Monday, May 12, 2014

வள்ளலாகும் அடியார்கள்

"கொடுத்தல்" என்ற பொருளில் "கொடை" என்ற சொல்லை உபயோகிக்கிறோம். கொடுப்பது எல்லாம் கொடை ஆகிவிடுமா? தர்ம காரியங்களுக்குக் கொடுப்பதை கொடை என்று சொன்னால் அதுவே பொருத்தமாகத் தோன்றுகிறது. பிறர் நல்வாழ்வு வாழ்வதற்கும் சமயப் பணிகளுக்கும் கொடுக்கப்படுவதால் அதை நன்கொடை என்று சொல்கிறோம். அதைக் காட்டிலும் நல்ல கொடை இருக்க முடியாது ஆதலால், அதை நல்ல கொடை -- நன்கொடை என்கிறோம்.

ஒருவகையில் பார்த்தால் பஞ்ச பூதங்களே நமக்கு முன் உதாரணங்களாக விளங்குகின்றன என்று சொல்ல முடியும். வானம் தரும் கொடையே மழை வடிவில் வந்து நம்மைக் காப்பாற்றுகிறது. பூமித்தாயின் கொடையே நமக்கு உண்ண உணவளிக்கிறது. வாயுவின் சீற்றமில்லாமல் இருந்தால் வாழைகளும் பிழைக்கின்றன. இப்படி இறைவனே பஞ்ச பூதங்களாகி நமக்கு அருட்கொடை வழங்குகின்றான். மழைத்துளியில் நின்ற நீராகவும், பயிர் காட்டும் புயலாகவும் பெருமான் அருளுவதைத் திருமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன. அடியார்களுக்காகத் தன்னுலகைத் தந்து மீண்டும் பிறவா நெறியளிக்கும் கற்பகமாய் இறைவன் விளங்குவதை, மாணிக்கவாசகர்,
" முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே."  கூறுவதால் நமக்கும் அத்திருவருள் கிட்ட வேண்டும் என்ற குருநாதரின் உள்ளக்கிடக்கை புலனாகிறது.

உண்மை அடியார்கள் இறைவனது குணநலன்களைப் பெற்றுப் பிறரையும் வாழ வைப்பர். தர்மத்தின் வடிவமாகிய தயாபரனையே நாடி இருப்பதால் அவர்களும் கொடையாளிகளாக விளங்குவதோடு கொடை வடிவமாகவே ஆகி விடுவார்களாம். வலிவலம் என்ற தலத்துத் தேவாரப் பாடலில் இப்படிச் சொல்கிறார் திருஞானசம்பந்தர்: " கொடை வடிவினர் பயில் வலிவலம்" என்பது அவர் வாக்கு.

ஆக்கூர் என்ற தலத்தில் வாழ்ந்த வேளாளப் பெருமக்களின் கொடையையும் சம்பந்தப்பெருமான் சிறப்பிக்கிறார் : "வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே"  

கையில் இருந்தால் தானே கொடுக்க முடியும் என்று கேட்கலாம்.. கொடுக்க முடிகிறதோ இல்லையோ , எக்காலத்தும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டும்  மாறாது. கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கம் நிச்சயம் இருக்கும்.

சீர்காழியில் வாழ்ந்த வள்ளல்கள் எப்படித்திகழ்ந்தார்கள் என்று விளக்கும்போது, சம்பந்தர்,

விண் பொய்த்து அதனால் மழை பெய்யாவிட்டாலும், மண் வளம் கெட்டுப் பயிர்கள் விளைவு குறைந்து விட்டாலும் தங்களது வள்ளல் தன்மை மட்டும் அம்மக்களிடமிருந்து மாறாதாம். பிரமபுரத்து ஈசன் அடியார்களின் தன்மை இதுவே என்கிறார் அவர்.

" விண் பொய் அதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை
   மண் பொய் அதனால் வளமிலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
   உண்பகர வாருலகின் ஊழி பலதோறும் நிலை பதிதான்
   சண்பை நகர் ஈசன் அடிதாழும் அடியார் தமது தன்மை அதுவே."

