Thursday, February 6, 2020

நீங்காத நினைவு

“ கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் “ என்று திருஞான சம்பந்தரை சுந்தரர் குறிப்பிட்டுப் போற்றுகின்றார். “ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் “ என்று பாடியவர்  சுந்தரர்.  சீர்காழிக்கு எழுந்தருளிய சுந்தரர்,  ஞானசம்பந்தர் அவதரித்தருளிய பதி அதுவாதலால் அதனைக் காலால் மிதிக்க அஞ்சி ஊர்ப் புறத்தே உள்ள திருக்கோலக்காவில் தங்கியிருந்தபடியே சீர்காழியின் மீது பதிகம் பாடினார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இது  சம்பந்தப்பெருமான் மீது  அவருக்கு அவருக்கு இருந்த ஒப்பற்ற பக்தியைக் காட்டுகிறது.

அறுபத்துமூன்று அடியார்களின் திருப்பெயர்களையும் குறிப்பிட்டுத் திருவாரூரில் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், சம்பந்தரைக் குறிக்கும்போது “ கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் : எனப் பாடுகின்றார். இமைப்பொழுதும் ஈசனை மறவாத சிந்தை உடைய ஞானக் குழந்தையை இதை விட யாராலும் சிறப்பிக்க இயலாது.

“ ஸர்வதா ஸர்வ பாவேன நிச்சிந்திதை: பகவாநேவ பஜனீய “ என்று நாரத பக்தி சூத்திரத்தில் வருகிறது. அதாவது, சிந்தையில் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது சதா காலமும் இறைவனை மட்டுமே தியானிக்கும் நிலை இவ்வாறு விளக்கப்படுகிறது. வேத நெறியும் சைவமும் தழைக்க அவதரித்த சம்பந்தர் இதனைப் பின்பற்றியதோடு தனது பாடல்களில் பலவிடங்களில் அருளிச் செய்துள்ளதால் இத்தன்மையை சுந்தரர் போற்றிப் பாடினார் எனக்கொள்ளலாம்.

ஒருவன் விழித்திருக்கும்போதே இறைவனை நினைப்பது கடினமான இருக்கும்போது,    சம்பந்தரோ உறங்கும்போதும் இறைவனது திருவடிகளை மறவேன் என்கின்றார். உணவு உண்ணும்போதும்,பசித்திருந்தாலும்,உறங்கிக்கொண்டு இருந்தாலும் சிவபிரானை மறவாத அவரது சிந்தை வெளிப்படுவதை,

“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
  ஒண் மலரடி அலால் உரையாது என் நா “  என்று திருவாவடுதுறைப் பதிகத்தில் பாடுவதைக் காணலாம்.

இவ்வாறு இடையறாது நினைப்பதால் சிவதரிசனம் கிடைப்பதோடு இறையருள் கூடவே இருந்து காப்பாற்றும் என்பதை நாம் அறிய முடிகிறது. 

“ நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
  நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் “

என்ற உயர்ந்த சிந்தனை திருக்கருக்குடிப் பதிகப்பாடல் மூலம் நமக்கு உபதேசிக்கப்படுகிறது.
முதலில் நினைத்தலுக்கும் நினைப்பித்தலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம். நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனாக இறைவனை நினைக்கும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நினைவு இடையறாது இருப்பது இறைவனது அருளால் மட்டுமே நிகழ வல்லது. அந்த உயர்ந்த நிலை ஏற்பட்டுவிட்டால் தூங்கிக் கொண்டிருந்தாலும் பெருமான் நமக்கு அவனது நினைவு வரச் செய்வான். இதற்கு நினைப்பித்தல் என்று பெயர். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து திருநடனம் கண்ட பதியான திருவாலங்காட்டிற்கு எழுந்தருளிய ஞானசம்பந்தர் அத்  தலத்தைக் கால்களால் மிதிக்க அஞ்சி, புறத்தே தங்கியிருந்து துயில் கொண்ட போது அவரது கனவிடை இறைவன் தோன்றி,  தன்னைப் பாடப் பணித்தான். இதற்கு அகச் சான்றாக சம்பந்தரே, “ துஞ்சும்போது வருவாரும் தொழுவிப்பாரும்” என்று அவ்வூர்ப் பதிகத்தைத் துவக்குகின்றார். 

இதுபோலவே திருமறைக் காட்டில் அப்பர் பெருமானது கனவில் தோன்றிய இறைவன் அவரைத் திருவாய்மூருக்கு வருமாறு பணித்தவுடன், அப்பர் சுவாமிகள், “ உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி என்னை வா என்று போனார் “  எனப்பாடுவார்.   “ உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே “ என்பார் சுந்தரரும்.

மேற்கூரை ஓவியம் - திருவான்மியூர் 
மேற்கண்ட உயர்ந்த நிலை எவ்வாறு பிறருக்கும் ஏற்பட முடியும் ? இறைவனே அடைக்கலமாகவும் , ஆதரவாகவும் இருப்பதால்,  நாமும் அவனை ஆதரித்து வழிபடுவதொன்றே இதற்கு வழி. அவனை அன்றி வேறு எவரையும் ஆதரவாக எண்ணாத சிந்தை நமக்கு ஏற்பட்டுவிட்டால் அது சாத்தியமே. திருவான்மியூரில் அருளிய பதிகமொன்றில் தனக்குச் சொல்வதாக இவ்வுபதேசத்தைச் செய்கின்றார் சம்பந்தர். . 

திருக்குளம்-திருவான்மியூர் 
அதன் முதல் பத்துப் பாடல்களிலும் “ அடையாது எனது ஆதரவே “  என்று வருகிறது. எடுத்துக்காட்டாக முதல் பாடலைக் காண்போம்:

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே

உரையார் தொல்புகழாய்  உமை நங்கையோர் பங்குடையாய்

திரையார் தெண் கடல் சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னையல்லால் அடையாதென தாதரவே.

என்பதால் சிவ நாமாக்களைச் சொல்லிச் சொல்லி தியானிக்கும்போது இதற்கான தகுதி ஏற்பட்டு விடுவதை அனுபவத்தில் உணரலாம். 
   
ஸ்ரீ மருந்தீசுவரர் ஆலயம்-திருவான்மியூர் 
“ சென்றார் தம் இடர் தீர்க்கும் திருவான்மியூர் “ என்று சம்பந்தரால் பரவப்பெற்ற இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் இவ்வேளையில் உடற் பிணிக்கும் பிறவிப் பிணிக்கும் மருந்தாய் எழுந்தருளியுள்ள மருந்தீசனின் மலரடிகளை வணங்கி உய்வோமாக.