“முன்னம் என்ன பாவம் செய்தேனோ
தெரியவில்லை, என்மீது பழி சுமத்துகிறார்கள்” என்று பலர் மிகுந்த மன வேதனையுடன்
வருந்துவதைப் பார்க்கிறோம். இதனால், நாம் செய்த வினைக்கு அல்லது பாவத்திற்கு
ஈடாகப் பழி வரும் என்பது இதன் கருத்து. பாவம் ஒன்றும் அறியாத அப்பாவிகள் மீதும் பழி
வருகிறதே என்று கேட்டால் அவர்களைப் பற்றி நாம் அறிந்தது அவ்வளவு தான் என்றே சொல்ல
வேண்டியிருக்கிறது. எனவே, அனுபவிக்க வேண்டிய தீவினைப்பயன்களுள் பழியும் ஒன்று
என்பது தெளிவாகிறது. கடும் சொற்களால் ஒருவர் மனத்தைக் காயப் படுத்துபவர்களும்
இப்பழியை அனுபவிக்க நேரிடும். அவ்வாறு அனுபவித்தாலொழிய நாவினால் சுட்ட வடு ஒரு நாளும் ஆறாது. ஞானசம்பந்தரும்
இதனை, “உரையினால் வந்த பாவம்” என்று அருளிச் செய்தார். மேலும் அவர், “
பழிப்பாய வாழ்க்கை” என்றார்.
ஒருசிலர் மேல் அபாண்டமாகப் பழி
சுமர்த்துவதன் மூலம் தப்பிக்க முயல்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கே
பாவம் வந்து சேரும் என்ற எச்சரிக்கை தேவையாகிறது. திருவிளையாடற் புராணத்தில்
பழியஞ்சிய படலம் என்ற பகுதியை நாம் இங்கு நினைவு கூற வேண்டும். காட்டில் தனது
மனைவியோடும், கைக்குழந்தையோடும் சென்று கொண்டிருந்த அந்தணன் ஒருவன் அவளை
ஓர் மரத்தடியில் இருத்திவிட்டு நீர்
கொண்டு வரச் சென்றபோது அம்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அம்பு ஒன்று காற்றினால்
அலைக்கப்பட்டுக் கீழே இருந்த அப்பெண்ணின்
மீது பாய்ந்ததால் அவள் அக்கணமே இறந்தாள். நீர் எடுத்துக் கொண்டு வந்த அந்தணன்
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்று சுற்றிலும் நோக்கும்போது, ஒரு வேடன் அங்கு வரக்
கண்டான். அவனே இச்செயலைச் செய்திருக்க வேண்டும் என்று கருதி, அவ்வேடனைப்
பாண்டியனிடம் அழைத்துச் சென்று புகார் செய்தான்.
அந்தணன் கூறியது நடந்திருக்க
சாத்தியமே என்று எண்ணிய பாண்டியன் அவ்வேடனைச் சிறையில் இட்டான். இவ்வாறு அப்பாவி வேடன்மீது
வீண் பழி வந்தது.
நீதியே வடிவான சிவபெருமான்
இப்பழியிலிருந்து வேடனைக் காத்தருள எண்ணினான் போலும். பாண்டியனும் அவனது
மந்திரியும் நகர்வலம் வருகையில் ஓரிடத்தில் எம தூதர்கள் பேசுவதைக் கேட்டனர்.
அங்கிருந்த வீட்டில் ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காளை ஓடிவந்து
மணமகனைக் குத்தி அவன் மரணிப்பான் என்று இத்தூதர்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். மரத்தின்
மேலிருந்த அம்பை எப்படி விழவைத்து
அந்தணனது மனைவியின் உயிரைக் கவர்ந்தோமோ
அவ்வாறே இதுவும் நடக்கும் என்று இயம தூதர்கள் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்தில்
எங்கிருந்தோ வந்த ஒரு காளை மாடு, மணப் பந்தலில் நுழைந்து மணமகனைக் கொம்பால் குத்தி
வீழ்த்தியது. அப்பொழுதுதான் பாண்டியனுக்கு உண்மை விளங்கியது. வேடனுக்குத் தவறாகத்
தண்டனை வழங்கியதற்கு வருந்தி உடனடியாக அவனைச் சிறையிலிருந்து விடுவித்தான். அதனால்
பெருமானுக்குப் பழி அஞ்சிய சொக்கர் என்று திருநாமம் வழங்கலாயிற்று. “ தேவாரமும்
பழிதீர்த்த கடவுள் “ என்று சிவபிரானைப் போற்றுகிறது.
பழியிலிருந்து மீள வழியே இல்லையா என்று கேட்கலாம். இறைவனிடம் தஞ்சம்
அடைவது ஒன்றே வழி என்று தேவாரப் பாடல்கள் நமக்கு உபதேசிக்கின்றன. ஒருசிலவற்றையாவது
இங்கு எடுத்துக் காட்டலாம்:
1. பறையும் பழி பாவம் படுதுயரம் பல தீரும்
2. பாசம் தனை
அற்றுப் பழியில் புகழாரே.
3. பாடல் பத்தும்
வல்லார் மேல் பழி போமே.
4. ஒண்தமிழ்
வல்லார்க்கு அறும் பழி பாவம் அவலம் இலரே.
5.கோலக்கா பற்றிப்
பரவப் பறையும் பாவமே
திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களை
ஒதுவதாலும் பழியிலிருந்தும் விடுபடலாம்.அது எவ்வாறு எனில், பாவம் நீங்கி விடுவதாலே
என்க.
“ நறும்பொழிற்
காழியுள் ஞானசம்பந்தன்
பெறும்பத
நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால்
சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம்
அவலம் இலரே.”
என்ற பாடலால்
இதனை அறியலாம்.
பழித்தல்
என்பதற்கு ஏசுதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஏசுவது போலத் துதிப்பதை நிந்தா ஸ்துதி
என்பார்கள். இதனையும் திருமுறைகளில் நாம் காண்கிறோம். பித்தன் என்று ஏசிய போதிலும்
அதுவே பெருமானுக்குத் தோத்திரம் ஆயிற்று.
தன்னைக் காக்க
முன்வராவிட்டால் பெருமானுக்குப் பழி வந்து சேரும் என்று கூறும் அழகை, சுந்தரர் வாக்கில், “ நீரே பழிப்பட்டீர் “
என்று வருவதால் அறியலாம். திருவாசகமும் இதைப் போலவே,
“ வேலை நஞ்சுண் மழைதரு கண்டன்
குணமிலி தேய் மதியன் பழைதரு மாபரன்
என்றென்று அறைவன் பழிப்பினையே “
என்றும்,
“ விடின் வெங்கரியின் உரிப்பிச்சன்
தோலுடைப்பிச்சன்
நஞ்சூண் பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன்
என்று ஏசுவனே.”
என்றும் கூறுவது, அறிந்து மகிழத்தக்கது.