Friday, October 25, 2013

ஏறு ஏற்ற ஈசன்

ரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை  என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் "காளையார்" என்றும், விடையவன்  என்றும், ஏற்றன்  என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும்  "ஏறுடை ஈசன் " என்றார் .  இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை  ஏற்றார்  என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம்! அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம்! ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.

 உலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, " நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் " என்றார்  அப்பர். திங்கள் என்றது சந்திரனை.

தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக்  கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம்  கொண்டு ஆபிசார  வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். " நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார் " என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்

தாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர்  சுவாமிகள், " ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார் " எனக் குறிப்பிடுகிறார்.

இன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா? அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, " ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் " என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.

தன்னை அடைய வேண்டித் தவம்  செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, " வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்." என்றும் ,  முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,

" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்."  என்றும் அருளினார்  திருநாவுக்கரசர் .

எல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, " பாருலாம் புகழ் ஏற்றார்." ஏற்றார்.

நிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். "பைங்கண் ஏற்றார்  " என்பது அவ்வுயரிய வரிகள்.  பந்தணை  நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:

    நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
            நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார்
     ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார்
             ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
    வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்
             மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
    பாருலாம் புகழ் ஏற்றார்  பைங்கண் ஏற்றார்
             பலி ஏற்றார்  பந்தணை நல்லூராரே .
என்பது இவ்வினிய திருப்பாடல். 

1 comment:

  1. Your articles are marvelous. Please continue to enchant us with them. Thank you!

    Regards
    Admin - GnanaBoomi.com

    ReplyDelete