திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் தீந்தமிழ்ப் பாடல்கள் மட்டுமல்ல. அவை ஞானம் புகட்டும் தெய்வப் பனுவல்கள் . பிறவிப் பெருங்கடலைத் தாண்டத் தோணியும் ஆவன தான் உண்ட சிவஞானத்தைப் பிறரும் பெற்றுச் சிவனடியை அடைய வேண்டும் என்ற பெருங்கருணையோடு பாடப்பெற்றவை. தமிழ் மூலம் நம்மைத் தெய்வத்தின் திருவடிக்குச் சேர்ப்பிப்பவை . துன்பம் வந்தாலும் நமக்குத் துணையாவான ஈசனடி ஒன்றே என நமக்கு உணர்த்திப் பக்குவப்படுத்துபவை.
" நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று இவருக்கு சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் புகழாரம் சூட்டுகிறது. நான் மறை ஓதும் " வேத வாயராக" த் திகழ்ந்து, நீலகண்டப்பெருமானே " இயல் இசை எனும் பொருள் " ஆவதைப் பதிகங்கள் மூலம் நமக்கு உணர்த்தியதோடு, தன்னைத் தமிழ் மொழியோடு இணைத்துத் " தமிழ் ஞானசம்பந்தன் " " தமிழ் விரகன்" " ஞானசம்பந்தன் ஞானத் தமிழ்" என்றெல்லாம் பலவிடங்களில் பாடியருளி இருப்பதைக் காணலாம்.
தென் திசை செய்த மாதவமாக சீர்காழிப் பதியில் அவதாரம் செய்து , பிற சமய இருள் நீக்கி, சைவத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் ஞானசம்பந்தப்பெருமான். இதன் மூலம் சமய மறுமலர்ச்சி மட்டுமே நடைபெறவில்லை. தமிழிலும் ஓர் மறு மலர்ச்சி உதயமாயிற்று. தமிழ் மொழி அதுவரை பெற்றிராத பல செய்யுள் வகைகள் பாலறா வாயரிடமிருந்து தோன்றின. செய்யுளுக்கு சந்தம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கருத்தாழமும், பிற நயங்களும். அதோடு நிற்காமல், பண்ணமைதியும் பெற்று விளங்கும் அவரது பாடல்கள் இணையற்றவை.
எடுத்துக் காட்டாக சீர்காழி இறைவர் மீது பாடியருளிய ஒரு திருப் பதிகத்தின் முதல் பாடலை இங்கு நோக்குவோம். தமிழ் மொழியில் முதலில் இருந்து கடைசி வரை வரும் வார்த்தைகள் சிலவற்றைத் தலை கீழாக (கடை முதல் ஆரம்பம் வரை) படிக்கலாம். உதாரணமாகத் "தேரு வருதே, " விகடகவி " போன்றவை. ஆனால் ஒரு பாடலையே அவ்வாறு அருள முடியுமா? ஒரு பாடல் மட்டுமல்ல. பதினொரு பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தையே அருளியுள்ளார் சம்பந்தப்பெருமான்.
" யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. "
இப்பாடலைத் தலை கீழாகப் படித்துப் பார்த்தால் அதன் அருமை வெளிப்படும். இடமின்மை காரணமாக இதன் பொருள் இங்குத் தரப்படவில்லை. இப்பதிகம் கெளசிகப்பண் கொண்டது என்பதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
கால நிலைமையால் தமிழின் பெருமையைப் பறை சாற்றும் இதுபோன்ற தெய்வப் பனுவல்களை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர். சிலரோ தமிழின் பால் பற்று இருப்பதாகக் காட்டிக் கொண்டு போலி வாழ்க்கை நடத்தி, மக்களை மயக்குகின்றனர். ஞானப் பனுவல்களைக் கற்றோரும் அவற்றை உரிய வகையில் என்ன காரணத்தாலோ மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில்லை. சிவஞானம் அவ்வளவு எளிதில் கிட்டாது என்பதும் காரணமாக இருக்கலாம்.
தமிழ்ப் பனுவல்களைக் கற்றும், சிலர் தங்களது சொந்த அபிமானம் காரணமாகக் கிணற்றுத் தவளைகளாகவே இருந்து கொண்டு தங்களுக்கு இணை இல்லை என்கின்றனர். அவற்றைத் திருத்துபவர்களும் இருக்கக் காணோம்.
தமிழ் என்ற சொல்லில் உள்ள ழகரம் அம்மொழிக்கே உரிய சிறப்பைத் தருவது என்பது எல்லோரும் அறிந்தது தான். அந்த ழகரம் ஒரே பாடலில் பதினொரு முறை வருவது என்றால் சாதாரணமானதா? பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் அதற்கும் அதிகமாக ஒரே செய்யுளில் இருபத்தொரு முறை வந்தால் அதையும் ஏற்க வேண்டியதுதானே! ஏற்பதால் நம்மை நாம் பணிவுடையவர்கள் ஆக்கிக் கொள்கிறோம். தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை ஓரளவு அறிந்தவர்கள் ஆகிறோம். அதற்கு நம்மை ஆளாக்கியருளியவரைப் பணிந்து நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சீர்காழிப் பெருமான் மீது திருஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றின் பத்தாவது பாடலில் பத்தொன்பது முறையும், பன்னிரெண்டாவது பாடலில் இருபத்தொரு முறையும் ழகரம் கையாளப்பட்டிருப்பதை இங்கே காணலாம்:
" பாழி யுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை வாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில்வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே . "
(இதன் திரண்ட கருத்தாவது: பாழிகளில் தங்கும் சமணர்களும் புத்தர்களும் உணராத பெருமான் , யாழின் இசை போல் பேசும் உமாதேவியுடன் உறையும் பதியாவது, கீழுலகும் மேலுலகும் அஞ்சுமாறு செய்த காளியானவள் அக்குற்றம் நீங்க பூஜை செய்த காழிப் பதி யாகும். )
" ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவு சிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை எழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழி தகையவே."
( பொழிப்புரை: அறம் அழிந்துகொண்டே வரும் கலியுகத்தில் அறவழியைப் பின்பற்றுவது கடினமாகிவிடவே, உடல் முழுதும் ரோமங்கள் கொண்ட உரோமச முனிவர் தம் கூட்டத்துடன் வந்து, மலம் (பாசங்கள்) நீங்குமாறு வழிபட்டது கழுமலப் பதி( சீர்காழி) ஆகும். { வேதம் எழுதப்படாதது. தமிழ் வேதம் எழுதப்படுவது. ஆகவே, எழுதுமொழி என்றார் } இப்பாடல்கள் பாடப்படுவதால் பலன் விளைவிக்கக் கூடியவை என்று பதிகப் பலனும் அருளிச் செய்தார் ஞானசம்பந்தர்.