்றாவது என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் நாத்திக வாதிக்கும்,நடுநிலை ஆத்திகருக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா? இறை நம்பிக்கை என்பது செய்கைகளால் விளக்கப்பட வேண்டியதில்லை என்றும், மனத்தளவில் இருந்தாலே போதுமானது என்றும் தத்துவம் பேச ஆரம்பித்து விடுகின்றனர். இதை அவர்கள் ஒன்றும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நமது குருநாதர்கள், இறைவனை, “ மனத்தகத்தான், தலைமேலான், வாக்கினுள்ளான் “ என்று அழகாக நமக்குக் காட்டி அருளியுள்ளார்கள்.

கண்ணால் கண்டாலோ ,அல்லது ஆன்மீக அனுபவம் பெற்றாலோ நம்பிக்கையும் பக்தியும் அதிகரிக்கிறது என்றாலும் இவற்றைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்க வேண்டுமே! தகுதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில்லையே.
இவர்களுக்குக்  கடவுளைக் காண வேண்டும் என்றும்,பிறவாத நிலை ஏற்பட வேண்டும் என்றும் எண்ணமே ஏற்படாதபோது அதனை அனுபவித்த அருளாளர்களது சொந்த அனுபவத்தையாவது அவர்கள் வாயிலாகவே அறிந்து கொள்ளலாமே. இந்த வகையில் அவர்களது அருள் நூல்கள் நமக்குப் பெரிதும் துணை செய்கின்றன. தாம் பெற்ற அனுபவத்தை அவர்கள் பகிர்வதோடு நாமும் உய்யவேண்டும் என்ற பெரும் கருணையோடு இவ்வாறு அருளியுள்ளார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.

சைவசமயாச்சார்யர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இந்நிலவுலகில் வாழ்ந்தது பதினெட்டே ஆண்டுகள் தான். இக்குறுகிய காலத்தில் சைவம் தழைக்க அவர் ஆற்றிய பணிகளை இன்றளவும் சைவ சமயம் நினைவு கூர்கிறது. இறைவன் தனக்கிட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடித்த பின்னர் இனியும் இந்நிலவுலக வாழ்க்கையை நீக்கி இறைவனை அடைய வேண்டும் என்று விழைந்த சுந்தரர், திருவஞ்சைக்களத்து இறைவனாரிடம் விண்ணப்பிக்கவே, அவரது வேண்டுகோளை ஏற்ற பரமன்  அவரைக் கயிலைக்கு அழைத்து வர ஐராவதம் என்ற வெள்ளை யானையை அனுப்பினார். அந்த யானையின் மீது ஏறிக் கயிலைக்குச் செல்கையில் தன்னைத் தேவர்கள் எதிர்கொண்டதையும்  பரமன் தனக்காகப் பரம கருணையோடு அனுப்பிவைத்த யானையின் மீதேறிச் செல்வதையும் அப்பொழுதே ஒரு பதிகமாக அருளிச் செய்தார் சுந்தரர். அப்பதிகத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உலகத்தவர்களுக்கு உபதேசிக்கும் வகையுள் அமைந்துள்ளது இன்புறத்தக்கது. அதாவது, யாரொருவர் இவ்வுலகில் பிறந்து சிவபெருமானை இடைவிடாது வழிபடுகிறாரோ அவர்கள் பொன்னுலகாகிய சிவலோகத்தை அடைவர் என்பதை இன்று அடியேன் கண்டுகொண்டேன் என்று அகச் சான்றாக அறிவிக்கிறார் நாவலூர் வள்ளல். எனவே இந்நிகழ்ச்சியைப்பற்றி அறிந்தபின்னராவது,  குரு வாக்கியத்தைச் சிரத்தின் மீது கொண்டு பின்பற்றவேண்டியது நமது கடமை அல்லவா ?

“ மண்ணுலகில் பிறந்து நும்மை

 வாழ்த்தும் வழியடியார்

 பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் 

இன்று கண்டொழிந்தேன்

 விண்ணுலகத்தவர்கள்  விரும்ப 

 வெள்ளை யானையின் மேல்

 என்னுடல் காட்டுவித்தான் 

நொடித்தான் மலை உத்தமனே.

என்பது அவ்வுயரிய பாடல்.

வாழையடி வாழையாகச் சிவபெருமானுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் அன்பர்களைப் பிறவிப் பெருங்கடலிலின்றும் கரை ஏற்றித் தன்னடிக்கே புகவைக்கும் இறைவனது கருணைத்திறம் இப்பாடலால் வெளிப்படுகிறது. அத்துடன், ஐந்தொழில்கள் ஆற்றும் இறைவன், அழித்தல் தொழிலால் உயிர்களை மீண்டும் மீண்டும் பிறவாமல் இளைப்பாறச் செய்யும் ஒப்பற்ற கருணையும் செய்வதால் அத்தொழிலை நொடித்தல் என்கிறோம். அதனைச் செய்யும் பெருமானை நொடித்தான் என்றும், அவன் நீங்காது உறையும் கயிலைமலையை ஊழிக்காலத்திற்கப்பாலும் திகழும் நொடித்தான் மலை என்றும் சுந்தரர் தேவாரம் போற்றுகிறது.