Tuesday, November 11, 2014

திருமந்திர சிந்தனை

சாத்தனூரில் திருமூலர் குருபூஜை 
சித்தத்தில் சிவானந்தம் சேர்வது எப்படி என்பதை திருமூலதேவ நாயனார் அருமையாக நமக்கு வழங்குகிறார். சிவனருளால் ஞானம் விளையும் என்று திருமந்திரப் பாடல்கள் இதனை வலியுறுத்துகின்றன. உலகில் புண்ணிய பாவங்களை சில ஞானிகள் அறிவார்களாம். அவ்வாறு அறிவதன்மூலம் அவர்களுக்குப் பிறவி நீங்கப்பெற்று முக்தி தருவான் இறைவன் என்கிறார். வினைகள் நீங்கிவிட்டால் சிவலோகம் கிட்டும் என்பதை " சிவனருளால் வினை சேரகிலாமை , சிவனருள் கூடின் அச் சிவலோகமாமே." என்பது திருமந்திர  வாக்கு. எனவே, அவனருளாலே செல்வமும் ,ஞானமும் கிட்டுவது எளிது என்பதை, " பிரான் அருள் உண்டு எனில் உண்டு நற் செல்வம் ; பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம் " என்ற வரிகளால் அறியலாம்.

" வாடித் தவம் செய்வதே தவம் " என்கிறார் திருமூலர். மற்றபடி தவ வேடங்கள் பூண்பதால் மட்டும் சிவனருள் பெற்று விட முடியாது என்பது இதன் உட்பொருள். ஆகவே, " தவம் மிக்கவரே தலையாய வேடர் " என்று அருளினார் நாயனார். அதே சமயம் சாதனங்கள் வேண்டாம் என்று ஒருபோதும் அவர் கூறவில்லை. பூதி சாதனம், காதில் அணியும் குண்டலம், கண்டிகை, யோகபட்டம், தண்டம் ஆகியவற்றை தவ வேடர்க்கான லக்ஷணங்களாகக் காட்டவும் அவர் தவறவில்லை. இதனால், தவ யோகியர்களுக்கு இச்சாதனங்கள் அத்தியாவசியம் ஆவதை உணர்த்துகிறார் அவர். இந்தக் காலத்தில், தவசிகள் என்று சொல்லிக் கொண்டு ருத்திராக்ஷம் அணியாதவர்களையும், புறத்தே வேடம் பூண்டு, ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களையும் நாம் காண்கின்றோம் என்றால் அது நமது புண்ணியக் குறைவே ஆகும்.

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

 தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.                                                                                  
என்பது திருமந்திரம்.

ஞானம் இல்லாதவன் வேடம் மட்டும் பூண்டிருந்தால் ஒரு பயனும் விளையாது; நாடு  நலம் கெடும்;பஞ்சமே மிஞ்சும் என்று எச்சரிக்கிறார் திருமூலர். ஞானம் வந்து விட்டால் வேடம் அத்தனை முக்கியமில்லை. ஞானத்தை வேண்டுவோர் ஞானமயமாகிய பரமேச்வரனை நண்ணி நிற்பார்கள். இந்த வேடங்கள் எல்லாம் உடலுக்கே. உயிர்க்கு அல்ல. உடல் நீங்கும் போது வேடம் உடனே கழன்று விடும் அல்லவா? இதைத்தான் நமக்கு அவர் எடுத்துக்காட்டுகிறார். இந்த உண்மையை உணராதவர்கள் கடலில் சிக்கிய கட்டையைப் போன்றவர்கள் என்கிறார்.

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா

உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்

உடலுயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்  

கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

என்பது அப்பாடல்.

ஆகவே வேடம் மட்டும் பூண்டு துயரமுற்று என்ன பயன்? நுண்ணுணர்வது அல்லவா முக்கியம்? ஆகவே இது வேண்டாம். அதைத் தவிர்ப்பீர்களாக என்று உபதேசிப்பதை, " வேடம் கொண்டு என்செய்வீர்  வேண்டா மனிதரே" என்று பாடுவதால் அறியலாம். வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து வேடம் மட்டும் பூண்பதைக் காட்டிலும், சித்தத்தை  ஒருக்கிச் சிவாயநம என்று இருப்பதே மேலானது அன்றோ?    
 
அவ்வாறாயின், ஞானம் எவ்வாறு கைகூடும் எனக் கேட்கலாம். அதையும் விளக்கும் போது, சத்தையும் அசத்தையும் உள்ளவாறு உணர்ந்து, சிந்தை உருக நின்றால் , பக்தியின் பயனாக , சிவஞானத்தை சிவனருளே கை காட்டும் என்பார் திருமூலர். அப்பொழுது ஞானத்தின் பால் இச்சை செல்கிறது. அதனால் உயிர் பக்குவப்படுகிறது. எள்ளளவும் இடைவிடாது சிந்தித்து அறிபவர்க்கு  சிவபதம் சித்திக்கிறது என்ற சைவ சித்தாந்த உண்மையை திருமந்திரம் புலப்படுத்தும் அழகே அலாதியானது.

எனவே, நூலறிவும் முக்கியம் தான், தவமும் தவ வேடமும் அதை விட முக்கியம் தான். இதனை அறியாதவர்கள் சமயத்திற்கேற்ப திசை (எண்ணம்) மாறுபவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் வினை நீக்கம் பெறும் வழியைக் காண மாட்டார்கள். ஆக்கைக்கே இரை  தேடி அலைபவர்கள் அவர்கள். இறுதியில் காக்கைக்கே இரையாகிப் பிறவியை வீணடிப்பார்கள். இது எதைப்போல இருக்கிறது தெரியுமா? ஆற்றில் முதலையைக் கண்டு அஞ்சி ஓடிய ஒருவன், எதிரில் கரடியைக் கண்டது போன்றது என்று உவமையால் விளக்குவார் திருமூலர். அப்பாடலை நோக்குவோமாக:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய்      

 ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன்னொக்கும்  

 நோற்றுத்தவம் செய்யார் நூல் அறியாதவர்
 
 சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே.                                                                      

வேடமும் வழிபாடும் ஞானம் பெறுவதற்கான ஆரம்பப் படிகள். பெருமானை உள்ளத்தில் எழுதி வைத்து நெக்குருகி தியானிப்போர்க்கு சிவன் முன் நின்று அருளுவான் என்பதை , மனத்தகத்தே கோயில் கட்டிய பூசலார் நாயனாரது சரிதம் மூலம்  பெரிய  புராணமும் தெளிவாக நமக்கு  உணர்த்துகிறது. திருமந்திரப்பாடல்களை ஓதுவதோடு , நாடும் நகரமும் நற் திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானை வழிபட்டு , சித்தத்தில் அவனை இருத்தி ஞானம் வேண்டினால், பெருமானது கருணை அதனை வழங்கி முத்திப்பேறு வழங்கும் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.