Friday, October 25, 2013

ஏறு ஏற்ற ஈசன்

ரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை  என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் "காளையார்" என்றும், விடையவன்  என்றும், ஏற்றன்  என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும்  "ஏறுடை ஈசன் " என்றார் .  இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை  ஏற்றார்  என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம்! அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம்! ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.

 உலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, " நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் " என்றார்  அப்பர். திங்கள் என்றது சந்திரனை.

தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக்  கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம்  கொண்டு ஆபிசார  வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். " நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார் " என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்

தாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர்  சுவாமிகள், " ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார் " எனக் குறிப்பிடுகிறார்.

இன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா? அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, " ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் " என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.

தன்னை அடைய வேண்டித் தவம்  செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, " வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்." என்றும் ,  முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,

" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்."  என்றும் அருளினார்  திருநாவுக்கரசர் .

எல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, " பாருலாம் புகழ் ஏற்றார்." ஏற்றார்.

நிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். "பைங்கண் ஏற்றார்  " என்பது அவ்வுயரிய வரிகள்.  பந்தணை  நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:

    நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
            நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார்
     ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார்
             ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
    வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்
             மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
    பாருலாம் புகழ் ஏற்றார்  பைங்கண் ஏற்றார்
             பலி ஏற்றார்  பந்தணை நல்லூராரே .
என்பது இவ்வினிய திருப்பாடல். 

Tuesday, October 1, 2013

நித்தம் பல கால் நினை

 தெய்வத் தமிழ் என்பதற்குப்  பல பொருள்கள் கொள்ள இடமுண்டு. தெய்வம்தந்த தமிழ் என்று கூடச் சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் , சிவபெருமானே தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தபடியால் இம்மொழிக்கு அந்தப் பெருமை உண்டு. மேலும் அகத்திய முனிவரால் இலக்கணம் வகுக்கப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. நக்கீரருக்கே அகத்தியர் மூலமாக இலக்கணம் கற்பிக்கச் செய்தான் இறைவன்.

மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது என்று ஒரு பிரபந்தம் உண்டு. அதன் ஆசிரியர் இன்னார்  என்று தெரியவில்லை. தமிழையே தூது விடுவதாக அமைந்த அந்நூலில் தமிழ் மொழியின் பெருமைகள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. தெய்வம் தந்த மொழி என்பதாலோ என்னவோ, தமிழை, "அடிகளே " என்று ஆர்வம்  கூர அழைக்கிறார்  ஆசிரியர். மேலும், "பித்தா" என்றும். "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  " என்றும் சுந்தரருக்கு  இறைவனே அடி எடுத்துக் கொடுத்ததால் அத்தேவாரத் தமிழ், தெய்வம் தந்த தமிழ் தானே! "உலகெலாம்" என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தமையால், அப்பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரை நாம் தெய்வச் சேக்கிழார் என்று அல்லவா போற்றுகின்றோம்!

தெய்வத்தைப் போற்றும் தமிழாக அது மிளிர்வது , அம்மொழியைத்தந்த இறைவனுக்குச் செய்யும் கைம்மாறாக அமைகிறது. தே + ஆரம்  என்று , தெய்வத்திற்குச் சூடும் மாலையாகவே  அத் தெய்வத் திருமுறை அமைந்துள்ளது. அது மட்டுமா? தெய்வத்தையே தூது போகச் சொன்னதும் அத் தெய்வத் தமிழுக்கே உள்ள தனிச் சிறப்பு. மறைக்  கதவைத் திறந்து மூடச் செய்தது, முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்தது போன்ற அற்புதங்களைச் செய்ததும் இத்  தமிழே !

தெய்வத்திடம் நம்மைச் சேர்க்கும் தமிழ் என்றும் பொருள் கொள்ளலாம். மிகவும் எளிய முறையில் இறை அருளைப் பெறவும் வகை செய்கிறது இத்தெய்வத் தமிழ். இறைவனை நினைவுபடுத்தி,அவனை மறக்காமலிருக்க நமக்கு  உறுதுணையாகவும் நிற்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை இப்போது சிந்திக்கலாம்:

சிவத்தலங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை  நினைக்கத் தூண்டுவதாக உள்ளது. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். எனவே அத்தலத்தை முதலாவதாக வைத்து, அத்துடன் மற்றும் சில தலங்களையும் நினைக்கும்படி நம்மை ஆற்றுப் படுத்துகிறது இப்பாடல்.  திருவாரூர் தியாகேசப்பெருமானது பூங் கோவிலை மறக்கவும் முடியுமா என்கிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். ஆறு நாட்கள் விழித்திருந்து ஒப்பில்லாத அன்புடன் காவலாக நின்ற கண்ணப்பருக்கு அருளிய காளத்தி நாதனையும் நினைக்க வேண்டும்.தன்னைத்  தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கும் அம்பலவாணனையும் அவனது கோவில் அழகையும், அக்  கோயிலின் தனிச் சிறப்பு வாய்ந்த மணியின் ஓங்கார ஓசையையும், அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி , ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளும் பெருமானையும்  எவ்விதம் மறக்க முடியும்? திருவானைக்காவில் சிற்றுயிர்க்கும    இர ங்கியருளிய  கருணாமூர்த்தியை நினைக்க வேண்டாமா? அதுவும் அனுதினமும் நினைக்க வேண்டும். ஒரு முறை அல்ல. பலமுறையும் நினைக்க வேண்டும்.

இதோ அப்பாடல்:

                " அண்ணாமலையரையும் ஆரூர்த் தியாகரையும்
                   கண்ணான  காளத்தி நாதரையும்  -- ஒண்ணான
                   சிற்றம்பலவரையும் தென்னானைக்காவரையும்
                   நித்தம் பல கால் நினை. "