தற்காலத்தில் வள்ளல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தாமாகவே முன்வந்து கொடுப்பவர் வள்ளல். கேளாமலே கொடுக்கும் வள்ளல் இறைவன் .அதனால் அவனை வதான்யேச்வரர் என்று மயிலாடுதுறையில் அழைக்கிறார்கள். நன்கொடை கேட்பவர்களும் , " அள்ளிக் கொடுக்காமல் போனாலும் கிள்ளியாவது கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்கள். அப்படிக் கிள்ளிக் கொடுப்பதை  வாங்கிக்கொள்வதற்குப் பலமுறை அலைய வேண்டியிருக்கும் . இப்பொய்மையாளரிடம் சென்று கால் கடுக்க நின்று கெஞ்சுவதைக் காட்டிலும் கொடுக்கக் காத்திருக்கும் தியாகேச வள்ளலைச் சரண் அடைவோம். பாண பத்திரனுக்கும், குங்கிலியக் கலயருக்கும், வாரி வழங்கிய வள்ளல் நமக்கும் செவி சாய்ப்பான். நம்மையும் வள்ளல் ஆக்குவான். அதற்கு வேண்டியதெல்லாம், சம்பந்தர் மேற்கண்ட பாடலில் அருளியபடி, " ஈசன் அடிதாழும் அடியார் " ஆவது தான்.      

Thursday, May 8, 2014

சிந்தையும் சிவமும்

காலை வேளைகளில் பலர் அருகிலுள்ள பூங்காக்களிலும், சாலைகளிலும் நடைப் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கிறோம். டாக்டர் சொல்லியிருப்பார்- "  Conscious walk" முக்கியம் என்று. அப்படியானால் , நடப்பதை மட்டுமே அல்லவா கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் பலர்  நண்பர்களோடு அளவளாவிக்கொண்டும், பாட்டுக் கேட்டுக் கொண்டும், அக்கம்பக்கத்தில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருப்பர். சுருக்கமாகச் சொன்னால் , கண்கள் நடைபாதையை அடையாளம் காட்டியதைக் கொண்டு,கால்கள் அவ்வழியில் செல்கின்றன. வாயோ வம்பளந்து கொண்டிக்கிறது. காதோ பாட்டுக் கேட்பதில் லயித்திருக்கிறது. ஆகவே, மனம்,மெய்(உடல்),வாக்கு என்ற மூன்றும் வெவ்வேறு காரியங்களை அப்போது செய்து கொண்டிருக்கின்றன.
மனம் என்பதை இங்கு சிந்தனை என்று எடுத்துக்கொள்ளலாம். மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றையும் பரமேச்வரனிடத்தில் அர்ப்பணித்து விடுவார்கள் மகான்கள். " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" என்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தரிசித்த சுந்தர மூர்த்தி சுவாமிகளின் நிலையைக் காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். கண்டவுடன் சிந்தையில் அது ஒன்றே மேலோங்கியிருக்கிறது.  கண்களில் ஆனந்த நீர் அருவியாகப் பொழிகிறது. மாறிலாத மகிழ்ச்சி மலர்கிறது. நிறைவாக, வாய் அப்பெருமானைத் துதிக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் பார்க்காத,,கேட்காத,பேசாத  பேரின்ப நிலை!

சிந்தையில் சிவத்தைத் தவிரப்  பிறிதொன்றை நினையாத மாணிக்கவாசகரது அனுபவத்தை அவரது திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது. அவரது சிந்தனை சிவபெருமானிடம் லயப்படுகிறது. கண்களால் அக்கண் பெற்ற பயனாகப் பெருமானது பாத மலர்களையே காண்கிறார். வாயால் வந்திப்பதும் அம்மலர்ப்பாதங்களைத்தான். இவ்வாறு ஐம்புலன்களை  அவனுக்கே அர்ப்பணம் செய்வது என்பது எளிதான காரியமா? அந்தப் பக்குவமும் இறைவன் தந்தால்  அல்லவா சாத்தியம் ஆகமுடியும்!  அதை எவ்வாறு அருளுகிறான் என்று பார்ப்போமா?  இந்த ஊன் உடம்பின் உள் புகுந்து எலும்பெல்லாம் உருக்கி.எலும்புத் துவாரங்கள் தோறும் உலப்பிலாத ஆனந்தத் தேனைச் சொரிந்து கருணையினால் ஆட்கொள்கிறான்.

மாறிலாத மாப்பெருங் கருணையாளனாகிய இறைவனோ மலை போன்றவன். கடல் போன்றவன். சிவந்த மேனியன். அந்த செம்மை நிறத்தை எவ்வாறு வருணிப்பது?  செந்தாமரை மலருக்கு ஒப்பிட்டால் அதுவும் மிகக் குறைவாகத் தோன்றுகிறது. செந்தாமரை மலர்கள் மலர்ந்த காடு போன்றது அம்மலர்த் திருமேனி என்று சொன்னால் ஓரளவு ஆறுதல் தருகிறது. இப்படிப்பட்ட ஒப்பற்றவன் ஒன்றும் பற்றாத அடியேனை ஒரு பொருட்டாக ஆட்கொண்டு தன்னையே தந்ததை  எவ்வாறு புகழ்வேன் என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
  கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி      
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர                
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மாலமுதப்பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டும் இலித் தனியனேற்கே..

என்பது அம்மணிவாசகம்.