Monday, May 12, 2014

வள்ளலாகும் அடியார்கள்

"கொடுத்தல்" என்ற பொருளில் "கொடை" என்ற சொல்லை உபயோகிக்கிறோம். கொடுப்பது எல்லாம் கொடை ஆகிவிடுமா? தர்ம காரியங்களுக்குக் கொடுப்பதை கொடை என்று சொன்னால் அதுவே பொருத்தமாகத் தோன்றுகிறது. பிறர் நல்வாழ்வு வாழ்வதற்கும் சமயப் பணிகளுக்கும் கொடுக்கப்படுவதால் அதை நன்கொடை என்று சொல்கிறோம். அதைக் காட்டிலும் நல்ல கொடை இருக்க முடியாது ஆதலால், அதை நல்ல கொடை -- நன்கொடை என்கிறோம்.

ஒருவகையில் பார்த்தால் பஞ்ச பூதங்களே நமக்கு முன் உதாரணங்களாக விளங்குகின்றன என்று சொல்ல முடியும். வானம் தரும் கொடையே மழை வடிவில் வந்து நம்மைக் காப்பாற்றுகிறது. பூமித்தாயின் கொடையே நமக்கு உண்ண உணவளிக்கிறது. வாயுவின் சீற்றமில்லாமல் இருந்தால் வாழைகளும் பிழைக்கின்றன. இப்படி இறைவனே பஞ்ச பூதங்களாகி நமக்கு அருட்கொடை வழங்குகின்றான். மழைத்துளியில் நின்ற நீராகவும், பயிர் காட்டும் புயலாகவும் பெருமான் அருளுவதைத் திருமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன. அடியார்களுக்காகத் தன்னுலகைத் தந்து மீண்டும் பிறவா நெறியளிக்கும் கற்பகமாய் இறைவன் விளங்குவதை, மாணிக்கவாசகர்,
" முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே."  கூறுவதால் நமக்கும் அத்திருவருள் கிட்ட வேண்டும் என்ற குருநாதரின் உள்ளக்கிடக்கை புலனாகிறது.

உண்மை அடியார்கள் இறைவனது குணநலன்களைப் பெற்றுப் பிறரையும் வாழ வைப்பர். தர்மத்தின் வடிவமாகிய தயாபரனையே நாடி இருப்பதால் அவர்களும் கொடையாளிகளாக விளங்குவதோடு கொடை வடிவமாகவே ஆகி விடுவார்களாம். வலிவலம் என்ற தலத்துத் தேவாரப் பாடலில் இப்படிச் சொல்கிறார் திருஞானசம்பந்தர்: " கொடை வடிவினர் பயில் வலிவலம்" என்பது அவர் வாக்கு.

ஆக்கூர் என்ற தலத்தில் வாழ்ந்த வேளாளப் பெருமக்களின் கொடையையும் சம்பந்தப்பெருமான் சிறப்பிக்கிறார் : "வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே"  

கையில் இருந்தால் தானே கொடுக்க முடியும் என்று கேட்கலாம்.. கொடுக்க முடிகிறதோ இல்லையோ , எக்காலத்தும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டும்  மாறாது. கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கம் நிச்சயம் இருக்கும்.

சீர்காழியில் வாழ்ந்த வள்ளல்கள் எப்படித்திகழ்ந்தார்கள் என்று விளக்கும்போது, சம்பந்தர்,

விண் பொய்த்து அதனால் மழை பெய்யாவிட்டாலும், மண் வளம் கெட்டுப் பயிர்கள் விளைவு குறைந்து விட்டாலும் தங்களது வள்ளல் தன்மை மட்டும் அம்மக்களிடமிருந்து மாறாதாம். பிரமபுரத்து ஈசன் அடியார்களின் தன்மை இதுவே என்கிறார் அவர்.

" விண் பொய் அதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை
   மண் பொய் அதனால் வளமிலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
   உண்பகர வாருலகின் ஊழி பலதோறும் நிலை பதிதான்
   சண்பை நகர் ஈசன் அடிதாழும் அடியார் தமது தன்மை அதுவே."

தற்காலத்தில் வள்ளல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தாமாகவே முன்வந்து கொடுப்பவர் வள்ளல். கேளாமலே கொடுக்கும் வள்ளல் இறைவன் .அதனால் அவனை வதான்யேச்வரர் என்று மயிலாடுதுறையில் அழைக்கிறார்கள். நன்கொடை கேட்பவர்களும் , " அள்ளிக் கொடுக்காமல் போனாலும் கிள்ளியாவது கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்கள். அப்படிக் கிள்ளிக் கொடுப்பதை  வாங்கிக்கொள்வதற்குப் பலமுறை அலைய வேண்டியிருக்கும் . இப்பொய்மையாளரிடம் சென்று கால் கடுக்க நின்று கெஞ்சுவதைக் காட்டிலும் கொடுக்கக் காத்திருக்கும் தியாகேச வள்ளலைச் சரண் அடைவோம். பாண பத்திரனுக்கும், குங்கிலியக் கலயருக்கும், வாரி வழங்கிய வள்ளல் நமக்கும் செவி சாய்ப்பான். நம்மையும் வள்ளல் ஆக்குவான். அதற்கு வேண்டியதெல்லாம், சம்பந்தர் மேற்கண்ட பாடலில் அருளியபடி, " ஈசன் அடிதாழும் அடியார் " ஆவது தான்.      

1 comment:

  1. வதான்யேச்வரர்.....பெயர் விளக்கம் தங்களின் மிக உன்னத அறிவுக்கொடை..எங்களுக்கு......

    ReplyDelete