Thursday, December 19, 2013

பாதமலர்

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைத் தனது திருக்கரத்தால் எழுதிவைத்துக்கொண்ட நடராஜப் பெருமானை  , அதிலுள்ள 51 தலைப்புக்களில் "திருவெம்பாவை" யில் அமைந்த பாடல்கள்   பெரிதும் கவர்ந்தன  போலும். அதனால் தானோ என்னவோ " பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று மணிவாசகருக்குக் கட்டளை இட்டான் பரமன் . " பாவை" என்றது இங்கு திருவெம்பாவையைக் குறிக்கும். அப்படியானால் நாமும் அம்   மணிவாசகத்தின் பெருமையை உணர்ந்து அப்பாடல்களை ஒதிவந்தால், சிவனருளை எளிதாகப் பெறலாம் அல்லவா?

எடுத்துக் காட்டாக ஒரு திருவெம்பாவைப் பாடலை இங்கு சிந்திப்போமாக. பரமேச்வரனது பாத கமலங்கள் திருமாலும் பன்றி வடிவில் அகழ்ந்து சென்றும் காண முடியாதவை. சொல்லால் வருணிக்க முடியாதவை. " எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் "  என்று மற்றோரிடத்தில் குருநாதர் கூறுவது நினைவுக்கு வருகிறது. அவனது திருமுடியை பிரமனும் காண முடியவில்லை. ஆகவே, "மாலறியா நான்முகனும் காணா மலை" என்றார் . 'வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே..." என்கிறது திருவிசைப்பாவும். எல்லாப் பொருளின் முடிவும் ஆகி நிற்கும் பரம்பொருளுக்கு என்ன வடிவம் சொல்வது? அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா? ஈருருவும் ஓர் உருவாய் இருக்கும் அர்த்த நாரீச்வர வடிவத்தைப் "பேதை ஒருபால்" என்றார்.

அதே சமயத்தில்  பல்வேறு வடிவும் எடுக்க வல்ல பரமனை எப்படி ஒரே வடிவம் கொண்டவனாகக் கூற முடியும்? அதனால் , " திருமேனி ஒன்றல்லன்" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும்? "ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்" என்றார். இப்படி "ஆராலும் காண்டற்கு அரியான்" அடியார்க்கு மட்டும் எளியவனாவது அவனது பெரும் கருணையைக் காட்டுகிறது. இப்படி " விண்ணுக்கு ஒரு மருந்து" எனவும் "வேத விழுப்பொருள் " எனவும் இருக்கும் பரம்பொருள் தனது அடியார்களுக்குத் தோழனாகவும் ஆகிறான். சுந்தரர் பெருமானுக்குத்            "தோழனுமாய்",  "வன் தொண்டன்   என்பதோர்  வாழ்வு"ம் தந்த பெருமானை     " ஒரு தோழன்" என்றார்  மாணிக்க வாசகப்பெருமான். அடியார்களுக்கு நடுவில் இறைவனே இருப்பதால், " தொண்டர் உளன்" என்றார். இதே கருத்தை, " ... அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் , அடியேன் உன்  அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்.. " என்று பாடுகிறார்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிற்பவனை ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதும் முடியாத காரியம்தான்! ஆகவே, " ஏது அவன் ஊர்? " என்பார்.     " ஒற்றியூரேல் உம்மது அன்று .. " என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும்? இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன்? ஆனால் நாமோ அவனைப் பல பெயர்களால் துதிக்கிறோம். "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்", என்று அப்பர்  சுவாமிகள்  பாடியது போல், மணிவாசகரும்,

" .... ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ."  எனப்பாடுகிறார். உருவமும் அருவமும் ஆகிய பெருமானுக்கு எந்த உருவத்தை மட்டும் சொல்லிக் குறிப்பிடமுடியும்?  இதையே காரைக்கால் அம்மையாரும், .. " நின் உருவம் ஏது? " என்று வினவுகிறார் .

இப்படிப்பட்ட பரம்பொருளுக்கு உற்றாரோ , உறவினர்களோ, அயலவர்களோ யார் இருக்கிறார்கள்?  " தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்.." என்று கூறியுள்ள திருவாதவூரர் , " ஆர் உற்றார் ; ஆர் அயலார்?' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா? "கண்ணுக்கு இனியானை"க் கண்ணாரக் காண வேண்டாமா? அப்படிக் கண்டபின்னர் அவனைப் " பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா? சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , " சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா? அவனோ நம்மைத் தலை அளித்து ஆட்கொள்பவன். விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதத்தையும் அடியார்களுக்குத் தந்து அருள்பவன். ஊழி முதல்வனாய் நிற்பவன். பிறவித் துயர் கெடும்படி அருள் செய்பவன்.உலகங்களை எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுபவன்.  எங்கும் இல்லாததோர் இன்பம் நம் பால் வரும்படி அருள் செய்யவல்ல கருணாமூர்த்தி. அப்புண்ணியமூர்த்தியின் பூங்கழல்களே ஆதியும்,அந்தமும், தோற்றமும், போகமும், ஈறும் ஆகி நிற்பவை. மாலும்  நான்முகனும் காணாத அப்பாதமலர்களை நாமும் பரவி, மார்கழி நீர் ஆடுவோம் என்கிறது குரு வாசகம்.

பூதங்கள் தோறும் நிற்கும் பராபரனைக் கீதங்கள் பாடியும் ஆடியும் வழிபட வேண்டும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடவேண்டும்." ... நின்னையே பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் .. " என்று தனக்காகப் பாடுவதுபோல் நமக்கு உபதேசிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான். நம் கண்கள் அவன் கழல் கண்டு களிக்க வேண்டும். அவன் கழலை வாழ்த்த வைத்த திருவருளை நினைந்து நினைந்து உருக வேண்டும். அப்படி உருகுவதால் ஏற்படும் பலனையும் அடிகளே கூறுவார்: ..." தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்... " என்பார்.

இத்தனை அருமை-பெருமைகளை நமக்கு வாரி வழங்கும் திருவெம்பாவையின் ஒரு பாடல் இதோ:

" பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திரு மேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ; ஏது அவன் பேர் ; ஆர் உற்றார் ; ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.