Tuesday, August 20, 2013

நினைந்து உருகும் மனம்

இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் , மனிதர்களிடமோ விலங்கினங்களிடமோ , அன்பு செலுத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் ஏற்படுவது உண்டு. இவை இரண்டும் மனத்தளவில் ஏற்படுவன என்றாலும் இரண்டும் வேறுபாடு உடையன. இரண்டுக்கும் அடிப்படையானது அன்பு என்றாலும் , மனிதர்களிடத்துச் செலுத்தும் அன்பு, பஞ்சேந்திரியங்களின்   செயல் பாட்டாலே பெரும்பாலும் நிகழ்வது . தற்காலிக மன மகிழ்ச்சி அதனால் விளைகிறது. தாம் அன்பு செலுத்துபவர்  மன  மாற்றம் கொண்டால் அந்த அன்பு முறிவதோடு  மறக்கவும் துணிகின்றனர். இது, தான் நினைத்தது நடைபெறாததால் ஏற்பட்ட விரக்தியாகக் கூட இருக்கலாம். எனவே, நினைக்கத் தெரிந்த மனம் , மறக்கத் துணிகிறது.

இறைவனிடம் அன்பு செலுத்துவதால் மனம் கசிந்து உருகுகிறது. பக்தி மேலிடும் போது கண்ணீர்  பெருகுகிறது. இந்நிலையைத்தான் சம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..." என்றார்.  நமக்கு அருள் செய்யாமல் இருக்க மாட்டான் என்று மனம் உறுதி கொள்கிறது.உன்னை மறந்தாலும் எனது நாக்கு நமசிவாய மந்திரத்தைச் சொல்லுவதை மறக்காது என்று நினைக்கிறது. மனத்திலும்,தலைமீதும்,வாக்கிலும் இறைவன் இருப்பதை மெல்ல உணருகிறது.

இறையன்பு, மெதுவாக வைராக்கியமாக மாறி, அன்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறது. "எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்,துடைக்கினும் போகேன்..." என்ற நிலை சாத்தியமாகிறது. மனித்தப் பிறவிக்கே உரிய தவறுகளைச் செய்தாலும், இறைவனது பாதங்களை அடைக்கலமாக  அடைந்துவிட்ட பிறகு, அத்தவறுகளை அவனே தண்டித்துத் திருத்துவான் என்ற எண்ணம் மேலோங்குகிறது. "நின் பணி பிழைக்கில் புளியம் விளாரால் மோதுவிப்பாய்" என்று தந்தையிடம் தனையன் மன்னிப்புக் கோருவதுபோலக் குழைந்து விண்ணப்பிக்கிறது.

ஒரு நாமமும் இல்லா இறைவனின் ஆயிரம் நாமங்களையும் ஓத விழையும் எண்ணமும் சித்திக்கிறது.அந்த நாமங்களை நாக்குத் தழும்பு ஏறும்  வண்ணம் பேசிப் பேசி அதுவே பிதற்றலாக மாறுகிறது. ஆரூரா,சங்கரா என்றென்றே அரற்றுகிறது. அப்படி வாழ்த்தும் போது  மனம் கசிந்து, வாய் குழறுகிறது. சொற்கள் வாயிலிருந்து வருவது நின்றுவிடுகிறது. இப்படிப் பல்காலமும் பெருமானைப் பாவித்து, அவன் சதாகாலமும் ஆனந்த தாண்டவம் புரியும் பொன்னம்பலத்தை நினைந்து நினைந்து நெக்குருகி நிற்கும் இந்த உயிர்க்கும் இரங்குவாயாக என்று வேண்டுகின்றார் மாணிக்க  வாசகர். அவ்வாறு இறைவன் இரங்கினால் அந்தக் கணமே கருணை மழை  பொழிந்து அருளி விடுவான்.  கலங்குகின்ற அடியேனின் கண்ணின் நீரைத் துடைத்து என்னை அப்பா அஞ்சேல் என்று அபயம் அளித்து,அடியார் கூட்டமும் காட்டி,நின் கழல் கீழ் வைப்பாய் என்று மனமுருகி வேண்டியவர் மணிவாசகர்.

நம் மனமோ கல்லைக் காட்டிலும் கடினமாக இருக்கிறது. உருகுவதற்கான வழியே அறியாமல் பல திசைகளிலும் அலை மோதுகிறது. இறைவனோ நம் மனக் கல்லைப் பிசைந்து, கனி ஆக்கித் தன் கருணை வெள்ளத்தில் நம்மைத் திளைக்க வைக்கத் தயாராக இருக்கிறான். நமது பழ வினை  அவனை நாடாது செய்கிறது. இந்நிலையில் மனம் உருகுவது எப்படி ? "திருவாசகத்திற்கு  உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அப்படியானால் நம் நெஞ்சக் கன  கல்லை நெகிழ்ந்து உருக வைக்கும் திருவாசகத்தை ஓதினால் அதை அடைந்து விடலாம் அல்லவா?அதன் பின்னர் உருகிய மனம் மேலும் நைய வேண்டும் . ஆயினும்,அதற்கும் அவன் அருள் தேவை.எனவேதான் , "நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசர். அப்படிப்பட்ட மனத்தைத் தந்தருளுமாறு வேண்டிப் பின் வரும் திருவாசகப் பாடலை ஓதி நலம் பெறுவோம்.

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தான் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே.